Read in : English

Share the Article

சுவாரசியம் தரும் படைப்புகளை தந்த பாரதிமணியின் மரணம் இந்த வாரம் துவக்கத்தில் நிகழ்ந்தது. வாழ்வின் எல்லா தருணங்களையும் மிக கண்ணியமாக  எதிர்கொண்டவர்.

மரணம் குறித்து அறிவிப்பில், ‘நோயை கண்ணியமுடன் எதிர்கொண்டார்’ என்று அவரது மகள் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லவர் என பன்முகங்கள் அவருக்கு உண்டு. பெரும்பாலும் அனுபவங்களையே எழுத்தாக்கியவர்.

அழகியலுடன் சமைப்பதிலும், ரசனையுடன் சுவைப்பதிலும் முன்னோடி. யாரும் செய்யத் துணியாத சேவைகளை, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி செய்தவர். அதை தம்பட்டம் அடித்து புகழ் சேர்க்காதவர். சடங்கு, சம்பிரதாயங்களில் கரைந்து போகாதவர்.

கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர், மணி. நாகர்கோவிலில் பள்ளிக் கல்வியை முடித்து, உறவினர் உதவியால் பட்டப்படிப்பை டில்லியில் முடித்தார். பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றினார். பல நாடுகளிலும் பயணம் செய்து அனுபவம் பெற்றவர்.

பிரபல எழுத்தாளர் கா.நா.சுப்ரமணியம் மகளை மணந்தார். சுவாரசியம் நிறைந்த குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். நட்பு வட்டத்தையும் அது போலவே பேணியவர்.
நாடகங்களிலும், சினிமாக்களில் நடித்துள்ளார். வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை ரசனை மிக்கவை; பிடிப்பினை தருபவை.

எழுத்து மற்றும் நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அவரது பெருந்தன்மை நடவடிக்கையால் கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கான, ‘பாட்டய்யா’ என்ற சொல்லை பயன்படுத்தியே பலரும் அவரை அழைக்கின்றனர்.

கண்ணியத்துடன் வாழ்ந்து, பிறரின் கண்ணியமாக வாழ்வையும் மதித்து போற்றி முன்மாதிரியாக வாழ்ந்தவர். இயல்பு மாறாமல், 84ம் வயதில் மறைந்தார்.

அவரது பெருந்தன்மை நடவடிக்கையால் கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கான, ‘பாட்டய்யா’ என்ற சொல்லை பயன்படுத்தியே பலரும் அவரை அழைக்கின்றனர்

பிறப்பும் இறப்பும் இயல்பானது தான். சிலரது இறப்பு சிலருக்கு இழப்பாக இருக்கும். பாரதிமணியின் மறைவு, பழங்கட்டுமானங்களின் மீது விசாரணையை எழுப்பி, கண்ணியமாக வாழ விரும்புவோருக்கு பெரும் இழப்பாக இருக்கும்.சொற்கள், மனிதர்களின் சுபாவங்களை காட்டும். நடத்தையையும் நிர்ணயிக்கும்.

தந்தை பற்றி குறிப்பிடும் போது, “மனிதனாக இரு காந்திகள் தேவையில்லை” என்று அறிவுரைத்ததாக குறிப்பிட்டுள்ளார், பாரதிமணி. இதுவே, அவரது வாழ்வு பயணத்தின் அடிப்படை எனக் கொள்ளலாம்.

அழகான பெண்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு பயன்படுத்திய படமே அவரது இயல்பை வெளிப்படுத்தும். அமில வீச்சால் முகமும் அகமும் சிதைந்த பெண்களின் வலி பற்றியது அந்த கட்டுரை. அகமும், முகமும் சிதைந்த நிலையிலும், நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வது குறித்து எழுதியுள்ளார்.

எழுத்தாளர், நடிகர் பாரதிமணி

அரசியல் நையாண்டியிலும் கெட்டிக்காரர். ‘சின்னம்மாவின் கதை சொல்லல்’ என்ற தலைப்பில், ‘தந்தி நிருபர் அடியில் பிடிக்காமல் கிண்டி கிண்டி கொடுக்க, சின்னம்மா ராஜா ராணி கதைகளாக அவிழ்த்து விடுகிறார்’ என தமிழக அரசியலை எள்ளி எழுதியுள்ளார்.

பிரதமராக சந்திரசேகர் இருந்த காலத்தில், அரசியல் தரகராக வலம் வந்தவர், சந்திரசாமி. அவர் மரணம் அடைந்த போது எழுதிய கட்டுரையில், அவரை சந்தித்த அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தொண்ணுாறுகளில், சந்திரசாமி புகழ் உச்சத்தில் இருந்தபோது, ‘தரிசிக்கும்’ வாய்ப்பு கிட்டியது. அருந்ததி ராயின், ‘தி எலெக்ட்ரிக் மூன்’ The Electric moon என்ற ஆங்கிலப் படத்தில் என்னோடு நடித்த நடிகை லீலா நாயுடுவுடன் அன்று காரில் போய்க்கொண்டிருந்தேன். திடீர் என, ‘மணி காரை கிரேட்டர் கைலாசுக்கு திருப்பு ஸ்வாமிஜியை பார்க்கணும்’ என்றார். போனதும் அப்பாயின்மெண்ட் இல்லாமலே ஸ்வாமியின் இன்ஸ்டண்ட் தரிசனம் கிடைத்தது.
‘ஆயியே பெஹன்ஜி உங்களை பார்த்து யுகங்களாச்சு’ என்று கட்டிப்பிடித்து வரவேற்றார்.

உலக அழகிகள் ஆறுபேரில் ஒருவராக கருதப்பட்டவர். நடிகர் சசிகபூருக்கு ஜோடியாக நடித்தவர். பிரபல எழுத்தாளர் டாம் மோரியசின் மனைவி. இப்படிப்பட்டவருக்கு வரவேற்புக்கு குறைவு ஏது.

என்னை அறிமுகப்படுத்திய போது, ஏளனமாக பார்த்தார் சந்திரஸ்வாமி. முதல் பார்வையிலே, என்னை அவரும், அவரை நானும் வெறுத்தோம். அரை மணி நேரம் தற்புகழ்ச்சி உரயைாடல் நடந்ததை கேட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்துவிட்டேன். அவரும் என்னை கண்டுகொள்ளவில்லை.

இப்படி, பிரபலங்களுடனான சந்திப்பை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல், சினிமா பிரபலங்களின் அந்தரங்க தகவல்களை அறிந்தவர் பாரதிமணி. அதை பகிரங்கமாகவம், எளிமையாகவும் கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது மரணம் குறித்து, பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் பேசிக் கொண்டிருந்தேன். பாரதிமணியுடன் இருந்த நெருக்கத்தை குறிப்பிட்டார். அவரது நேய செயல்பாடுகளை குறிப்பிட்டார். வாரணாசியில், ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்த பலநுாறு பேரின் உடல்களை எரியூட்ட, பாரதிமணி உதவியுள்ள தகவலை குறிப்பிட்டார்.

சடங்கு, சம்பிரதாயங்கள் இன்றி பாரதிமணியின் உடல், மருத்துவக்கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. செயல்களில் முன்னோடியாக வாழ்ந்தவருக்கு அஞ்சலி தெரிவிக்க, என்னிடம் சொற்கள் இல்லை.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles