Read in : English
2017ஆம் ஆண்டு. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். மிகவும் வினோதமான அந்த கோரிக்கை நடுநடுங்க வைக்கும் பாம்புகள் பற்றியது.
மிகப்பெரிய மலைப்பாம்புகள் புளோரிடா குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முயல், கோழி, ஆடு என உயிரினங்களை அவை விழுங்கின. அந்த மலைப்பாம்புகளைக் கட்டுப்படுத்தும் கோரிக்கையை வைத்தனர் மக்கள்.
அதையடுத்து புளோரிடா மாகாண வன விலங்குகள் துறை செயலில் இறங்கியது. வனவிலங்கு பாதுகாப்புத் துறை, புளோரிடா பல்கலைக்கழகம் போன்றவற்றில் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில் சில திட்டங்களைத் தீட்டினர். எதுவும் பலனளிக்கவில்லை. பாம்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது மாகாண நிர்வாகத்துக்குத் தலைவலியாக அமைந்தது.
இறுதியாக இந்தியாவில் இருந்து, பாம்புகளைக் கையாளும் திறன் மிக்க பழங்குடியின நிபுணர்களை அழைக்க முடிவு செய்தனர். அது குறித்து, அமெரிக்காவில் பிறந்து, இந்தியாவில் வசித்துவரும் இயற்கையிலாளர் ரோமுலஸ் விட்டேகருடன் ஆலோசனை நடத்தினர். அவரது ஆலோசனைப்படி, தமிழகத்தில் பாம்புகளைக் கையாளும் திறன் பெற்ற பழங்குடி இருளர் இன வல்லுனர்களைக் கொண்டு, மலைப்பாம்புகளைக் கட்டுப்படுத்தும் முடிவு செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் பாம்புகளைக் கையாளும் திறன் பெற்ற பழங்குடி இருளர் இன வல்லுனர்களைக் கொண்டு, மலைப்பாம்புகளைக் கட்டுப்படுத்தும் முடிவு செயல்படுத்தப்பட்டது
அதன்படி, செங்கல்பட்டு பகுதியில் வசிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த இருவர் அமெரிக்கா புறப்பட்டனர். அமெரிக்காவில் இறங்கிய எட்டு நாட்களில், அவர்கள் 13 மலைப்பாம்புகளை அனாயாசமாகப் பிடித்தனர். மலைப்பாம்புகளை அவர்கள் கண்டறிந்த விதம், பிடித்த விதம் அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தியது. பிரச்சனை தீர்வை நோக்கி நகர்வதை கண்டனர்.
பாம்பு பிடிக்கும் வித்தையைக் கற்றுத் தர புளோரிடா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்தது.
அதன்படி சில பயிற்சிகளைக் கொடுத்து, பாம்புகளைப் பிடித்து திரும்பி வந்தனர் இருளர்கள். அதை நிகழ்த்தியது மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற இரண்டு இருளர் இன பிரபலங்கள்.
மேலும் படிக்க: மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்களின் பாரம்பரிய பௌர்ணமி இரவு!
மருந்து தயாரிப்புக்காக விஷம் எடுக்கப் பாம்பு பிடிக்கும் அனுமதியை தமிழ்நாடு அரசு இருளர் இன மக்களுக்கு மட்டுமே அளித்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மட்டுமே இந்த அனுமதியைப் பெற முடியும். அனுமதி பெற்று, பாம்புகளைப் பிடித்து வந்த இருவரின் செயலைக் கண்டு அன்று அமெரிக்க நிபுணர்கள் வியந்தனர்.
இப்படிப் புகழ் பெற்றிருக்கும் இருவருக்கும் இந்த ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ என்ற உயர்ந்த விருதை வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவின் கவுரமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது, அந்த மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட போது, கரூர் பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் மாசி சடையன், வடிவேல் கோபால் இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி
Read in : English