Read in : English
தமிழ்நாட்டில் இளமாறன், இளவேனில், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, எழிலன், எழிலரசி போன்ற அர்த்தமுள்ள தமிழ்ப்பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம் முன்பு இருந்தது. ஆனால், காலப்போக்கில், ரமேஷ், சுரேஷ், ராஜா, ராஜேஷ் என்று வடமொழி கலந்த பெயர்களை வைப்பது நாகரிகமாகக் கருதப்பட்டது. அதன் உச்சக்கட்டமாக தற்போதெல்லாம், அர்த்தமே தெரியாமல் முழுக்க முழுக்க வடமொழிப்பெயர்களையே வைக்கும் வழக்கம் அதிகரித்துவிட்டது. இந்த வழக்கம் எதனால் ஏற்பட்டது என்பதையும், அதன் பின்னணிக் காரணங்களையும் அறிந்துகொள்வதற்காக பலரிடமும் பேசினோம்…
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் 37 வயது கண்ணன். வீடுவீடாக சிலிண்டர் போடும் பணியைச் செய்துவரும் தொழிலாளியான இவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் வடமொழியில் பெயர் வைத்திருக்கிறார். இவரின் முதல் மகள் பெயர் ஜீவிதா, இரண்டாவது மகள் பெயர் யோஷிந்தா, மகன் பெயர் அனீஷ். இந்தப் பெயர்களெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? அந்தப் பெயர்களுக்கான அர்த்தம் தெரியுமா? ஏன் அவற்றை வைத்தீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, “அர்த்தம் எல்லாம் தெரியாது. குழந்தைக்குப் பெயர் வைக்க ஜோதிடர்களிடம் சென்றேன், அவர் ஜாதகத்தைக் கணித்து, குழந்தைகளின் பெயர்கள் ஜி, யோ என்ற எழுத்துகளில் தொடங்குவதுபோல் வைக்கச் சொன்னார். அதனால் கணினி மையத்துக்குப் போய் அந்த எழுத்துகளில் வரும் பெயர்களைக் கேட்டேன். அவர்கள் கூகுளில் தேடி இந்த எழுத்துகளில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்களை பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார்கள். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்துவிட்டேன்“ என்று அப்பாவியாக கூறுகிறார்.
கூகுளில் “பெண் குழந்தைகளின் பெயர்கள்“ என்று தேடினால், “பெண் குழந்தைகளின் மாடர்ன் தமிழ்ப் பெயர்கள்“ என்றும், “புதுமையான தமிழ்ப் பெயர்கள்“ என்றும்தான் முதல் முடிவுகள் காண்பிக்கின்றன.
கூகுளில் “பெண் குழந்தைகளின் பெயர்கள்“ என்று தேடினால், “பெண் குழந்தைகளின் மாடர்ன் தமிழ்ப் பெயர்கள்“ என்றும், “புதுமையான தமிழ்ப் பெயர்கள்“ என்றும்தான் முதல் முடிவுகள் காண்பிக்கின்றன. அவற்றின் உள்ளே சென்று பார்த்தால், ஹாஷினி, ஜானுஜா, ஜேஸிகா, ப்ரதக்ஷினி, வஹீதா என்று அந்தப் பட்டியலில் வருபவை அனைத்துமே வடமொழிப் பெயர்கள்தான். ‘’தமிழ்ப் பெயர்கள்’’ என்று தேடினாலும் அந்தப் பட்டியலிலும் அனுஷா, அனுஸ்ரீ என்று வடமொழிப் பெயர்களே அதிகம் இருக்கின்றன. தமிழ்ப் பெயர்கள் என்ற தலைப்பில் வடமொழிப் பெயர்களை ஏன் பதிவேற்றம் செய்கிறார்கள்? அதை தெரியாமல் செய்கிறார்களா அல்லது திட்டமிட்டே செய்கிறார்களா என்பதை ஆராய வேண்டியது அவசியம்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த வெற்றிச் செல்வனிடம் பேசியபோது, “எங்கள் தந்தை எனக்கு மட்டுமின்றி எனது மூன்று தம்பிகளுக்கும் ரத்தினம், முத்து, இராவணன் என்று நல்ல தமிழ்ப் பெயர்களை வைத்தார். ஆனால், இந்தக் காலத்தில் எனது பேத்திகளுக்கு பாவனா, திவ்யா என்று வடமொழிப் பெயர்களை வைத்திருக்கிறார்கள். வடமொழிப் பெயர்களை வைப்பதுதான் ஸ்டைல் என்ற மனோபாவம் சமூகத்தில் பெருகிவிட்டதே இதற்குக் காரணம்“ என்கிறார்.
தனது மகனுக்கு சந்தோஷ் என்று பெயர் வைத்திருக்கும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தேடல் முருகனிடம் கேட்டபோது, “சந்தோஷ் என்றால் சந்தோஷம் என்று அர்த்தம். அந்தப் பெயர் எனக்குப் பிடித்திருந்தது, அதனால் வைத்தேன். மற்றபடி அது தமிழ்ப் பெயரா, வடமொழிப் பெயரா என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை“ என்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் ஏமப்பூரைச் சேர்ந்த ஆராவமுதனிடம், உங்கள் பெண்களுக்கு ஏன் கனகா, கௌதமி என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்டதற்கு, “எனது பெண்கள் பிறந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சினிமா நடிகைகளின் பெயர்களை வைத்தேன், ஆனால் அந்தப் பெயர்கள் எந்த மொழி, என்ன அர்த்தம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது“ என்று கூறுகிறார்.
பெயர்களை வைத்து நடந்த அரசியல்பற்றி எழுதியுள்ள மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ஜோதி நரசிம்மனிடம் கேட்டபோது… “ஒருவருக்கான அடையாளம் அவரின் பெயர்தான். ஒருகாலத்தில் தாய் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் அறியாதவர்கள், தாய் மொழியிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு பெயர்களைச் சூட்டினார்கள். தமிழ்நாட்டிலும் அப்படிதான் இருந்தது. ஆனால் இப்போது தமிழ்ப் பெயர்களை காண்பது அரிதாகிப்போனதற்குக் காரணம், வடமொழி ஆதிக்கம்தான். தமிழ்க் கடவுளாக வணங்கப்படும் முருகனை ‘சுப்பிரமணியம்‘ என்று மாற்றியது முதல், தஞ்சை ‘பெருவுடையார்‘ கோவிலை ‘பிரகதீஸ்வரர் ஆலயம்‘ என்று மாற்றியது வரை சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டுள்ளது“ என்கிறார்.
அண்மையில் வெளியான ‘கர்ணன்‘ படத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அதிகாரி, ‘‘மாடசாமி பையன் துரியோதனனா? நேத்து நீங்க பேர மாத்திட்டீங்கன்னா இன்னைக்கு நீங்க ராஜாவாடா?‘‘ என்ற வசனம் வரும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைக் கூறும் அந்தப் படத்தில் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் காட்டப்பட்டிருப்பது போலவே தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை விவரிக்கிறார் ஜோதி நரசிம்மன்…
அரசியல், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்திலும் பிற மொழிகள் இணைந்து தமிழை சீரழித்து வருவதைத் தடுப்பதற்கான முதல் படிதான் தமிழில் பெயர் வைப்பது.
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த வாசுகியிடம் கேட்டபோது, “எனக்கு பாரதி என்றால் உயிர். அதனால் என் மகளுக்கு கண்ணம்மா என்று பெயர் வைக்கவே நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் நண்பர்களும் உறவினர்களும் அதற்கு சம்மதிக்கவேயில்லை. ‘அவள் கல்லூரி செல்லும் காலத்தில் கண்ணம்மா என்ற கர்நாடகப் பெயரை வைத்து சக மாணவர்கள் கிண்டல் பண்ணும்போது அவளுக்குக் கஷ்டமாக இருக்கும்‘ என்று எல்லோரும் சொன்னார்கள். அதனால் தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ‘ வருவதுபோல ‘பொன்னெழில்‘ என்று பெயர் வைத்தேன். அதுவும் கூப்பிடுவதற்கு வசதியாக இருக்காது என்று நினைத்ததால், அதனுடன் ‘ஓவியா‘ என்பதைச் சேர்த்து ‘பொன்னெழில் ஓவியா‘ என்று வைத்துவிட்டேன். ஆனாலும் நாங்கள் அவளை கண்ணம்மா என்றே அழைக்கிறோம், எங்கள் நண்பர்களும், அக்கம்பக்கத்துப் பிள்ளைகளும் அப்படியே அழைக்கின்றனர். அவளும் பெயரென்ன என்று யார் கேட்டாலும் கண்ணம்மா என்றே சொல்கிறாள்“ என்று கூறுகிறார்.
Read in : English