Read in : English

Share the Article

இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது.

“பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத் துவங்கினார் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளரான எழுத்தாளர் வானமாமலை. நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட அவர் திருவனந்தபுரம் பூஜப்புரக்கு இடம் பெயர்ந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன எனக் கூறுகிறார்.

ஆனால், வானமாமலையில் இந்தக் கூற்றை மறுக்கிறார் திசையன் விளையைச் சேர்ந்த இளைஞரான எஸ்.ஜெயப்பால். “மலையாளிகள் தமிழர்களை எதற்கெடுத்தாலும் ‘பாண்டிகளே’ என்று கூறி அழைப்பது தான் வழக்கம். அதன் பொருள் குளிக்காமல், அழுக்கடைந்தவர்கள்’ என்பது தான்” எனக் கூறும் அவர், மலையாளி ஒரு கொலையாளி என எதுகை மோனையில் மலையாளிகளைக் குறித்து விமர்சிக்கிறார்.

ஜெயப்பாலை போன்றே, தமிழ் நாட்டில் பரவலாக மலையாளிகள் குறித்த பார்வை பல்வேறு காலக்கட்டங்களிலும் எதிர்மறையாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற தமிழ் வாலிபர் விபத்தில் சிக்கிய போது, ஆம்புலன்ஸில் மீட்கப்பட்ட போதும், சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்ததால் அவர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தில் பரவலாக அதிர்வலைகள் ஏற்படுத்திய நிலையில், கேரள முதல்வர் பினறாயி விஜயன் இச்சம்பவத்தை கண்டித்ததுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்டார். அத்துடன், இது போன்ற நடவடிக்கைகள் தொடராமலிருக்க, விபத்தில் சிக்கி முதல் 48 மணி நேர மருத்துவ செலவை அரசு ஏற்கும் எனவும் அறிவித்தார். முதல்வரின் இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு காலக்கட்டங்களில் சமூக வலைத்தளங்களில் மலையாளிகள் குறித்த தமிழர்களின் பார்வையும், தமிழர்களைக் குறித்த மலையாளிகளின் பார்வையும் எதிர்மறையாக இருந்து வருகிறது.

அதற்கு சமீபத்திய உதாரணமாக கடந்த மாதம் கேரள வெள்ளப்பெருக்கின் போது, தமிழ் மற்றும் மலையாள இளைஞர்கள் பலர் வெறுப்புணர்வை உருவாக்கும் வீடியோக்களை பரவலாக பகிர்ந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது. குறிப்பாக, கேரளப் பெண்களை திருமணம் செய்ய விரும்பி, தமிழன் என்பதால், அப்பெண்களின் குடும்பத்தினர் மறுத்ததாக தமிழ் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றைப் போட, அதற்கு எதிர்வினையாக, கேரளப் பெண்களும் வார்த்தைப் போரில் இறங்க, அவை தமிழ் மற்றும் மலையாள சமூகத்திடையே வெறுப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கையாக பரவலாக பகிரப்பட்டது. தொடர்ந்து, கேரளப் போலீஸாரின் எச்சரிக்கை மற்றும் பிரச்சாரத்தை தொடர்ந்து, அத்தகைய வீடியோக்களை வெளியிட்ட கேரளப் பெண்களே மன்னிப்பு கேட்டதுடன், கேரள இளைஞர்கள் பலரும், ஒற்றுமையை வலியுறுத்தும் விதமான வீடியோக்களையும் வெளியிட்டனர்.

“மலையாளிகள் அகங்காரமிக்கவர்கள். எதையும் சுயநலத்துடனே அணுகுபவர்கள்” என்று ராஜபாளையத்தைச் சேர்ந்த மு.தாமோதரன் கூறுகிறார்.

“மலையாளிகள் அகங்காரமிக்கவர்கள். எதையும் சுயநலத்துடனே அணுகுபவர்கள்” எனக் கூறும் ராஜபாளையத்தைச் சேர்ந்த மு.தாமோதரன், தான் சவுதியில் வேலைப் பார்க்கும் போது, மலையாளிகள் மட்டும் அவர்களுக்கான வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர் எனக் கூறுகின்றார். மேலும், மலையாளிகள் அல்லாத பிற மக்களை அவர்கள் கண்டு கொள்வதேயில்லை என்பது அவரது வாதம்.

தமிழ் மற்றும் மலையாள இளம் தலைமுறையினரிடையே நிலவும் இத்தகைய விரோதப் போக்கு கவலைக்குரியது எனக் கூறுகிறார் புலவர் மி.காசுமான். அவர், “ கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமலேயே இது போன்ற பிரிவினை மற்றும் வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. மலையாளத்தின் அடிப்படையே தமிழ் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறும் அவர் , திராவிட மொழிகளில் மற்றெல்லா மொழிகளையும் விட மலையாளத்திற்குத் தான் இன்றும் தமிழுடனான நெருக்கம் அதிகமாக இருக்கிறது எனக் கூறுகிறார்.

சங்க இலக்கியங்களில் பல புலவர்கள் இன்றைய கேரள மண்ணை சார்ந்தவர்கள். குட்ட நாடு, பொன்னானி போன்ற பகுதிகளிலிருந்து சங்கக் கால புலவர்கள் பலரும் அன்றைய சேர மன்னர்களைப் பாடியுள்ளனர். “பத்து சேர மன்னர்களைப் புகழ்ந்து, பத்து பத்து பாடல்கள் வீதம் பாடப்பட்ட பதிற்றுப் பத்துப் பாடல்கள் இயற்றப்பட்டதும் அங்கு தான். ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை காப்பியங்களான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளும் இன்றைய கேரள மண்ணைச் சார்ந்தவர் தான்” எனக் கூறும் புலவர் மி.காசுமான், இன்றும், தமிழில் சமஸ்கிருத கலப்பு ஏற்பட்டதால் அங்குள்ள மொழியில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்றும் சங்கக் கால தமிழை, மலையாளத்தில் பயன்படுத்தப்படுவதைக் காண முடியும் என்கிறார்.

அவரது கருத்தையே கேரளப் பல்கலைகழக மலையாள இலக்கிய ஆய்வு மாணவரும், இளம் மலையாள எழுத்தாளருமான கெ.அனில் குமார் டேவிட்டும் உறுதி செய்கிறார். மலையாளத்துக்கும், தமிழுக்கும் பழங்கால இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் தான் எனக் கூறும் அவர், “மலையாளிகளானாலும் சரி, தமிழர்களானாலும் சரி, பரஸ்பரம் ஏற்படும் வெறுப்புணர்வானது, தனது மொழி உயர்வானது மற்றும் பழமையானது என்ற உணர்வின் வெளிப்பாடு தான்” என்கிறார். அவர் மேலும் கூறுகையில், “காலம் காலமாக தொடர்ந்து வரும் வரலாற்றில், பல்வேறு இன மக்களின் இடம்பெயர்வுகள் அதனால் ஏற்பட்ட கலாச்சார பிணைப்புகள் அக்கால மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றும், மலையாளத்தில் பல சங்கக்கால தமிழ் சொற்களை நம்மால் பார்க்க முடிந்தாலும், அத்தகைய சொற்களின் பயன்பாட்டை இன்று தமிழில் காண முடிவதில்லை” எனக் கூறுகிறார் அவர்.

அதே நேரம் ‘பாண்டி’ என்று தமிழர்களை அழைப்பது அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் இல்லை என மறுக்கிறார் அவர். “எனக்கு தெரிந்து, பாண்டிய நாட்டை சேர்ந்தவர்களை சித்தரிக்கும் வகையிலேயே ‘பாண்டி’ என்ற பதம் உபயோகப்படுத்துவார்கள். இந்த வார்த்தை இன்று நேற்றல்ல. காலங்காலமாகவே பயன்படுத்துவது தான். இது பாண்டிய நாட்டையும், அங்குள்ள மக்களையும் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்காலத்தில் ஒட்டுமொத்த தமிழர்களையும் குறிக்கும் வகையில், அது மாறியிருக்கிறது” எனக் கூறுகிறார்.

எழுத்தாளர் வானமாமலையைப் பொறுத்தவரையில் மலையாளிகள் தமிழர்களை சிறுமைப்படுத்துவதில்லை என்கிறார். “அவர்கள், தமிழர்களை உயர்வாகவும் பார்ப்பதில்லை, கீழாகவும் பார்ப்பதில்லை. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு தமிழ் பள்ளிகள் இன்றும் செயல்படுகின்றன” எனக் கூறும் அவர், மேலும் கூறுகையில், “ சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பூஜப்புர தமிழ் சங்கம் துவங்கப்பட்டது. தமிழ் தொழிலாளிகளால் துவங்கப்பட்ட சங்கம் இது. இதே பூஜப்புரயில் கேரள அரசின் உதவியுடன் தமிழ் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இது போன்றே மாநிலத்தின் பல இடங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் செயல்படுகின்றன.” எனக் கூறுகிறார்.

தமிழகத்தில் மலையாள மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களுக்கு மலையாள மொழி வழிக் கல்வி மறுக்கப்பட்ட நிலையில், கேரளாவில் பல தமிழ் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சாரங்கள் குறித்து அவர் கூறுகையில், “அது தவறு. ஆங்கில மோகம் பரவலாகவே எழுந்துள்ளது. இங்குள்ள தமிழ் பள்ளிகளில் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்பாமல், ஆங்கில கல்வி வழி பள்ளிகளுக்கு அனுப்பினால் அரசு என்ன செய்யும்?” எனக் கேட்கும் அவர், மலையாள மொழிக்கும் இது போன்ற சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

“கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நீண்ட காலமாக கொத்தனாராக இருந்து வருகிறேன். தமிழர்களே அதிகளவில் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகின்றனர். ஒரு கொத்தனாருக்கு ரூ. 1300 வரை தினசரி கூலி கிடைக்கிறது” எனக் கூறும் பணக் குடியைச் சேர்ந்த எம்.கலையரசன், மலையாளிகள் அன்பானவர்கள் தான். ஆனால், கவனமாக அவர்களிடம் இருக்க வேண்டும். அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பழிவாங்கும் விதமாக ஏதேனும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி விடுவர் என்கிறார்.

சமூக வலைதளங்களில் பரவிய மீம்ஸுகள்

அதோடு, அவர்களிடம் உழைப்புக் குறைவு. அதனால் தான் வெளிமாநிலப் பணியாளர்களை அவர்கள் பல்வேறு வேலைகளுக்காக நியமிக்கின்றனர் எனக் கூறும் அவர், கேரளாவில் இருந்து வந்த நோக்குக் கூலி முறையை சுட்டிக் காட்டுகிறார்.

“சரக்குகளை உங்கள் வாகனத்தில் நீங்களே கொண்டு வந்து ரயில் நிலையத்தில் இறக்குகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக, அங்கு இருக்கும் சுமைத் தொழிலாளர்களுக்கு நோக்குக் கூலியாக குறிப்பிட்ட பணம் தரவேண்டும் என்ற நியாயமற்ற நடைமுறை நிலவி வந்தது இதற்கு ஒரு உதாரணம்.” எனக் கூறும் கலையரசன், இந்த நடைமுறை தற்போதைய அரசு தான் ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது எனக் கூறுகிறார்.

“மலையாளிகளில் எவரோ ஒருவர், செய்யும் தவறினை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையே அவர்களின் குணாதிசயமாக கருதக் கூடாது” எனக் கூறுகிறார் டாக்டர்.ரா.மகாதேவன்

“மலையாளிகளில் எவரோ ஒருவர், செய்யும் தவறினை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையே அவர்களின் குணாதிசயமாக கருதக் கூடாது” எனக் கூறுகிறார் டாக்டர்.ரா.மகாதேவன், திருவனந்தபுரம், பட்டம் காஸ்மோப்பொலிட்டன் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் அவர், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் அவர்களது உயிரை மீட்டுள்ளதாகக் கூறுகிறார். தமிழர்களைக் குறித்து அவர் கூறுகையில், “சிகிச்சையளிக்கும் போது நன்கு ஒத்துழைப்பவர்கள். அதோடு, நம்பிக்கைகுரிய நல்ல உழைப்பாளிகள்” எனக் கூறுகிறார்.

“இது போன்ற தமிழ்- மலையாள வெறுப்புணர்வை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் இரு மாநிலத்திலும் இருக்கும் குறுகிய எண்ணங்கள் கொண்ட அரசியல்வாதிகள் தான் காரணம். மற்றபடி மக்களிடம் எவ்வித வேற்றுமையும் இல்லை” எனக் கூறுகிறார் நெய்வேலியை சேர்ந்த மலையாளத்திலிருந்து தமிழில் பல நூல்களை மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் குறிஞ்சி வேலன். சுமார் 37 மலையாள நாவல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ள அவரைப் பற்றி மலையாள ஊடகங்கள் போதிய முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. அவர் மேலும் கூறுகையில் “தமிழில் நாம் பல சங்க இலக்கியங்களை புரிந்து கொண்டுள்ளதை விட அவர்கள் இன்னும் சிறப்பாகவே புரிந்து கொண்டுள்ளனர். அது போன்றே,சங்க இலக்கியங்களை மலையாள மொழியில் மொழிபெயர்த்து அவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் செய்கின்றனர்” என்றார்.

இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களின் பின்னில் தனி அரசியல் இருப்பதாக தான் கருதுவதாக கொல்லத்தை அடுத்த வெளியத்தை சேர்ந்த இளம் நாடக நடிகரான விஷ்ணு ரவி கூறுகிறார். “மொழியுணர்வு என்பது எளிதில் கிளர்ந்து வரும் ஒன்று. அதனை ஊட்டி விடுவதன் மூலம் மக்களை தங்கள் வாழ்வாதார பிரச்சினைகளிலிருந்து திசைத் திருப்பும் நோக்கமிக்க அரசியலாகவே இவற்றை பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறும் அவர், கேரள வெள்ளப் பெருக்கின் போது தமிழ்- மலையாள இளம் தலைமுறையினர் பரஸ்பரம் சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டுக் கொள்ள காரணமாக இருந்ததின் பின்னில், வெள்ளப் பெருக்கில் முதன்மையான உதவிகளைச் செய்த தமிழர்களிடையே, மலையாளிகள் மீதான வெறுப்புணர்வு உருவாக்கும் மறைமுக தந்திரமாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது எனக் கூறுகிறார். தற்காலத்தில் தமிழ்- மலையாள ஒற்றுமை மிகவும் அவசியமான ஒன்று என்றும் கருதுகிறார் அவர்.

விஷ்ணு ரவியின் இதே கருத்தை ஆமோதிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரான ஜெ.ஜேசு, “பிற மாநிலங்களில், பிற மொழிப் பேசுபவர்களால் தமிழர் ஒருவருக்கு சிகிச்சை கிடைக்காவிட்டால் அதனை மொழிப் பிரச்சினையோடு இணைத்துப் பேசும் நாம், நம் ஊர்களில் சக தமிழர்களாலேயே சக தமிழனுக்கு அவன், வசதியற்றவன் என்ற காரணத்தாலேயே சிகிச்சை மறுக்கப்படுவதுப் பற்றி நாம் பெரும்பாலான வேளைகளில் வாய் திறப்பதில்லை. ஆக இதுவும் ஒரு அரசியல் தான்” என்கிறார் அவர்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles