Read in : English
‘வேதச்சிரேணி’ – பழங்காலங்களில் வேளச்சேரி அறியப்பட்ட பெயர். இதுகுறித்த தலபுராணமானது மரங்களும், அடர்ந்த சோலைகளும் நிறைந்த இப்பகுதியில் எவ்வாறு வேதங்கள் செழுமை பெற்றன என்பதை விளக்கும்.
திருவான்மியூர் தலபுராணத்தில் வேளச்சேரியுடன் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் செவிவழிச் செய்திகளாகச் சில மாறுதல்களுடன் இத்தலத்தில் வழங்கப்படுகின்றன.
இறைவன் உலகைப் படைத்தபோது நான்கு யுகங்கள் எனும் கால அளவைகளை நிர்ணயம் செய்தான். முதல்யுகமானது கிருதயுகம் எனப்பட்டது. இரண்டாவது யுகமான திரேதாயுகத்தின் கால அளவு மூவாயிரம் தேவ ஆண்டுகள். இந்த யுகத்தில் யாகங்களில் உயிர்களைப் பலியிடுவது பாவம் என்ற கருத்து மேலோங்கியதால் யாகத்தை விட தவம், தருமம், நல்லொழுக்கம் போன்ற அறநெறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த யுகத்தில் சிவபெருமானை வழிபடும்போது வானவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி, பூசல், சச்சரவு, கைகலப்பு ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறலாயின.
தேவர்கள் ஈசனை வழிபடச் சென்றபோது அசுரர்களால் தடைகள் ஏற்பட்டன. இதனால் அல்லலுற்ற வானவர்கள் தங்களுக்கு தனியாக தரிசனம் அளிக்குமாறு ஈசனிடம் வேண்டினர். வானவர்களின் வேண்டுகோளுக்கு ஈசன் செவி சாய்த்தார். மலைகள், வனங்கள், ஆறுகள், கடல், சோலைகள், ஆகியவற்றால், சூழப்பட்ட ரம்மியமான இடங்களில் சுயம்பு மூர்த்தியாக தானாகாகவே எழுந்தருளி வானவர்களுக்கு தரிசனம் அளிப்பதாக அருளினார். ‘ பூவுலகில் தாங்கள் வழிபட உகந்த இடங்கள் உள்ளனவா?’ என வானவர்கள் மனம் சஞ்சலப்பட்டனர். தேவர்களின் மனசஞ்சலத்தை இறைவன் நீக்கினார். பூவுலகில் தான் சுயம்புவாக எழுந்ததளங்கள் ‘பூ கயிலாயங்கள்’ எனும் சிறப்பு அந்தஸ்த்தைப் பெரும் எனவும் அங்கு அசுரர்கள் தவிர ஏனையோர் தனது தரிசனத்தைப் பெறலாம் எனவும் ஈசன் உறுதிக்கு அளித்தார்.
இவ்வாறு ஈசன் எழுந்தருளிய பூகைலாயங்களுள் வேளச்சேரியும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் குறிப்பிடத்தக்கன. இங்கு சுயம்புவாக எழுந்தருளிய ஈசனை வேதங்களும், யமதர்மனும், அரசர்களும், மகான்களும், பூசித்து அருள் பெற்றுள்ளனர்.
இக்காலத்தில் சோமுகன் எனும் அசுரன் கடுமையான தவம் புரிந்து அதன் பலனாக அரிய வரங்களை பெற்றான். வரன்கள் அளித்த வலிமையால் எட்டுத்திசைகளிலும் எதிர்ப்பவர்கள் எவரும் இல்லாமல் திக்விஜயம் மேற்கொண்டான்.
பூவுலகைக் கைப்பற்றிய பின் வான் உலகம் சென்று தேவர்களை விரட்டியடித்தான். மேலும் முன்னேறிச் சென்று நான்முகத்தின் சத்தியலோகத்தை அடைந்தான். அசுரனுடைய வருகையை எதிர்பார்த்திருந்த நான்முகன் வேதங்களை நான்கு நூல்களாக மாற்றி வைத்திருந்தார். திசைமுகன் தியானத்தில் இருந்தபோது அவர் வசம் இருந்த நான்கு வேதங்களையும் சோமுகன் கவர்ந்து கொண்டான். வேதங்களைச் சுமந்தவாறு ஆழ்கடலுக்குள் புகுந்து சேற்றில் அவற்றைப் புதைத்துவிட்டான்.
மறைகள் இல்லாமையால் வேதம் ஓதமுடியாமல் வேதியர்கள் தடுமாறினர். யாகங்கள் தடைப்பட்டன. தருமம் துவண்டது. அறவோர்கள் திருமாலிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு மாபெரும் மீனாக உருவெடுத்து ஆழ்கடலுக்குள் சென்றார். சோமுகாசுரனும் மச்சாவடிவெடுத்து பெருமாளுடன் கடும் சண்டையில் இடுப்பட்டான். முடிவில் திருமால் அசுரனை வீழ்த்தி வேதங்களை மீட்டார். (சோமுகாசுரனுக்கு உதவியாக வந்த பஞ்சகன் எனும் படைத்தளபதியை வென்று அவனது எலும்பையே பஞ்ச சன்னியம் எனும் சங்காக உருவாக்கினார் எனவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. வேதங்கள் நான்முகனை அடைந்தன. நாரணனேயாயினும் மீன்வடிவம் கொண்டதால் உருவத்திற்கேற்ப புத்தியின் செய்லபாடும் உயர்நிலையிலிருந்து கீழ்நிலைக்கே இறங்கியது. மச்சமூர்த்தி வெற்றி மமதையில் கடலைக் கலக்கினார். கடல்வாழ் உயிரினங்கள் துன்புற்றுன.
அனைவரும் மச்சமூர்த்தியின் உக்கிரம் கண்டு நடுநடுங்கினர். சிவபெருமான் தனது புத்திரனான சாத்தனாரை (அய்யனார்) அனுப்பி மச்சவதாரமூர்த்தியை அடக்கினார்.
அசுரனின் கைகளில் சிலகாலம் சிக்கியிருந்தாலும் சேற்றில் புதைக்கப்பட்டிருந்ததாலும் மாசுபட்டுவிட்டதாக வேதங்கள் உணர்ந்தன. தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்குச் சிவ வழிபாடே உற்றது எனவும் தெரிந்துகொண்டன. தென்திசையில் கீழ்கடலோரத்தில் அமைந்துள்ள திருவான்மியூரே ஈசனை துதிப்பதற்கு ஏற்ற இடம் என நான்முகன் வழிகாட்டினார்.
வேதங்கள் நான்கும் மனித வடிவம் பூண்டு திருவான்மியூர் நோக்கிச் சென்றன. திருவான்மியூருக்கு அருகே சோலைகள் நீர்நிலைகள் ஆகியன நிரம்பியிருந்ததால் ரம்மியமாகவும், அமைதியாகவும் விளங்கிய ஒரு இடத்தில் தவக்குடில் ஒன்றை நிறுவி அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தன. நாள்தோறும் தாங்கள் நிறுவிய லிங்கத்தை வழிபட்டன. தினமும் திருவான்மியூர்ச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு லிங்கத்தை முறைப்படி பூசித்தன.
வேதங்கள் புரிந்த வழிபாடு முழுமையாக நிறைவுற்றவுடன் சிவபெருமான் நேரில் காட்சியளித்து அவர்கள் விரும்பும் வரத்தைக் கொடுப்பதாக உறுதியளித்தார். ‘பெருமாளே எங்களை சூழ்ந்துள்ள மாசும் அசுரதோஷமும் நீங்க வேண்டும். நாங்கள் பூசை நிகழ்த்திய இத்தலம் (திருவான்மியூர்) வேதபுரி எனவும் பெயர் பெறவேண்டும். நாங்கள் தங்கித் தவநெறியில் நாட்டம் செலுத்திய இடம் வேதச்சிரேணி எனப்பெயர் பெறவேண்டும். உன்னை இவ்விரு தளங்களிலும் வழிபடுவோர் குறைநீங்கி மனநிறைவு பெறவேண்டும்” எனவும் வேதங்கள் வேண்டிக்கொண்டன. ஈசரும் அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். வேதங்கள் தங்கித் தவமியற்றிய வேதச்சிரேணி இன்று வேளச்சேரி என அழைக்கப்படுகிறது.
Read in : English