Read in : English
என் பாட்டியின் தோற்றமும், ஞாபகமும் இன்னும் என்மனதில் தெளிவாகப் பசுமையாகவே இருக்கின்றன. வெற்றிலைக் கறைபடிந்த வெள்ளந்திப் புன்னகையும், அலைக்கூந்தலை அள்ளிமுடித்த அலட்சியமான கொண்டையுமாய் வலம்வந்த என்பாட்டி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல பத்தாண்டுங்களுக்கு முன்பு தென்தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்த உயிர்த்துடிப்பான கிராமத்துப் பெண்மணி.அவரைப் பற்றிச் சிந்திக்கும்போது முதலில் மனதுக்கு வருவது அவர் காதுகளில் அணிந்திருந்த அந்தக் கனத்த காதணி தான். அதற்கு எங்கள் வட்டாரத்தமிழில் ‘தண்டட்டி’ என்று பெயர். (நெல்லைச் சீமையில் ‘பாம்படம்’ என்பார்கள்).
காதுகளிலிருந்து காத்திரமாகவும் விசித்திரமாகவும் வசியமாகவும் தொங்கும் அந்தக் காதணிகள் அவர் ஒயிலாக நடக்கும் போதும், நாட்டுப்புற இசையின் வசீகரத்துடனான தமிழில் பேசும்போதும், தென்றல் காற்றால் அசைந்தாடும் தேன்பூக்கள் போல ஒய்யாரமாக அசைந்தாடும். தன் காதணிகளை என்னிடம் கொடுத்தவண்ணம், “நா போயிட்டா, இதவச்சு என்ன கும்பிடு” என்று அவர் சொன்னார். அப்போது அவருக்கு வயது 99. 2012ஆம் ஆண்டில் ஒரு குளிர்கால நாளில் அவரது இறுதிமூச்சு காற்றோடு கலந்தது.
ஒவ்வொரு காதணியும் 30 கிராம் எடை கொண்டது. அது அவருடைய ஆளுமையின் அடையாளங்களிலிருந்து இனம் பிரித்துக் காண முடியாத ஓர் அம்சம். என் தாத்தாவை அவர் 16 அகவைகூட முற்றுப்பெறாத பருவத்தில் மணந்துகொண்டபோது, அவருடைய அண்ணன் அவருக்குச் சீதனமாகத் தந்தவைதாம் இந்தத் தண்டட்டிகள். ஆதலால், 80 வயதுக்கு மேல் ஆனது இந்தக் காதணி.
“எனக்குக் கல்யாணம் ஆனப்ப, மாங்காய் விளைஞ்ச நேரம். எங்க அண்ணாச்சியோட மூணு ஏக்கர் பண்ணையில நல்ல விளைச்சல் அப்போ. கல்யாணம் பேசி முடிச்ச கையோட அவிங்க மாட்டு வண்டியில மருத வரைக்கும் போய் பாத்திரம், நகைநட்டு, துணிமணிங்கன்னு ஏகப்பட்ட சீர்செனத்தி வாங்கியாந்தாங்க. அதோட இந்தத் தண்டட்டியையும் வாங்கி எனக்குக் கொடுத்தாங்க. அப்பல்லாம் ஒரு பவுனு தங்கம் வெறும் 150 ரூவாதான்” என்று பாட்டி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.
வெற்றிலைக் கறைபடிந்த வெள்ளந்திப் புன்னகையும், அலைக்கூந்தலை அள்ளிமுடித்த அலட்சியமான கொண்டையுமாய் வலம்வந்த என்பாட்டியைப் பற்றிச் சிந்திக்கும்போது, முதலில் மனதுக்கு வருவது அவள் காதுகளில் அணிந்திருந்த அந்தக் கனத்த காதணிதான். அதற்கு எங்கள் வட்டாரத்தமிழில் ‘தண்டட்டி’என்று பெயர்
மேலும் படிக்க:
மதிஸ்போர்ட்: உருண்டு திரண்டு பந்துபோல முத்து உருவாவது எப்படி?
வடிவநேர்த்தியும் உருவ அழகும்
இந்தக் காதணிகளின் சிறப்பு அவற்றின் வடிவநேர்த்தி. சதுரங்கள், முக்கோணங்கள் கொண்ட தண்டட்டி ஒரு பிரமிடு போல் காட்சியளிக்கும். தொங்கிக்கொண்டிருக்கும் செவி மடல்களில் பொருத்தப்படும் தண்டட்டியைப் பூட்டிவைக்கும் ஸ்க்ரூ ஒரு பந்துவடிவில் இருக்கும். சில தண்டட்டிகளில், அணியும் பெண் பெயரின் முதல் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். என் பாட்டியிடமிருந்து நான் சுவீகரித்துக் கொண்ட காதணி 2.5 அங்குல நீள அகலம் கொண்டது. காதணியின் மேல்பகுதி அரைவட்டப் பிறைநிலா போல் சற்று வளைந்திருக்கும்; அது காதணியின் கனத்த அடிப்பகுதியோடு ஒரு கீல் மூலம் இணைந்திருக்கும். அரைவட்டமாய் வளைந்திருக்கும் பகுதி முதலையின் வாயைப் போல் திறந்திருக்கும்; அது செவிமடலோடு மறுமுனையில் இருக்கும் ஸ்க்ரூ மூலம் பூட்டப்படும்.
தண்டட்டியில் பல்வேறு வடிவங்கள் உண்டு. வடிவங்களைப் பொறுத்து காதணியின் பெயர்களும் மாறுபடும். உதாரணமாக, பாம்பு போல வடிவம் கொண்ட காதணிக்கு ‘நாகவடம்’ அல்லது ‘பாம்படம்’ என்று பெயர். பல்வேறு வளையங்களை ஒன்றாக இணைத்து அணியும் காதணிக்கு ‘சவுடி’ என்று பெயர்.
பத்தாண்டுக்கு முன்பு வரை, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மூதாட்டிகள் பலர் அரக்கு நிரம்பிய தங்கக் காதணிகள் அணிந்திருந்தனர். காதுகளில் அணியும் ‘பூடி’, ‘கொப்பு’, ‘ஒனப்பத்தட்டு’ போன்றவற்றுடன் ‘தண்டட்டி’யும் சேர்ந்து பெண்ணின் தோற்றத்தை முழுமையாக்கியது.
சங்க இலக்கியத்தில் ‘தண்டட்டி’ பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பாண்டிய நாட்டில் (இன்றைய மதுரையைச் சுற்றியிருக்கும் சுமார் 12 மாவட்டங்கள்) பெண்கள் அணிந்ததாக அந்தக் குறிப்புகள் சொல்கின்றன. ஆண்கள்கூட இந்தக் காதணிகளை அணிந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன
காதணி வரலாறு
“சங்க இலக்கியத்தில் ‘தண்டட்டி’பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பாண்டிய நாட்டில் (இன்றைய மதுரையைச் சுற்றியிருக்கும் சுமார் 12 மாவட்டங்கள்) பெண்கள் தண்டட்டி அணிந்ததாக அந்தக் குறிப்புகள் சொல்கின்றன. ஆண்கள் கூட இந்தக் காதணிகளை அணிந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன” என்கிறார் மானுடவியலாளரும், ‘பிரமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்’ என்னும் நூலின் ஆசிரியருமான சுந்தரவந்திய தேவன்.
“நீண்டகாலமாகக் காதைவளர்த்திருந்தால்தான் தண்டட்டி அணியும் தகுதியைப் பெற முடியும்” என்கிறார் அவர்: “காதுகுத்தி அதை நீளமாக்கும் செயலைப் பாரம்பரியமாகச் செய்தவர்கள் குறவர்கள்தாம். பிறந்து பல வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு அவர்கள் காதுகுத்தி விடுவார்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் காதில் சின்னச் சின்ன எடைகளை வைத்து விடுவார்கள். பெண்ணுக்குத் திருமண வயது வருவதற்குள் காதுமடல்கள் தண்டட்டிகள் அணியும் அளவுக்கு அகலமாகி விடும்” என்கிறார் சுந்தரவந்திய தேவன்.
சமணம் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்த கிபி ஒன்றாம் நூற்றாண்டில் அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்தில் தண்டட்டி அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. “நீண்டு தொங்கும் செவிமடல் சமணத்தின் தனித்த குறியீட்டு அடையாளம். வேத தத்துவத்திற்கு எதிராகக் கிளம்பி உதித்தவொரு பலமான தத்துவம் சமணம். விளிம்புநிலையில் இருந்த தமிழர்கள் ஏராளமானோர் சமணக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டனர்” என்கிறார் ‘சுளுந்தீ’ என்னும் வரலாற்றுப் புனைவின் ஆசிரியர் ஆர். முத்துநாகு. ”சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளில் நீண்ட செவிமடல்களைப் பார்க்கலாம். அரசர்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளில்கூட நீண்ட செவிமடல்கள் காணப்படுகின்றன.”
எழுதப்பட்ட ஆவணங்கள்
“கள்ளர்களின் கிராமக் குழுக் கூட்டங்களில்” காதுமடல்களை வளர்க்காதவர்கள்மீது அபராதம் விதிக்கும் வழக்கம் இருந்தது என்று பழஞ்சுவடிகளில் குறிப்புகள் இருக்கின்றன. “நாயக்கர் காலத்தில், தெலுங்கர்களிடமிருந்தும், கன்னடர்களிடமிருந்தும் தமிழர்களைத் தனித்து அடையாளம் காட்டியது காது வளர்க்கும் இந்தப் பழக்கம்தான். இதற்கான பொறுப்பை நாயக்கர் அரசு குறவர்களிடம் ஒப்படைத்தது. இப்படித்தான் காதுகுத்த வேண்டுமென்றால் குறவர்களைத் தேடிச் செல்லும் பழக்கம் உண்டானது” என்கிறார் முத்துநாகு.
காதுகுத்தி வளர்க்கும் வழக்கம் நகரத்தார்கள், வேளாளர்கள், கள்ளர்கள், மறவர்கள், அகமுடையார்கள், நாடார்கள், பள்ளர்கள், பறையர்கள், செட்டியார்கள் என்று நிறைய இனங்களில் நிலவியிருந்தது என்று ஆங்கிலேய காலத்து ஆவணங்களான “தென்னிந்தியாவின் சாதிகளும், பழங்குடிகளும்” (எட்குர் தர்ஸ்டன்), “மதுரா கண்ட்ரி மானுவல்” (ஜே. எச். நெல்சன்) ஆகியவை பதிவுசெய்திருக்கின்றன. “சோழ நாட்டில்கூட இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. ராஜராஜ சோழனது வெண்கலச் சிலை உட்பட அனைத்துச் சோழர் சிலைகளிலும் தொங்கிக் கொண்டிருக்கும் காதுமடல்களைப் பார்க்கலாம். நகரத்தார் இல்லங்களில் கறுப்பு-வெள்ளை குடும்ப நிழற்படங்களில் பெண்கள் தண்டட்டி அணிந்திருப்பதைப் பார்க்கலாம்” என்கிறார் தேவன்.
ஓர் தத்துவக் குறியீடாக தொடங்கிய ஒரு வழக்கம் பின்னர் அழகியலோடு தொடர்பு பெற்றுவிட்டது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். காதுவளர்க்காதவர்கள் அக்காலத்துக் கிராமங்களில் ‘மூளி’ என்று சீண்டப்பட்டார்கள். ‘மூளி’ என்றால் ‘காதற்றவள்’ அல்லது ‘அழகற்றவள்’ என்று பொருள்
மேலும் படிக்க:
இராஜராஜ சோழனின் ஈழ காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவி; பழங்கால பொருட்களை கண்டறிய உதவிய பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் பயிற்சி
ஓர் தத்துவக் குறியீடாக தொடங்கிய ஒரு வழக்கம் பின்னர் அழகியலோடு தொடர்பு பெற்றுவிட்டது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். காதுவளர்க்காதவர்கள் அக்காலத்துக் கிராமங்களில் ‘மூளி’ என்று சீண்டப்பட்டார்கள். ‘மூளி’ என்றால் ‘காதற்றவள்’ அல்லது ‘அழகற்றவள்’ என்று பொருள்.
நீண்ட காதுமடல்களும் தண்டட்டி காதுகளும் காலத்தின் மறதியில் அமிழ்ந்து விட்டன.
தப்பித்தவறி தண்டட்டி அணிந்தவர்கள் எங்கேயாவது எப்போதாவது எவர் கண்ணிலாவது தென்பட்டார்கள் என்றால் அவர்கள் போன தலைமுறையின் இறுதி ஆண்டுகளில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
(இந்த கட்டுரை முதலில் ஆகஸ்ட் 8, 2022 அன்று வெளியிடப்பட்டது)
Read in : English