Read in : English
தமிழ்நாட்டில் வனப் பகுதிகளில் உள்ள வயல்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அரிக்கொம்பன் என்ற ஆண் யானையால் பொதுமக்களுக்கு பதற்றமும், அதிகாரிகளுக்குத் தலைவலியும் ஏற்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இது போல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடக்கின்றன. ஆனாலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதலைக் குறைக்கும் வகையில் அரசு தன் கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனையும் செய்யவும் இல்லை. ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இல்லை.
இந்த மனித – விலங்கு மோதலால் மனித உயிர்கள், குறிப்பாக, காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நிலங்களில் பயிர்களை காவல் காக்கும் எளிய விவசாயிகளின் உயிர்கள் பறிபோகின்றன. ஆனால், இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த, நீடித்த நிலைத்த தீர்வு காண்பதற்கான கொள்கைகளை அரசுகள் உருவாக்கவில்லை. “காட்டுப் பன்றிகளால் பல்வேறு பயிர் வகைகளில் 15 முதல் 40 சதவீத சேதாரங்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன,” என்று 2018இல் வெளியான ஒன்றிய அரசின் அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டில், பசுமைமாறாக் காடுகள், ஈர இலையுதிர்க் காடுகள், உலர் இலையுதிர்க் காடுகள், சோலைக்காடுகள், புல்வெளிகள், புதர்க்காடுகள் முதலாக 9 பெரிய வகை காடுகள் உள்ளன. தமிழ்நாட்டின் வழியாக செல்லும் நீண்ட மலைத் தொடரான மேற்குத் தொடர்ச்சி மலை, உலகின் மிக முக்கியமான 25 பல்லுயிர்ப் பெருக்கத் தலங்களில் ஒன்று. அது மட்டுமல்ல, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படும் தனித்துவ உயிரினங்கள் (Endemic) இந்தியாவில் அதிக அளவில் உள்ள மூன்று இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை ஒன்று.
மனிதர்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு உயிரிழப்புகள், பொருளிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. யானை, காட்டுப் பன்றி, புலி, சிறுத்தை, காட்டெருது, குரங்குகள், சதுப்புநில முதலைகள், மயில்கள் போன்றவற்றால் சேதங்கள் பெரிதும் நிகழ்கின்றன
காப்புக் காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள் என நிர்வாக ரீதியாக காடுகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காட்டுயிர் – மனித மோதல் தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மனிதர்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு உயிரிழப்புகள், பொருளிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. யானை, காட்டுப் பன்றி, புலி, சிறுத்தை, காட்டெருது, குரங்குகள், சதுப்புநில முதலைகள், மயில்கள் போன்றவற்றால் சேதங்கள் பெரிதும் நிகழ்கின்றன.
தமிழ்நாட்டில் 2,761 யானைகள் இருப்பதாக 2017ஆம் ஆண்டின் காட்டுயிர் கணக்கெடுப்பு காட்டியது. இந்தியாவில் உள்ள 29,964 யானைகளில் இது சுமார் 10 சதவீதம். இந்தியாவில் உள்ள யானைகளில் 44 சதவீதம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் உள்ளன.
மேலும் படிக்க: பரபரப்பை ஏற்படுத்திய அரிக்கொம்பன் யானை இடமாற்றம்!
முன்பெல்லாம் யானைகள் காட்டோரம் உள்ள பயிர்களை மட்டுமே மேயும் என்றும், இப்போது, காட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவு வரை உள்ள மனிதக் குடியிருப்புகள், வயல்கள் ஆகியவற்றை நோக்கி யானைகள் படையெடுப்பதாகவும் வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகிறார்கள். நெல், கரும்பு,சோளம், வாழை, பாக்கு, தென்னை, கேழ்வரகு, தக்காளி, மா போன்றவை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் பயிர்கள். சாமந்தி, சப்போட்டா, கம்பு, காட்டாமணக்கு, கத்தரி ஆகியவற்றை யானைகள் தொடுவதில்லை.
கோவை மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் காட்டுப் பன்றிக் குட்டிகள் ஏற்படுத்தும் சேதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கிறார்கள். 6 ஆயிரம் ஏக்கர் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்கின்றன. இது தவிர, 12 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தையும் இவை சேதம் செய்கின்றன. எனவே, விவசாயம் சாராத பயன்பாட்டுக்குக்கூட தங்கள் நிலங்களை விற்க முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் நில உரிமையாளர்கள்.
காடுகளை ஒட்டி இருப்பவர்கள் மட்டுமல்ல, காட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவு வரை உள்ள விவசாயிகள்கூட இந்தக் காட்டுப் பன்றித் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டமாக வந்தால், ஒரு ஏக்கர் விளை நிலத்தை ஓர் இரவில் நாசம் செய்துவிடும். காட்டுப் பன்றிகளை தீங்கு செய்யும் விலங்குகள் என்று அறிவிப்பதில், இந்தியாவில் அமைப்பு சார்ந்த சிக்கல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் காட்டுப் பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதாக 7,562 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு இழப்பீடு பெறுவது சாமானிய வேலை அல்ல என்கிறார்கள் விவசாயிகள். கிராம நிர்வாக அலுவலர், வனத்துறை, தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் சான்றிதழ்கள் பெறவேண்டும். இது மிகுந்த அலைச்சல் தரும் வேலை. அத்துடன், ஏற்பட்ட இழப்பை ஒப்பிட்டால் கிடைக்கும் இழப்பீடு மிகவும் சொற்பமான தொகையாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
இதுவரை தமிழ்நாட்டில், வனத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்தவில்லை. எடுத்த நடவடிக்கைகளால் காட்டுப் பன்றிகளுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை. அவ்வப்போது விவசாயிகளுக்கு அரைகுறையாக (இழப்பில் 60 சதவீதம் வரை) இழப்பீடு வழங்கப்படுகிறது. அல்லது தாமதமாக இழப்பீடு வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட எல்லா விவசாயிகளுக்கும், இழப்பு நிகழ்ந்த பயிரின் சந்தை மதிப்புக்கு இணையான இழப்பீடு வழங்கப்பட்டதில்லை.
யானை – மனித மோதலால் குடும்பத்தில் ஒரே ஒரு சம்பாதிக்கும் நபராக இருப்பவர் இறக்க நேர்ந்தால், அவரது வாரிசுகளுக்கு வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை வழங்குவதற்கு சிறப்பு விதிகள் உருவாக்குவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கவேண்டும்.
ஹெர்போலிவ் என்ற விலங்கு விரட்டி திரவத்தை பயன்படுத்தி 2020இல், கோவை மாவட்டத்தில் உள்ள காட்டோரப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். ஆனால், காட்டுப்பன்றி, குரங்கு, மான்கள், காட்டெருது, யானை முதலியவற்றை இந்த விலங்கு விரட்டியைக் கொண்டு திசை திருப்ப முடியவில்லை.
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டைவிட கேரளா அதிக அளவிலான முயற்சிகளை மேற்கொண்டது. காட்டுப் பன்றி தொல்லை உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளின் துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டன. அத்துடன், அந்த மாநிலத்தில், மனித உயிர்கள், உடமைகள், விவசாயம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ள காட்டுப் பன்றிகளைக் கொன்று அழிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
காட்டுயிர் வல்லுநர்கள் கல்யாணசுந்தரம் ராம்குமார், டாக்டர் பாலசுந்தரம் ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட சுயாதீன ஆய்வுகள் சுவாரசியமான முடிவுகளைத் தந்தன. இந்த ஆய்வில் பதில் சொன்னவர்களில் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யானைகளால் பயிர் சேதத்தை எதிர்கொண்டிருந்தனர். காட்டில் யானைகளுக்கான உணவு இல்லாமல் போனதால்தான் யானைகள் பயிர்களை மேய வருவதாக பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டங்கள் பல வகைகளில் மக்களுக்கு எதிரானவை என்று புகழ்பெற்ற சூழலியல் வல்லுநர் பேராசிரியர் மாதவ் காட்கில், பல ஆண்டுகால ஆராய்ச்சியின் அடிப்படையில் கூறினார். அவற்றை விரைவாகத் திருத்தவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
இந்தியாவின் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டங்கள் பல வகைகளில் மக்களுக்கு எதிரானவை என்று புகழ்பெற்ற சூழலியல் வல்லுநர் பேராசிரியர் மாதவ் காட்கில், பல ஆண்டுகால ஆராய்ச்சியின் அடிப்படையில் கூறினார். அவற்றை விரைவாகத் திருத்தவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்
தமிழ்நாடு, கேரள விவசாயிகள் எதிர்கொள்ளும் காட்டுப் பன்றி தொல்லை குறித்து அவர் விரிவாக கருத்துகளை எடுத்துக் கூறியிருந்தார். காட்டுயிர் மேலாண்மை உரிமையை பரவலாக்கி, தற்காப்புக்காகவோ, உடமைகளைக் காப்பாற்றிக் கொள்ளவோ பல நாடுகளில் நடப்பதைப் போல, விலங்குகளை சட்டப்படியாக கொல்வதற்கான அதிகாரத்தை உள்ளூர் அளவில் தரவேண்டும் என்றார் அவர். தற்போதைய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், மக்கள் விரோதச் சட்டம், அறிவியல் விரோதச் சட்டம் என்று கூறிய அவர், வனத்துறையே விலங்கு, மனித மோதலைத் தீவிரப்படுத்திவிட்டதாக கூறினார்.
காட்டோரம் வாழும் மக்களுக்கு தங்கள் உயிர், உடமைகளுக்கு காட்டுப் பன்றிகளால் ஆபத்து ஏற்படும்போது, கட்டுப்பாடு ஏதுமின்றி அவற்றை அழித்து தங்கள் உயிர், உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கையான உரிமை உண்டு. காட்டுயிர்களைவிட மனித உயிர்களுக்கு மாநில அரசு முக்கியத்துவம் தரவேண்டும். கொள்கைகளை வகுப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரிவான தரவுகளை மாநில அரசு உருவாக்கிக் கொள்ளவேண்டும். காட்டுயிர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பற்றிய விரிவான தரவுகள் தற்போது இல்லை.
மேலும் படிக்க: நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!
மாநில அரசு, விவசாயிகள், ஊர் மக்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவையே/ ஆகியோரே தற்போது இந்த சிக்கலில் நிரந்தர தீர்வை எட்டும் விஷயத்தில் பங்குதாரர்கள். மனித – யானை மோதலின் பாதிப்புகளை சரி செய்வதற்கான கூட்டு முயற்சிகள், கொள்கை வகுக்கும் விஷயத்தில் சரிவர தமிழ்நாட்டில் ஒருங்கிணைக்கப்படவில்லை. பரவலாக்கப்பட்ட, சமுதாய அளவிலான குழுக்கள் அமைத்தால், அவற்றால், மனித – விலங்கு மோதலை சிறப்பாகக் கையாள முடியும்.
எனவே, உள்ளூர் அளவிலான பங்குதாரர்களுக்கு அதிகாரம் அளித்து, தற்காப்புக்காகவும், உடமைகளைக் காக்கவும் காட்டுயிர்களைக் கொல்லும் உரிமையை விவசாயிகளுக்கு, நில உரிமையாளர்களுக்கு தந்து, காட்டுயிர் மேலாண்மையை பரவலாக்குவதற்கான தேவை உள்ளது. பயிர்கள் உள்ள பகுதிகளுக்கு காட்டு யானைகள் வருவதைத் தடுக்கும் வகையில் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படவேண்டும்.
(கட்டுரையாளர், பொருளாதார மற்றும் பொதுக் கொள்கை வல்லுநர்)
Read in : English