Read in : English

Share the Article

“இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்:. அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்”கவிஞர் — ஆலங்குடி சோமு.  

கவிஞர் ஆலங்குடி சோமுவின் சிந்தனையை தூண்டும் இந்த திரைப்படப் பாடல் வரிகள் வாழ்வின் நிச்சயமின்மையை நமக்கு உணர்த்த கூடியது. இறந்துபோன நமது மூதாதையர்களின் நினைவாக நமக்கு எஞ்சியிருப்பது அவர்களின் ஈமச்சின்னங்கள் மட்டுமே. 

மறுபிறவியில் நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ,  பெருங்கற்காலத்தில்  சென்னை பெருநகரில் வாழ்ந்த  மக்களுக்கு இருந்தது. அவர்கள் நிறுவிய ஈமச்சின்னங்களே அதற்கு சாட்சி . இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் அவர்களிடத்தில் இல்லை; மாறாக இறந்தவர்களை புதைத்து அதன்மேல் பெருங்கற்சின்னங்களை எழுப்பினர்.  இறப்பிற்கு பின்னான மறுமை வாழ்வில் அவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவர்கள் எழுப்பிய இந்த ஈமச்சின்னங்களே சாட்சி. 

3,000 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய  ஈமச்சின்னங்கள் சென்னையில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இறந்தவர்களை புதைத்த பின் நடக்கும் நினைவேந்தல் விழாவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்  நிறுவப்பப்பட்டன.  முனைவர் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், முனைவர் டி.வி. மகாலிங்கம் போன்றோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்கற்காலம் தழைத்தோங்கியது என தங்கள் ஆய்வுகளின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். சென்னை பெருநகர பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பெருங்கற்கால இடங்கள் இருக்கின்றன.  திருப்போரூர், சிறுதாவூர்,  தானூர், அமிர்தமங்கலம், பல்லாவரம், வடமங்கலம், வெண்பாக்கம், செண்பாக்கம்  போன்ற இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன.  

இரும்பு காலத்தின் தொடக்கத்திலேயே சென்னையில் வாழ்ந்த மக்கள் இரும்பை சரிவர பயன்படுத்திக்கொண்டார்கள் என்று அவர்களது ஈமச்சின்னங்களிருந்து தெரிய வருகிறது. 

பெருங்கற்காலம்

கல்திட்டை (Dolmenoid cist)

இவை தரைமட்டத்திற்கு மேல் அமைக்கப்பட்டன. இயற்கையாகக் கிடைக்கும் பெரிய கருங்கற்களைக் கெண்டு நான்கு புறங்களிலும் சுவர்போல் அமைத்து ஒரு சதுரமான அல்லது நீண்ட சதுரமான அறை உண்டாக்கப்பட்டது. இக்குழிவறையின் அடிப்பகுதியில் கற்களைக் கொண்டு தரை அமைத்து அதன் மேல் ஈமப் பொருட்கள் வைக்கப்பட்டன. பிறகு மேலே ஒரு பட்டைக் கல்லைக் கொண்டோ அல்லது இரண்டு மூன்று பட்டைக் கற்களைக் கொண்டோ அறை மூடப்பட்டது. 

கல்லறைச் சுவர்களுக்கு ஆதரவாகச் சுற்றிலும் சிறு சுவர்கள் எழுப்பப்பட்டன. மண், சிறு கற்கள் அல்லது கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு அறை மூடி மறைக்கப்பட்டது. இதனால் ஒரு திட்டு அல்லது குவை தரை மட்டத்திலிருந்து எழும்பியது. குவை சிதையாமல் இருக்க சுற்றிலும் பெரிய உருண்டைக் கற்கள் வட்டமாக வைக்கப்பட்டன. இவ்வகை ஈமச்சின்னங்கள் சானூர், செங்குன்றம், திருவேலங்காடு, பெரும்பேர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

 

கல்பதுக்கை (Slabbed cist)

பூமியைச் சிறிது தோண்டி அதன் நாற்புறமும் நான்கு பலகைக் கற்களை நிறுத்தி ஒரு அறை உருவாக்கப்பட்டது. இப்பலகைக் கற்கள் சாயாமல் இருக்க ஒரு கல் இன்னொரு கல்லைத் தாங்கும் வகையில் ஒவ்வொரு கல்லின் முனையும் ஒரு பக்கம் நீட்டி நிறுத்தப்பட்டது. இந்த அமைப்பு மேலேயிருந்து பார்ப்பதற்கு ஸ்வஸ்திகா போன்று தோற்றமளிக்கும். இவ்வறையில் ஈமப் பொருள்கள் இட்ட பிறகு மேலே ஒரு பெரிய பலகைக் கல்லாலான மூடி கவிக்கப்பட்டது. இதன் மேல் மண் அல்லது கூழாங்கற்கள் கொண்டு ஒரு மேடு எழுப்பப்பட்டது. சில  இடங்களில் இம்மேட்டைச் சுற்றிலும் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமிர்தமங்கலம் என்னும் ஊரில் இவ்வகைச் சின்னங்கள் கல்வட்டங்களின்றிக் காணப்படுகின்றன.

 

கற்கிடை (cairn circle)

ஆழமான குழியைத் தோண்டி அதனுள் ஈமத்தாழி அல்லது ஈமப்பேழை ஆகியவற்றோடு ஈமப்பொருட்களை வைத்து அதன் மீது மண் அல்லது கற்களைக் குவித்து வைப்பார்கள். இந்த ஈமக் குழியைச் சுற்றிலும் உருண்டையான கற்களை வட்டமாக வைத்து அமைக்கப்படும் ஈமச் சின்னத்தையே கற்கிடை அல்லது கல்வட்டம் என்று அழைப்பர். இவை குன்னத்தூர், குன்னவாக்கம், சானூர், பல்லாவரம், பெரும்பேர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

 

ஈமத்தாழி (Urn)

இவை சுடுமண்ணால் செய்யப் பெற்று நீண்ட பெட்டியைப் போன்ற தோற்றம் கொண்டவை. இப்பேழைகள் இரண்டு பகுதிகளாக இருக்கும். கீழ்ப்பகுதி பல கால்களுடன் காணப்படும். மூடியாக விளங்கும் மேல் பகுதி ஆடு போன்ற விலங்குகளின் உருவங்களைக் கொண்டிருக்கும். ஆழமான குழியினுள் ஈமப்பேழையுடன் ஈமப்பொருட்களும் வைத்துப் புதைக்கப்பட்டன. இவை குன்னத்தூர்,  பெரும்பேர்,  சானூர்,  சிறுவானூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

அகழாய்வு செய்யப் பெற்ற பெருங்கற்சின்ன இடங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அகழாய்வு செய்யப்பெற்ற பெருங்கற்சின்ன இடங்களை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தென் பகுதியில் காணப்படும் பெருங்கற் சின்னங்கள் இயற்கையாகக் கிடைக்கும் பெரிய கருங்கற்பாறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டவை. வட பகுதியில் காணப்படும் பெருங்கற்சின்னங்கள் செதுக்குவதற்கு ஏற்ற தன்மை யுடைய “லேட்டரைட்” கற்களைக் கொண்டு எழுப்பப்பட்டவை.

அமிர்தமங்கலம்

இவ்வூர் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கவரைப்பேட்டைக்கு மேற்கே சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. எல்லா இடங்களைப் போலவே இங்கும் பெருங்கற் சின்னங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் ஏரி ஒன்றும், நீரோடைகளும் காணப்படுகின்றன. இவ்விடத்திற்கும், மற்ற பெருங்கற்சின்ன இடங்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அதாவது இங்கு காணப்படும் ஈமச்சின்னங்களில் மற்ற இடங்களைப் போன்று கல்வட்டங்கள் காணப்படவில்லை. ஏறக்குறை 250 ஈமச் சின்னங்கள் இங்கு காணப்படுகின்றன.

இங்கு 1954-55 ஆண்டுகளில் திரு. என்.ஆர் பானர்ஜி அவர்கள் மேற்பார்வையில் மத்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் ஐந்து ஈமச் சின்னங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தி, குவிந்த அடியும், உருண்டையான நடுப்பகுதியும், அகன்ற வாயும் கொண்டு வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் ஈமத்தாழிகளில் மண்டையோடுகள், நீண்ட எலும்புகள், கருப்பு சிவப்பு வண்ண மட்கலங்கள், இரும்புப் பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன. சில ஈமத்தாழிகளின் மேற்புறம் வட்டவடிவமான மூடிகள் (Dome shaped lid) கொண்டு மூடப்பட்டுள்ளன.

வாழ்க்கை நிலை

இக்கால மக்கள் நல்ல நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்குப் பெருங்கற்சின்னங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் சான்று பகர்கின்றன.

வாழ்விடங்கள் மற்றும் தொழில்கள்:

பெருங்கற்கால மக்கள் பல தொழில்களைத் திறம்பட செய்துள்ளனர். அகழாய்வுகளி கிடைத்த ஈமச்சின்னங்களில்  மட்கலங்கள், இரும்பாலான பொருட்கள் போன்றவை அதிக அளவில் கிடைக்கின்றன. இதிலிருந்து மட்கலத் தொழிலும், இரும் பொருட்கள் செய்யும் தொழிலும்  இக்கால மக்களின் முக்கியத் தொழில்களாக இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

மட்கல தொழில்

இம்மக்கள் மட்கலங்களை அதிக அளவில் பயன்படுத்தியிருக்கின்றனர்.  இவர்கள் பயன்படுத்திய மட்கலங்கள் வீட்டு பயன்பாட்டிற்கு ஏற்றவகையாக  இருந்தன. சாடிகள் போன்ற பெரிய மட்கலங்களைத் தானியம் சேமித்து வைக்கவும், இறந்தவர்களைப் புதைக்கவும் பயன்படுத்தினர்.  மட்கலங்கள் செய்யும் தொழில் இக்காலத்தில் மிக வளர்ச்சியுற்றிருந்தது.  இந்த மட்கலங்கள் நான்கு வகையானவை. அவை கறுப்பு  சிவப்பு வண்ண மட்கலங்கள் (Black and Red ware) கறுப்பு மட்கலங்கள் (Black ware) சிவப்பு மட்கலம் (Red ware), செம்பழுப்புப் பூச்சு மட்கலங்கள் (Russet- Coated ware) ஆகியவை.  கறுப்பு சிவப்பு வண்ண மட்கலங்கள் உணவு சமைக்கப்பயன்பட்டன. சிவப்பு வண்ண மட்கலங்கள் பெரிய  அளவிலானவை, இவை பெரும்பாலும் ஈமத்தாழிகளாகவும் தானியங்கள் அல்லது தண்ணீர் சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டன. இம்மட்கலங்களின் கழுத்துப் பகுதியில் குச்சிகளைக் கொண்டு  புள்ளிகள் குத்திச் செய்யப்பட்ட சித்திர வேலைப்பாடுகள் மற்றும் கயிறு  கொண்டு செய்யப்பட்ட வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

கருமான் தொழில்

பெருங்கற்கால அகழ்வாய்வில், மட்கலங்களுக்கு அடுத்தபடியாகப் பல  இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து இம்மக்கள் இரும்பத் தாதுக்களைச் சேகரித்து அவைகளை உருக்கி, வார்த்து அதன் மூலம் தம் வாழ்க்கைக்கு தேவையான கருவிகளைச் செய்தனர் எனத் தெரிகிறது. இக்கருவிகள் பெரும்பாலும் போர் அல்லது வேட்டையாடுவதற்குப் பயன்படக்கூடிய வாள், குத்துவாள், வேல்கள், முள்கொண்ட அம்புமுனைகள், ஈட்டிகள் போன்றவைகளாகும். மேலும் ஏராளமான வேளாண்மைக் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன. இவற்றுள் மண்வெட்டிகள், கொத்துகள், கோடாரிகள், அரிவாள்கள், கடப்பாறைகள் போன்றவை

குறிப்பித்தக்கவைகளாகும்.  குதிரைக் கடிவாளங்களும் கிடைத்துள்ளன.  இவர்களின் இம்முன்னேற்றத்திற்குக் காரணமே இரும்புத் தொழில்தான் எனலாம்.

வேளாண்மைத் தொழில்

வேளாண்மைத் தொழில் நாகரிக வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான தொழிலாகும். புதிய கற்காலத்தில் துவக்க நிலையில் இருந்த வேளாண்மை பெருங்கற்காலத்தில் நன்றாக வேருன்றிப் பரவியது. செங்கற்பட்டு மாவட்டத்தில் இச்சின்னங்கள் உள்ள எல்லா இடங்களும்கு அருகிலும் ஏரிகள் அல்லது நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றை முதலில் உருவாக்கியவர்கள் பெருங்கற்கால மக்கள்தான். இம்மக்கள் நீரைத் தேக்கிவைத்து

அவற்றை வேளாண்மைத் தொழிலுக்குப் பெரிதும் பயன்படுத்தினர். குன்னத்தூரில் அகழ்வு செய்யப் பெற்ற ஒரு ஈமச்சின்னத்தில் உமி நிரம்பிய செப்புக் கிண்ணம் கிடைத்துள்ளது. இதிலிருந்து இம்மக்கள் வேளாண்மை மூலம் கிடைக்கும் தானியங்களை  சேமித்து  வைக்கும்  பழக்கத்தினை கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. பருத்தியும் முக்கியமானப் பயிராக இக்காலத்தில் இருந்துள்ளது.

வேட்டையாடுதல்

வேளாண்மைத் தொழிலோடு இவர்கள் வேட்டையாடும் தொழிலையும் மேற்கொண்டிருந்தனர். போர் செய்யப் பயன்பட்ட கருவிகள் வேட்டையாடுவதற்கும் பயன்பட்டன. ஓநாயின் எலும்புகள் சில ஈமச்சின்னங்களில் காணப்படுகின்றன. இரும்பாலான தூண்டில்கள் கிடைப்பதைக் கொண்டு இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலினையும் மேற்கொண்டிருந்தனர் என அறியலாம். 

கால்நடைகள்:

மாடுகள், எருமைகள், ஆடுகள் போன்றவை இவர்களின் வீட்டு விலங்குகளாக இருந்துள்ளன. குதிரையும் வளர்த்துள்ளனர்.

போர்கருவிகள்:

இரும்பினால் செய்யப் பெற்ற பல போர்க்கருவிகள் கிடைப்பதைக் கொண்டு, பெருங்கற்கால மக்கள் மற்றவர்களுடன் போர் செய்து வந்திருக்கின்றனர் என அறியலாம். போரில் இவர்கள் குதிரைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடும், ஏனெனில் குதிரை கடிவளம் போன்றவை ஈமச்சின்னங்களிலிருந்து கிடைத்துள்ளன.

சமூக வாழ்க்கை

பெருங்கற்கால மக்கள் ஊர்களில் கூட்டமாக வாழ்ந்தனர். கூரை வீடுகளேயன்றி செங்கற்களாலான கட்டிடங்களைக் கட்டிவாழும் நாகரிக வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்தனர். வேளாண்மை முக்கிய தொழிலாக இருந்திருக்கிறது. ஏரிகள், நீர்த்தேக்கங்கள் போன்ற தோண்டுவதற்கு நிறைய மனித உழைப்புத் தேவை. பெருங்கற்காலக் கூட்டுச் சமுதாய வாழ்க்கை இத்தகைய உழைப்புக்கு  அடிகோலியது. பருத்தியினால் நெய்யப் பெற்ற ஆடைகளை உடுத்தினர். பலவகை விலையுயர்ந்த கற்களால் செய்யப் பெற்ற மணிகளாலான அணிகளை அணிந்தனர். சங்கு வளையல்களைப் பூண்டனர்.  

 

சமயம்

இவர்கள் எழுப்பிய ஈமச்சின்னங்களின் கிழக்கு புறத்தில் காணப்படும் துளை (porthole) ஞாயிறு வழிபாட்டை குறிக்கலாம். 

 


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day