Read in : English

பாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும்  நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். சின்னப்பாலத்தில் மட்டும் தினசரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாசிகளை சேகரிக்க பரிசலில் செல்கின்றனர்.  இது தவிர, தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்பாசி சாகுபடி செய்ய பயிற்சி வழங்கப்பட்டு மீனவர்கள் கணிசமான அளவில் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கடல் பாசி சேகரிக்கும் சின்னப்பாலத்தை சேர்ந்த மு. நம்பு கூறுகையில் “ தனியார் நிறுவனங்கள் நாங்கள் சேகரிக்கும் கடற்பாசிகளை வாங்கி செல்கின்றனர். மரிக்கொழுந்து எனப்படும் கடற்பாசிகளைத் தான் நாங்கள் தீவில் அதிகம் சேகரிக்கிறோம். அவற்றை அவர்கள் கிலோ ரூ.20  என்ற விலையில் எங்களிடமிருந்து எடுக்கிறார்கள். அதுவே, காய்ந்த பாசி எனில் கிலோ ரூ.60 வரை கிடைக்கிறது.” எனக் கூறுகிறார்.

இவ்வாறு கடற்பாசிகள் சாகுபடி செய்தும், சேகரித்தும் மாதம் சுமார்  ரூ. 8000 வரை சம்பாதிக்க முடிவதாகக் கூறுகிறார் மற்றொரு கடல் பாசி சேகரிக்கும் பெண்ணான எ. சகுந்தலா. “ தற்போது, பவளப்பாறைகளுக்கு ஆபத்தாக இருப்பதாகக் கூறி சில தீவுகளுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. ஆகவே சுய உதவிக்குழுக்கள் மூலம் அவற்றை சாகுபடி செய்து வருகிறோம்” என்கிறார் அவர். இதற்காக மூங்கில் தட்டிகளை கடலில் மிதக்கவிட்டு அதில் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் கடற்பாசிகள் 45 முதல் 60 நாட்களில் அறுவடைக்குத் தயாராகின்றன.

வனத்துறையின் நெருக்கடி காரணமாக மீனவப் பெண்கள் தற்போது தீவுகளில் சென்று கடற்பாசி சேகரிப்பது வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் டி.கெ.அசோக் குமார் கூறுகையில், “ தீவுப் பகுதிகளில் கடற்பாசி சேகரிப்பதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. மீன்கள் அதிகளவில் உண்ணும் உணவாக இருக்கும் இந்த கடற்பாசிகளை அழித்து விட்டால், இயற்கை சமநிலை சீர்குலைந்துவிடும் என்பதே அதற்கு காரணம். மற்றபடி மீனவர்கள் அவற்றை கடலோரப் பகுதிகளில் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்” என்றார்.

பொதுவாக இந்த பாசிகள் ஆழமற்ற கடல் பகுதிகளிலும், கழிமுகப் பகுதிகளிலும், முகத்துவாரங்களிலும் அதிக அளவில் வளருபவை. அங்கிருக்கும் பாறைகள், மற்றும் பவளப்பாறைகளில் அடர்த்தியாக வளரக் கூடியவை. பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும் இந்த பாசிகள், தாதுஉப்புகள், புரோட்டீன்கள், அயோடின், புரோமின்,விட்டமின்கள் என எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ளன.  நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்ல இந்த கடற்பாசிகள் தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளில் வளரவும், வளர்க்கவும் ஏற்ற இடமாகக் கூறுகிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கடல் வள ஆராய்ச்சி மைய பேராசிரியர் டி. சிற்றரசு கூறுகிறார். மேலும் அவர்,

“ மன்னார் வளைகுடா பகுதிகளில் கஞ்சிப்பாசி, பக்கடாபாசி, கட்டக்கோரை, மரிக்கொழுந்து என உள்ளூரில் அறியப்படும் 4 வகைகளான கடற்பாசிகள் கிடைக்கின்றன. இவை கடலில் 20 அடி ஆழம் வரையுள்ள பகுதிகளில் கிடைக்கும்.

கன்னியாகுமரி உள்ளிட்ட கடல் சீற்றம் அதிகமான கடல் பகுதிகளில் இவற்றை வளர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால், ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட மிதமான பகுதிகளில் இவை மீனவர்களுக்கு முக்கிய வருமானம் ஈட்டக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது” எனக் கூறுகிறார்.

பாசி என்றாலே நாம் அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், சமீபகாலமாக ஸ்ப்ரூலினா என்ற ஒரு வகை கடற்பாசி கேப்சூலாக தயார் செய்து சந்தைக்கு வந்ததும் சில  நடுத்தட்டு மக்களுக்கு அதன் பயன்கள் மெல்ல புரியத் துவங்கியுள்ளனர். இந்தியர்களைப் போல் அல்லாது, சீனர்களும், ஜப்பானியர்களும் கடல்பாசிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளனர். பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றை எப்படி தயக்கமில்லாமல் உண்கிறார்களோ அவ்வாறே, கடற்பாசிகளையும் அவர்கள் நேரிடையாக தங்கள் சமையலில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் கடற்பாசிகளைப் பற்றி அவ்வளவு அறிமுகமில்லாத நிலையில், தற்காலத்தில் பல உணவுகளிலும் முக்கிய உணவுப் பொருளாக கடற்பாசி நம்மூரிலும் சேர்க்கப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து நிபுணரான சி.ஸ்டாலின் பாபு கடற்பாசிகளை உள்கொள்ளுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாகப் பட்டியலிடுகிறார். அவர் கூறுகையில், “இவற்றில் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவற்றைக் கொண்டு குறைந்த கலோரி உள்ள  உணவுப் பொருட்களை உருவாக்க முடியும். இதனால், பசி ஏற்படுவதைக் குறைக்க முடியும். அதோடு, இவற்றில் உடல் எடையை குறைக்கும் அல்கினேட்டுகள் உள்ளன.” எனக் கூறுகிறார். மேலும், இவை தொப்பையைக் குறைக்க  விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு எனக் கூறும் அவர், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவும் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார். இந்த கடற்பாசிகளில் இருக்கும் அயோடினானது, தைராய்டு பிரச்சினைகளுக்கு  நல்ல மருந்தாக உள்ளது. பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பினை குறைக்க வல்லது. கூடவே, மூட்டு நோய்கள் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது எனக் கூறுகிறார் சி.ஸ்டாலின் பாபு.

நோன்பு காலத்திலும், கோடை காலத்திலும் வயிற்றை குளுமையாக வைத்திருக்கும் உணவாக கடற்பாசி பயன்படுத்தப்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கடற்பாசியுடன், பால் மற்றும் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து, சூடு செய்து மில்க் அகார் என்ற உணவை தயாரிக்கிறார்கள். இதனை, தேங்காய்ப்பால் சேர்த்தும் செய்யலாம். இது போன்றே, இளநீர், தர்ப்பூசணி , நுங்கு போன்றவற்றை சேர்த்தும் அகர் தயாரிக்கிறார்கள். அது போலவே, கடற் பாசியைக் கொண்டு சூப், கேக் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகளையும் செய்யலாம்.

கடற்பாசிகள் உணவிற்காக மட்டுமல்லாது, உரம் தயாரிக்கவும், உயிரி எரிபொருள்கள் தயாரிக்கவும், மீன்கள் மற்றும் விலங்குகளுக்கான உணவுப் பொருள்கள் தயாரிக்கவும், சருமப் பாதுகாப்பு பொருள்கள் தயாரிக்கவும் என எண்ணற்ற வகைகளில் கடற்பாசிகள் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival