Read in : English
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்னாத் எழுதி இயக்கியிருக்கும் ‘லைகர்’ ஒரு பான் இந்தியா படமா? தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய முதல் நொடியே நம் வயிறு சோறு குறித்து மட்டுமே சிந்திக்கத் தொடங்குகிறது.
‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்னும் சொற்களுக்கு உண்மையான பொருள் அப்போதுதான் தெரியும். வேறு மாநிலங்களில் கூட்டு, பொரியல், குழம்பு என்று வெவ்வேறு வகைகளைக் கண்ணில் காட்டினாலும் அவற்றோடு சோறு இருந்தால் மட்டுமே போதும் என்று மனம் பழகிவிடும். அது இல்லாவிட்டால் அந்த இடமே நரகமாகத் தோன்றும். உணவு தொடங்கி ஒரு மனிதனின் அத்தியாவசியங்களில் ஒன்றாகிப் போன ஒவ்வொன்றிலும் இது போன்ற எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படியிருக்க, மனிதனின் ஆடம்பரங்களில் ஒன்றான திரைப்பட ருசி குறித்துத் தனியாகச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
‘பான் இந்தியா’ படங்கள் என்பவை இப்படிப் பொத்தம்பொதுவாக இந்தியா முழுவதுமிருக்கும் மக்களுக்குப் பிடித்தமானவை; அவர்களை ஈர்க்கிற உள்ளடக்கத்தைக் கொண்டவை. விதிவிலக்காக, சில நேரத்தில் சில போலிகளும் இந்த வரிசையில் கலந்துவிடுவதுண்டு. அப்போதெல்லாம், உண்மையிலேயே ‘பான் இந்தியா’ படங்கள் என்ற வகைப்பாடு சரிதானா என்ற கேள்வி எழும். சமீபத்தில் அதனை அடிக்கோடிட வைத்திருக்கிறது ‘லைகர்’.
எனக்கும் உனக்கும் பிடித்தது!
’எனக்குப் பிடித்த பாடல் உனக்குப் பிடிக்குமே’ என்று ‘ஜூலி கணபதி’ படத்தில் நா.முத்துக்குமார் எழுத, இளையராஜா இசையமைத்த பாடலொன்று வரும். நமக்கு விருப்பமானதை நாம் விரும்புபவர்களிடம் தந்து மகிழும் மனமே இந்தச் சொற்களுக்கான அடிப்படை. ‘சந்திரலேகா’வைத் தமிழில் உருவாக்கிய எஸ்.எஸ்.வாசன் வெறுமனே தன் பட பட்ஜெட்டை மீட்டெடுப்பதற்காக மட்டும் அதனை இந்தியில் ‘டப்’ செய்யவில்லை. பல ஆண்டுகளாகத் தம் நிறுவனம் கொட்டிய உழைப்பைக் கண்டு ரசித்து, அதற்கான வெகுமதிகளைத் தாருங்கள் என்ற எண்ணம் அதன் பின்னிருந்தது.
‘
பான் இந்தியா’ படங்கள் என்பவை பொத்தம்பொதுவாக இந்தியா முழுவதுமிருக்கும் மக்களுக்குப் பிடித்தமானவை; அவர்களை ஈர்க்கிற உள்ளடக்கத்தைக் கொண்டவை. விதிவிலக்காக, சில நேரத்தில் சில போலிகளும் இந்த வரிசையில் கலந்துவிடுவதுண்டு
1950களுக்குப் பின்னர் ஏவிஎம், வாஹினி, ஜெமினி, தேவர் பிலிம்ஸ் என்று பல தயாரிப்பு நிறுவனங்கள் இந்தித் திரையுலகில் கொடி நாட்டின. பின்னர் எண்பதுகளில் ராமோஜிராவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ், அன்னபூர்ணா ஸ்டூடியோஸ், கீதா ஆர்ட்ஸ் போன்றவை தெலுங்கிலும் இந்தியிலும் பல படங்களைத் தயாரித்தன.
இதன் தொடர்ச்சியாக மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களின் படங்கள் தெலுங்கு, இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் ‘நான் ஈ’ படத்தைத் தமிழ்நாட்டிலும் வட இந்தியாவிலும் வெளியிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவரது இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம், இன்று பிரபாஸை இந்தியா முழுவதுமறிந்த நாயகனாக ஆக்கியுள்ளது. பல முறை தேதி தள்ளிபோடப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ மிகச் சிரத்தையான சந்தைப்படுத்துதல் காரணமாக கோடி கோடியாக வசூலை அள்ளியிருக்கிறது.
ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்களைப் பெற்ற ‘கேஜிஎஃப் 2’ தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது. அதன் காரணமாகக் கன்னடத்தில் உருவாக்கப்படும் பல பெரிய பட்ஜெட் படங்கள் இந்தியா முழுவதும் வெளியாவதை இலக்காகக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் ‘பான் இந்தியா’ படங்கள் என்கிறோம்.
மேலும் படிக்க:
ஒரே தேசம், ஒரே சினிமா: பல மொழிகளில் ஒரு திரைப்படம் ரிலீஸ் என்ன காரணம்?
கேஜிஎஃப்: தமிழர்களின் வியத்தகு வியர்வைச் சாட்சி
சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் ‘டப்’ ஆகி வரவேற்பைப் பெற்றதும் இதில் அடங்கும். ஆனால், இவை எல்லாமே ஒரு வெற்றியை விஸ்தரிக்கும் பொருட்டோ படம் உருவானபின்னர் அதன் தாக்கம் இந்தியாவில் பெரும்பாலானோரை ஈர்க்கும் என்ற யோசனையை ஒட்டியோ, ‘பான் இந்தியா’ என்ற சொற்களை ஏந்திக்கொண்டன. முதலில் சொன்னது போல ‘எனக்குப் பிடித்தது உனக்கும் பிடிக்கும்’ என்று வேறு ஏதோவொரு மூலையில் இருக்கும் ரசிகன் குறித்த அபிப்ராயமே இதற்கு வேராக இருந்தது.
’வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்திய ஒருமைப்பாட்டைச் சிதைத்து பொதுமைப்படுத்தும் அபாயமும் ‘பான் இந்தியா’ படங்களில் ஒளிந்திருக்கிறது. அதையெல்லாம் மீறி இப்படங்களுக்கு எதிர்ப்பு பெருகக் காரணம், வழக்கம்போல, இந்த அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்குதான்.
ஏன் ‘பான் இந்தியா’ அடையாளம்!
விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’ பார்த்துவிட்டு, இந்தியிலும் அவரையே நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார் இயக்குநர் கரண் ஜோகர். அதன்பின், நேரடியாக ஒரு இந்திப் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பியதாகச் செய்திகள் வந்தன. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, ’லைகர்’ படத்தை பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து கரண் தயாரிப்பதாகத் தெரிய வந்தது.
அதன்பின் கன்னடம், மலையாளம், தமிழ் என்று ஒவ்வொரு மொழியிலும் படத்தை வெளியிட ஆள்கள் கிடைத்தார்கள்.
இவ்விரண்டுக்கும் நடுவே, சுமார் 3 ஆண்டு காலம் ‘லைகர்’ படம் உருவாக்கப்பட்டது. எத்தனையோ பேர் இதில் பணியாற்றியிருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இப்படத்தைப் பார்த்தால் ‘இதிலா பணியாற்றினோம்’ என்று யோசிப்பார்கள். காரணம், ’லைகர்’ படத்தின் கதை இந்திய சினிமாவில் நையப் புடைக்கப்பட்ட ஒன்று.
ராயபுரத்தைச் (ஏன் ராயபுரம் என்று கேட்கக்கூடாது. ஏய் இன்னா என்று வசனம் பேச அதுவே வசதி!) சேர்ந்த பாலாமணியும் லைகரும் மும்பைக்குச் செல்கின்றனர். எம்எம்ஏ எனப்படும் கலப்பு தற்காப்பு கலைப் போட்டிகளில் சாம்பியன் ஆவதே லைகரின் கனவு. அதற்காக, ஒரு பயிற்சியாளரின் பயிற்சிக் கூடத்தில் சுத்தம் செய்பவராக வேலைக்குச் சேர்கிறார். பயிற்சியாளரும் தாயும் ‘எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதே’ என்று சத்தியம் வாங்காத குறையாகப் பயமுறுத்தியும் சட்டென்று தான்யாவின் காதல் வலையில் சிக்குகிறார்.
சுமார் 3 ஆண்டு காலம் ‘லைகர்’ படம் உருவாக்கப்பட்டது. எத்தனையோ பேர் இதில் பணியாற்றியிருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இப்படத்தைப் பார்த்தால் ‘இதிலா பணியாற்றினோம்’ என்று யோசிப்பார்கள்
ஒரு நன்னாளில் அந்த விஷயம் தான்யாவின் சகோதரருக்குத் தெரிய வருகிறது. அவரோ, லைகரை வீழ்த்த வேண்டுமென்ற வெறியுடன் எதிர்முகாமில் இருந்துவரும் ஒரு போட்டியாளர். இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் தான்யா லைகரை விட்டு விலகுகிறார். அதன்பிறகு லைகர் தன் காதலை மீட்டாரா, தன் லட்சியமான எம்எம்ஏ சாம்பியன் ஆனாரா என்பதே ‘லைகர்’ படத்தின் கதை.
’இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே’ என்று சொல்லாவிட்டால், சினிமா பார்க்கும் வழக்கமே சாருக்கு இல்லை என்று ஒருவருக்குச் சான்றிதழ் கொடுத்துவிடலாம். தமிழில் பார்க்கும்போது நாயகனின் சொந்த ஊர் ராயபுரம் என்றிருக்கிறது. இதுவே மலையாளம், இந்தி, தெலுங்கில் பார்த்தால் வேறு பெயராக இருக்கும். ஆனால், அவர் பிழைக்கச் சென்ற இடம் மும்பை.
அதன் பிறகு அவர் அமெரிக்கா செல்வதாகவும் கதை நகரும். என்னதான் தொழில்நுட்பக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து உழைத்திருந்தாலும், பெரும்பொருட்செலவு திரையில் தென்பட்டாலும், அதனை ஏன் பார்வையாளர்கள் பார்க்க வேண்டும்’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்விதமாகக் கதையமைப்பு இல்லாததை என்னவென்று சொல்வது?
பெரும்பரப்பில் கதை நிகழ்வதால் இதனை ‘பான் இந்தியா’ படம் என்று சொல்வது அபத்தம். கதையிலோ, காட்சியமைப்பிலோ, கதாபாத்திரங்களிலோ, ஏன் இத்திரைப்படம் மறைமுகமாகப் பேசும் அரசியலிலோ கூட எந்தவொரு புது விஷயமும் இல்லை. அப்படியிருக்க, இப்படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இதனை ’பான் இந்தியா படம்’ என்றே முன்னிறுத்தியது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்?
பெரும்பரப்பில் கதை நிகழ்வதால் இதனை ‘பான் இந்தியா’ படம் என்று சொல்வது அபத்தம். கதையிலோ, காட்சியமைப்பிலோ, கதாபாத்திரங்களிலோ, ஏன் இத்திரைப்படம் மறைமுகமாகப் பேசும் அரசியலிலோ கூட எந்தவொரு புது விஷயமும் இல்லை
எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஓர் உயிர் வாடுவதைக் கண்டு இந்த இடத்தில் நாம் துடிப்பதற்குக் காரணம் மனிதர்களுக்கே உரிய அடிப்படை நேயம். அந்த அன்பு ஒரு கதையில் நிரம்பியிருந்தால், அது இந்தியாவில் மட்டுமன்று; இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். திரையுலகம் இதனை ‘செண்டிமெண்ட்’ என்று சொல்லும். ‘கேஜிஎஃப்2’ வெற்றிக்குக் காரணம் அதில் நிரம்பியிருந்த ஆக்ஷன் மட்டுமன்று; தாய்ப் பாசமும்தான்.
‘லைகர்’ போன்று பல படங்களின் பின்னே உழைப்பைக் கொட்டுபவர்கள் அதனை மறந்து ஊர் ஊராகச் சென்று படத்தை விற்பனைக்கு முன்வைப்பது விளைச்சலில் அக்கறை காட்டாமல் அறுவடைக்கு அரிவாளைத் தூக்கிச் செல்வதற்கு ஒப்பானது.
இனி யாராவது ‘பான் இந்தியா’ படம் என்று பேசினால், அவர்களிடம் ‘முதலில் நடவு செய்யுங்கள்; அப்புறம் எப்படி விளைச்சலைப் பாருங்கள்’ எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால், ரசிகன் என்ற அடையாளத்தைச் சுமந்திருக்கும் நம் தலையில் மிளகாய்க் கரைசல் வண்டி வண்டியாக வழியும்!
Read in : English