Read in : English

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அன்று அவர் தான் நடிக்கும் ஜெய் பீம் என்னும் படத்தின் போஸ்டரைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதுவரை சூர்யா 39 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த படத்தின் பெயரையும் போஸ்டரையும் ரசிகர்களுக்காகப் பரவசத்துடன் பகிர்வதாகவும் தெரிவித்திருந்தார். அந்த டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களது ஒட்டுமொத்தக் கவனமும் ஜெய் பீம் மீது திரும்பியது. ஏற்கெனவே சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அது திராவிட அரசியல் பேசியதாகச் சொல்லப்பட்டது. கடந்த முறை சூர்யாவின் திரைப்படம் திராவிட அரசியல் பேசி வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் இம்முறை தலித் அரசியலைப் பயன்படுத்தி வெற்றிபெற முயல்கிறதோ என்னும் எண்ணத்தை அந்த போஸ்டர் ஏற்படுத்தியது. சூரரைப் போற்று திரைப்படம் போலவே ஜெய் பீம் திரைப்படமும் அமேசான் பிரைமில் அதுவும் தீபாவளி நாளன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வைத்து அந்தப் படத்தின் கதையையோ அந்தப் படம் விவாதிக்கும் விஷயத்தையோ முடிவுசெய்திட முடியாது. ஜெய் பீம் பட போஸ்டரில் வெளிப்பட்டிருக்கும் சூர்யாவின் தோற்றத்தை வைத்து அவர் ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கலாம் என ஊகிக்க வாய்ப்புள்ளது. ஏழை எளியவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக அவர் இருக்கலாம். நீதியரசர் சந்த்ரு வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பெண் ஒருவருக்காக 1990களில் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையிலான படம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அவற்றை எல்லாம் நாம் படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், படம் எப்படியிருக்கும் என்பது தொடர்பான ஓர் எதிர்பார்ப்பை அந்த போஸ்டர் உருவாக்கியது. ஒருவேளை அது தலித் அரசியலைப் பேசலாம் என ஊகிக்க அந்த போஸ்டர் இடம்கொடுத்தது. இது திட்டமிட்ட ஏற்பாடாக இருக்கலாம்.


தொடர்ந்து எந்த வகைப் படங்கள் வெற்றிபெறுகின்றன என்பதைக் கவனித்து அப்படியான படங்களை சினிமாக்காரர்கள் உருவாக்குகிறார்கள். காதல் படங்கள் வெற்றிபெற்றால் காதல் படங்களாக வரும். இப்போது தலித் படங்களுக்கான காலம்.  பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்துக்குப் பின்னர் தலித் படங்கள் பற்றிய பேச்சு தமிழ்த் திரையுலகில் பரவலானது எனலாம். மெட்ராஸ் படத்தின் வெற்றியை அடுத்து இரஞ்சித் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார். கபாலி ரஜினி படமாக இருந்தபோதும், இதுவரை ரஜினி படம் எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்காமல் இருந்த நிலை மாறியது. ஏழை எளியவரின் நாயகனாக இருந்த ரஜினி தலித்துகளின் நாயகனாகப் பரிணமித்திருந்தார். கோட் சூட் அணிந்து, சோபாவில் அமர்ந்து ரஜினி சீன வில்லனுக்கு எதிராக, ”நான் முன்னுக்கு வருவதுதான் ஒனக்கு பிரச்சினைன்னா நான் முன்னுக்கு வருவேன்டா கோட் சூட் போடுவேன்டா” என்று பேசும் வசனமும் ரஜினி தலித் அரசியல் பேசுவதான தோற்றத்தைத் தந்தது. இந்த பாணி ரஜினிக்கும் பிடித்துப்போயிருக்கலாம் உடனே அடுத்த படத்தின் இயக்குநராகவும் இரஞ்சித்தை அமர்த்திக்கொண்டார். காலா படமாக்கப்பட்டது. இதிலும் தலித் அரசியலை நினைவுபடுத்தும் வசங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ரஜினியே தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துவிட்டதால் தலித் படங்களுக்கான சந்தை இருப்பது உறுதிப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் என வெளியான படங்களின் வெற்றி தலித் அரசியலுக்குப் பெரிய சந்தை இருக்கிறதோ என்ற எண்ணத்தைப் பரவலாக்கியிருக்கலாம்.

தமிழ்த் திரைப்படங்களில் தலித்துகள் பற்றிய சித்தரிப்பு இரஞ்சித் படங்களுக்கு முன்னர் இடம்பெற்றதே இல்லையா என்றால் இடம்பெற்றிருக்கிறது. இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கி, 1936இல் வெளியான பாலயோகினி திரைப்படத்திலேயே சாதி வேற்றுமைகளைச் சாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் பட்டியலின வேலைக்காரர் வீட்டில் பார்ப்பனக் கைம்பெண் ஒருவர் அடைக்கலமாவார். இதனால் ஆத்திரம் அடைந்த வைதீகர்கள் பட்டியலின வேலைக்காரர் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிடுவார்கள். இவரது இயக்கத்தில் 1939இல் வெளியான தியாகபூமி படத்தில் ஒடுக்கப்பட்டோருக்குக் கோயிலில் இடம்கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

ரஜினியே தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துவிட்டதால் தலித் படங்களுக்கான சந்தை இருப்பது உறுதிப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் என வெளியான படங்களின் வெற்றி தலித் அரசியலுக்குப் பெரிய சந்தை இருக்கிறதோ என்ற எண்ணத்தைப் பரவலாக்கியிருக்கலாம்.

1987இல் மு.கருணாநிதி கதை வசனத்தில், சொர்ணம் இயக்கத்தில் ஒரே ரத்தம் என்றொரு படம் வெளியானது. இதிலும் ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் தீங்குகள், தீண்டாமை குறித்த காட்சிகள் உண்டு. இந்தப் படத்தில் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தகுமார் என்னும் தலித் இளைஞனாக வேடமேற்றிருப்பார். இரட்டைக் குவளை தொடர்பான காட்சிகூட இடம்பெற்றிருக்கும்.

1985ஆம் ஆண்டில் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் விஜய்காந்த் நடிப்பில் வெளியான அலை ஓசை படத்தில் இளையபாரதி எழுதி இளையராஜா இசை அமைத்த ‘போரடடா ஒரு வாளேந்தடா’ என்னும் பாடல் அது வெளியான காலத்தைவிட அண்மைக் காலத்தில்தான் அதிகம் ஒலித்திருக்கிறது. எண்பதுகளில் இந்தப் படம் சராசரியான பொழுதுபோக்குப் படம் என்ற முத்திரையை மட்டுமே பெற முடிந்தது. இப்போது அந்தப் பாடலுக்குக் கிடைத்த கவனம் அப்போது கிடைத்ததா என்பது சந்தேகம்தான்.

இப்படி ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் துயரங்கள் தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து பேசப்பட்டிருந்தாலும் தமிழில் தலித் சினிமா என்னும் பேச்சு இப்போதுதான் காதுகளில் ஒலிக்கிறது. இதுவரை பார்ப்பனரும் ஆதிக்கசாதியினருமான ஒடுக்கியவரே ஒடுக்கப்பட்டவருக்கான நியாயத்தைப் பேசிவந்தார். அந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது. உள்ளேயிருந்த வரும் குரலாக இப்போது தலித்துகளின் குரல் வெளிப்படுகிறது. குனிந்து குனிந்து கிடந்தவர்கள் குமுறி எழுந்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய வேறுபாடு. உதாரணமாக, காலா திரைப்படத்தில் ஹரிதாதா காலா வீட்டில் தண்ணீர் குடிக்காத காட்சிக்குப் புதியதொரு அர்த்தம் கிடைத்தது அதனால்தான்.

அம்பேத்காரின் கொள்கைகளை விவாதிப்பதைவிட அவரது படம், புத்தர் சிலை, நீல நிற கோட் போன்ற அடையாளங்களை வைத்துக்கொண்டு பிரபல நடிகர்களைத் தீப்பொறி பறக்கும் வசனம் பேசவைத்தால் போதும் அது தலித் சினிமாகிவிடும், ரசிகர்களுக்கும் கிளர்ச்சி கிடைத்துவிடும் என்று சினிமாக்காரர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.

அதே நேரத்தில் தலித் படங்கள் எனப் பெரிய அளவில் விதந்தோதப்பட்ட மெட்ராஸ், பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் கவனிக்கப்பட்ட அளவுக்கு தலித்துகளின் பிரச்சினைகளைப் பேசிய அம்ஷன்குமார் இயக்கிய மனுஷங்கடா, லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி ஆகிய படங்கள் பெரிதாகக் கவனிக்கப்படவில்லையே?  அதில் சொல்லிக்கொள்ளும்படியான நாயகர்கள் இல்லாததாலா?


பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில், “இங்க வாய்ப்புன்றது நமக்குல்லாம் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிட்றது கெடயாது இது நம்ம ஆட்டம் எதுக்க நிக்கிறவன் கலகலத்துப்போகணும்… நீ ஏறி ஆடுடா கபிலா இது நம்ம காலம் பாத்துக்கலாம்” எனும் வசனம் ஒலிக்கும்போது, பின்னணியில் சுவரில் அம்பேத்கர் படம் போட்ட சுவரொட்டி தென்படும். இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, இந்தப் படத்துக்கு வேறொரு புரிதல் கிடைத்துவிடுகிறது. அதனடிப்படையில் இதை தலித் படம் எனச் சொல்லிவிட முடியுமா? இது குத்துச் சண்டை தொடர்பான சுவாரசியமான பொழுதுபோக்குப் படம்தானே?

இந்தப் பின்னணியில், சூர்யாவின் ஜெய் பீம் படத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இருளர் பின்னணியில் உள்ளதால் அது தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசும் படமாக இருக்குமா? அப்படியிருப்பின் நல்லது. ஒருவேளை அம்பேத்கரின் சாயலைக் கொண்டு வணிக வெற்றியடைய முயலும் தந்திரமாக இருந்தால்? ஏனென்றால், அம்பேத்காரின் கொள்கைகளை விவாதிப்பதைவிட அவரது படம், புத்தர் சிலை, நீல நிற கோட் போன்ற அடையாளங்களை வைத்துக்கொண்டு பிரபல நடிகர்களைத் தீப்பொறி பறக்கும் வசனம் பேசவைத்தால் போதும் அது தலித் சினிமாகிவிடும், ரசிகர்களுக்கும் கிளர்ச்சி கிடைத்துவிடும் என்று சினிமாக்காரர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.

கதாநாயகர்கள் எந்தச் சட்டையையும் அணிந்துகொள்வார்கள். அது நீல நிறமோ சிவப்பு நிறமோ கறுப்பு நிறமோ அது பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்குத் தேவை வெற்றி, அவ்வளவுதான். ஆனால், இரஞ்சித் போன்ற இயக்குநர்களின் விழைவு வெறும் வணிக வெற்றி மட்டும் இல்லையே, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையில்லையா? அப்படியான நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய படங்கள் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் ஒருபோதும் உருவாக மாட்டா. தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களை, சமுதாயம் அவர்களை நடத்தும் விதத்தை விமர்சிக்கும் படங்களில் ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்கள் நடிப்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அந்த மட்டோடு நகர்ந்துவிட வேண்டும் அதை ஆராதனைக்குரிய விஷயமாகக் கருதி பெருமிதச் சுழலில் சிக்கிடுதல் நல்லதன்று. அப்படிச் சிக்கினால், மீண்டும் மீண்டும் ஹீரோயிஸப் படங்கள் உருவாகிவிடலாம். நாயக அம்சங்களில் மூழ்கித் தோய்ந்த படங்களை ஒடுக்குபவர் உருவாக்குவதைப் போல் ஒடுக்கப்பட்டவர் உருவாக்குவதும் ஆபத்தே. திரைப்படச் சக்கரம் அப்படியொரு சகதிக்குள் சிக்காமல் நகர்ந்துவிடுவதே நல்லது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival