Read in : English

மழை பெய்து ஈரம் வடியவில்லை. தூத்தூரின் சின்னத்துறை ஜங்ஷனையொட்டிய மணற்பரப்பில் இளைஞர்கள் கூட்டம் கால்பந்தை எட்டி உதைத்தப்படி விளையாடிக் கொண்டிருந்தனர். காலில் ஷூக்கள் இல்லை. ஆனால் நீல நிற டீ ஷர்டும், அரைக்கால் நிக்கரும், ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனின் தோரணையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். ” சின்ன வயதிலிருந்தே விளையாடி வருகிறோம். கால்பந்தென்றால் எங்கள் கிராமத்தில் அனைவருக்கும் உயிர்.” எனக் கூறும் அனீஸ், கோயம்புத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். அவருடன் அதே மணற்பரப்பில் ஆவேசமிக்க கோல் கீப்பராக விளையாடிக் கொண்டிருந்தார் 6 ஆம் வகுப்பே படித்த 28 வயதான பிரவீன். ” சொந்தமாக படகு வைத்து, தொழில் செய்துவருகிறேன். இந்த விளையாட்டை, நான் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கிறேன். படிக்கிறோமோ  இல்லையோ, கால்பந்து விளையாடுவோம் ” எனக் கூறுகிறார் அவர்.

“சொந்தமாக படகு வைத்து, தொழில் செய்துவருகிறேன். இந்த விளையாட்டை, நான் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கிறேன்” –  ஆறாம் வகுப்பே படித்த பிரவீன்

ஓகி புயல் ஏற்படுத்திய வடுக்கள்,  குமரி மாவட்டத்தின் தூத்தூர் கிராமத்தை தமிழகமெங்கும் அறியச் செய்தது.  ஆனால், இந்த கிராமம் ஒரு குட்டி பிரேசில் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  உலகப்கோப்பை கால்பந்தாட்டம் நாளை ரஷ்யாவில் துவங்க உள்ள நிலையில், தமிழகத்தின் தென் முனையில் உள்ள இந்த  மீனவ கிராமம், கால்பந்தின் மீது உயிரையே வைத்துள்ளது. அதற்கு சாட்சியாக சில மீட்டர்கள் தூரமே இடைவெளியில் கோல் கம்பங்களுடன் காட்சியளிக்கும் அடுத்தடுத்த கால்பந்து மைதானங்கள் தான்.

இத்தனை கால்பந்து மைதானங்கள் இருப்பதன் பலன், இக்கிராமத்தினருக்கு கிடைத்துள்ளது என்றே கூறலாம். அவரில் ஒருவர் சூசை ராஜ். 23 வயதேயான இந்த இளைஞர், பி.ஏ பொருளாதாரத்தை தொலை தூரக் கல்வி முறையில் தான் படித்துள்ளார். தேசிய அளவில் இந்தியன் லீக்கில் விளையாடி வந்த சூசை ராஜ், தற்போது இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஜாம்ஷெட்பூர் அணிக்காக களமிறங்க உள்ளார் . தனது பெற்றோர் இருவரையும் இழந்த சூசை ராஜ், தனது  இரு சகோதரர்களும் கால்பந்து விளையாட்டின் மூலம், அரசு வேலை பெற்றதாகக் கூறுகிறார். மீன் பிடித் தொழில் செய்து வந்த அவரது தந்தையும் கூட ஒரு கால்பந்தாட்டக்காரராகத் தான் இருந்தார் எனக் கூறுகிறார்.

“அரசின் விளையாட்டுத் துறை சார்பில் எங்களுக்கு எந்தவித ஊக்கமும் கிடைப்பதில்லை. நாங்கள் ஒரு ஆர்வத்தால் மட்டுமே விளையாடத் துவங்கினோம். ஆனால் தற்போது பல தனியார் கிளப்புகள் எங்கள் மீது தங்கள் பார்வையை செலுத்த துவங்கியுள்ளன” எனக் கூறும் அவர், தங்களுக்கு இந்த விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் கேரளத்தினருடன் உள்ள அதிகப்படியான தொடர்பால் கூட வந்திருக்கலாம் எனக் கூறுகிறார்.

“பொதுவாக, கால்பந்து போட்டியில், ஒவ்வொருவருக்கும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த நாடு என இரு வகையில் பிடிக்கும். எனக்கு மெஸ்ஸியை பிடித்தாலும், அணியாகப் பார்த்தால் போர்ச்சுக்கலை தான் பிடிக்கும்” எனக் கூறினார் அனீஸ்.

“அரசின் விளையாட்டுத் துறை சார்பில் எங்களுக்கு எந்தவித ஊக்கமும் கிடைப்பதில்லை. “- சூசை ராஜ் 

சூசை ராஜோ, இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும்   வாய்ப்புள்ள நாடுகளாக ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரேசிலைக் கூறுகிறார். அர்ஜெண்டினாவிற்கும், போர்ச்சுக்கல்லுக்கும் கூட அந்த அணியிலிருக்கும் ஒரு சில வீரர்களை வைத்து வெற்றி வாய்ப்பு இருக்கவே செய்கிறது எனக் கூறினார்.

இந்தியாவில் சமீப காலமாக கால்பந்து நல்ல முறையில் வளர்ந்து வருகிறது எனக் கூறும் சூசை ராஜ், அதன் அறிகுறியாக தர வரிசைப் பட்டியலில் 179 ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது, 96 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது எனக் கூறுகிறார். எப்படியாயினும், இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சியில் தூத்தூர் கிராமத்தின் பங்கை மறுக்க முடியாது என்றே கூறலாம்

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival