Read in : English
பிரபாவதி கோலார் மாவட்டம் தொட்டபன்னந்தஹல்லியைச் சேர்ந்தவர். பெற்றோர் ராமகிருஷ்ணப்பா, தனலக்ஷ்மி இருவரும் நாகஸ்வரக் கலைஞர்கள். பிரபாவதி குழந்தையாக இருந்தபோதே அவர்கள் பெங்களூருக்குப் பெயர்ந்துவிட்டனர்.
சிறு வயதிலேயே பிரபாவதி இசையில் ஆர்வம்காட்டவும், அவரை திருப்பதியில் இருந்த ஆர்.ரேணுவிடம் குருகுல முரையில் கற்க அனுப்பி வைத்தனர். வீட்டில் பயில்வதைவிட குருகுலமாய் பயின்றால்தான் ஒழுங்குடனும், கலைக்கூரிய மரியாதையுடனும் கற்கமுடியும் என்று அவர்கள் எண்ணினர்.
இசை கற்பதில் பெரும் முன்னேற்றம் காட்டினார் பிரபாவதி. ஆனால், இசையில் அவரின் முன்னேற்றத்துக்கு திருமணம் தடையாக இருக்குமோ என்று பெற்றோர் கவலைப்பட்டனர். அந்த நேரத்தில்தான் பெங்களூருக்கு ஓர் இசை நிகழ்ச்சிக்காக பழனிவேல் சென்றார்.
<p><img class=”size-medium wp-image-25815 alignleft” src=”https://inmathi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-29-at-10.46.13-1-212×300.jpeg” alt=”” width=”212″ height=”300″ /></p>
பழனிவேல் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தாபுரத்தைச் சேர்ந்தவர். முதலில் சேக்கரபட்டி சின்னையாவிடம் இசை பயின்றார். பிரபல நாகஸ்வர ஜோடி வண்டிக்காரத்தெரு மணி, மாமூண்டியா மாயவரத்தில் வசித்து வந்தனர். அவர்களுள் வித்வான் மாமூண்டியிடம் இசை பயின்று தனது திறமையை மேலும் வளர்த்துக்கொண்டார்.
பெங்களூரில் பழனிவேல் வாசிக்க வந்த இடத்தில் அதிர்ஷ்டவசமாய் பிரபாவதியின் பெற்றொரும் வந்திருந்தனர் பழனிவேலின் இசைத் திறமையும் அடக்கமும் அவர்களுக்குப் பிடித்துப்போனது. பழனிவேலின் பெற்றோரைத் தொடர்புகொண்டு தங்கள் மகளுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தனர். வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் நிறைய உணர்ந்த பழனிவேல் திருமணமான சில காலத்திலேயே பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். இந்தத் தம்பதியினர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இசைக்கச்கேரிகள் செய்து வருகின்றனர்.
தங்கள் கலையை மேலும் வளர்த்துக் கொள்ள பிரபல வித்வான் பெங்களூர் எம்.கோதண்டராமனிடம் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டபடி கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தனர். மேலும் “உண்மையான ‘காயகி’ பாணியில் எங்கள் வாசிப்பு இருக்க விரும்பினோம். விதுஷி ஆர்.ஏ. ரமாமணியை மிகச் சிறந்த குருவாகக் கண்டோம். அவரிடன் இன்றுவரை கற்றுக்கொண்டு வருகிறோம்.”, என்கிறார் பழனிவேல்.
ஹம்பி உற்சவம் உள்ளிட்ட பல பெருமைமிகு கோயில் விழாக்களில் கச்சேரி நடத்தியுள்ளனர். இவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஜாம்பவானாக விளங்கும் தவில் கலைஞர்கள் பலர் இவர்களுடன் கச்சேரியில் கலந்துகொள்கின்றனர்.
ஒரு பெண் நாகஸ்வரக் கலைஞராக இருப்பதில் உள்ள சவால்களைக் குறித்துப் பேசிய பிரபாவதி, “நாகஸ்வரம் என்பதே ஒரு சிரமமான இசைக்கருவி. அதற்கு உடலுழைப்பு நிறைய தேவை. அதை வாசிக்கப் பழகி குறிப்பிட்ட அளவு நிபுணத்துவம் அடைவதற்கு நிறைய சாதகம் செய்யவேண்டும். ஒரு பாட்டுக் கலைஞரோ, வீணை வித்வானோ கல்வி கற்றுக்கொண்டே கலையையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், நாகஸ்வரம் கற்பவர்கள் தங்கள் முழு நேரத்தையும் அதைப் பயிலவும் பயிற்சி செய்யவும் செலவிட வேண்டும்.
பெரும்பாலான நாகஸ்வர மாணவர்கள் குருகுலமாகவோ அல்லது இசைப்பள்ளி விடுதிகளில் தங்கியோ பயிற்சியெடுத்துக் கொள்வார்கள். ஆனால், பெண்கள் வீட்டுக்கு வெளியே தங்குவது சிரமம். அவர்கள் தயாராக இருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் நடுவே ஒரு பெண்ணைத் தங்க வைப்பதை விரும்புவதில்லை. பெண்ணின் பெற்றோர் சிறப்பு கவனம் எடுத்து அவள் நாகஸ்வரம் கற்க உகந்த சூழலை ஏற்படுத்தித் தந்தாலொழிய ஒரு பெண் நாகஸ்வரம் கற்கவும் பயிற்சி செய்யவும் முடியாது. ஒரு சிறந்த கலைஞராக உருவாகவும் முடியாது. எனக்குத் தேவையான ஆதரவு என் வாழ்நாள் முழுவதும் கிடைத்தது எனது அதிர்ஷ்டமாகும். என் கணவரே எனக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அவருடன் இணைந்து கச்சேரிகள் செய்வதால் எனது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள முடிந்தது. ஒரு பெண்ணால் நாகஸ்வரக் கலைஞராக நிலைப்பது கடினம் என்று கூறுவதால் அது முடியவே முடியாது என்று அர்த்தமல்ல. பாடுபட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வருங்காலத்தில் நிறைய பெண்கள் நாகஸ்வரம் கற்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
மேலும், “பல திறமையான நாகஸ்வரக் கலைஞர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் கலையை விட்டுவிடுகின்றனர். கணவரது குடும்பத்தினரும் பெற்றோரும் பெண்கள் நாகஸ்வரக் கலையைத் தொடர்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.”, என்கிறார் பிரபாவதி,
அகில இந்திய வானொலி நிலையத்தின் ‘ஏ’ கிரேடு தரவரிசை உள்பட பல பாராட்டுகளை பழனிவேலும் பிரபாவதியும் பெற்றுள்ளனர்.
தங்கள் இசை வாழ்வின் பொன்னான தருணங்களைப் பற்றிக் கேட்டபோது பெங்களூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வரவேற்கும் வகையில் நாகஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைவுகூர்ந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அப்துல் கலாம் இரட்டையரின் இசையில் மிகவும் கவரப்பட்டு தியாகராஜரின் முத்திரைக் கிருதியான ‘எந்தரோ மகானுபாவலு’ என்ற பாடலை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பாடலை முழுவதும் கேட்டபின்னர்தான் மேடை ஏறியுள்ளார். அவரது பேச்சிலும் இருவரது இசையைத் தனியாகக் குறிப்பிட்டு புகழ்ந்திருக்கிறார்.
நவராத்திரி நவசக்தி தொடரில் பழனிவேல், பிரபாவதி கச்சேரியுடன் புகழ்பெற்ற வித்வான்களான மன்னார்குடி வாசுதேவனும் கோவிலூர் கல்யாணசுந்தரமும் கலந்துகொள்கின்றனர்.
Read in : English