Read in : English
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் தொழில், ஏன் வளரவில்லை? இந்தக் கேள்வி ஆழமான ஆய்வுக்குரியது. புதுச்சேரியைச் சேர்ந்தவரும் பாரிஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருமான ஜே. பி.பிரசாந்த் மோரே இந்தியன் ஸ்டீம்ஷிப் வென்ச்சர்ஸ் 1836-1910 என்ற தனது சமீபத்திய புத்தகத்தில் இதுகுறித்து ஆய்வு செய்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் மர்மமான முறையில் காணாமல் போனது, தென்னிந்தியாவில் முஸ்லிம்களின் வளர்ச்சி, சுதந்திரப் போராட்டத்தின் போது தமிழ்க் கவிஞர் பாரதி புதுச்சேரியில் தங்கியிருந்தது போன்ற விசயங்களைப் பற்றி அவர் பதிவு செய்துள்ளதால் அவர் இன்மதி வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இந்திய நீராவிக் கப்பல் போக்குவரத்துத் தொழில் முயற்சிகளின் வரலாற்றைத் தொகுத்த மோரே, இன்மதிக்குத் தந்த சமீபத்திய நேர்காணலில் இது சம்பந்தமாக மேலும் பேசினார்.
19ஆம் நூற்றாண்டில் ரயில் பாதையைப் போலவே இந்தியாவில் நீராவிக் கப்பலையும் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். அவர்கள் 1840ஆம் ஆண்டில் பெனிசுலார் மற்றும் ஓரியண்டல் ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவி கடல் போக்குவரத்து வர்த்தகத்தில் ஏகபோகம் செய்யத் தொடங்கினர். இருப்பினும் கப்பல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முயற்சியில், சில இந்தியர்கள் சொந்தமாக நீராவிக் கப்பல்களை இயக்கினார்கள்.
புதுச்சேரியைச் சேர்ந்தவரும் பாரிஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருமான ஜே. பி.பிரசாந்த் மோரே `இந்தியன் ஸ்டீம்ஷிப் வென்ச்சர்ஸ் 1836-1910’ என்ற தனது சமீபத்திய புத்தகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் தொழில் ஏன் வளரவில்லை என்று ஆய்வு செய்திருக்கிறார்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த துவாரகநாத் தாகூர், அவரது பேரன் ஜோதிரிந்திரநாத் தாகூர், புதுச்சேரியைச் சேர்ந்த தர்மநாதன் புரோச்சாண்டி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாம்ஷெட்ஜி டாடா, தமிழகத்தைச் சேர்ந்த சிவா நல்லபெருமாள் மற்றும் வ.உ.சிதம்பரம் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
1836ஆம் ஆண்டில் கொல்கத்தா துறைமுகத்திலிருந்து ஹூக்ளி வரை நீராவிக் கப்பலை அறிமுகப்படுத்தி இந்தியாவில் முதன்முதலாக கப்பல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்குச் சவால் விடுத்தவர் துவாரகநாத் தாகூர் என்று மோரே கூறினார். ஆனாலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அழுத்தங்கள் அவரது முயற்சியை முறியடித்தது.
1884ஆம் ஆண்டில் தனது தாத்தாவின் முயற்சியை புதுப்பித்து கங்கை நீர்வழிகளின் குறுக்கே நீராவிக் கப்பல்களை இயக்கியவர் அவரது பேரன் ஜோதிரிந்திரநாத் தாகூர். ஆனால், மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சியின் கொடூரத்தால் அவரது நிறுவனமும் முடங்கிப் போனது.
மேலும் படிக்க: பாரதியைச் செழுமைப்படுத்திய பாண்டிச்சேரி
தென்னிந்தியர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த தர்மநாத புரோசாண்டிதான் பிரெஞ்சு இந்தோ-சீனாவின் மேகாங் டெல்டாவில் நீராவி வழித்தடத்தைத் தொடங்கினார். ஆனால் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் அவரது துணிச்சலான வர்த்தகத்தைப் பார்த்து முகம் சுளித்ததால், 1891 முதல் 1900 வரை நீடித்த தனது கப்பல் தொழிலை நடத்த முடியாமல் மூட வேண்டியிருந்தது.
1894 ஆம் ஆண்டில் ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து டாடா லைனைத் தொடங்கிய பார்சித் தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடாவுக்கும் இதே நிலைதான், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஓராண்டு தந்திரோபாய அழுத்தத்திற்குப் பிறகு 1895ஆம் ஆண்டில் அவர் தனது கப்பல் நிறுவனத்தை மூடினார். பின்னர், 1903 ஆம் ஆண்டில் அவர் மும்பையில் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலைத் திறந்தார்.
துவாரகநாத் தாகூர் இந்திய நீராவிக் கப்பல் போக்குவரத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டாலும், உண்மையில் 1891ஆம் ஆண்டில் கம்போடியாவிற்கும் வியட்நாமுக்கும் இடையில் தனது முதல் இரண்டு நீராவிக் கப்பல்களை இயக்கி, பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் சென்ற முதல் இந்தியர் தர்மநாத புருச்சாண்டி ஆவார். தவிர, தாகூரின் நிறுவனத்தைப் போலல்லாமல், புரூச்சாண்டியின் கப்பல் நிறுவனத்தால் ஒரு தசாப்தத்திற்கு மேலாக வெளிநாட்டு ஆட்சியாளர்களின் அழுத்தங்களைத் தாங்க முடிந்தது என்று மோரே கூறினார்.
1905 ஜூலையில் சிட்டகாங்கில் இருந்த வங்காள முஸ்லீம் வணிகர்களும் ஜமீன்தார்களும் பெங்கால் ஸ்டீரிம் நேவிகேஷன் நிறுவனத்தைத் தொடங்கி ரங்கூனுக்கு ஒரு பயணிகள் கப்பலை அறிமுகப்படுத்தினர். இதேபோல், ரங்கூன் மற்றும் பர்மாவை களமாகக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டியார் நகை வியாபாரிகள் மற்றும் முஸ்லிம்கள் சென்னையிலிருந்து 1150 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள ரங்கூனில் தலைமை அலுவலகம் அமைத்துக் கொண்டு ரூ .10 லட்சம் முதலீட்டில் மெட்ராஸ் ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவினர்.
1906-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நிறுவப்பட்ட புகழ்பெற்ற சுதேசி நீராவிக் கப்பல் போக்குவரத்து நிறுவனம் குறித்து பேசிய மோரே, தென்னிந்தியா முழுவதும் சுதேசி உணர்வுகளையும் தேசபக்தி உணர்வுகளையும் தூண்டுவதில் முக்கிய பங்கு வகித்து, கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரம் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பே, சிவா நல்லபெருமாள் தான் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவினார்.
தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து சேவைகளை இயக்கினார். ஆனால் பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி ஏற்படுத்திய தடைகளைக் கடக்க முடியாமல் அந்த நிறுவனம் குறுகிய காலம் மட்டுமே இயங்கியது.
துவாரகநாத் தாகூர் இந்திய நீராவிக் கப்பல் போக்குவரத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டாலும், உண்மையில் 1891 ஆம் ஆண்டில் கம்போடியாவிற்கும் வியட்நாமுக்கும் இடையில் முதல் இரண்டு நீராவிக் கப்பல்களை இயக்கிய முதல் இந்தியர் தர்மநாத புருச்சாண்டிதான்
அந்த உள்நாட்டுக் கப்பல் நிறுவனத்தின் தோல்வியால் கொந்தளித்த வஉசி 1906ஆம் ஆண்டு அக்டோபரில் ரூ.10 லட்சம் மூலதன முதலீட்டில் சுதேசி ஸ்ட்ரீம் நேவிக்கேஷன் கம்பெனி என்ற நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனத்தில் இருந்த 10 இயக்குநர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாதது ஆச்சரியம், ஏனெனில் அவர் நிறுவனத்தில் உதவிச் செயலாளராக மட்டுமே இருந்தார். அந்த நிறுவனத்தின் 40,000 பங்குகளில் 8,000 பங்குகளை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது வைத்திருந்தார். 2,000 பங்குகளை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை வைத்திருந்தார்.
பிரிட்டிஷ் இந்திய ஸ்ட்ரீம் நேவிகேஷன் நிறுவனத்தின் அழுத்தங்களால் வஉசி-யின் சுதேசி நிறுவனத்திற்கு சரக்குக் கப்பலை குத்தகைக்குக் கொடுத்த பம்பாய் நிறுவனம் சேவையை நிறுத்தியது. எனவே, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் பிரான்சிலிருந்து இரண்டு கப்பல்களை வாங்கி, அவற்றுக்கு எஸ்.எஸ்.கலியா மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்று பெயரிட்டது. சுதேசி கப்பல்களுக்கு வைத்திருந்த அந்நியப் பெயர்களை பாரதி ஆட்சேபித்தார்.
மேலும் படிக்க: பாரதி புதுச்சேரியில் ஏன் பத்தாண்டு அஞ்ஞாதவாசம் செய்தார்?
இந்தக் கப்பல்கள் 1907 மே மாதம் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தன. ஆனால் வ.உ.சி பின்னர் உக்கிரமான அரசியல் நிகழ்வுகளின் சுழலில் மூழ்கியதால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்துக்கு நீண்ட ஆயுள் இல்லாமல் போனது.
1907 நவம்பரில் நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாட்டில் வஉசி கலந்து கொண்டார், அங்கு அவர் திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் மற்றும் அரவிந்தர் தலைமையிலான தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தார். கட்சியின் சென்னை மாகாண செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி கோரல் மில்ஸ் வேலை நிறுத்தத்தை ஆதரித்ததன் மூலம் வஉசி திருநெல்வேலி மாவட்டத்தின் ஆங்கிலேய நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார்.
மேலும், 1908-இல் பிபின் சந்திர பால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, வஉசி அவரை திருநெல்வேலிக்கு வருமாறு அழைத்தார். அவரைப் பற்றி பொதுக் கூட்டங்களில் வஉசி பாராட்டிப் பேசினார்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியராகவும், மாவட்ட நீதிபதியாகவும் இருந்த ராபர்ட் வில்லியம் டி’எஸ்கோர்ட் ஆஷ் வஉசியின் அரசியல் நடவடிக்கைகளாலும் உள்நாட்டுக் கப்பல் நிறுவனத்தாலும் வெகுண்டார். அதனால் வஉசி மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்து அவரை சிறையில் தள்ளினார்.
1912-இல் கண்ணனூர் சிறையிலிருந்து வஉசி இறுதியாக விடுவிக்கப்படுவதற்கு முன்பாக, கப்பல் போக்குவரத்தில் ஆங்கிலேய ஏகபோகத்தின் அலையைத் தடுக்கவும், சுதந்திரப் போராட்ட உணர்வை மேலும் தூண்டுவதற்காகவும் அவர் ஆர்வத்துடன் தொடங்கிய நிறுவனம் 1911-லேயே கலைக்கப்பட்டு விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அதன் கப்பல்களில் ஒன்று பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுதான்.
மொத்தத்தில், இந்தியக் கப்பல் தொழில் போக்குவரத்துத் தொழில் முயற்சிகள் சுதந்திரப் போராட்டத்திற்கு மேலும் உத்வேகம் தந்தன என்றாலும் அவை பல பின்னடைவுகளைச் சந்தித்தன. இறுதியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கடுமையான போட்டியை அவற்றால் எதிர்கொள்ள முடியவில்லை என்றார் மோரே.
Read in : English