Read in : English
இருளர் இன மக்களின் துயரை முன்னிலைப்படுத்தியுள்ள, ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தேன். தமிழகத்தில் வாழும் ஒரு பிரிவினரின் துன்பியலை கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.
அது தொடர்பாக சூடான விவாத அலையும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகார மட்டத்தில் பல நிலையில் உள்ளோர், கல்வியாளர்கள், நீதிபரிபாலன உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், சாதிசங்கங்க தலைவர்கள், விளிம்புநிலை மக்கள் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவற்றால் ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது. விளிம்புநிலையில் வாழும் ஒரு பிரிவு மக்களின் துயர், தமிழ் சமூக பெருங்குடிகள் பார்வைக்கு இப்போதுதான் வந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. அதேநேரம், இது குறித்து நடக்கும் விவாதங்கள், மையப்படுத்தியுள்ள பிரச்னையை தீர்க்க உதவும் வகையில் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் சமவெளியில் வசிக்கும் இருளர்கள், தொல் பழங்குயினத்தை சேர்ந்தவர்கள். வில்லியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் வசிக்கும் இருளர் இனத்தவரே, பழங்குடியினராக கருதப்பட்டனர்.
சமவெளியில் வசிப்போருக்கு, பழங்குயினருக்கான சலுகைகள் தர தயங்கியது அரசு. நீண்ட போராட்டங்கள் மற்றும் வற்புறுத்தலுக்கு பின், அந்த சலுகை சமவெளியில் வசிக்கும் பழங்குடிகளில் மிக சிலருக்கே கிடைக்கிறது.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வசிப்பதால், அது சார்ந்த அறிவு இருளர் மக்களிடம் அதிகம். குடியிருப்புகளில் பாம்பு வந்தால் லாவகமாக பிடிக்கும் திறன் பெற்றவர்கள். பாம்பை கையாளும் திறனுள்ள பெண்களை எல்லா இருளர் குடியிருப்புகளிலும் காணலாம். எலி வேட்டையும் சாதாரணம். பாரம்பரிய பயிற்சி வழியாக இந்த அறிவு கடத்தப்படுகிறது.
இந்த மக்கள் வாழ்வதற்கு போதிய வள ஆதாரம் கிடையாது; உரிய வேலை வாய்ப்பு கிடைப்பதும் கடினம். குடியிருப்புகள் பெரும்பாலும் கிராமங்களுக்கு புறம்பாக, எந்த வசதியும் அற்ற பகுதிகளில் உள்ளன. இவர்கள் நலனுக்காக, பரிந்து பேசுவோரை காண்பது அரிது. சாதியில் எண்ணிக்கை ரீதியாக பலமற்றவர்கள்; எனவே, இவர்களுக்காக அரசியல்வாதிகளின் குரல் ஓங்கி வெளிப்படாது.
அன்றாடம் வாழவே போராடும் குடும்பங்களில் பல, கொத்தடிமையாக உள்ளன. அரிசி ஆலை, செங்கல் சூளை போன்றவற்றில் கொத்தடிமையாக இருக்கும் இருளர்கள் அதிகம். அதிலிருந்து மீட்கப்பட்டாலும், மறுவாழ்வு கிடைக்காமல், மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
வசிப்பிடம் பற்றிய கேள்விக்குறியால் குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கிடைப்பதில்லை. புறக்கணிப்பால் கல்வியிலும் பெரும் பின்னடைவு உள்ளது.
சத்துள்ள உணவு பற்றாக்குறையால், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் அதிகம்; பல்வேறு நோய்களால் அவதிப்படுவோரும் ஏராளம். ஆயுள் ரேகை நீளமும் மிகவும் குறைவு. இதை மிகவும் கவனத்துக்கு உரியது.
இந்த இனத்தை சேர்ந்தவர்கள் கல்வி வாய்ப்பு பெறுவதும் குறைவு. பொதுவாக குறுங்குழுவாக, புறக்கணிப்புக்கு உள்ளாகி, மிகவும் பலவீனமாக உள்ளது இந்த இனம். இதுதான், இன்றைய நிலை.
விளிம்பு நிலையில் வசிக்கும் இந்த மக்களுக்கு வாய்ப்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தி, கவுரவமான வாழ்க்கை அமைய உதவ முடியுமா?
முடியும். இதற்கு முன் உதாரணங்கள் உள்ளன. வழக்கமான அரசின் அதிகார அணுகுமுறையால் இந்த மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முடியாது. சிறப்பு கவனம் செலுத்தி, அக்கறையுள்ள வல்லுனர்கள் மூலம் இதை சாதிக்க முடியும்.
முன் உதாரணங்களில் சில இருளர் இன மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் முக்கியமாவர் சுற்றுச்சூழலாளரான ரோமுலஸ் விட்டேகர். அமெரிக்காவை சேர்ந்தவர். ராஜநாகம் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்தியா வந்தவர், இருளர்களுடன் நட்பு கொண்டார்.
அவர்களின் வாழ்வாதரத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாம்பு பண்ணை அமைய வழி கோலினார். கூட்டுறவு சங்க நிர்வாக முறையில் அந்த பண்ணையை நிர்வகித்து வருகின்றனர் இருளர் இன மக்கள். அந்த சங்கம், லாபகரமாக இயங்குகிறது. வினுப்பாம்பை கையாளும் திறனுள்ள பல இருளர் குடும்பங்கள் இதில் உறுப்பினராக உள்ளன. அவர்கள் வாழ்வு சற்று வலிமையாக மாறிவருகிறது.
இது போல, இருளர் இன பெண்கள் முன்னேற்றத்துக்காக, செங்கல்பட்டு அருகே தண்டரையில், இருளர் பழங்குடி பெண்கள் நல சங்கம் செயல்பட்டு வருகிறது. இது பாரம்பரிய மூலிகை மற்றும் மர அறிவை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டது. இதை திறம்பட நிர்வகித்து வளர்த்தவர் முனைவர் கிருஷ்ணன்.
பல நுாறு குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை இந்த சங்கம் மூலம் உருவாக்கியுள்ளனர். செயற்கையாக, 10 ஏக்கர் பரப்பில் பல வகை மரங்கள் கொண்ட காட்டையும் இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த பெண்கள் சங்கம், விட்டேகரின் மனைவி ஜாய் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் உதவியை பெற்று, அச்சமற்ற வாழ்வுக்கு வழி செய்துள்ளது, காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற அமைப்பு. காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமத்தில் இயங்கி வருகிறது.
விடுதலை உணர்வுடன் அடுத்த தலைமுறை வாழ வழி வகை செய்துள்ளது இந்த அமைப்பு. இருளர் இன மக்களுடன் இணைந்து, கல்வி, பொருளாதார மேம்மாட்டுக்கு துணை நிற்கின்றனர் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மகேஷ் மற்றும் ஜெசி.
அது போல், திண்டிவனம் பகுதியில் பேராசிரியர் பிரபா கல்விமணி முயற்சியால் பல இருளர் குடும்பங்கள் மலர்ந்து வருகின்றன. ஒடுக்கப்பட்டோரின் மறுமலர்ச்சி குரலாய் ஒலிக்கிறது அவரது செயல்பாடு.
சென்னை அருகே குன்றத்துார் இரண்டாம் கட்டளை, புத்தவேடு கிராமத்தில் வசிக்கும் இருளர் இனமக்களின் கல்வி, சமூக மேம்பாட்டுக்கு அர்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் போதி தேவவரம். கல்வி, வேலை வாய்ப்பு பெற்று தருவதன் மூலம் பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம் என நிரூபித்துள்ளார்.
இவை எல்லாம் இருளர் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வரும் மாதிரி சேவைகள். இவற்றை முன்னுதாரணமாக கொண்டால், மாற்றங்களை ஏற்படுத்துவது சுலபம்.
தற்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், ஏராளமான ஊராட்சிகளில் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் தலைவராக, வார்டு உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளனர். அவர்கள், நேர்மையுடன் செயல்படுவதற்கான வெளியை உருவாக்குவது முக்கிய கடமையாகும். அரசும், தன்னார்வலர்களும் இதில் கவனம் செலுத்தினால், சேவை சார்ந்த அதிகாரத்தில் பயிற்சி ஏற்படும். அதுவே நம்பிக்கையாக வாழ்வில் மலரும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளில் பலர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள். வேலுார் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஒடுக்கத்துார், குப்பம்பட்டு ஊராட்சி தலைவராக உள்ளவர் மீனாட்சி. இவர் குடும்பத்துடன் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர். உள்ளாட்சி செயல்பாட்டில் பயிற்சி இல்லாதவர்.
அதிகார பரவலால் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார். அவர் சிறப்பாக செயல்பட உரிய பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை. அதை நிறைவேற்றினால் நம்பிக்கையுடன் அவர் சார்ந்த குடும்பம் திறன் பெற வாய்ப்பு உண்டு. ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பலர் உள்ளாட்சிகளில் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
பிற இனத்தவரின் அச்சுறுத்தல், அதிகாரிகளின் வன்முறை போன்றவற்றால் அவர்கள் முறையாக செயல்படாமல் போகும் நிலை ஏற்படலாம்
அதை போக்கும் வகையில் அதிகார அளிப்பு தொடர்பான பயிற்சிகளை கொடுப்பது, ஊராட்சி நடவடிக்கையை தீவிரமாக கண்காணிப்பது, அதிகாரத்தை முறையாக பயன்படுத்துவது போன்ற நடைமுறைகளில் உரிய பயிற்சி கொடுத்தால், விளிம்பில் உறையும் மக்கள், விழிக்கும் நிலை உருவாகும்.
கல்வியில், சமூகத்தில் முன்னேற்றம் பெற வழி வகை ஏற்படும்
Read in : English