Read in : English

Share the Article

சிறந்த திரைப்பட ஸ்கிரிப்டுக்காக சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர் அருண் கார்த்திக் (26) இயக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு நெதர்லாந்து ரூ.40 லட்சம் (50 ஆயிரம் ஈரோ) நிதியுதவி அளித்துள்ளது. இந்தோ – டச்சு கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் முதல் திரைப்படம் இது.

திரைப்படத் துறை மீது இருந்த தீவிர ஆர்வத்தால் பி.டெக். மீடியா டெக்னாலஜி படிப்பை இடையிலேயே விட்டு விட்டு திரைப்படத் துறையில் இறங்கியவர் அருண் கார்த்திக்.

கோவை நகரைப் பின்னணியாகக் கொண்டு எழுத்தாளர் திலீப் குமார் எழுதிய `ஒரு குமாஸ்தாவின் கதை’, என்ற சிறுகதை 2002இல் ஞாநி நடத்திய `தீம்தரிகிட’ இதழில் வெளியானது. அந்தச் சிறுகதை `க்ரியா’ வெளியிட்டுள்ள திலீப் குமார் எழுதிய `ரமாவும உமாவும்’ என்ற புத்தகத்திலும் வெளியாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சிறுகதையை `நசீர் “என்ற பெயரில் திரைப்படமாக இயக்குகிறார் அருண் கார்த்திக்.

ராட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில்      ( International Film Festival Rotterdam) சிறந்த திரைப்பட ஸ்கிரிப்ட்டுக்கான  (Scripting and Project Development Grant)  விருது பெற்றவர் அருண் கார்த்திக். அதற்காக அவருக்கு ரூ.8 லட்சம் (10 ஆயிரம் ஈரோ) பரிசுத் தொகை கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து நெதர்லாந்து ஃபிலிம் ஃபண்டு மற்றும் ஹீயூபர்ட் பால்ஸ் ஃபண்ட் கூட்டு முயற்சித் திட்டத்தின்கீழ் ( Netherlands Film Fund  and Hubert Bals Fund  Co-production Scheme) இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க ரூ.40 லட்சம் நிதியுதவி கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

“கோவை தடாகத்தில் வசித்து வருகிறேன். எனது அப்பா, பிசினஸ் மேன். அம்மா பள்ளி ஆசிரியை. நான் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கிக்கானி பள்ளியில் படித்து விட்டு, காருண்யா பல்கலைக் கழகத்தில் பி.டெக். மீடியா டெக்னாலஜி படிப்பில் சேர்ந்து படித்தேன். பிளஸ் டூ படிக்கும் போதே கோவையில் உள்ள கோணங்கள் திரைப்பட சங்கத்தின் அமைப்பின் மூலம் எனக்கு உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஃபெலினியின் ((Federico Fellini) எட்டரை (Eight and a Half)   என்ற திரைப்படத்ப் பார்த்தேன். அந்தப் படம முழுமையாக புரிபடவில்லை என்றாலும்  என்னைக் கவர்ந்தது. அதன் பிறகுதான் சிறந்த திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

தினந்தோறும் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். திரைப்படங்கள் குறித்துப் படிப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களை எடுக்கத் தொடங்கி விட்டேன்.திரைப்பட இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தின் கேமரா மேனாகப் பணிபுரிந்தேன். திரைப்பட விழாக்களில், சிறந்த திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்களின் அறிமுகம் கிடைத்தது. இதனால், எனக்குத் திரைப்படம் குறித்த புரிதல் ஏற்பட்டது. நானும் திரைப்படத்தை இயக்குவதில் களம இறங்கினேன்” என்று தன்னைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

திரைப்படத் துறை மீது இருந்த தீவிர ஆர்வத்தால் பி.டெக். மீடியா டெக்னாலஜி படிப்பை இடையிலேயே விட்டு விட்டு திரைப்படத் துறையில் இறங்கியவர் அருண் கார்த்திக். 

அருண் கார்த்திக்கின் முதல் படமான சிவபுராணம் வசனங்கள், பாடல்கள் இல்லாமல் காட்சிகள் மூலம் நகரும் இந்தப் படம் இது. 2016இல் ரோட்டர்டாம் சர்வதேச  திரைப்பட விழாவில் (International Film Festival Rotterdam- IFFR ) பிரைட் ஃபியூச்சர்  பிரிவின் (Bright Future category) கீழ் திரையிடப்பட்டது.  “தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஃபிலிம் பஜார்  (NFDC’s Film Bazaar) நிதியுதவித் திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை கோவையைச் சேர்ந்த எஸ்.கே. சினிமாஸ் சார்பில் சுரேஷ் குமார் தயாரித்தார். இந்தப் படத்தை வணிகரீதியாக பரவலாகக் கொண்டு செல்ல முடியவில்லை.  அதனால், இந்தப் படம் பற்றி வெகுஜன ரசிகர்களுக்குத் தெரியவில்லை என்றாலும்கூட, திரைப்பட விழாக்களில் பலரது பாராட்டைப் பெற்றது” என்கிறார் அருண் கார்த்திக்.

“இதைத் தொடர்ந்து, இருபது வருஷத்துக்கு முன்னால் கோவையில் நடந்த கலவரம் குறித்து திலீப் குமார் எழுதிய ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ என்ற சிறுகதையைப் படித்தேன். 2016இல் கோவையில் நடந்த கலவரத்தில்  துடியலூரில் நான் நடத்தி வந்த காபி, கரும்பு ஜூஸ் விற்கும் கடை உள்பட அந்தப் பகுதியிலிருந்து ஏராளமான கடைகள் தாக்குதலுக்கு ஆளாயின. எனவேதான் இந்த விஷயம் குறித்த படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது”  என்கிறார் அவர்.

நெதர்லாந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் குழுவினருடன் அருண் கார்த்திக்

“அந்தச் சிறுகதை கதையைத் திரைப்படமாக்குவது என்று முடிவு செய்தேன். சென்னையில் எழுத்தாளர் திலீப் குமாரை சந்தித்து, அவரது கதையை திரைப்படமாக்குவது குறித்து அவரது அனுமதியைக் கேட்டுப் பெற்றேன். அவரது அனுமதி கேட்டபோது, இந்தப் படத்தை எப்போது திரைப்படமாக்கப் போகிறேன் என்பதோ திரைப்படத்துக்கான பணம் எப்படி கிடைக்கப்போகிறது என்பது தெரியாது. ஆனாலும், நான் கேட்போது அதற்கு அவர் சம்மதித்தார். அந்தக் கதையில் வரும் மெஹ்பூப் கான், எனது திரைக்கதையில் நசீர். சம்பவம் நடந்த இடங்களிலேயே திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக, அந்தப் பகுதி மக்களின் பழக்க வழக்கங்ளை அறிநது கொள்வதற்காக டவுன் ஹால் பகுதியிலேயே சிறிய வாடகை வீட்டை எடுத்து அங்கேயே இரண்டு ஆண்டு காலமாக இருந்து வருகிறேன். அங்கிருந்துதான், இந்தப படத்துக்கான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன். அக்டோபர் மாதத்தில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. பிரான்ஸ் நாட்டில் இயற்பியல் ஆய்வுப் படிப்பை முடித்து விட்டு, புதுச்சேரியில் தங்கியிருந்து நாடகங்களை நடத்தி வரும் குமரன் வளவன், நசீர் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பவர்களில் பெரும்பாலானார் திரைப்பட நடிகர்கள் இல்லை.

இந்தப் படத் தயாரிப்புக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த ரிங்கெல் ஃபிலிம் (Rinkel Film) நிறுவனம் ரூ.40 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. ஸ்ட்ரே பேக்ட்ரி (Stray Factory ) நிறுவனத்தைச் சேர்ந்த மதிவாணன், பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமீர் சர்க்கார் ஆகியோரும் இந்தப் படத்தை தயாரிக்க ரூ.70 லட்சம் முதலீடு செய்துள்ளனர். படத்தின் காமிரா மேன் சௌமி ஆனந்த சாஹி. நெதர்லாந்து நிதியுதவித் திட்டத்தின்படி, பாதித் தொகையை அந்த நாட்டிலேயே செலவழிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் போஸ்ட் புரடக்ஷன் பணிகளை அந்த நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் செய்யப் போகிறோம். இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். இந்தப் படம் வித்தியாசமான நல்ல திரைப்படமாக உருவாகும். இதனை பரவலாக எடுத்துச செல்ல வேண்டும். சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல நெதர்லாந்து தயாரிப்பு நிறுவனம் உதவும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இந்த 26 வயது கோவை இளைஞர் அருண் கார்த்திக்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles