Read in : English

இந்த ஆண்டு மே மாதம் மு.க, ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின் சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் மீண்டும் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவருகிறது.

ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டத்தை கபாலீஸ்வரர் கோயிலில்தான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே, சேகர்பாபு தொடங்கிவைத்தார். மொத்தம் 47 கோயில்களில் தமிழ் அர்ச்சனை தொடங்கப்படும் என்று அறிவித்த அமைச்சர் முதலில் தமிழ் அர்ச்சனை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில்தான் தொடங்கப்படுகிறது என்று கூறினார்.

அடுத்த பத்துநாள்களில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினே மைலாப்பூருக்கு வருகைபுரிந்தார். அங்கே கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் அனைத்து அர்ச்சர்கராகலாம் என்ற திட்டத்துக்கான பணி ஆணைகளை அவர் வழங்கினார். பிராமணரல்லாத 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணை தரப்பட்டது.

அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கிவைத்த நிகழ்வு

அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற திட்டம் திராவிட இயக்க நிறுவனர் ஈ.வெ.ரா பெரியாரின் கனவுத்திட்டமாகும். அவர் இறப்புக்கு முன் கையில் எடுத்த கடைசிப்போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்பது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடும் முயற்சிகளை எடுத்தார். ஆனால், நிறைவேற்ற முடியவில்லை. இதுகுறித்துப் பேசிய கருணாநிதி, பெரியாரை நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைக்கிறோம் என்றார்.

திராவிட இயக்கத்தின் நீண்டநாள் கனவை நிறைவேற்ற ஸ்டாலின் தேர்ந்தெடுத்த இடம் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இது குறித்துப் பேசிய ஸ்டாலின், “தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றும் கலைஞரின் கனவை நனவாக்கும்வண்ணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்கீழ் முறையாகப் பயிற்சிபெற்ற 24 அர்ச்சகர்களுக்கு மயிலை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பணிநியமன ஆணைகளை வழங்கினேன்” என்று நிகழ்ச்சி நடந்த இடத்தையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

இந்துக் கோயில்களின் சொத்துகளை மீட்க வேண்டும் என்ற நடவடிக்கையையும் திமுக அரசு மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்தே தொடங்கியுள்ளது. ஏனைய மதங்களின் வழிபாட்டு இடங்களையும் சொத்துகளையும் அந்த மதத்தினரே நிர்வகிக்கும்போது இந்துமதக் கோயில்களும் அவற்றின் சொத்துகளும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது ஏன் என்ற கேள்வியை பாஜகவும் வேறுபல இந்து அமைப்புகளும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் எழுப்பிவந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தபின்னும் மதம் தொடர்பான பிரச்சினைகளில் அரசு தலையிடக்கூடாது என்று அவர்கள் பேசிவந்தனர். இந்து அறநிலையத்துறை கோயில் சொத்துகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். அவர்களுக்கு பதில் சொல்லும் நடவடிக்கையையும் திமுக அரசு மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்தே தொடங்கியுள்ளது.

திராவிட இயக்கத்தின் நீண்டநாள் கனவை நிறைவேற்ற ஸ்டாலின் தேர்ந்தெடுத்த இடம் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இது குறித்துப் பேசிய ஸ்டாலின், “தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றும் கலைஞரின் கனவை நனவாக்கும்வண்ணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்கீழ் முறையாகப் பயிற்சிபெற்ற 24 அர்ச்சகர்களுக்கு மயிலை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பணிநியமன ஆணைகளை வழங்கினேன்”

கபாலீஸ்வரர் கோயில் நிலங்களில் குடியிருக்கும் பெரும்பாலோர்  குத்தகையும் வாடகையும் கொடுக்காமல் இருப்பதால் கோயிலுக்கு ஆண்டுதோறும் 40 சதவீதம் வருமானம் இழப்பு ஏற்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார். கோயில் நிலங்கள் குறித்து ஆய்வை அமைச்சர் சேகர்பாபுவே மேற்கொண்டார்.

இதுவரை மைலாப்பூர் ஆன்மீகத்தில் ஒரு முக்கிய இடம் பிடித்திருந்தது. கபாலீஸ்வரர் கோயில் பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட காபாலிகம் என்ற சைவப்பிரிவினரின் கோயிலாக கருதப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரர், “கயிலை நன்மலை  யாளுங் கபாலி” என்றும் “கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினாற் காய்ந்துகந்த காபா லியார்” என்றும் சிவனைக் கபாலி என்றே குறிப்பிடுகிறார்.

“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்”

என்று பாடும் திருஞானசம்பந்தர்

“ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்

கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரி” என்று பாடுகிறார். ‘கபாலி’ என்ற பெயர் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் வைத்துக்கொள்வதால் தலித் அரசியல் குறித்துப் பேசும் குறியீடாகவும் அண்மையில் திரைப்படத்தில் உலாவந்தது

திராவிட இயக்கத்தின் வேரான நீதிக்கட்சி தொடங்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்தான். இந்தக் கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் நீதிக்கட்சியின் நிறுவனர் தியாகராயர் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு ரூபாய் பத்தாயிரம் பணமும் கொடுத்திருந்தார். ஆனால் கோவிலைச் சேர்ந்தோர் இவரைக் கோபுரத்திலேறி கும்பநீரை ஊற்றஅனுமதிக்கவில்லை. இவரிடம் பணிபுரிந்த பிராமணர் அதற்கு அனுமதிக்கப்பட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தபின் மைலாப்பூர் அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்துள்ளது. அரசின் முக்கிய நடவடிக்கைகள் பெரும்பாலும் மைலாப்பூரை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது.  இது முதல்வர் தொகுதி அல்ல, அமைச்சர் தொகுதியும் அல்ல. கருணாநியோ கட்சியின் நிறுவன தலைவர்களோ பிறந்த இடமும் அல்ல. திமுக தொடங்கிய இடமும் அல்ல. திராவிட இயக்க வரலாற்றில் மைலாப்பூரின் முக்கியத்துவந்தான் என்ன?

திராவிட இயக்கத்தின் வேரான நீதிக்கட்சி தொடங்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்தான். இந்தக் கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் நீதிக்கட்சியின் நிறுவனர் தியாகராயர் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு ரூபாய் பத்தாயிரம் பணமும் கொடுத்திருந்தார். ஆனால் கோவிலைச் சேர்ந்தோர் இவரைக் கோபுரத்திலேறி கும்பநீரை ஊற்றஅனுமதிக்கவில்லை. இவரிடம் பணிபுரிந்த பிராமணர் அதற்கு அனுமதிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  பணத்தைவிடவும் பதவியைவிடவும் சாதிக்கே மதிப்பு தரப்படுகிறது என்று இந்த நிகழ்ச்சியில் முடிவு செய்த அவர் உடனடியாக அன்றே நீதிக் கட்சியின் இன்னொரு தலைவரான டி, எம், நாயரை சந்தித்தார். அதற்கு முன் தியாகராயருக்கும் நாயருக்கும் ஆத்திகம் நாத்திகம் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன.

அப்போது சென்னை மாநகராட்சியின் உறுப்பினராய் இருந்த நாயர், “கோவில்களுக்கு நிறைய வருமானம் கிடைப்பதால் அவை தண்ணீர் வரி கட்டுவ தில் சிரமம் ஏதும் இருக்காது” என்று பேசினார். தியாக ராயர் கோவில்களுக்குத் தண்ணீர் வரி வசூலிக்கக் கூடாது என்றார். இதனால் தியாகராயருக்கும் நாயக்கருக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளம் பாசிப்படர்ந்து பாழடைந்து கிடந்தது கொசுப் பெருக்கத்தால் நோய் பரவ வாய்ப்பாய் அமைந்திருந்தது. அதுபற்றிப் மாநகராட்சியில் பேசிய நாயர், “நகர மக்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு பார்த்தசாரதி கோயில் குளத்தை மண்கொட்டி மூடி அங்கே பூங்கா நிறுவிட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

“தெப்பக்குளத்தை சுத்தம் செய்து செப்பனிடுவதை விட்டுவிட்டு மூடுவதா” என்று தியாகராயர் நாயரின் தீர்மானத்தைத் தோற் கடித்தார். இதனால் இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாத அளவுக்கு பகை மூண்டிருந்தது.

அந்தப் பகையை கபாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிதான் முடித்துவைத்தது. நாயரின் அரசியல் கருத்துகளை ஏற்ற தியாகராயர் அவருடன் இணைந்து 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில்  “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். நீதி (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் தொடங்கினார். இந்த நீதிக்கட்சியே பின்னாளில் திராவிடர் கழகமானது. இதுவே திமுகவின் தாய்க்கழகமாகும். திராவிட இயக்கத்தின் தோற்றத்தில் மைலாப்பூர் முக்கிய இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மைலாப்பூர் தமிழ்நாட்டு அரசியலின் நூற்றாண்டு வரலாற்றில் மைய இடம்பெற்றுள்ளது. அதன் நீட்சியாக திமுக ஆட்சி தனது முக்கிய கொள்கைத் திட்டங்களை மைலாப்பூரில் தொடங்குகிறது.

திராவிட இயக்கத்தின் தொடக்கம் முதல் இன்று வரை மைலாப்பூர் கபாலீஸ்வரர் முக்கிய இடம் பெற்றுள்ளது. அதன் முத்தாய்ப்பான கொள்கைத் திட்டங்களான ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’, ‘அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம்’ போன்ற திட்டங்களை நிறைவேற்றியது குறித்து வருங்காலத்தில் திராவிட இயக்கத்தினர் பெருமையுடன் பேசும்போதும் எழுதும்போதும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும் நினைவுகூரப்படும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival