Read in : English
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஏழாவது தம்பதியினர் கருமானூர் டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி
இரண்டாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி மகேஷ்வரி, தன் தந்தை கே.எஸ். பொன்னுசாமி முதலியாரிடம் நாகஸ்வரம் கற்றார். “திருமணம் ஆன பின் குடும்ப சூழலும்குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்து பத்து வருடங்களுக்கு நாகஸ்வரம் பக்கம் செல்லமுடியாமலாகிவிட்டது. பின்னர் கடந்த 22 வருடங்களாக கணவருடன் இணைந்து கச்சேரிகள் செய்து வருகிறேன்.”, என்கிறார்.
தவில் வித்வான் கோ.சின்னக்கண்ணுப்பிள்ளையின் மகனான வித்வான் டி.சி. கருணாநிதி, 1980-84 வரையில் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில், கலைமாமணி நாச்சியார் கோவில் எம்.கே. ராஜப்பிள்ளையை குருநாதராக ஏற்று நாகஸ்வரம் கற்றார். 37 வருடங்களாக நாகஸ்வரக் கலைஞராக திகழும் இவர், தன் அண்ணன் டி.சி.கணேசனுடன் இணைந்தும் வாசித்து வருகிறார். இந்த ஜோடிக்கு திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் ஏ கிரேடு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
தங்கள் இசைப்பயணத்தைப் பற்றி கூறுகையில்“சமயபுரம் மாரியம்மன் கோவில் கச்சேரி வாசிக்கும் போது தான் என் மனைவியை சந்தித்தேன். எங்கள் திருமணம் 1990 பெற்றோர்கள் ஆசியுடன் நடந்தது” என்றார் வித்வான் கருணாநிதி. கச்சேரிகளில் நேயர் விருப்பத்திற்கு ஏற்ப சவாலான ராகங்கள் வாசிப்பது தங்களுக்கு நிறைவளிக்கிறது என்கிறார்கள். இத்தம்பந்தியினரின் இரு மகன்களும் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், நாகஸ்வரம் மற்றும் புல்லாங்குழல் கலைஞர்களாகவும் திகழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் நாதஸ்வரத்துறையில் ஈடுபடுவதற்கான சூழல் எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கு விதுஷி மகேஷ்வரி “பெண்கள் இத்துறையில் அதிகம் வர வேண்டும் என்பதே தங்கள் ஆசை”, என்றும் “என் காலத்தில், தந்தையிடம், வீட்டில் மட்டும் தான் கற்க முடியும். வெளியில் பயில அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது எல்லா மாவட்டத்திலும் இசைப்பள்ளிகள் உள்ளன. அதில் பெண்களும் அதிக அளவில் பயில்கிறார்கள். நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் முறையாக பயின்றால்
பெண்கள் நன்றாக இத்துறையில் சிறந்து விளங்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பும் ஊக்கமும் அளிக்க வேண்டும்” என்றும் தன் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். வருகிற நவராத்திரி நவசக்தி நாகஸ்வர விழாவில் கே.எஸ்.கே மணிகண்டனும் பி.வெங்கடேஷும் இந்த ஜோடிக்குத் தவில் வாசித்துக் கச்சேரியைச் சிறப்பிக்கவுள்ளனர்.
Read in : English