Read in : English
தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழ்வுடன் இணைந்து பயணிக்கும் யானை குட்டிகள் பற்றி படமாக்கப்பட்ட ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. வன உயிரினச் சூழலுடன் இணைந்து பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவதை மேலும் உறுதி செய்யும் சான்றாக அமைந்துள்ளது, உலக அளவில் கிடைத்துள்ள இந்த விருது.
தமிழகத்தின் ஊட்டி, முதுமலை வனப்பகுதியில் வனத்துறையின் யானை பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு பணி செய்து வரும் பொம்மன், பெள்ளி மற்றும் ரகு யானைக்குட்டியுடன் இணைந்த வாழ்க்கைக் கதை உலக அளவில் பேசுப்பொருளாகியுள்ளது.
இவர்களின் பணி வாழ்வை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படமான ‘எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ படைப்புக்குச் சினிமா உலகின் தலை சிறந்த ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக, தமிழகத்தில் வாழும் பழங்குடியின மக்களின் இயற்கை மற்றும் சூழல் சார்ந்த உயர்ந்த பண்பாடு உலக அரங்கில் தெரிய வந்துள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கைக் கதை, உலக சினிமா ரசிகர்கள் மனதில் ஆவணமாகப் பதிந்துள்ளது.
தமிழகத்தில் பழங்குடியினத்தவர் பட்டியலில் உள்ள காட்டுநாயக்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் பொம்மன், பெள்ளி. உதகமண்டலம், முதுமலை வனப்பகுதியிலுள்ள தெப்பக்காடு கிராமத்தில் வசிக்கின்றனர். பணியில் ஏற்பட்ட நெருக்கம், ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவரையும் வாழ்விலும் இணைந்து வைத்துள்ளது. இவர்களின் இயல்பான வாழ்வையும், யானைகளுடன் உள்ள நெருக்கமான உறவையும் வெளிப்படுத்துகிறது இந்த ஆவணப்படம்.
கைவிடப்பட்ட காட்டு விலங்குகளை வீட்டில் பராமரிப்பது காலம்காலமாய் எங்கள் குடும்பங்களில் நடந்து வருவதுதான். இப்போது தமிழக முதல்வர் அழைத்துப் பாராட்டி பரிசு அளித்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது
காட்டு விலங்குடன் நெருங்கிப் பழகி மனிதன் உறவாடும்போது, நெகிச்சி இயல்பாக வெளிப்படுகிறது. அன்பு, கருணை, விட்டுக்கொடுத்தல், அரவணைத்தல் போன்ற நெகிழும் பண்புகளால் பிற உயிரினங்களுடன் மனிதன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கிறது. இது போன்ற பண்பு பள்ளியிலோ, கல்லுாரியிலோ கற்றுக் கொள்வதல்ல; காடு சார்ந்து வாழும் மக்களிடம் பாரம்பரியமாக இருக்கிறது; வழி வழியாக அது கடத்தப்பட்டு வருகிறது என்ற உண்மையையும் இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட, நான்கு ஆண்டு கால வாழ்க்கையை மிக இயல்பாகப் படம்பிடித்து 41 நிமிடங்களில் திரையில் சொல்லியுள்ளது.
இந்த படத்துக்கு உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்து பொம்மனிடம் கேட்டபோது, “வியப்பாக இருக்கிறது. ஒரே நாளில் இவ்வளவு பிரபலமடைவோம் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. இது ஒரு சினிமா என்றோ, இதில் நாங்கள் நடிக்கிறோம் என்றோ ஒரு நாளும் நினைக்கவில்லை. யானைக்குட்டியுடனான எங்கள் வாழ்வை படம்பிடித்தனர். இது எங்களுக்குப் புதிய விஷயம் அல்ல.
மேலும் படிக்க: பத்ம விருது பெறும் இருளர் பிரதிநிதிகள்
கைவிடப்பட்ட காட்டு விலங்குகளை வீட்டில் பராமரிப்பது காலம்காலமாய் எங்கள் குடும்பங்களில் நடந்து வருவதுதான். இப்போது தமிழக முதல்வர் அழைத்துப் பாராட்டி பரிசு அளித்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டும்” என்றார்.
தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்களை வெகுவாகக் கவரக் காரணம், அதில் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏராளம் இருந்தது தான். யானைக்குட்டியைக் குடும்பத்தில் ஒருவராகப் பாவித்து பராமரிக்கும் பழங்குடியின தம்பதியரின் நெகிழ்வான நடவடிக்கைகள் மிக இயல்பாகப் படமாக்கப்பட்டிருந்தன.
விழா நிகழ்வில் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், “பழங்குடி மக்களையும் விலங்குகளையும் சிறப்பிக்கும் எங்கள் ஆவணப்படத்தை அங்கீகரித்ததற்காக அகாடமிக்கு நன்றி. இதற்காக, ஆறு ஆண்டுகள் உழைத்தேன். இந்த படப்படிப்புக்காகப் பழங்குடியின மக்களுடன் பணியாற்றியது நிறைவாக இருந்தது. உயிரினங்களுடன் இணைந்து வாழ்வது குறித்து பழங்குடியின மக்களிடம் கற்றுகொள்ளலாம். பழங்குடியின மக்கள் குரலாகவும் இது இருக்கும். இந்த படத்தை என் தாய்நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
அன்பு, கருணை, விட்டுக்கொடுத்தல், அரவணைத்தல் போன்ற நெகிழும் பண்புகளால் பிற உயிரினங்களுடன் மனிதன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்; இது போன்ற பண்பு பள்ளியிலோ, கல்லுாரியிலோ கற்றுக் கொள்வதல்ல; காடு சார்ந்து வாழும் மக்களிடம் பாரம்பரியமாக இருக்கிறது
இன்மதி இணைய இதழுக்காக பெள்ளியிடம் பேசினோம். “தருமபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டது யானைக்குட்டி ரகு. அதை வளர்க்க அழைத்தது வனத்துறை. அதன் வால் வெட்டப்பட்டு இருந்தது. அதை வளர்ப்பதில் சிரமம் ஏற்படும் என முதலில் எண்ணினேன்.
ஆனால் என் குடும்பத்தினர் நம்பிக்கை அளித்தனர். முடிந்த அளவு முயன்று பார்க்க அறிவுரைத்தனர். அதன்படி, ரகுவை வளர்த்து பெரிதாக்கினோம். அப்போது, மூன்று மாத குட்டியாக பொம்மி வந்தது. அதற்கும் பால் கொடுத்து முறையாக வளர்த்தோம்” எனத் தெரிவித்தார்.
முதுமலை சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழு தலைவர் சிக்பொம்மன் கூறுகையில், “காடு மற்றும் வன உயிரினங்களுடன் இணைந்து வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை பற்றி இந்த படம் உலகுக்குத் தெரிவிக்கிறது. இதைப் புரிந்துகொண்டு, எங்களுக்கு உரிய மேம்பாட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.
தமிழகப் பழங்குடியின மக்களின் செயல்பாடும் குரலும் உலக அரங்கில் வலம் வரத் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டில் உறுதியான திட்டங்களைத் தீட்ட அரசு முயற்சிக்க வேண்டும்.
Read in : English