Read in : English
தஞ்சையில் தேவதாசி குலத்தில் பிறந்த முத்துப்பழனி 18ஆம் நூற்றாண்டில் எழுதிய சிருங்கார ரசம் கொண்ட ‘ராதிகா ஸாந்த்வனமு ‘என்ற தெலுங்கு காவியத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேவதாசி பரம்பரையில் வந்த இசைக்கலைஞர் பெங்களூரு நாகரத்தினம்மா முழுமையான புத்தகமாகக் கொண்டு வந்தபோது அந்தப் புத்தகத்தை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது.
1947இல் இந்திய சுந்திரத்திற்குப் பிறகு, அந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கியவர் அன்றைய சென்னை மாகாண முதல்வர் டி. பிரகாசம்.
அதன் பிறகும், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தடைக்குள்ளாகிய இந்தப் புத்தகம், தமிழில் உடனடியாக வெளிவரவில்லை. 2011இல் ஆங்கிலத்திலும் 2018இல் தமிழிலும் இதன் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன.
தஞ்சாவூரில் மன்னர் பிரதாப சிம்ஹன் ஆட்சிக் காலத்தில் தேவதாசியாக இருந்தவர் முத்துப்பழனி (1739 – 1790). அந்தக் காலத்தில் புகழ் பெற்ற பாடகியாக இருந்த தஞ்சநாயகியின் பேத்தி அம்மா முத்தியாலு. தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்.
10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள் பாடிய திருப்பாவையின் சில பாடல்களை ‘ஸ்ப்தபாடலு’ என்ற ஏழு வரிக் கவிதைகளாகத் தெலுங்கில் எழுதினார். அதற்காக தஞ்சாவூர் மன்னர் சன்மானம் வழங்கினார். அந்தக் கால கட்டத்தில் முத்துப்பழனி, ராதிகா ஸாந்த்வனமு (ராதையை சமாதானப்படுத்துல்) என்ற காவியத்தைப் படைத்தார். அது இலா தேவியமு (இலாவின் கதை) என்றும் அழைக்கப்படுகிறது.
இது நான்கு அத்தியாங்களைக் கொண்டு 584 பாடல்களைக் கொண்டது. சிருங்கார ரசம் கொண்ட, பாலுணர்வை வெளிப்படையாகக் கூறும் காவியம் இது. இவர் தேவதாசி மரபில் வந்தவர் என்பதால், தனது தாய் வழிப் பரம்பரையைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
தெலுங்கில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு ஓலைச் சுவடிகளில் தங்கிக் கிடந்தது. 1855இல் தெலுங்கு ஆங்கில அகராதியை உருவாக்கிய சார்லஸ் பிலிப் பிரவுன், ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட் லைப்ரரியில் ராதிகா ஸாந்த்வனமு காவியத்தின் ஓலைச்சுவடி இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஓலைச் சுவடி, அவருடன் இணைந்து பணியாற்றிய பைடிபட்டி வெங்கட நரசு ஒத்துழைப்புடன் 1877இல் முத்துப்பழனியின் வாழ்கைக்குறிப்புகளுடன் பிரசுரிக்கப்பட்டது.1907இல் விரசத்தைத் தூண்டும் சில பாடல்களை நீக்கிவிட்டு அந்தப் புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டது.
தெலுங்கில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு ஓலைச் சுவடிகளில் தங்கிக் கிடந்தது. 1855இல் தெலுங்கு ஆங்கில அகராதியை உருவாக்கிய சார்லஸ் பிலிப் பிரவுன், ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட் லைப்ரரியில் ராதிகா ஸாந்த்வனமு காவியத்தின் ஓலைச்சுவடி இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஓலைச் சுவடி, அவருடன் இணைந்து பணியாற்றிய பைடிபட்டி வெங்கட நரசு ஒத்துழைப்புடன் 1877இல் முத்துப்பழனியின் வாழ்கைக்குறிப்புகளுடன் பிரசுரிக்கப்பட்டது
திருவையாறில் தியாகராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பிய பெங்களூரு நாகரத்தினம்மா (1878 -1952) முத்துப்பழனி எழுதிய ராதிகா ஸாந்த்வனமு என்ற அந்தக் காவியத்தைப் படித்துவிட்டு வியந்தார். அந்தப் புத்தகத்தில் பல பாடல்கள் நீக்கப்பட்டும், முத்துப்பழனியின் முகவுரை இல்லாமலும் அந்தப் புத்தகம் உள்ளதையும் கண்டறிந்தார். இந்தப் புத்தகத்துக்குப் புதிய பதிப்பைக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்தப் புத்தக்கத்தைப்பற்றியும் முத்துப்பழனியைப் பற்றியும் கடுமையாகத் தாக்கி எழுதிய எழுத்தாளர் வீரேசலிங்கத்துக்குப் பதிலளித்து, முத்துப்பழனியின் புத்தக முன்னுரையில் குறிப்பிட்டார் நாகரத்தினம்மா. அந்தக் காலகட்டத்தில் சென்னையில் முன்னணி தெலுங்கு பிரசுகரத்தர்களாக விளங்கி வந்த வாலிலா ராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ் மூலம் 1910இல் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகம் வெளியாகி ஓராண்டு காலம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.
1911ஆம் ஆண்டில் சசிலேகா என்ற தெலுங்குப் பத்திரிகை இந்தப் புத்தகத்தில் விரசமான பகுதிகள் இருப்பதைக் குற்றமாகக் கூறி கட்டுரையை வெளியிட்டது.இதைத்தொடர்ந்து, ‘ராதிகா ஸாந்த்வனமு’ புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் வீரேசலிங்கம் தரப்பினர் களத்தில் இறங்கினார்.
1911ஆம் ஆண்டில் சசிலேகா என்ற தெலுங்குப் பத்திரிகை இந்தப் புத்தகத்தில் விரசமான பகுதிகள் இருப்பதைக் குற்றமாகக் கூறி கட்டுரையை வெளியிட்டது
அதைத்தொடர்து இந்தப் புத்தகத்தை 1911இல் அன்றைய பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. அச்சிடப்பட்ட புத்தகங்கள் அழிக்கப்பட்ட போதிலும் ஏற்கெனவே இருந்த பிரதிகள் படிப்பதற்குக் கிடைத்தன.1947இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தப் புத்தகத்தின் மீதான தடையை சென்னை மாகாணத்தின் தலைவவர் டி. பிரகாசம் விலக்கினார். தெலுங்கு இலக்கியத்தின் கழுத்து மாலையில் இருந்த சில முத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று புகழராம் சூட்டினார் அவர். நாகரத்தினம்மா மறைந்த 1952ஆம் ஆண்டில் ராதிகா ஸாந்த்வனமு மீண்டும் மறுபிரசுரம் செய்யப்பட்டு வெளிவந்தது.
இந்தப் புத்தகம் வெளிவருவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் எழுதிய தி தேவதாசி அண்ட் தி செயின்ட் என்ற புத்தகத்திலும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான தேவதாசியும் மகானும் (பெங்களுரு நாகரத்தினம்மா வாழ்வும் காலமும்) என்ற புத்தகத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
நாகரத்தினம்மா தெலுங்கில் கொண்டு வந்த புத்தகத்தை சந்தியா மூல்சந்தானி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
அது பென்குயின் வெளியீடாக 2011இல் வெளிவந்தது. இப்புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் தில்லிப் பல்கலைக்கழகப் உதவிப் பேராசிரியர் தி. உமாதேவி. ராதிகா சாந்தவனம் என்ற பெயரில் காவ்யா வெளியீடாக இந்தப் புத்தகம் 2018இல் வெளிவந்தது. முத்துப்பழனி தேவதாசி மரபில் வந்தவர் என்பதால் காமத்தைச் சங்ககாலப் பெண் கவிஞர்களைப் போன்று துணிச்சலாகக் கையாண்டுள்ளார் என்கிறார் பேராசிரியர் உமாதேவி தனது புத்தக முன்னுரையில்.
இதற்கு முன்னதாக ராதிகா ஸாந்தவதனமு என்ற புத்தகத்தின் முன்னுரைப் பகுதி மட்டும் தெலுங்கிலிருந்து தமிழில் கு.மு.ஜெகன்னாதராஜா மொழிபெயர்ப்பில் கோணங்கியின் கல்குதிரை இதழில் வெளியாகியது.
பொதுவெளியில் இந்தப் புத்தகம் தற்போது பிரபலமாக இல்லை என்றாலும்கூட 18ஆம் நூற்றாண்டு பெண் எழுத்து, அதுவும் சிருங்கார ரசம் கொண்ட கவிதைகளைக் கொண்டது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பல தடைகளைத் தாண்டி, இந்தப் புத்தகம் இன்றைக்கும் நம் கைகளில் தவழ்வதற்கு முக்கியக் காரணம் பெங்களூரு நாகரத்தினம்மாதான் என்றால் மிகையில்லை.
Read in : English