Read in : English
சென்றதினி மீளாது,மூட ரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
– மகாகவி பாரதியார்.
கடந்த ஆண்டும் புத்தாண்டு வந்தது. இந்த ஆண்டும் வந்துவிட்டது. அடுத்த ஆண்டும் புத்தாண்டு வரும். நாட்கள் கடந்து, வாரங்கள் கடந்து, மாதங்கள் கடந்து புத்தாண்டுகள் பிறந்து கொண்டே இருக்கும். தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஜி. நாகராஜன், 1973இல் ஞானரதம் இதழில் தொடராக எழுதி, 1974இல் புத்தகமான வந்த தமிழின் முக்கியத்துவம் வாய்ந்த நாவல், `நாளை மற்றுமொரு நாளே’. இந்தப் புத்தகம் `Tomorrow is one more day’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. நாளை மற்றுமொரு நாளே போல, ஒவ்வொரு புத்தாண்டும் மற்றொமொரு புத்தாண்டுதான். ஆனாலும், புத்தாண்டை உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். புத்தாண்டில் தங்களது வாழ்க்கையில் புதிய ஒளி உண்டாகும் என்று நம்பிக்கையோடு புத்தாண்டைத் தொடங்குகிறார்கள். சென்னையில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் வந்த கனமழையும் அரசின் கட்டுப்பாடுகளும் சென்னை வாசிகளின் குறிப்பாக கடற்கரையிலும் சாலைகளிலும் கூடி ஆட்டம்பாட்டத்துடன் இருக்க விரும்பும் இளைஞர்களின் உற்சாகத்தைக் குறைத்துவிட்டது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1982இல் வெளியான கமல் ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி. பாடிய பிரபலமான பாடல் ஹேப்பி நியூ இயர். இந்தப் பாடலில் ஒரு சிறு பகுதியை இளையராஜா தனது குரலில் பாடி, இது எப்படி இருக்கு என்று கேட்டு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த புத்தாண்டில் கொரோனா பயமுறுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒமைக்ரான் பயமுறுத்துகிறது. 15 வயது முதல் 18 வயதுகுட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஏற்கெனவே இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா இல்லையா என்பது தெரியவில்லை. தடுப்பூசி போட்டவர்களும் கொரோனாவுக்கும் ஓமிக்ரானுக்கும் பயப்படுகிறார்கள். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. வழக்கமாக ஜனவரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சி, கடந்த ஆண்டைப் போல தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு வந்ததுள்ளது. டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல இயங்குகின்றன. 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிய சாமானிய மக்கள் பழையபடி லாக்டவுன் வந்து, தங்களது வாழ்வாதரங்களைப் பாதித்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். மக்களின் எதிர்காலம் அனைத்தும் கொரோனாவின் கையிலும் அதன் பங்காளியான ஒமிக்ரான் கையிலும் இருப்பதுதான் இந்த ஆண்டும் தொடரும் அவலம்.
இந்த ஆண்டாவது நீட் தேர்வு ரத்து ஆவதற்கு வழி பிறக்குமா? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் நீண்ட காலம் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் இந்த ஆண்டாவது விடுதலை செய்யப்படுவார்களா? காவிரி நதி நீர் பிரச்சினை இந்த ஆண்டாவது முடிவுக்கு வருமா? முல்லைப் பெரியாறு பிரச்சினையாவது இந்த ஆண்டில் தீருமா? பெட்ரோல் குறையாவிட்டாலும் உயர்வதாவது நிற்குமா? மழை பெய்தால் சென்னை முழுவதும் வெள்ளக்காடு ஆவது நிற்குமா? இப்படி, கடந்த ஆண்டில் முடிவு தெரியாத பல கேள்விகள் இந்த ஆண்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் தேதியா அல்லது சித்திரை முதல் தேதியா என்பது மீண்டும் பேசுபொருளாகி சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் காலம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் மீம்ஸ்களின் ஹீரோ வடிவேலுதான். பெரிய திரையில் புகழ் பெற்று, சின்னத்திரை மூலம் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த அவர், சமூக ஊடகங்களிலும் அவர்தான் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டிலும் சிரிக்க வைக்கப் போகிறார். சிரிக்க வைக்க சில மீம்ஸ்கள்..
Read in : English