ராமேஸ்வரத்தின் நம்பு ராஜ்குமார் புதிய படகு வாங்கி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும்.  ஆனால், படகு வாங்கிய கடனை அடைக்க துவங்குதற்குள் இலங்கை கடற்படையால் அவரது படகு பிடிக்கப்பட்டது. “ ஜூலை 2016 இல் எங்கள் படகு பிடிபட்டது. என்னிடமிருந்த ஒரே வருமானம் ஈட்டக் கூடிய தொழில் உபகரணமாக இருந்தது. பிடிபட்ட பின்னர், மிகப்பெரும் உளைச்சலுக்கு ஆளானேன். கடந்த 2 ஆண்டுகளாக சிறு சிறு வியாபாரங்கள் செய்து எனது வாழ்க்கையையும், என்னை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் கவனித்து வருகிறேன்” எனக் கூறுகிறார்.

ரூ. 25 லட்சம் செலவில் வாங்கப்பட்ட எஸ்.கிளாட்சனின் படகும் கூட புதியது தான். ஜூன், 8, 2016 இல் இலங்கை கடற்படையினர் தனது படகை பிடித்து சென்றனர் எனக் கூறும் கிளாட்சன், புதுப் படகு என்பதால் குறைந்தபட்சம்  ரூ.5 லட்சமாவது எஞ்சின் வேலை செய்ய வேண்டியிருக்கும் எனக் கணிக்கிறார். “ அந்த படகில் தண்ணீர் ஏறி இருப்பதாக சொன்னார்கள். அதனை வெளியேற்றிவிட்டு எடுத்து வந்து, சரி செய்து விடலாம் என நினைக்கிறேன்” என்கிறார் அவர்.

இவ்வாறு, இலங்கை கடற்படையால் 24.02.2015 முதல் 07.07.2018 வரை பிடிக்கப்பட்ட மொத்தப்படகுகளில் 183 படகுகளே விடுவிக்கப்பட உள்ளன. மீதம் உள்ள 5 படகுகளும் இந்த மாதத்தில் பிடிக்கப்பட்டு, அவற்றின் மீது இலங்கை அரசின் புதுச் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படுவதால், அவை விடுவிக்கப்படுவது என்பது சந்தேகத்திற்குரியதே. ஆனால், இலங்கை அரசு  183 படகுகளை விடுவிக்க உத்தரவிட்டாலும் கூட, அவற்றில் வெறும் 69 படகுகள் மட்டுமே தமிழக மீனவர்களால் மீண்டும் சரி செய்து பயன்படுத்ததக்க நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள் இலங்கையில் உள்ள அதிகாரிகள். இந்த 69 படகுகளை சரி செய்ய வேண்டுமானால் கூட 5 முதல் 15 லட்சம் வரை ஆகலாம் என்பதே மீனவர்களின் கருத்தாக உள்ளது.

நம்பு ராஜ்குமாரும், கிளாட்சனும் தங்களது புதிய படகு என்பதால் அவற்றை மீட்டு கொண்டு வந்து, சரி செய்து தொழிலை தொடருவோம் எனக் கூறும் நிலையில், எம்.கிஸோவோ தன்னால் அந்த படகை இனி மீட்க முடியாது என்கிறார். “15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகு அது. அதை சரி செய்ய, இப்போதுள்ள விலைவாசியில் எப்படியும் 20 லட்சம் ஆகிவிடும். அது வீண் செலவு” எனக் கூறும் கிஸோ தங்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான இரு படகுகள் பிடிக்கப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று ஏற்கனவே இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறார். “ இலங்கை அரசு ஏற்கனவே விடுவித்த அந்த படகை சரி செய்ய 8 லட்சம் ரூபாய் வரை செலவானது. தமிழக அரசு ரூ. 5 லட்சம் மட்டுமே இழப்பீடு தந்தது. ஆனால், மீதமுள்ள ஒரு படகையும் மீட்டுக் கொண்டு வந்தாலும் கூட சரிசெய்யப்படும் நிலையில் இல்லை” எனக் கூறுகிறார் அவர்.

ஏற்கனவே, இலங்கை அரசு 42 படகுகளை விடுவித்திருந்தது. அவற்றில், 32 படகுகள் மட்டுமே கொண்டுவரப்படும் நிலையில் இருந்தன. மீதமுள்ள 10 கொண்டுவரப்பட இயலாத நிலையில் இருந்த படகுகளுக்கு தலா 5 லட்சம் வீதம் இழப்பீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, காலதாமதாக இலங்கை அரசு அறிவித்துள்ள படகுகள் விடுவிப்பு என்ற அறிவிப்பைக் கொண்டு  தமிழக மீன் படகு உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படப் போவதில்லை எனக் கூறுகிறார் தமிழ்நாடு மீன் பிடித் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு  மாநிலப் பொதுச்செயலாளர், சி.ஆர்.செந்தில் வேல். மேலும் அவர், “ இந்த படகுகள் உரிய காலத்தில் விடுவிக்கப்பட்டிருந்தால், தமிழக மீனவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும். ஆனால், தற்போது புது சட்டம் கொண்டுவந்து அதனை நடைமுறைப்படுத்தும் நிலையில், இலங்கைக்கு சில நலத்திட்ட உதவிகளை செய்யும் இந்தியாவை திருப்திப்படுத்தும் நோக்கில் இலங்கை இவ்வறிவிப்பை வெளியிட்டிருக்கக் கூடும்.” என்கிறார் அவர். அத்துடன், “ இந்த இற்றுப் போன படகுகளைக் கொண்டு மீனவர்களுக்கு எவ்வித பயனும் இல்லாத நிலையில், மீனவர்களுக்கு படகுகளின் தன்மைக் கேற்ப ரூ. 25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறுகிறார் அவர்.

சி.ஆர்.செந்தில் வேலின் இதே கருத்தையே தேசிய மீனவர் பேரவையின் தலைவரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏவுமான மா. இளங்கோவும் பிரதிபலிக்கிறார். அவர் கூறுகையில், “ கடந்த காலங்களில் இந்திய அரசு வலியுறுத்திய போதும் கூட, இலங்கை அரசு படகுகளை விடுவிக்காமல் அலட்சியமாக இருந்ததற்கு காரணம், தமிழக மீனவர்கள் மீண்டும் அவர்கள் கடல் எல்லைக்குள் வந்துவிடுவார்கள் என்பது தான். தற்போது, மோசமான நிலையில் உள்ள படகுகளை இலங்கை அரசுத் தரக் காரணம் அவர்களது இடத்தை இந்த படகுகள் அடைத்துக் கொண்டிருக்கின்றன என்பதால் தான். மோசமான நிலையில் இருக்கும் படகுகளை தமிழக மீனவர்கள் எடுக்கவில்லையென்றால் அவை ஏலத்திற்கு விடப்படும் எனக் கூறுகின்றனர். அப்படியெனில், இலங்கை அரசிடமிருந்து படகுகளுக்கான இழப்பீட்டைப் பெற்று மீனவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு முடியவில்லையெனில், அரசு மீனவர்களுக்கு படகு ஒன்றிற்கு  தலா ரூ.50 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார் அவர்.

Share the Article
Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival