Read in : English

ஃபேண்டஸி திரைப்படங்களில் காட்டப்படும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹீமேன் என்று ஒரு சூப்பர்ஹீரோவைப் பால்ய காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும். மனித தோற்றத்தில் இருக்கும் அப்பாத்திரங்கள் திடீரென்று அநீதியைக் கண்டு அசாதாரணமானவர்களாக மாறுவது விவரிக்க இயலாத குதூகலத்தைத் தரும்.

மேற்குலகில் இருந்து வரும் இந்த வகைமைப் படைப்புகள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெறுவதுண்டு. அப்போதெல்லாம், இது போன்ற கற்பனைகள் தமிழிலேயே உதிக்க எது தடையாக இருக்கிறது என்ற கேள்வியே அதிகமாக முன்வைக்கப்படும். சமீபகாலமாக அந்த தடை உடைந்திருக்கிறது; தமிழிலும் தரமான பேண்டஸி கதை திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேநேரத்தில், அவை நாம் இதுவரை உணர்ந்த காட்சியனுபவத்திலிருந்து வேறுபட்டு இருக்குமா? கொஞ்சமும் எதிர்பார்த்திராத கற்பனைகளை நமக்குக் காட்டுமா என்ற கேள்விகளும் பெருகி வருகின்றன.

ஃபேண்டஸி வகைமை திரைப்படம் என்பது தமிழ் திரையுலகத்திற்குப் புதிதல்ல. ஏனென்றால், யதார்த்தத்திற்குப் புறம்பான உலகங்களைக் காட்டும் கதைகளைச் சார்ந்தே இந்தியத் திரையுலகம் தன் இயக்கத்தைத் தொடங்கியது. புராண, இதிகாச கதைகளில் இருந்து சில பகுதிகளைப் பிய்த்துத் திரைக்கதைகள் ஆக்கப்பட்டன. அதற்கு இணையாக, கதாசிரியர்களின் கற்பனையில் உருவான அரச கதைகளும் ரசிகர்களை மகிழ்வித்தன. வேதாளங்களும் குட்டிச்சாத்தான்களும் ஆகாயத்தில் பறந்தது போதாது என்று பாதாள உலகுக்கும் கூட்டிச் செல்லும் அனுபவங்களும் திரையில் கிடைத்தன.

1950களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ‘ராஜபார்ட்’களுக்கான தேவை குறைந்தபோதும் குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், தங்கமலை ரகசியம் போன்ற படங்கள் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தின. மாயா பஜார் போன்ற பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டன. அதேநேரத்தில், சமூகக் கதைகளின் எண்ணிக்கையும் அதிகமானது. அதனால், சமகாலத்தில் அதிசயங்கள் நிகழ்வதாகக் காட்டுவதே தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் என்ற நிலை உருவானது.

1963இல் வெளியான ‘கலைஅரசி’ பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள் குறித்த கற்பனைகள் பெருக வழி வகுத்தது. ஆனால் எம்ஜிஆர் போன்ற முன்னணி நடிகர் நடித்தும் கூட, அப்படம் வெற்றியை ஈட்டவில்லை. அதனாலேயே, தமிழில் நாயகனின் அபார சாகசங்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் மாயஜாலங்களுக்கோ, அறிவியல் சார்ந்த கற்பனைகளுக்கோ கிட்டவில்லை.

தமிழிலும் தரமான பேண்டஸி கதை திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேநேரத்தில், அவை நாம் இதுவரை உணர்ந்த காட்சியனுபவத்திலிருந்து வேறுபட்டு இருக்குமா? கொஞ்சமும் எதிர்பார்த்திராத கற்பனைகளை நமக்குக் காட்டுமா என்ற கேள்விகளும் பெருகி வருகின்றன

அதே காலகட்டத்தில் வெளியான ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மறுஜென்மம் குறித்துப் பேசியது. ’சரஸ்வதி சபதம்’ போன்ற படங்கள் வாயிலாகப் புராணம் சார்ந்த கற்பனையுலகைக் காட்டினார் ஏ.பி. நாகராஜன். அலாவுதீனின் அற்புத விளக்கை நினைவூட்டும்படியாக ‘பட்டணத்தில் பூதம்’ தந்தது எம்.வி.ராமன் – ஜாவர் சீதாராமன் கூட்டணி.

ஃபேண்டஸி திரைப்படங்கள்

(Photo credit: Wikipedia)

ஒரே நேரத்தில் பத்து பேரைப் புரட்டியெடுக்கும்படியான நாயக பாத்திரங்களை எம்ஜிஆர் கையாண்ட காலகட்டத்தில், அவர் மட்டுமே ‘சூப்பர் ஹீரோ’வாக திகழ்ந்தார். ஜேம்ஸ்பாண்ட் மற்றும் கௌபாய் பாணி கதை சொல்லல் வழியாக ஜெய்சங்கரும், ஜனரஞ்சகமான ஆக்‌ஷன் படங்கள் வழியே ரவிச்சந்திரனும் அப்படியொரு அந்தஸ்தை அடைந்தனர். அவர்களைப் போன்ற நாயகர்களுக்கு இணையாக யானை, குரங்கு, பாம்பு, ஆடு போன்ற மிருகங்கள் சாகசங்களில் ஈடுபடும் கதைகளையும் கூட ரசிகர்கள் கொண்டாடினர்.

மேலும் படிக்க: வி.எஃப்.எக்ஸ். அபார வளர்ச்சி: ஹாலிவுட்டிலும் கோலோச்சும் சென்னை!

அப்படியொரு சூழலில்தான், 1978இல் வெளியான ’ஜகன்மோகினி’ வழியே கவர்ச்சிகரமான பேய்களையும் பிசாசுகளையும் திரையில் உலவவிட்டார் இயக்குநர் விட்டலாச்சார்யா. அதன் தொடர்ச்சியாக மதனமஞ்சரி, நவமோகினி என்று பல படங்களைத் தந்தார். அதன் தாக்கத்தில் மலையாளம், கன்னடத்திலும் கூட பல பேய்க்கதைகள் தயாரிக்கப்பட்டன. அவற்றால் ஜகன்மோகினி பெற்ற வரவேற்பை நெருங்க முடியவில்லை. அந்த ட்ரெண்டை ஒட்டி உருவான ஐ.வி.சசியின் ‘அலாவுதீனும் அற்புதவிளக்கும்’ படமும் கூட மிகத்தாமதமாகவே திரையை வந்தடைந்தது.

‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘நீயா’ உள்ளிட்ட சில படங்கள் நாக கன்னியரின் பழி வாங்குதலைப் பேசின. இப்படங்கள் நாயகிகளின் அதீத கவர்ச்சியை முன்னிறுத்தினாலும், ஆக்‌ஷனுக்கும் செண்டிமெண்டுக்கும் முக்கியத்துவம் தரும் காட்சியமைப்புக்கும் வழியமைத்துத் தந்தன. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘நஞ்சுபுரம்’ கூட அதே வகையிலான கதையமைப்பைக் கொண்டதுதான்.

1984இல் ஜிஜோ புன்னூஸ் தந்த ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, இந்தியாவின் முதல் 3டி படம் என்ற பெருமையைப் பெற்றது. குழந்தைகளைக் கவர்ந்த இந்த குட்டிச்சாத்தானைப் பிரதியெடுக்க முயன்று தோற்ற படங்களின் எண்ணிக்கை அதிகம். பிரபுதேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மை டியர் பூதம்’ கூட அதே தொனியிலான கதையமைப்பைக் கொண்ட படம் தான்.

கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’, ரசிகர்களை வியக்க வைக்கும் புதிய உலகத்தை அறிவியல் புனைவின் வழியே காட்டியது. தனிமனித சாகசங்களோடு மர்மப் புதிர்களை இணைக்கும் ‘இண்டியானா ஜோன்ஸ்’ தாக்கம் கொண்ட படங்களும் கூட அக்காலகட்டத்தில் வந்தன. கார்த்திக் நடித்த ‘மிஸ்டர் கார்த்திக்’ அவற்றில் ஒன்று.

ரஜினி நடித்த ‘அதிசயப் பிறவி’, கார்த்திக் நடித்த ‘லக்கிமேன்’ போன்றவை சில வெற்றிகரமான தெலுங்குப் படங்களில் ரீமேக் ஆகும். என்னதான் ஃபேண்டஸி கதை சொல்லல் இருந்தாலும், அடிப்படையில் இக்கதைகள் சில புராண பாத்திரங்களையே மையமாகக் கொண்டிருந்தன.

நம்மூர் ஆக்‌ஷன் ஹீரோக்கள் எல்லாருமே அசாதாரணமானவர்கள் என்பதால் அப்படிப்பட்ட திரைக்கதைகளை யாருமே தொடவில்லை போல. அந்த வழக்கத்தை உடைத்து, தற்போது ‘வீரன்’ எனும் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படத்தைத் தந்திருக்கிறார் ஏ.ஆர்.கே.சரவணன்

பொதுவாக ஃபேண்டஸி திரைபடங்கள் எல்லாமே நேர்மறையான கதையோட்டத்தைக் கொண்டவையாகவே படைக்கப்படும். அவற்றில் இருந்து விலகி நின்றது ஆபாவாணன் எழுத்தாக்கத்தில் உருவான ‘கருப்பு ரோஜா’. வேலு பிரபாகரன் இயக்கிய ‘அசுரன்’, சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலைப் பிரதியெடுக்கும் கதையில் ஆர்னால்டு நடித்த ‘பிரிடேட்டர்’ படத்தின் சாயலைப் பூசி உருவாக்கப்பட்டது.

(Photo credit: Wikipedia)

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தெலுங்கு திரையுலகில் சில குறிப்பிடத்தக்க ஃபேண்டஸி திரைப்படங்களைத் தந்தவர் இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ். தமிழில் அவர் தந்த ஃபேண்டஸி படமாக விளங்குவது ‘லிட்டில் ஜான்’. இதன் திரைக்கதையானது வெற்றிகரமான ஆங்கில ஃபேண்டஸி கதைகளின் கலவை வடிவமாகவே இருந்தது.

கடந்த இருபதாண்டுகளாகத் தெலுங்கில் ‘மகதீரா’, ‘ஈகா’, ‘பாகுபலி’ என்று தொடர்ச்சியாக ஃபேண்டஸி படங்கள் தந்து வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. கார்த்திகேயா, விருபாக்‌ஷா வகையறா திரைப்படங்களும் அந்த வழியைப் பின்பற்றி வெற்றியைத் தொட்டுள்ளன. தமிழில் அப்படிப்பட்ட கதை சொல்லலுக்கு ஏற்ற பட்ஜெட் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் கொஞ்சம் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ச்சியாகத் தமிழில் நிகழ்ந்துகொண்டு இருப்பதையும் மறுக்க முடியாது.

மேலும் படிக்க: தமிழ் சினிமா: மாறிவரும் சண்டைக்காட்சிகள்!

தெய்வீக, பேய்த்தனமான, வேற்றுக்கிரக வாசனை கொண்ட கதைகளில் இருந்து விலகி வேறுவிதமான ஃபேண்டஸி உலகைக் காண்பிக்கும் முயற்சிகள் தமிழில் தொடர்கின்றன. மாயமனிதன் கதையைத் தழுவி உருவான ஜித்தன், காதலுக்கு ஒரு கடவுள் உருவத்தைத் தந்த எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’, காலத்தின் அருமையைச் சொன்ன ஜீவாவின் ‘12பி’, உழைப்பின் மகத்துவத்தைச் சொன்ன சிம்புதேவனின் ‘அறை எண் 305இல் கடவுள்’ போன்றவற்றை அதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.

‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’, ‘கசடதபற’ உட்பட இயக்குநர் சிம்புதேவன் தந்த ஒவ்வொரு படமும் ஃபேண்டஸி வகைமையில் அடங்கும். அவருக்கு இணையாக, தமிழ் திரையில் வித்தியாசமான கற்பனைகளைக் கொட்டியவர் இயக்குநர் பாலாஜி தரணிதரன். அவர் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒருபக்கக்கதை’, ‘சீதக்காதி’ மூன்றுமே தமிழின் குறிப்பிடத்தக்க ஃபேண்டஸி திரைப்படங்கள்.

இயல்புக்கு மாறான கற்பனை உலகைக் காட்டும்போது, அவற்றில் ஆக்‌ஷன், அட்வெஞ்சர், காமெடி, ரொமான்ஸ், த்ரில்லர் வகைமையைக் கலப்பது புதுவித அனுபவத்தைத் தரும். விஜய் நடித்த ‘புலி’, செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, அஸ்வத் மாரிமுத்துவின் ‘ஓ மை கடவுளே’, லக்‌ஷ்மணின் ‘போகன்’ உள்ளிட்ட படங்களைப் பார்க்கையில் அந்த வேறுபாடுகள் தெரியும்.

மேற்சொன்ன படங்களில் நாம் எதிர்பாராத ஒரு அனுபவத்தைத் தருவதாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைக் குறிப்பிடலாம். காரணம், வெறுமனே நாயக சாகசமாக இல்லாமல் வரலாற்றையும் அறிவியலையும் தகுந்த விகிதத்தில் கலந்த புனைவாக அமைந்திருந்தது அந்தப் படம். அதுவே, அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பவும் வகை செய்திருக்கிறது.

அது போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் உருவாக்கிய எதிர்பார்ப்பே, 2016இல் ஜீரோ, காஷ்மோரா, சைத்தான் போன்ற படங்கள் மீது கவனிப்பை உருவாக்கின. ஆனால், அந்த எதிர்பார்ப்பை அப்படங்கள் பூர்த்தி செய்யவில்லை. சில படங்களில் வழக்கத்திற்கு மாறான திசையில் திரைக்கதை பயணிப்பதை இயக்குநரே தெரியப்படுத்துவார். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று அதன் பின்னிருப்பதாகக் காட்டப்படும். யானை முகத்தான், முதல் நீ முடிவும் நீ போன்ற படங்கள் அப்படிப்பட்ட கதை சொல்லலைக் கொண்டவை. சமீப ஆண்டுகளில் வெளியான ஃபேண்டஸி படங்களில் வித்தியாசமானவை என்று ‘மரகத நாணயம்’ மற்றும் ‘சிம்பா’வைச் சொல்லலாம்.

(Photo credit: Wikipedia)

பழங்காலத்து நாணயத்தைத் திருடுவதில் தொடங்கி பல நூறாண்டுகளாக அதனைக் காவல் காத்துத் திரியும் பேய் வரை, மிக வித்தியாசமான பாத்திரங்களோடும் காட்சியமைப்போடும் அமைந்த வகையில் கவர்ந்தது ஏ.ஆர்.கே.சரவணனின் ‘மரகத நாணயம்’. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கிய ‘சிம்பா’வில் கஞ்சா புகைக்கும் நாயகன் கண்களுக்கு ஒரு நாய் மனிதனாகத் தென்படுவதாகக் கதை நீளும்.

பரத்தும் பிரேம்ஜியும் நடித்த அப்படத்தில் நகைச்சுவையை அள்ளிவிட்டிருந்தால் அப்படம் வேறோரு உயரத்தைத் தொட்டிருக்கும். ’இன்று நேற்று நாளை’ மூலமாக அறிவியல் கலந்து ஃபேண்டஸியை அள்ளிவிட்ட ரவிக்குமாரின் ‘அயலான்’ படம் கூட புதுவிதமான அனுபவத்தை நமக்குத் தரலாம்.

விதவிதமாக ஃபேண்டஸி கதைகளை தந்தாலும், தமிழில் சூப்பர் ஹீரோ படம் என்று பெரிதாக எதுவும் வரவில்லை. நம்மூர் ஆக்‌ஷன் ஹீரோக்கள் எல்லாருமே அசாதாரணமானவர்கள் என்பதால் அப்படிப்பட்ட திரைக்கதைகளை யாருமே தொடவில்லை போல. அந்த வழக்கத்தை உடைத்து, தற்போது ‘வீரன்’ எனும் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படத்தைத் தந்திருக்கிறார் ஏ.ஆர்.கே.சரவணன்.

மலையாளத்தில் வெளியான பசில் ஜோசப்பின் ‘மின்னல் முரளி’ சாயலில் இப்படத்தின் ட்ரெய்லர் இருந்தாலும், இக்கதையில் ஃபேண்டஸியை தூவ ஏதுவாக அய்யனாரை துணைக்கு அழைத்திருக்கின்றனர். ‘காந்தாரா’ பாணியில் நாட்டார் தெய்வத்தின் மதிப்பீடுகளைக் கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க முயற்சித்திருக்கின்றனர். அதன் மூலமாக, அசாதாரணமானவர்களை நாயகர்களாகக் காட்டுவதற்கும் வேர் சார்ந்த கதைகள் தேவை என்பது உறுதியாகியிருக்கிறது.

அவெஞ்சர்ஸ் பாணியில் ஒரு முழுமையான சூப்பர்ஹீரோவை தருவது தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். அது வெற்றியையும் சுவைக்கலாம். ஆனால், சூப்பர்ஹீரோக்களை ரசிப்பதென்பது நிகழ்கால உண்மைகளில் இருந்து நழுவும் ரசிக மனங்களின் எதிரொலிப்புதான். அந்த உளவியலின் பக்கம் கவனம் திருப்பினால், தமிழில் ஃபேண்டஸி படங்களும் சூப்பர் ஹீரோக்களும் தேவையா என்ற இன்னொரு விவாதம் எழும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லட்டும்!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival