Read in : English

 

“நாட்டுப் படகில் சிறிய அளவில் மீன் பிடிப்பவர்கள்  நாங்கள். ஒரு காலத்தில் சாளை மீன்கள் தான் எங்களுக்கு அதிகம் கிடைத்து வந்தன. ஆனால் இப்போதெல்லாம் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. மூன்று வாரத்திற்கு முன்னர் எனது மாமாவின் வலையில் கொஞ்சம் கிடைத்தது. ரூ.5000 த்திற்கு அதனை விற்றார்” எனப் பேசத் துவங்கினார் பட்டினப்பாக்கம் மீனவர் ஏ. இளவரசு.

உண்மையில், இந்திய மீனவர்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்திப் பிடிப்பதில் சாளை மீன்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் சராசரியாக பிடிக்கப்படும் 750க்கும் மேற்பட்ட  மீன் வகைகளில் சாளை மீன்கள்  தொடர்ந்து முதலிடத்தையோ அல்லது இரண்டாமிடத்தையோ பெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, சாளை மீன்கள் மீனவர்களுக்கு வருவாயை ஈட்டித் தரும் அட்சய பாத்திரமாகவே இருந்து வந்துள்ளது. இவை, ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை இதன் பருவகாலமாக இருந்தாலும், டிசம்பர் கடைசி வாரம் முதல் மார்ச் மாதத்திற்கும்  இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழக மீனவர்களின் வலைகளில் அதிகம் பிடிபடுபவை.

மொத்தமே 21/2 ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட இந்த மீன்கள், கிழக்கு கடற்பகுதியில் சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் சுமார் 15 கிலோமீட்டர் கடல் தூரத்தில் 20 முதல் 30 மீட்டர் ஆழத்தில் முட்டையிட்டு இனவிருத்தி செய்பவை. இது போன்றே, மேற்கு கடற்பகுதியில், மத்திய கேரளம் மற்றும் வடக்கு கேரளப் பகுதிகளே இம்மீன்கள் இனவிருத்தி செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது என கடந்த கால ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே தான், தமிழகத்தில் 1985 முதல் 1990 வாக்கில் உள்ள கால அளவுகளில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாளை மீன்கள் பிடிக்கப்படுவது அதிகமாக இருந்தது. 1985 இல் தமிழகத்தில் 4,270 டன்கள் சாளை  மீன்கள் பிடிக்கப்பட்டு வந்த நிலை அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது 1990 இல் 37,751 டன்னாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்துள்ள அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த சாளை மீன்கள் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பிடிக்கப்பட்டன.

சாளை மீன்களின் இனவிருத்திக்கும், பருவகால மாறுபாட்டிற்கும் மிகப் பெரிய அளவில் தொடர்பிருப்பதாக (CMFRI) மத்திய கடல்சார் மீன் வள ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் இந்த மீன்கள் அதிகம் பிடிக்கப்பட்டாலும், தமிழக மக்களால் இவை விரும்பி உண்ணப்படுவதில்லை. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மக்கள் இவற்றை விரும்பி உண்ணுவதால், தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் அங்கேயே விற்கப்படுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது, தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு இம்மீன்கள் பிடிக்கப்படுவதில் மிகப்பெருமளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தேசிய அளவில் சாளை மீன்கள் பிடிக்கப்பட்டதன் அளவு 20 ஆண்டுகளுக்கு பின்னர் குறைவாக இருந்தாலும், தமிழகத்தில் 80957 டன் சாளை மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், 2017 இல் இதில் 36% வரை வீழ்ச்சியடைந்து பிடிக்கப்பட்ட சாளைமீன்களின் அளவு வெறும் 51716 டன்னாக இருந்தது. இந்த வீழ்ச்சிக்கு பல காரணங்களை மீனவர்களும், அறிவியலாளர்களும் முன் வைக்கின்றனர். ஆனால், இந்த சாளை மீன்களின் இனவிருத்திக்கும், பருவகால மாறுபாட்டிற்கும் மிகப் பெரிய அளவில் தொடர்பிருப்பதாக (CMFRI) மத்திய கடல்சார் மீன் வள ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

சாளை மீன்களைப் பொறுத்தவரை,பருவ மழை துவங்கும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அதிகளவில் முட்டையிட்டு இனவிருத்தி செய்வதாக CMFRI ஆய்வுகள் கூறுகின்றன. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், தினசரி 20 முதல் 30 மி.மீ அளவிற்கு மழை பெய்யுமெனில் சாளை மீன்களின் இனவிருத்தியளவும் கூடும் என்றே அந்த ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாது, 11 ஆண்டுகளுக்கொருமுறை சூரியனில் ஏற்படும் சூரிய புள்ளியும் சாளை மீன்களின் இனவிருத்தியில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. மீன்களின் இனவிருத்தியில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு சுற்றுச்சூழல் காரணிகளான பூமியின் சுழற்சி, சூரிய புள்ளிகள் விழுவது, சராசரி கடல் மட்டம் மற்றும் மழை பொழியும் அளவு ஆகியவை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை சரியாக கணித்தால் சாளை மீன்கள் பிடிபடும் அளவைக் கூட முன்கூட்டியே கணிக்கலாம் எனக் கூறுகிறார்கள் CMFRI ஆய்வாளர்கள்.

ஆனால், சமீப காலங்களில் எல்-நினோவின் தாக்கமும் இருப்பதாக மத்திய கடல்சார் மீன் வள ஆராய்ச்சி நிறுவன (CMFRI) அறிவியலாளர் டாக்டர். வி.கிருபா கூறுகிறார். அவர், “இந்த சாளை மீன்கள், கிழக்கு கடற்பகுதியை விட மேற்கு கடற்பகுதியில் அதிகளவில் இனவிருத்தி செய்கின்றன. கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் சாளை மீன்கள் பிடிபடுவதன் அளவு தேசிய அளவில் மிகவும் குறைவாக இருந்தது. அதற்கு காரணம் 2012 காலக் கட்டங்களில் அதிக அளவில் மீன் பிடிக்கப்பட்டன. கூடவே, மீன் குஞ்சுகளும் நிறைய அளவில் பிடிக்கப்பட்டன. இருந்தாலும், 2015 மற்றும் 2016 காலக்கட்டங்களில் எல்-நினோவின் தாக்கம் அதிகளவில் இருந்தது” எனக் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், “ பொதுவாக, கடலின் அடிப்பகுதியில் இருக்கும் குளிர்ந்த நீர் மேலெழும்பி வரும். அவ்வாறு, மேலெழும்பும் போது, கடலின் தரைமட்டத்திலிருந்து நல்ல ஊட்டச்சத்தான உணவுகளும் வரும். இவ்வாறு வரும் போது, மீன்களுக்கு  இனவிருத்திக்கு தேவையான அளவு உணவும், தட்பவெப்ப நிலையும் கிடைக்கின்றன. ஆனால், பருவ கால மாறுபாடு இதில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது, கடல் நீரின் வெப்பம் மாறாமல், அதிகளவில் இருக்கும் போது, இந்த மீன்களால் எதிர்பார்க்கும் அளவு இனவிருத்தி செய்துவிட முடியாது” என்கிறார் அவர்.

அதேவேளையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்பகுதியில் சாளை மீன்களின் வரத்து குறைந்தாலும், கேரளா உள்ளிட்ட மேற்கு கடற்பகுதியில் சாளை மீன்களின் வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், மீன்கள் இடம் மாறியிருக்கக் கூடும் என்கிறார் இந்திய கடல் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் டி.டி. அஜித்குமார். “ அவர் கூறுகையில், கடல் நீரோட்டமும் கூட இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மீன்கள், தங்கள் இனவிருத்திக்கு ஏற்ற வெப்ப நிலையும், உணவும் கிடைக்கும் இடம் நோக்கி நகர்வது இயல்பே.” எனக் கூறுகிறார்.

இப்படியிருக்க, மீனவர்கள் தரப்பில் முன்னைப் போல் தங்களுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் சாளை மீன்களுக்கான வலைகளை போடுவதில்லை எனக் கூறுகின்றனர். இதுகுறித்து உவரி மீனவர் சி.பிரிட்டாஸ் கூறுகையில், “ திருநெல்வேலி மாவட்டத்தில் உவரியில் மட்டும் தான் சாளை மீன்களுக்கான வலையை போடுகிறோம். மற்ற ஊர்களில், இவை பெருமளவில் போடுவதில்லை.” என்கிறார். கடலூர் மீனவர் மு. கணேசனோ தமிழகத்தில் அந்த மீனைப் பிடித்தாலும் அவற்றை விற்பது எங்கு எனக் கேட்கிறார். “ தமிழகத்தில் யாரும் பெரிய அளவில் சாளை மீனை சாப்பிடுவதில்லை. நாங்கள் கேரள வியாபாரிகளையே நம்பியிருக்கிறோம். கேரளாவில் சாளை மீன் அதிகளவில் பிடிக்கப்பட்டால், வியாபாரிகள் இங்கு வருவதில்லை. அப்படி இருக்கும் போது, பிடிக்கப்படும் சாளை மீன்கள் நஷ்டமாகிறது” என்றார் அவர்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival