Share the Article

சர்வதேச அளவில் தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் பிரபலமான  பெயர் ஐராவதம் மகாதேவன் (2.10.1930 – 26.11.2018). இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்ற தலைசிறந்த பத்திரிகையாளர்கள் ஆசிரியர்களாக இருந்த தினமணி நாளிதழுக்கும் அவர் ஆசிரியராக இருந்து அவர்கள் விட்டுச் சென்ற நல்ல மரபுகளையும் பண்பாடுகளையும் கட்டிக் காத்து பெருமை சேர்த்தவர். கல்வெட்டு எழுத்தும் அச்சு எழுத்தும் அவரை ஆட்கொண்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த அவர், தொல்லியல் துறையிலும் பத்திரிகை துறையிலும் தனது தனி முத்திரையைப் பதித்து நமது பெருமைக்கு உரியவராக இருக்கிறார்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் 1930ல் பிறந்த அவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். அவர் டாக்டராக வேண்டும் என்பது அவரது தந்தையின் விருப்பம். அதில் இடம் கிடைக்காததை அடுத்து சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் படித்து விட்டு, மீண்டும் டாக்டராக வேண்டும் என்று நினைத்தார். அந்த நாளில் பி.எஸ்சி. படித்து விட்டும் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு இருந்தது. ஆனாலும்கூட, எதிர்பார்த்த அளவு பட்டப் படிப்பில் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்பதால் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வழக்கறிஞராகச் சிறிது காலம் பணியாற்றினார். வழக்கறிஞர் பணி செய்து பொருளாதார ரீதியாக தனித்து இயங்க நாளாகும் என்ற எண்ணத்தில், 1953ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை அவர் எழுதினார். 23 வயதான அவர், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்றவர்களிலேயே முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஐ.ஏ.எஸ். முதல் நிலையில் இருந்த சிலரை நேரு அழைத்து அவர்களை ஐ.எஃப்.எஸ். பணியில் சேரும்படி கூறினார். இதையடுத்து ஐ.எஃப்.எஸ். பயிற்சியில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குள்ளாக ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்து நாட்டின் வளர்சிப் பணிகளில் ஈடுபட விரும்பினார். இதையடுத்து, ஜவஹர்லால் நேருவுக்கு கடிதம் எழுதி ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றிக் கொண்டார்.  ஐ.ஏ.எஸ். பணிக்குத் திரும்பாமல் ஐ.எப்.எஸ். பணியிலேயே இருந்திருந்தால் வெளிநாடுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பார்.

அவர் ஐ.ஏ.எஸ். பணியைத் தேர்ந்தெடுத்ததால், இந்தியாவிலேயே பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது தொல்லியல் துறைக்குக் கிடைத்த பேறு என்றால் மிகையில்லை.  பள்ளிக் காலத்திலேயே சிந்து வெளி நாகரிகம் பற்றி அவருக்கு ஆர்வம் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. மத்திய தொழில் மற்றும் வணிகவியல் அணைச்சகத்தில் பணியில் இருந்தபோது அவரது அலுவலகத்திற்கு அருகே தேசிய அருங்காட்சியகத்திலிருந்தின் இயக்குநராக இருந்த கல்வெட்டு ஆய்வாளர் சி. சிவராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்ததால் கல்வெட்டு எழுத்துகள் ஆய்வில் மேலும் தீவிர ஆர்வம் கொண்டார். தொல்லியல் துறையில் ஈடுபாடு காரணமாக தமிழகத்தில் மலைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று தகவல்களைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினார்.  தமிழகத்தில் கல்வெட்டு எழுத்துகள் ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர் எழுதி வெளியிட்ட நூல்களிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

பொள்ளாச்சியில் சப் கலெக்டர் பணியில் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் 1980இல் ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்த நிலையில், 1980லிருந்து 1882 வரை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் இயக்குநராகப் பணிபுரிந்தார். அவர் பணிபுரிந்த காலத்தில் ஊழியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் வழங்குதல், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி பத்திரிகையாளர்களைத் தேர்வு செய்தல், பெண் ஊழிகளுக்கு என புதிதாகக் கழிப்பறைகள் கட்டுதல் போன்றவை அவரது காலத்தில் நடந்த குறிப்பிடத்தக்க முயற்சிகள். ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்காக அந்தப் பணியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான வித்யாசாகர் 29 வயதில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அந்த சூழ்நிலையில்,  இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்காவின் வேண்டுகோளை ஏற்று,  தினமணி ஆசிரியரானார். அன்றைய தினம், அவரது வீட்டுக்கு அருகே இருந்த ஏ.என். சிவராமன் வீட்டுக்கு போய் அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தினமணி ஆசிரியராகப் பதவி ஏற்கப் போவதைத் தெரிவித்தார். உடனேயே, மகாதேவனுடன் காரில் உடன் வந்து, அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர வைத்து கௌரவித்தார்.

அவருக்கு தமிழில் ஆர்வம் உண்டே தவிர, பத்திரிகைத் துறையில் அனுவபம் இருந்ததில்லை. ஆனால், ஏ.என். சிவராமன் பணி ஓய்வுக்குப் பிறகு தினமணி ஆசிரியர் பொறுப்பை ஏற்ற ஐராவதம் மகாதேவன், அந்தப் பணியையும் நன்கு அறிந்து கொண்டு சிறப்பாகவே செய்திருக்கிறார். 1987ஆம் ஆண்டில் தினமணிக்கு ஆசிரியராக வந்ததும் அவர் செய்த சில பணிகள் முக்கியமானவை. பத்திரிகையில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதும் பத்திரிகையின் அமைப்பு முறையில் காலத்துக்கேற்ற வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்ததும் அவரது சாதனைகள். அத்துடன் செய்திகளை நல்ல தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் செய்தார். தினமணியின் வார இணைப்புகளாக தமிழ்மணி, தினமணி சுடர் ஆகியவற்றைக் கொண்டு வந்ததார். 1987ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குள் ஆசிரியராக இருந்த குறுகிய காலத்திற்குள் இந்தப் பணிகளைச் செய்திருக்கிறார். இதையெல்லாம்விட குறிப்பிடத்தக்கது, ஆசிரியர் என்ற பொறுப்புக்கு உரிய கௌரவத்தையும் கம்பீரத்தை விடாமல் காப்பாற்றியிருக்கிறார்.

தினமணியில் ஆசிரியாரகப் பொறுப்பேற்றதும் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை தினமணியில் அறிமுகப்படுத்தியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுவரை விடுதலை நாளிதழும் அதையடுத்து தினமலர் நாளிதழும்தான் பெரியார் அறிமுகப்படுத்திய சீர்திருத்த எழுத்துகளைப் பயன்படுத்தி வந்தன. தினமணியில் அவர் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததை அடுத்து மற்ற பத்திரிகைகளும் பெரியார் எழுத்துச்  சீர்திருத்தத்திற்கு மாறின. இது அவரது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம். “தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வாசகர்கள் ஏற்றுக் கொண்டதை ஒரு வெற்றியாகக் கருதுகின்றேன். முதல் நாளன்று வந்த ஒரு கடிதம் – விடுதலை இதழுக்குப் போய்ச் சேர வேண்டிய ஆசிரியர் தினமணிக்குக் கிடைத்து விட்டார்என்று ஒரு கடிதம் வந்தது. அதை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து பல மாணவர்கள் இபபொழுது உள்ள தினமணி எழுத்துக்களைத்தான் எங்களால் படிக்க முடிகிறது என்று எழுதினார்கள். ஆக அது இன்றளவும் நிலைத்து விட்டது” என்று அவர் நேரில் பேசும் போது குறிப்பிட்டார். தினமணி இதழில் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கி ஒரு கட்டுரையே எழுதினார்.

எழுத்துகள் ஒரு மொழியைப் பதிவு செய்ய உதவும் கருவிகளே.ஒரு மொழியை வெவ்வேறு எழுத்துகளிலும் பல மொழிகளை ஒரே விதமான எழுத்து முறையிலும் எழுத இயலும் என்று குறிப்பிடும் ஐராவதம் மகாதேவன், உலகிலுள்ள எல்லா எழுத்து வடிவங்களும் காலப்போக்கில் படிப்படியாக மாறி வந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

`க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பு வெளியானபோது அவர் தமிழ் மணியில் (25-\1\1992) எழுதிய புத்தக மதிப்புரையில் கூறியுள்ள விஷயங்களை காலத்துக்கு ஏற்ற மொழி நடையின் முக்கியத்துவத்தை இன்றைக்கும் நினைத்துப் பார்க்க வைக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி:

`இந்தப் பத்திரிகை நான் வாங்கியது’. இந்த வாக்கியத்தின் பொருள் உங்களுக்கு விளங்குகிறது அல்லவா? ஆனால் இதன் பொருள் தொல்காப்பியருக்கோ, திருவள்ளுவருக்கோ பிரிந்திருக்காது என்ற வியப்பான உண்மையைச் சுட்டிக்காட்டினார்.

`இந்த’ என்ற சொல் தொல்காப்பியத்திலோ, திருக்குறளிலோ, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலோ  காணப்படவில்லை. `பத்திரிகை’ என்ற வடமொழிச் சொல்லுக்கு முற்காலத்தில் `இலை’ அல்லது `ஓலை’ என்ற பொருள்களே இருந்தன. `நாளேடு’ என்ற பொருளில் இந்தச் சொல் 19ம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்துதான் வழங்கத் தொடங்கியுள்ளது. (இன்னும் சில ஆண்டுகளில் வையாபுரிப் பிள்ளையின் காலத்தில் பெரு வழக்கிலிருந்த `பத்திரிகை’ என்ற சொல்லும் வருங்காலத் தமிழில் இடம் பெறாமல் போகலாம்  என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.) `நான்’ என்ற சொல்லும் மேற்கூறிய சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. Ôயான்Õ என்பதே

அந்தக் காலத்திய வழக்காகும். `வாங்கியது’ என்பது பழந்தமிழர் சொல்லாயினும், `விலை கொடுத்துப் பெற்றுக் கொண்டது’ என்ற பொருளில் சங்க காலத்திற்குப் பிறகுதான் வழங்கத் தொடங்கியது. ஆகையால் நீங்கள் தொல்காப்பியரிடமோ, திருவள்ளுவரிடமோ, `இந்தப் பத்திரிகை நான் வாங்கியது’ என்று இன்றைய `தினமணி’யை நீட்டினால் அப் பெரும் புலவர்கள் நீங்கள் பேசும் மொழி என்னவென்றே புரியாமல் விழிப்பார்கள்!(இன்றைய `தினமணி’யில் உள்ள எழுத்துகளையும் அவர்களால் படிக்க முடியாது.)

கன்னித் தமிழ் என்பது ஓர் அழகான கற்பனையே. உண்மையில் தமிழும் மற்ற உயிரோட்டமுள்ள உலக மொழிகள் அனைத்தையும் போலவே காலந்தோறும் மாறி மாறி வந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் காலந்தோறும் மாற்றங்களைப் பெற்று பெருகி வருவதே ஓர் உயிருள்ள மொழிக்குப் பெருமையாகும்…” – இப்படி அவரது விமர்சன கட்டுரை தொடர்கிறது.

தினமணி பத்திரிகையில் ஆங்கிலச் சொற்களைக் குறைத்து வடமொழிச் சொற்களைக் குறைத்தும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டு அதை செயல்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எப்படிப் பயன்படுத்துவது என்பதில் அவரது அணுகுமுறை எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“காலையில் எழுந்து நாளேட்டைப் பிரித்துப் பார்த்தவுடன் இன்னொரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கும் செய்தி நம் கண்ணை உறுத்துகிறது.

தமிழ் இலக்கியத்தில் காணப்படாத உயர் மட்டம் என்ற அழகற்ற சொல் தொடர் எப்படி இன்றைய வழக்கில் வந்தது? இது High level என்ற ஆங்கிலச் சொல் தொடரின் நேர் மொழிபெயர்ப்பாகும்.

தமிழில் மட்டம் என்ற சொல் சமநிலை (Level) என்ற பொருளைத் தந்தாலும் இச்சொல் தாழ்வு, கீழ்மை, சிறுமை என்ற பொருளில்தான்

பெருவாரியாக வழங்குகிறது. அவன் மட்டமானவன்: மட்டமான நடத்தை, பேச்சு மட்டம் தட்டுதல் போன்ற வழக்குகளைக் கவனிக்கவும். மட்டு, மட்டம் என்ற சொற்களுக்குக் குறைவு என்பதுதான் அடிப்படைப் பொருளாகும். இந்த நோக்கில் உயர் என்பதும் மட்டம் என்பதும் எதிர்மறைப் பொருள்களையே தருகின்றன.

நல்லவேளையாக உயர்-மட்டம் என்ற சொல் உருவாகு முன்னரே நமது பள்ளிகளுக்கு மேல் நிலை (மேனிலை) அல்லது உயர்நிலை என்று பெயரிட்டு விட்டார்கள். இல்லையென்றால் இன்று உயர் கல்வியும் உயர் மட்டக் கல்வி ஆகி விட்டிருக்கும்.

தினமணியில் உயர் மட்டம் என்று இப்பொழுது எழுதுவதில்லை. உயர்நிலை அல்லது மேனிலை என்ற சொற்களையே பயன்படுத்துகிறோம். உயர்நிலை, இடைநிலை, கடைநிலை என்ற அழகிய பொருள் நிறைந்த சொற்கள் இருக்கும்போது உயர்மட்டத்தையும் அடிமட்டத்தையும் நாட வேண்டாமே” என்று தினமணி தமிழ்மணியில் (27—\1\-1990) `பழைய சொற்கள் புதிய மெருகு’ என்ற தலைப்பில் எழுதிய பகுதியில் அவர் எழுதியுள்ளார்.

தினமணியில் நாள்தோறும் வரும் செய்திகளைப் பொருத்து எந்தவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு ஆசிரியர் குழுவினருக்கு குறிப்புகளாக எழுதி அனுப்புவார். செய்தி எழுதும்போது, தினமணி ஆசிரியர் குழுவினரும் நிருபர்களும் அதனைப் பின்பற்ற வேண்டும். பத்திரிகையாளர்களைச் சுதந்திரமாக எழுதுவதற்கு அனுமதிக்கும் அதே நேரத்தில் பத்திரிகையில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கறாராக அவர் இருப்பார். பத்திரிகையில் பணிபுரிபவர்களில் விஷயங்களை அறிந்தவர்களிடம் அதுகுறித்த கருத்துக்களைக் கேட்டறியவும் தயங்கியதில்லை. சரியான கருத்துகளை ஏற்கவும் தவறியதில்லை.

அவரது தமிழ் ஆர்வம் காரணமாக தினமணியில், ராஷ்டிரபதி என்பது குடியரசுத் தலைவர் என்று ஆனது. லோக்சபா மக்களவை ஆகியது. ராஜ்ய சபா மாநிலங்களவை ஆகியது. கேசட் என்பதற்கு ஒலிப்பேழை, ஒளிப்பேழை என்ற சொற்களைக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர் அவர்தான். சஸ்பென்ஷன் (Suspension) என்பதற்கு சஸ்பெண்டு செய்தார்கள் என்று எழுதி வந்த நிலை மாறி பணி இடை நீக்கம் என்ற சொல்லை கொண்டுவரக் காரணமாக இருந்தவர் அவர்.

அவர் ஆசிரியராக இருந்தபோது நிருபர்களும் துணை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை என்று குறிப்பிட்டு எழுதி அனுப்பிய குறிப்புகள் இன்றைக்குக் காணாமல் போனது பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். தினமணி பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் எழுதி அனுப்பிய குறிப்புகளிலிருந்து சில எனது நினைவுகளிலிருந்து…

பஞ்சலோகச்சிலை என்று சொல்லக்கூடாது. செப்புச் சிலைகள் என்று எழுத வேண்டும். செப்புச் சிலைகளில் பஞ்சலோகங்கள் இல்லை. மேலும் இவ்வாறு கூறுவதானால் சிலை என்றே எழுத வேண்டும்.

மனைவி என்ற சொல்லுக்குப் பதிலாகத் துணைவி என்று எழுத வேண்டாம். மனைவி (Wife), துணைவி (Companian) என்ற இரு சொற்களும் வெவ்வேறு பொருள் தரும்.

வருஷம், ஆண்டு – இரண்டு சொற்களையும் பயன்படுத்தலாம். வருடம் என்று எழுதுவது காதுக்கு இனிமையாக இல்லை. இதுபோல விஷம், விசேஷம் என்ற சொற்களை நஞ்சு, சிறப்பு என்று தமிழ்படுத்தலாம். ஆனால், விடம், விசேடம் என்று எழுதுவது நன்றாயிராது.

சுமுகமாக என்பது சரி. சுமூகமாக என்பது தவறு.

ஷ, ஜ, ஸி, ஹ என்ற நான்கு கிரந்த எழுத்துகளை உரிய இடத்தில் பயன்படுத்த தயக்கம் காட்டக்கூடாது. (உ-ம்) ஹிந்து, ஹரிஜன், ஹைதராபாத், ஹிமாசலபிரதேசம். ஆனால் சொற்களின் நடுவில் `ஹ’ என்ற எழுத்தை `க’ என்று எழுதுவது தமிழ் மரபாகும். (உ–\ம்) மகாராஜா, அலகாபாத்.

ப்ரணவ முகர்ஜி என்பது சரியானதே என்றாலும் அப்படி எழுத வேண்டாம். பிரணாப் முகர்ஜி என்று வங்காளி மொழி மரபிலேயே எழுதவும். சர்க்காரியா என்று எழுதுவது சரி. மேகாலய, மேகாலயத்தில் என்றும் திரிபுரா, திரிபுராவில் என்றும் எழுத வேண்டும்.

கழகம் என்ற சொல்லைத் தமிழ்நாடு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். (உ-\ம்) பல்லவன் போக்குவரத்துக் கழகம்

மற்றபடி கம்பெனி, கார்ப்பொரேஷன், இன்ஸ்டிட்யூட் போன்ற ஆங்கில சொற்களுக்கு நிறுவனம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். (உ\ம்) Life Insurance Corporation என்பதை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்று மொழிபெயர்க்கலாம். மேலும் நிலையம், ஸ்தாபனம், மையம் போன்ற சொற்களை இடமறிந்து பயன்படுத்தலாம். Company, Corporation  என்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே ஒலிபெயர்த்து எழுதினாலும் தவறில்லை.

உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் முன்னால் ஓர் என்றும் மெய்யெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் ஒரு என்றும் எழுத வேண்டும் (ஓர் ஊர், ஓரு கிராமம்) தலைப்புகள் இரு வரிகளில் வருமானால் முதல் வரியின் முடிவில் ஒற்று தேவையில்லை.

கொடும்பாவி எரிப்பு என்று வரக்கூடாது. உருவ பொம்மை எரிப்பு என்று எழுத வேண்டும்.

ஜப்பானை சப்பான் என்றோ ஜெர்மனியை செருமனி என்றோ எழுதுவதிலும் அவருக்கு ஈடுபாடு கிடையாது. “அந்த தீவிர எண்ணத்தைக் கொண்டால் பொது மக்களிடம் நாம் போய்ச் சேர முடியாது. அதேபோல கிராமப்புறத்திலே மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் வடமொழிச் சொற்களை நீக்கவும் முயலவில்லை” என்பதில் ஐராவதம் தெளிவாக இருந்தார்.

அத்துடன், சொல்லிலேயும் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். தெருவில் ஒரு விபத்து நடந்தால் பரிதாபமாகத் துடிதுடித்துச் செத்தார். மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் என்று எழுதக்கூடாது என்பார். நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எல்லா விபத்துச் சாவுகளும் பரிதாபத்துக்குரியதுதான். எனவே இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறுவார். இப்படி அவரது தமிழ் ஆர்வம், தினமணியில் எதிரொலித்தது.

இதைபோலவே மொழியில் மட்டுமல்லாமல், வடிவமைப்பு மூலமும் தினமணிக்கு நவீன முகம் கொடுக்க முயன்றார் மகாதேவன். தினமணியின் தலைப்பு எழுத்து வடிவத்தைக் காலத்துக்கேற்ற முறையில் மாற்றி அமைத்ததுடன் முதல் பக்கத்தையும் ஆங்கிலப் பத்திரிகை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். நடுப்பக்கத்தை கட்டுரையும் தலையங்கமும் வாசகர் கடிதமும் உள்ள இடமாக மாற்றினார். தலையங்கம் என்ற சொல்லை ஆசிரியர் உரை என்று மாற்றினார். நடுப்பக்கத்தில் இடது ஒரமாக ஆசிரியர் உரைக்கு இடமளித்த அவர், நடுவில் மேலும் கீழாக இரண்டு கட்டுரைகளுக்கும், அதற்குக் கீழாக வாசகர் கருத்துகளுக்கும் இடம் அளித்தார். அதையடுத்து அதற்கு வாசகர்களிடம் வரவேற்பு இருந்தது. தலைப்பில் தேவையில்லாத கொட்டை எழுத்துகள் போடுவதையும் தவிர்க்கச் சொல்வார். பார்வைக்கு அழகாக இதழ் இருக்க வேண்டும் என்பதிலே அவர் ஆர்வம் காட்டினார். உருவ அமைப்பில்தான் மாறுதலே தவிர, செல்லும் லட்சிய பாதையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவும் அவர் தவறவில்லை.

தமிழ் நாளிதழ் ஒன்றில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனி இணைப்பு இதழை வெளியிட்டது பத்திரிகை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தினமணியின் இணைப்பாக ஐராவதம் மகாதேவனின் ஆர்வத்திலும் ஈடுபாட்டிலும் வெளிவந்த தமிழ்மணியை  தமிழறிஞர்களும் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களும் இன்றைக்கும் நினைவு கூர்கிறார்கள்.

அறிவியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக 1988ஆம் ஆண்டில் தினமணி சுடர் அறிவியல் வார இணைப்பை வெளியிட்டார். இதற்காக அறிவியல் துறை கட்டுரைகளை எளிமையாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் எழுதும் தினமணியின் மூத்த பத்திரிகையாளரான என். ராமதுரையின் பொறுப்பில் அந்த இதழ் தினமணி இணைப்பாக சனிக்கிழமை தோறும் வெளிவந்தன. எளிய தமிழில் பல அறிவியல் கட்டுரைகள் அதில் வெளியாயின.

தமிழ்மணியிலும் தினமணி சுடரிலும் மற்றவர்கள் எழுத களம் அமைத்துக் கொடுத்த அவர், தனது கட்டுரைகளே அதில் அதிகம் வர வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுதுபவர் இல்லை. எனினும், செய்தியின் முக்கியத்துவம் கருதி அதுகுறித்து எழுதத் தவறுவதில்லை. சென்னையில் எழும்பூர் சிறுவர்கள் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள திறந்தவெளியில் டைரானோசரஸ்  ரெக்ஸ் என்ற மிகப்பெரிய டைனோசார் இனத்தைச் சேர்ந்த விலங்கின் உருவம் கண்ணாடி இழையால் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டில் இதுபற்றி வெளியான செயதியில் எழும்பூர் அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜி.கேசவராம், இந்த உலகத்தில் வாழும் விலங்கினங்களும் தாவர இனங்களும் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பொது அமைப்பில் இருக்கக்கூடிய ஒருவர் கூறியுள்ள இந்தக் கருத்து தவறானது என்பதை அறிந்த ஐராவதம் மகாதேவன், தினமணி சுடரில், Ôடைனோசார்களின் காலம் எது?Õ என்று கட்டுரை (8-\1\1991) எழுதினார். தொல்லுயிர் இயல் (Palaentology) நூல்கள் டைனோசார்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஜுராசிக் (Jurassic) யுகத்தில் தோன்றி 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் க்ரிடேசியஸ் (Cretaceous) யுகத்தின் இறுதி வரை வாழ்ந்து வந்தகாவும் அதற்குப் பின்னர் அவை புவியியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தாங்க முடியாமல் அழிந்து போன்தாகவும் குறிப்பிடுகின்றன. அவற்றின் எலும்புகள் காலப்போக்கில் கற்படிவங்களாக (Fossils) மாறி இன்று அருங்காட்சியகங்களை அலங்கரித்து வருகின்றன என்பதை அவரது கட்டுரையில் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். இதுபோல, தவறான விஷயங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

தொல்லியல் துறை சம்பந்தமான செய்திகளோ கட்டுரைகளோ பத்திரிகைகளுக்கு வந்தால் அவரிடம் படித்துக்காட்டி அது சரிதானா என்பதை நிருபர்களும் துணை ஆசிரியர்களும் கேட்டு சரிபார்த்து வெளியிடுவது வழக்கம். இதேபோல எந்த வார்த்தையைப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் எப்போது சந்தேகம் கேட்டாலும்கூட அதற்கு விளக்கம் அளிக்க அவர் தயங்குவதில்லை. பள்ளி மாணவர்களுக்குச் சொல்வது போல எளிமையாக விளக்கிக் கூறுவார். திரைப்படச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவருக்குப் பிடிக்காது. திரைப்பட விளம்பரங்கள் முதல் பக்கத்தில் வரக்கூடாது என்று சொல்வார். நேரம் அவருக்கு முக்கியம். பணியில் கண்டிப்பாக இருப்பார். பணியாளர் நியமனத்திலிருந்து எதிலும் விதிமுறை இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்கேற்ற நடைமுறைகளையும் உருவாக்கியவர். எதையும் சட்டத்தற்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருப்பார். தெரிந்தே செய்யும் தவறுகளை அவர் மன்னிப்பதில்லை. பணியில் நேர்மையை எதிர்பார்ப்பார். குணம் இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும். அது தார்மீக கோபம். அதற்குக் காரணம் இருக்கும். ஆசிரியத்துவத்தின் மேன்மையை எதற்காகவும் விட்டுக் கொடுப்பவர் இல்லை அவர். இவையெல்லாம் அவரை தனித்துவம் மிக்கவராகக் காட்டுகின்றன.

தினமணி ஆசிரியரானதும், இநதியன் எக்ஸ்பிரஸ்  பத்திரிகையிலிருந்து கட்டுரைகளை அதிகமாக மொழிபெயர்த்து தினமணியில் வெளியிடுவதில் ஐராவதம் மகாதேவன் ஆர்வம் காடடவில்லை. ஓரே நிறுவனத்தில் இருந்து இந்த இரண்டு பத்திரிகைகளும் வந்தாலும், தினமணிக்கு என தனிப்பண்புகள் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தினார் அவர். மண்டல் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டு அதன் தொடர்பாக சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அப்போது மண்டல் கமிஷன் அறிக்கையை இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிர்த்தது. தினமணி அதை ஆதரித்தது. இதற்கு முழுமையான காரணம் ஐராவதம் மகாதேவன்தான். தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மண்டல் கமிஷனை தினமணி ஆதரித்தது என்கிறார் அவர்.

அவரது பல தலையங்கங்கள் அதாவது அவரது ஆசிரியர் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கூற முடியும். அணுமின் நிலையங்ளின் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து தொடர்ந்து ஆசிரியர் உரையில் எழுதியுள்ளார். அணுமின் நிலையங்கள் தேவைதான? (10\12\-1987), கல்பாக்கம் இனியும் தேவைதானா? (4\5\1988) அணுஉலை: மெய்யும் பொய்யும் (8\6\1988) , கூடங்குளம் கூடவே கூடாது! (31-\8\1988), அணு உலை: மெய்யும் பொய்யும் (31\10\1988), பத்திரமான அணு உலை கிடையாது (28-\11\1988), செவிடன் காதில் ஊதிய சங்கு (21\12\1988), கூடங்குளம்: சில கேள்விகள் (4\2\1989)…இப்படி சமூக அக்கறையுடன் அவர் தொடர்ந்து இது குறித்து எழுதி வந்துள்ளார். அணுஉலைகளுக்கு எதிரான இயக்கம் சென்னையில் எக்ஸ்பிரஸ் அலுவலகம் எதிரே அண்ணா சாலையில் நடந்த போராட்டத்திலும் அவர் பங்கேற்று பேசியிருக்கிறார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடைபெற்ற பத்திரிகையளர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் 16 ஜோடிக் குழந்தைகளுக்கு ஓரே சமயத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களை கண்டிக்கும் வகையில் பொம்மை கல்யாணங்கள் என்று ஆசிரியர் உரையில் ( 5-\2\1988) எழுதினார்.

தேர்தல் சமயங்களிலும் பாபர் மசூதி இடிப்பு நேரத்திலும் அவர் எழுதிய ஆசிரியர் உரைகள் குறிப்பிடத்தக்கவை. வரதட்சிணைக் கொடுமையால் இளம் பெண்கள் தீக்கிரையாவது குறித்து புதிய முறை ஸதி (28\12\1988), இன்னொரு காந்தி வேண்டும் (5\11\1987), ஏட்டளவில் ஒழிந்த தீண்டாமை (5\10\1988)…இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரியர் உரைகளை குறிப்பிட்டுக் கொண்டே போகலாம். திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு பற்றி தினமணி கதிரில் கட்டுரை எழுதியுள்ள கட்டுரையும்கூட தவிர்க்க முடியாத அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

ஐராவதம் எழுதிய ஆசிரியர் உரைகளில் இன்றைக்கும் நினைவுக் கூரத்தக்கது. 9\2\1988 ல் எழுதிய திரிபுரா. அந்த முதல்வரின் பெயர் நிருபேந்(திர) சக்கரவர்த்திப் பற்றி `அதிசயம் ஆனால் உண்மை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆசிரியர் உரையின் மொழி நடையும் கருத்துச் செறிவும் அவரது ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

வெள்ளானை பெரியசாமி என்ற புனைப்பெயரிலும் அவர் கட்டுரை எழுதியிருக்கிறார். ஐராவதம் என்றால் வெள்ளை ஆனை. மகாதவேன் என்றால் பெரியசாமி.

1970இல் சிந்து சமவெளி ஆய்வுகளுக்காக ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப் கிடைத்து. 1992இல் தமிழ் பிராமி எழுத்துகள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் தேசிய ஃபெல்லோஷிப் கிடைத்தது. உலகத் தமிழ் மாநாடுகளில் தொல்லியல் குறித்த அவர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 2009ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்து. மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்கும் 2009 2010ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது கிடைத்தது. பிவீs ‘ணிணீக்ஷீறீஹ் ஜிணீனீவீறீ ணிஜீவீரீக்ஷீணீஜீலீஹ்’, என்ற அவரது ஆய்வு நூல் ஹார்வர்டு பல்கலைக்கழகம், க்ரியா பதிப்பகம் இணைந்து 2003இல் வெளியிடப்பட்டது. அதன் திருத்தப்பட்ட பதிப்பு 2014இல் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

மகாதேவனின் தந்தை பர்மாவில் ஐராவதி நதிக்கரையோரத்தில் இருந்த ஊரில் இருந்தபோது, அவரது தாய் கருவற்ற நிலையில் அவரது குடும்பம் திருச்சி திரும்பியது. அவரது தொல்லியல் ஆராய்ச்சியின் பொன் விழாவையொட்டி, அவரது பெருமைப் போற்றும் ஐராவதி (Airavati) என்ற கட்டுரைத் தொகுப்பு 2008இல் வெளியானது.

இதைவிட மிக முக்கியமாக நெஞ்சை நெகிழ வைக்கும் விஷயம், அவர் சிறந்த மனிதாபிமானி என்பதுதான். மறைந்த மூத்த மகன் வித்யாசாகர் பெயரில் தனது வாழ்வின் சேமிப்பிலிருந்து ரூ.50 லட்ச ரூபாயைக் கொண்டு கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தி சப்தமில்லாமல் உதவிகளைச் செய்து வருகிறார். சென்னை சங்கர நேத்ராலாயவில் வித்யாசாகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோ மெடிக்கல் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தை உருவாக்க அறக்கட்டளையிலிருந்து ரூ.40 லட்சத்தை நன்கொடையாக வழங்கியவர்.  அத்துடன் ஏழை மாணவ, மாணவிகள் படிக்க ஆண்டுதோறும் அந்த அறக்கட்டளை மூலம் பண உதவியும் செய்து வந்தவர். தான் இறந்த பிறகும் தனது கண்களை சங்கரநேத்ராலயாவுக்குத் தானமாக அளித்துள்ளார் ஐராவதம் மகாதேவன். `உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிட மேன்மையானவை’.

பின் குறிப்பு: அவர் தினமணியில் பணிபுரிந்த காலத்தில் நான் நிருபராகப் பணிபுரிந்தேன். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2005இல் நான் எழுதி உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனின் பத்திரிகையுலகம் என்ற நூல் வெளியிட்டு விழாவுக்குக் கொடும் மழையைப் பொருட்படுத்தாமல் வந்து புத்தகத்தை வெளியிட்டுப் பாராட்டியவர். பத்திரிகை மொழி நடை குறித்து எனது கட்டுரை வெளியான தொகுப்பு நூலை கேட்டு வாங்கிப் படித்துப் பாராட்டியவர். அவரை அவரது இல்லத்தில் பார்ப்பது தட்டிக் கொண்டே போனது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போது ஐராவதம் மகாதேவன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார். அவரை பார்க்க திங்கள்கிழமை வரும்படி கூறினார்கள். நான் சென்ற போது, நான் எப்போது சாவேன் என்று ஒரு நாள் முன்னதாக எழுதிய காகிதத்தையும் அவரது உடலையும் மட்டுமே பார்க்க முடிந்தது எனது துரதிர்ஷடம்.


Share the Article
What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles