Read in : English
இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு கே2கே சவாரி என்பது மிகப் பெரிய சவாலான விஷயம். அதென்ன கே2கே? கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்பதன் சுருக்கமே கே2கே. மிக நீண்ட பயணம் செய்து சாதனை படைக்க நினைப்பவர்கள் அதீத ஆற்றல் கொண்ட இருசக்கர வாகனத்தையே தேர்ந்தெடுப்பார்கள். திரவ எரிபொருள் வாகனமே அவர்களது முதல் தேர்வாக இருக்கும். இங்கே தான் வித்தியாசப்படுகிறார் மோட்டார்வாகனக் காணொலிப்பதிவர் (மோட்டோ வ்ளாக்கர்) கிரிஷ் ஷெட். அவர் வழக்கமான பயணத்தை வழக்கத்துக்கு மாறாக மேற்கொண்டு சாதனை நிகழ்த்துவது என்று தீர்மானித்தார்.
“வீக்எண்ட் ஆன் வீல்ஸ்’ என்னும் யூடியூப் தளத்தை நடத்தும் கிரிஷ் ஷெட், பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஈ1 என்னும் இ ஸ்கூட்டரில், அதாவது மின்சார இருசக்கர வாகனத்தில் சவாரி செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை ஒரு சவாலான பயணம் போய் வந்திருக்கிறார். ஆனால், அவர் தனது பயணத்திட்டத்தில் ஒரு மாற்றத்தை மேற்கொண்டார். பொதுவாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் பயணத்தைத் தொடங்குபவர்கள் தங்கநாற்கரச் சாலைகளின் வழியே சென்று காஷ்மீரை அடைவார்கள். இந்தப் பாதையில் இடையில் பல்வேறு நிறுத்தங்கள் உண்டு.
ஆனால், கிரிஷ் ஷெட் அந்தப் பாதையில் செல்லவில்லை. கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட அவர் உலகிலே மோட்டார் வாகனங்கள் ஓடுவதற்கு மிக வசதியான சாலைகளில் ஒன்றான லடாக்கிலிருக்கும் கர்டங்-லா சாலையில் பயணத்தை முடித்துக்கொள்ளும் வகையில் திட்டம் வகுத்துச் சென்றுவந்திருக்கிறார்.
எல்லைகளை விரிவாக்கம் செய்த சவாரி
இதுவரை மின்சார இருசக்கரவாகனத்தில் யாரும் இப்படியொரு நீண்டதூர சவாரியை மேற்கொண்டிருக்கவில்லை; அப்படியான சவாலைச் சமாளித்ததில்லை. அந்தவகையில் கிரிஷ் ஷெட்டின் பயணம் நிச்சயமாக ஒரு சாதனையே. மின்சார இருசக்கரவாகன ஆற்றலின் எல்லையை அவரது பயணம் விரிவாக்கம் செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
![](https://inmathi.com/wp-content/uploads/2022/08/GSP6858-1024x683.jpg)
லடாக்கின் ‘மேக்னெட் ஹில்’லில் கிரிஷ்
கர்டங்-லா வரையிலான இந்த வீரதீரச் சவாரி மிகவும் எளிதாகவெல்லாம் அமைந்துவிடவில்லை. சவாரியின் போது, மின்சார இருசக்கரவாகனம் உடைந்துபோய்விடுமோ என்னும் அச்சம் தரும் ஆபத்தையும் சந்தித்துதான் மீண்டிருக்கிறார். அந்த வாகனத்திற்குப் பழக்கமில்லாத பாதைகளில் தான் வண்டியை ஓட்டிச் சென்றதுதான் காரணம் என்கிறார் அவர். ஆயினும், பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஈ-1 வீழ்ந்துவிடவில்லை; பழுதுபடவுமில்லை.
கிரிஷ் ஷெட், பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஈ1 என்னும் மின்சார இருசக்கர வாகனத்தில் சவாரி செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு சவாலான பயணத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் 11 மாநிலங்களின் ஊடாக அவர் அந்த வாகனத்தில் 4,340 கிமீ தூரம் பயணித்திருக்கிறார்
“சாலையை விட்டு விலகியும் ஓட்டியிருக்கிறேன். பாறைகள் அடர்ந்த மலைகள்மீது ஏறியிருக்கிறேன்; பாறைகளும், மணலும் குவிந்த சாலைகளிலும் வண்டி ஓட்டியிருக்கிறேன். ஆனாலும் வண்டிக்கு ஒன்றும் ஆகவில்லை. கார்கிலிலிருந்து லெ வரை சென்றபோது வீசிய புழுதிப்புயலின் போதும் என்வாகனம் தன் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டுச் செயற்பட்டது என்று நினைக்கிறேன்” என்றார் கிரிஷ்.
நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு மின்சார இருசக்கர வாகனம் மழையிலும் தாக்குப் பிடிக்கும்; புழுதிப்புயலிலும், மணல் அள்ளிக் கொட்டும் காற்றிலும் தாக்குப் பிடிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. செல்ல வேண்டிய பாதை, இடையில் ஓய்வு, பாட்டரிக்கு மின்னேற்றம் செய்வது ஆகிய விஷயங்களை நன்றாகத் திட்டமிட்டுத்தான் இந்த நீண்டதொலைவுச் சவாரியில் இறங்கியிருக்கிறார் கிரிஷ் என்பது தெளிவாகத் தெரிகிறது
மேலும் படிக்க:
ராயல் என்ஃபீல்டு: உலகம் சுற்றும் வாலிபன்!
இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் டாப்கியரில் பறக்கும் தமிழ்நாடு
மின்சார இருசக்கர வாகனத்தின் பிரகாசமான எதிர்காலம்
இந்த கே2கே சவாரி எதிர்காலத்தில் மின்சார இருசக்கரவாகனங்கள் வெளியூர்ப் பயணங்களுக்கும் பயன்படும் என்பதை நிரூபித்திருக்கிறது. மின்னேற்றம் செய்வதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒன்றிய, மாநில அரசுகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றன.
பரிவர்த்தனை செய்யக்கூடிய பேட்டரிகள் தற்போது அதிக அளவில் கிடைக்கின்றன. அதனால் நீண்டதொலைவு பயணத்தில் தாமதம் தவிர்க்கப்படும். பேட்டரிகளைப் பரிவர்த்தனை செய்துகொள்ள அல்லது மின்னேற்றம் செய்வதற்குப் போதுமான மையங்கள் உருவாகிவிட்டால், சிறிய வடிவிலான மின்சார இருசக்கர வாகனங்கள் கூட நீண்ட தொலைவு தாக்குப் பிடிக்கும்.
அத்தியாவசியப் பொருள்களையும் கூடுதல் பேட்டரிகளையும் இந்த கே2கே பயணத்தின்போது கொண்டுபோக முடியாது என்பதால், மின்சார இருசக்கரவாகனத்தைத் தொடர்ந்து ஒரு வேன் பின்னாடி சென்றது. இந்தச் சவாரி மின்சார இருசக்கரவாகனம் கடினமான பயணத்துக்கு எந்த அளவுக்குத் தாக்குப்பிடிக்கும் என்பதைக் கண்டுபிடிக்கும் ஒரு பரிசோதனை என்பதால், வேனில் தொழில்நுட்பப் பணியாளர்களும், கேமராக் கலைஞர்களும் இருந்தார்கள். மேலும், வேனில் அத்தியாவசியப் பொருள்களும், லக்கேஜும், கூடுதல் பேட்டரிகளும் இருந்தன.
ஸ்கூட்டரில் இருப்பதைச் சேர்த்து மொத்தம் ஆறு பேட்டரிகள் தன்னிடம் இருந்ததாக கிரிஷ் இன்மதியிடம் கூறினார். பேட்டரிகள் இரவுமுழுவதும் மின்னேற்றம் செய்யப்பட்டு மறுநாள் பயன்படுத்தப்பட்டன.
பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஈ1 வாகனத்தில் இருக்கும் பரிவர்த்தனை பேட்டரிகள் இந்தப் பயணத்திற்குக் கிடைத்த ஒரு வரம். அதனால் தினசரி பயணிக்கும் தூரக்கணக்கு அதிகரித்தது
இந்தப் பயணத்துக்குப் பயன்பட்ட பேட்டரி வகையில் மின்சாரச் செலவு மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் ரூபாய்க்குள்தான் வந்திருக்கிறது.
பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஈ1 வாகனத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதில் பேட்டரிகளை பரிவர்த்தனை செய்துகொள்ளும் வசதி இருப்பதால்தான் என்றார் கிரிஷ். அதனால் ஒரே நாளில் பலமைல் தூரம் பயணிக்க முடிந்திருக்கிறது என்றார் அவர்.
அந்த மின்சார இருவாகனத்தின் சிவப்பு வர்ணத்தாலும், தோற்றத்தாலும் அதை ‘ரூபி’ என்றழைத்தார் கிரிஷ். ஆறு பேட்டரிகளின் மின்சார ஆற்றலை வைத்துக் கொண்டு தன்னால் ஒரு நாளைக்கு 250 கிமீ தூரம் சவாரி செய்ய முடிந்தது என்றார் அவர்.
நெடுஞ்சாலைகளில் ரூபி அதிவேகமாக ஓடியது. அதைவிட, லடாக் பிராந்தியத்தில் சாலைகளிலும், சாலைகளை விட்டு விலகிய கரடு முரடான பாதைகளிலும் ஓடியதுதான் ரூபியின் சாதனை.
சரளைக் கற்கள், புழுதி, சகதி, மணல், பாறைகள் என்று நிரம்பி வழிந்த சாலைகளில் அநாயாசமாகவும், அதிதீரத்துடனும் சென்றது ரூபி. அதுதான் உண்மையில் சாதனை என்றார் கிரிஷ்.
பேட்டரி பரிவர்த்தனை ஒரு வரம்
பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஈ1 வாகனத்தில் இருக்கும் பரிவர்த்தனை பேட்டரிகள் இந்தப் பயணத்திற்குக் கிடைத்த ஒரு வரம். அதனால் தினசரி பயணிக்கும் தூரக்கணக்கு அதிகரித்தது.
இந்தியாவில் 11 மாநிலங்களின் ஊடாக ரூபியும், கிரிஷும் 4,340 கிமீ தூரம் பயணித்திருக்கிறார்கள், மொத்தம் 19 நாள்களில் (ஜூன் 18 முதல் ஜூலை 6 வரை). மின்னேற்றம் செய்யப்பட்ட ஒவ்வொரு பேட்டரியும் சராசரியாக 70 மைல் சவாரிக்குப் பயன்பட்டிருக்கிறது; மொத்தப் பயணம் முழுவதும் 83 தடவை பேட்டரி, பரிவர்த்த வர்த்தனை செய்யக்கூடிய பேட்டரித் தொழில்நுட்பத்தின் புதுமையால் பலர் மின்சார இருசக்கர வாகனத்தை வெளியூர்ப் பயணங்களுக்கும் பயன்படுத்த முடியும்; ஒவ்வொரு மின்னேற்றமும் ஏராளமான மைல் பயணத்தைத் சாத்தியப்படுத்தும்.
புதிய தலைமுறை மின்சார இருசக்கர வாகனங்கள் இன்னும் அதீத ஆற்றலுடனும் வீச்சோடும் வரவிருக்கின்றன. இதனால் மின்சார இருசக்கர வாகனத் துறையின் எல்லை இன்னும் விரிவடையும் சாத்தியங்கள் இருக்கின்றன.
கிரிஷ் பற்றி
யார் இந்த கிரிஷ் ஷெட்? கர்நாடகத்தின் மங்களூரைச் சார்ந்த கிரிஷ் ஷெட் ஒரு தீவிரமான மோட்டார்பைக் ஆர்வலர். பைக்கிலே பல தொலைதூரப் பயணங்களை மேற்கொள்பவர்; மேலும், அவற்றைப் பற்றிய விமர்சனங்களையும் பதிவுசெய்பவர்.
![](https://inmathi.com/wp-content/uploads/2022/08/GSP7167-1024x683.jpg)
கடல் மட்டத்திலிருந்து 17982 அடி உயரத்தில், உலகின் உச்சியான, கர்டங் லாவில் கிரிஷ் தன் வாகனத்துடன்
‘வீக்கெண்ட் ஆன் வீல்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் காணொலிக்காட்சிகள் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார். “நெவர் அவுட் ஆஃப் ஃபாஷன்” என்ற தொடரில் அவர் செவ்வியல் வாகனங்கள் பற்றி படு மும்முரமாகக் காணொலிக்காட்சிகள் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிரிஷ்க்கு மாரடைப்பு வந்ததால் சில வாரங்கள் காணொலிக்காட்சிப் பதிவேற்றத்திலிருந்து விலகியிருந்தார். எனினும், 2021 டிசம்பரில் லோனாவ்ளாவிற்குச் சவாரி சென்றார், தனது ‘சவாரியை நானே மீட்டெடுத்தல்’ என்னும் காணொலிக்காட்சித் தொடரின் ஓரங்கமாக. பின்பு கோவாவில் நடந்த இந்திய பைக் வார விழாவில் கலந்துகொள்ளச் சென்றார்.
புதியதொரு வீரதீரச் சவாலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த அவர் கே2கே சவாரிக்கு மின்சார இருசக்கர வாகனத்தைத் தேர்ந்தெடுத்தார்.
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழைய வேண்டும்
தேவையான அளவுக்குப் புள்ளிவிவரக் கணக்குகளைச் சாதித்தபின்பு, தன்னால் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழைய முடியும் என்று கிரிஷ் நம்புகிறார்.
மின்மோட்டார் வாகனத் துறையில் இன்னும் பல புதுமைகள் வரும் என்று எதிர்பார்ப்புகள் நிலவும் சூழலில், இந்தச் சாதனைகள் எல்லாம் பசுமையானதோர் உலகத்திற்கான உயர்ந்த தர அளவுகோல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன
சீன நிறுவனம் ‘பிஒய்டி’ மின்சார காரில் நீண்ட தொலைவுப் பயணம் செய்த சாதனைக்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழைந்திருக்கிறது. பிஒய்டி ஈ6 மின்வாகனத்தில் 2,203 கிமீ தூரம் பயணம் செய்து அந்தச் சாதனையை நிகழ்த்தியவர்கள் ஆஷிச் பரத்வாஜ், கிரிஷ் கார்கெரா என்னும் இரண்டு மோட்டார்வாகன ஆர்வலர்கள்.
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழையும் எண்ணத்துடன் தன் ரெக்கார்டைச் சோதித்துப் பார்க்கும்படி கிரிஷும் விண்ணப்பத்திருக்கிறார். கூடிய விரைவில் அது நிறைவேறும் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மின்மோட்டார் வாகனத் துறையில் இன்னும் பல புதுமைகள் வரும் என்று எதிர்பார்ப்புகள் நிலவும் சூழலில், இந்தச் சாதனைகள் எல்லாம் பசுமையானதோர் உலகத்திற்கான உயர்ந்த தர அளவுகோல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.
Read in : English