Read in : English
மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களில், யானைகளுக்கு நன்றி செலுத்தப் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. யானைக்கு படையல் வைக்கும் இந்த வினோத நிகழ்வின் பின்னணி மிக சுவாரசியமானது.
பழங்காலத்தில் காட்டு உயிரினங்களை எதிர்கொள்ளப் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றினர் மக்கள். வேட்டை போன்ற வன்முறை சார்ந்தவை சில நடைமுறைகள். சில நம்பிக்கை சார்ந்த இணக்க முறையிலானது.
இணக்கச் செயல்முறைகள் பிற்காலத்தில் நம்பிக்கையாக உருக்கொண்டன. இது வழிபாடாகவோ, சடங்காகவோ மாறியதும் உண்டு. அப்படியான நடைமுறையொன்று பொங்கல் திருநாளில், மேற்கு தொடர்ச்சி மலைக் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஊர்களிலே இது பின்பற்றப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது அணில்நத்தம் கிராமம். இதைக் குன்றி என்றும் அழைக்கின்றனர். மரங்கள் சூழ்ந்தது. இங்கு யானைகள் நடமாட்டம் அதிகம். இரவில் மக்கள் வெளியே வரவே அஞ்சுவர். இந்த ஊரில் யானைகள் எந்த இடத்தில் வந்து நிற்கும் என்று சொல்ல முடியாது.
இங்கு லிங்காயத்து மற்றும் சோளகர் இனப் பழங்குடியினர் அதிகம் உள்ளனர். இதில் லிங்காயத்து இன மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள். பழங்குடிகளான சோளகர் இன மக்கள் பலவகை உணவிலும் ஆர்வம் காட்டுவர். இந்த கிராமத்தில் இரண்டு இன குடியிருப்புகளும் தனித்தனியாக உள்ளன.
லிங்காயத்து இன மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்; பழங்குடிகளான சோளகர் இன மக்கள் பலவகை உணவிலும் ஆர்வம் காட்டுவர்
இங்குள்ள மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்கள் செய்து பிழைக்கின்றனர். குலத்தொழிலாகக் கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளைக் காட்டில் மேய்ச்சலுக்குக் கொண்டு போகும் போது பலர் நடுநடுங்க வைக்கும் அனுபவங்களைப் பெற்றுள்ளனர். காட்டுப்பன்றி தாக்கி ஊனமானவர்கள் பலர். பல குடும்பங்கள் காட்டு யானைகளுக்குத் தங்கள் உறுப்பினர்களைப் பலி கொடுத்துள்ளன.
மானாவாரியாக விவசாய உற்பத்தி இங்கு நடக்கிறது. அதைச் செய்வதிலும் பெரும் போராட்டம் நிலவுவதாகக் கூறினர் மக்கள். விவசாயத்தில் சாகுபடியாகும் பயிரை அறுவடை செய்வது அவ்வளவு சுலபமானது அல்ல. மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை போன்ற தானியங்களைச் சாகுபடி செய்கின்றனர்.
மேலும் படிக்க: வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் களைகட்டிய முருகன் கோயில் தைப்பூசம்!
ஒவ்வொரு தோட்டத்திலும் பெரிய மரமொன்றில் காவல் பரண் அமைக்கப்பட்டுள்ளது. மரத்தில் சிறிய குடில் போல் அமைந்திருக்கும் அந்த பரணில் அமர்ந்து காவல் பணியை மேற்கொண்டாலும், தோட்டத்தில் விளைந்த பயிர் வீடு வந்து சேருமா என்பது கடைசிவரை கேள்விக்குறி தான்.
விதை முளைத்தவுடன், காட்டு மிருகங்கள் மேய்ச்சலில் இருந்து அதனைப் பாதுகாக்க வேண்டும். அதையும் தாண்டி வளர்ந்த பயிர் அறுவடைக்கு வரும் போதுதான் பெரும் சிரமம். விளைந்த பயிர்கள் காட்டு யானைகளால் நாசமாகும். அந்த பகுதியினர், யானையை ‘பொம்மராயன்’ என்று அழைக்கின்றனர். அவற்றைத் தடுக்க, பொம்மராயன் சாமிக்குப் பூசை செய்கின்றனர். இது தான் பொங்கல் பண்டிகையாக அங்கு கொண்டாடப்படுகிறது.
மற்ற விலங்குகளை விட, பயிர்களுக்கு யானையால் ஏற்படும் சேதம் மிகப்பெரிது. அவை, விளைச்சலைச் சாப்பிடுவதை விட, தோட்டத்தில் புகுந்து நடப்பதால் ஏற்படும் சேதாரம் மிக அதிகம். கூட்டமாக உலா வருவதால் பயிர்கள் முற்றாக அழிந்து, உழைப்பின் பொருள் வீணாகிவிடுகின்றன.
இது போன்ற சூழலைத் தடுக்கும் வகையில், மரத்தில் பரண் அமைத்து இரவில் அவற்றின் மீது அமர்ந்து பெரும் சத்தம் எழுப்பி யானைகளைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர். பல நாட்கள் துாக்கத்தைத் தொலைத்து தோட்டத்தைப் பாதுகாக்கின்றனர்.
இவ்வாறு விளைந்த பயிர்களை மீட்டு அறுவடை செய்து தானியங்களை வீடுகளுக்கு எடுத்து வருவர். இந்தச் செயல்பாடு பெரும்பாலும் தை மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டியே உள்ளது.
விளைந்த பயிர்கள் காட்டு யானைகளால் நாசமாகும்; அவற்றைத் தடுக்க, பொம்மராயன் சாமிக்கு பூசை செய்வது பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது
இயற்கையுடன் போராடி, பல சிரமங்களுக்கு மத்தியில் தோட்டத்திலிருந்து அறுவடை செய்யும் பொருட்கள் வீடு வந்து சேர்வதை ஒரு சடங்காகக் கொண்டாடுகின்றனர்.
தோட்டத்தில் அறுவடை முடிந்ததும், அதில் ஒரு பகுதியைப் பாதுகாப்பாக, வீட்டின் ஒரு பகுதியில் பராமரிக்கின்றனர். கிராமத்தில் அத்தனை குடும்பங்களிலும் இது நடக்கிறது. இந்த விவசாயப் பொருட்களைக் கொண்டு பொங்கல் வைத்து மிகுந்த மரியாதையுடன் இயற்கை அன்னைக்குப் படையலிடுகின்றனர். முக்கியமாக, இந்த படையல் யானைகளுக்காக நடக்கிறது.
பாரம்பரிய சடங்காக இது கடைபிடிக்கப்படுகிறது. இந்த படையலை பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்புக்கு நன்றி செலுத்தும் வகையில் செய்வதாகச் சிலர் கூறினர். இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாளாக, தை திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
மேலும் படிக்க: காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!
விளையும் அனைத்து தானியங்களையும் சேர்த்து, ரொட்டி போல ஒரு உணவைத் தயாரிக்கின்றனர். யானைக்காக அதை இலையில் படைக்கின்றனர். வாழ்விடத்தில், காடுகளில், பொம்மராயன் கோவில் என பாரம்பரியமாக வழிபடும் பகுதிகளில் எல்லாம் இந்த படையல் நிகழ்வு நடக்கிறது. ஊர் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து உணவைத் தயாரித்து, படைத்து, பூஜை செய்து வணங்குகின்றனர்.
ஒவ்வொரு தைத்திருநாளிலும் தொடர்ச்சியாக இந்தச் சடங்கு நடக்கிறது. அந்த நாளை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வுக்கான சமையல் பணிகளை ஆண்கள் தான் செய்கிறார்கள். பூஜை முறை மிக எளிமையாக இருக்கிறது. தமிழகத்தில் யானைகளுக்காக நடத்தப்படும் இந்த பொங்கல் பண்டிகை வித்தியாசமான பண்பாட்டைப் பறைசாற்றுகிறது.
Read in : English