Read in : English
பரிவாதினி அமைப்பு ஶ்ரீவத்ஸத்துடன், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் இரண்டாவது தம்பதியினர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசனும், சங்கரியும்.
விதுஷி சங்கரி பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்கழுகுன்றத்தில். தந்தையார் பி.வேதகிரியிடம் நாகஸ்வரத்தில் ஆரம்பபாடங்கள் கற்றுள்ளார். வித்வான் வேதகிரி எதிராஜன் என்பவரிடம் திருப்புலிவனத்தில் நாகஸ்வரம் பயின்றவர். அங்கிருந்து நுற்றுக் கணக்கான வித்வான்கள் தயாராகியுள்ளபடியால், தன் மகளும் அங்கு பயிலவேண்டுமென்று எண்ணி எதிராஜனின் மகன் வித்வான் உத்திரகுமாரனிடம் பயில ஏற்பாடு செய்திருக்கிறார் . செங்கல்பட்டு மாவட்ட இசைப்பள்ளியில் ஆசிரியராய் இருந்த முத்துகிருஷ்ணனிடமும் தன் பயிற்சியைத் தொடர்ந்துள்ளார் சங்கரி .
வித்வான் வெங்கடேஷ் ஆரம்ப பாடங்களை பேட்டவாய்த்தலையில் இருந்த வித்வான் சண்முகசுந்தரத்திடம் குருகுலவாசம் செய்து பயின்றுள்ளார். அதன்பின் திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வித்வான் ரெட்டியூர் சிவவடிவேலிடம் பயின்று பட்டையம் பெற்றபின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வித்வான்கள் பாரதிதாசனிடமும் விஜய கார்த்திகேயனிடமும் சிறப்புப் பயிற்சி எடுத்திருக்கிறார்.
ஏழு வருடங்களாக சேர்ந்து வாசித்து வரும் வெங்கடேஷ்/சங்கரி தம்பதியினர் தங்கள் இசைப்பயணத்தைப் பற்றி கூறுகையில், “நாங்கள் சந்தித்துக் கொண்டதே சங்கீதத்தால்தான். திருவையாறு ஆராதனைக்கு வாசிக்க இருவரும் (தனித்தனி குழுவில்) வந்திருந்தோம். அப்போது ஏற்பட்ட பரிச்சயம் காதலாய் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. முதலில் சேர்ந்து வாசிக்கும்போது இருவர் வழிகளும் ஒத்துப் போகாமல், ஒருங்கிணைக்க சிரமமாய் இருந்தது . சுமார் ஒருவருடம் சேர்ந்து சாதகம் செய்து ஒழுங்குபடுத்திக் கொண்டோம். திருமணங்கள், சிறுசிறு கோயில் கச்சேரிகள் போன்ற சிறு நிகழ்ச்சிகளில் சேர்ந்து வாசிக்கத் தொடங்கினோம். காலப்போக்கில் பெரிய இடங்களில் இருந்தும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி வந்த முதல் வாய்ப்பாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் விழாவில் பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் வாசித்தத்தைச் சொல்லலாம்.”, என்கிறார் வெங்கடேஷ் .
பெண்கள் நாகஸ்வரத்துறையில் ஈடுபடுவதற்கான சூழல் எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கு, “பெண் கலைஞர் வாசிக்கிறார் என்றால் அவருடைய உடையலங்காரங்கள் மேல் செலுத்துமளவுக்கு அவர்கள் வாசிப்பின் மேல் கவனம் செலுத்துவதில்லை என்கிற துரதிர்ஷ்ட சூழல்தான் பல இடங்களில் நிலவுகிறது. எப்போதேனும் ஒருமுறைதான் வாசிப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் சபைகள் அமைகின்றன. பெண்கள் நாகஸ்வரம் கற்றுக் கொள்வதில் குருகுல முறையில் கற்றுக் கொள்ள முடியாத சூழலில் ஆரம்பித்து பல சிக்கல்கள் உள்ளன. எனக்கு என் பெற்றோர் எப்படியும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் இந்தச் சங்கடங்கள் இருக்கவில்லை. இதையெல்லாம் மீறி பயிற்சி எடுத்துக் கொண்டபின் இந்தத் துறையில் பெண்கள் தொடராமல் போவதற்கு இந்த உதாசினாப் போக்கே முதன்மைக் காரணம் என்று தோன்றுகிறது. சமயத்தில் கச்சேரிக்குச் செல்லும்போது பெண்கள் பாதுகாப்பாக தங்கக்கூட வசதிகள் இருக்காது.
பெண்கள் இன்றைக்கு இல்லாத துறை கிடையாது. எத்தனையோ துறையில் சாதனையாளர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் கலைத்துறை என்று வந்துவிடடால் ஏனோ தெரியவில்லை, மக்கள்பார்வையில் ஒரு இளக்காரம் வந்துவிடுகிறது. இதையும் தாண்டி நிறைய பெண்கள் ஆர்வமாக வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும்படியாக சூழல்கள் மாற வேண்டும் என்பதுதான் என் ஆசை. காலப்போக்கில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்கிற நம்பிக்கை இருக்கிறது “, என்கிறார்.
வருகிற நவராத்திரி நவசக்தி நாகஸ்வர விழாவில் கே.விஸ்வநாதனும் தேஜா ரத்னப்பாவும் இந்த ஜோடிக்குத் தவில் வாசித்துக் கச்சேரியைச் சிறப்பிக்கவுள்ளனர்.
Read in : English