Read in : English

பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான்.

வாழ்க்கை, இன்பத்தை மட்டும் நோக்கிச் செல்லும் மலர்ப் பாதை அல்ல. இடையிடையே, பாலைவனமும் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் திராணி உள்ளவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள்.

இந்த உண்மையை உணர்த்துகிறார் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன்; இவரது வயது 78. இந்த வயதிலும் களைத்துக் கிடக்கவில்லை. வாழ்க்கையில் பெரும் சோகங்களைக் கண்டவர்; அவற்றைக் கடந்து, எதிர்காலத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். உழைப்பை உயிராக மதிக்கிறார். வியப்பூட்டுகிறது பாலகிருஷ்ணனின் வாழ்க்கைக் கதை.

“சின்ன வயசுல கழனில நெல், கேழ்வரகுன்னு பயிர் வைப்போம். என் மனைவி லட்சுமி, ஆம்பள மாதிரி தலப்பா கட்டிக்குனு தண்ணீர் எடுக்க ஏத்தத்து மேலே ஏறி மிதிப்பா. அப்பல்லாம் கழனியிலே நல்ல வௌச்சல் கிடைக்கும். வீட்டுல தானியங்களப் போட்டு வைக்கிறதுக்கு இடம் இருக்காது. அப்படி இருந்தும், கழனி வேலையையும் செஞ்சிட்டு மற்ற நாட்களில் கல் தச்சு வேலைக்கு போயிடுவேன்”, சரளமாகப் பேசினார் பாலகிருஷ்ணன்.

வாழ்க்கை, இன்பத்தை மட்டும் நோக்கிச் செல்லும் மலர்ப் பாதை அல்ல

தனது வாழ்வின் முதல் சோகத்தை கம்மிய குரலில் கூறினார்.

“செங்கல்பட்டு திருமலை தியேட்டர் பக்கத்துல ஒரு வீட்டுல கல் தச்சு வேலை செஞ்சிக்கிட்டு இருந்தப்போ, என் மனைவி சாப்பாடு எடுத்து வந்திருந்தா. அப்போ ஊர்ல இருந்து வந்த ஒருத்தர், ‘ஏம்மா ரெண்டு பேரும் இங்கே வந்துட்டீங்க. அங்கே உங்க பயிருல மாடு மேயுது’ன்னு சொன்னாரு. அத கேட்ட என் மனைவி, ஆவேசமா கழனிவெளிக்கு ஓடிப்போனா. அன்னிக்கு, இடி மின்னல் தாக்கி அங்கேயே செத்துட்டா. அந்த கவல, மனசுல முள்ளா குத்திட்டு இருக்கு” என்றார்.

கொள்கைகள் மாறலாம். சிலருக்கு கொள்கையே இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அனுபவம், ஏதாவதொரு கொள்கையை பின்பற்ற வைத்துவிட்டுத் தான் செல்கிறது. பாலகிருஷ்ணன் வாழ்வில் அப்படி நிகழ்ந்த ஓர் சம்பவம் இது.

“ஐம்பது வருஷத்துக்கு முன்னால ஒருநாள். கழனியிலே வேலை செய்து வந்து, மதியம் வீட்டிலிருந்த கொஞ்சம் கூழ குடிச்சேன். என் அண்ணன், ‘ஏண்டா எல்லாத்தையும் குடிச்சிட்டே’ன்னு கொம்பால கால், முதுகுன்னு கண்டபடி அடிச்சிட்டார். அன்னேலேருந்து, யாராவது சாப்பாடு கொடுத்து சாப்பிடச் சொன்னா மட்டுந்தான் சாப்பிடுவேன்.

மேலும் படிக்க: கண் தானம்: சலூனில் விழிப்புணர்வு!

எவ்வளவு சாப்பாடு முன்னாடி இருந்தாலும், எவ்வளவு பசியா இருந்தாலும் எடுத்து சாப்பிட மாட்டேன். இது என் மனைவிக்கு தெரியும். அவ இருந்த வரைக்கும் அவ கையால சாப்பாடு போடுவா. இப்ப என் மருமகள் சாப்பாடு போட்டு வச்சிருக்கேன்னு சொன்னாதான் அதை சாப்பிடுவேன்’ என நெகிழ்ந்தார்.

புத்திர சோகத்தில் உழன்றது குறித்து பாலகிருஷ்ணன் பேசியது நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
“என்னை குடும்பத்தார் படிக்க வைக்கவில்லை. அதை ஒரு குறையாகவே உணர்றேன். என் பசங்களுக்கு அந்த குறை வரக்கூடாதுன்னு கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்.

எனக்கு இரண்டு ஆம்பள பசங்க. பெரியவன் ஆந்திராவில் கல்லுடைக்கிற வேலை செய்யறான். சின்னவன் கம்பெனி வேலைக்கு ஆளுங்கள ஏத்தி போற வண்டியில டிரைவரா போனான். ரவுடி பசங்க வண்டிய மடக்கி, அவன அடிச்சிட்டாங்க. அதை வீட்ல சொன்னா பெரிய கலவரம் வருமோன்னு கவலைப்பட்டிருக்கான்.

நாலு பேரு அடிச்சிட்டாங்களேன்னு நெனச்சி, வேதனப்பட்டு விஷம் குடிச்சி விழுந்துட்டான். கடைசி நேரத்தில, அவன் அண்ணங்கிட்ட ‘நாலுபேரு அடிச்சிட்டாங்க. நான் ஒங்கிட்ட சொன்னா.. நீங்க நாலு பேரு சோ்ந்து அவனுங்கள அடிப்பீங்க. அதனால சண்டை தான் நீளும். என்னால எதுக்கு சண்டை வரணும்? உனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. நீ அவங்கள பாத்துக்க. அப்படினு போன்ல சொல்லிக்கிட்டே விழுந்தவந்தான். அப்பறம் மருத்துவமனைக்கு போலீஸ் பிணமா எடுத்து வந்தாங்க. அது மனசுல ஆறாத வடுவா மாறிடுச்சு” என்றார்.

‘ஏம்மா ரெண்டு பேரும் இங்கே வந்துட்டீங்க. அங்கே உங்க பயிருல மாடு மேயுது’ன்னு சொன்னாரு ஒருத்தர்; அத கேட்ட என் மனைவி ஆவேசமா கழனிவெளிக்கு ஓடிப்போனா!

கடவுளுடன் பேசிய அனுபவம் தனக்குண்டு என்று ஆச்சர்யப்பட வைத்தார் பாலகிருஷ்ணன். “ஒருமுறை நான் கடவுளப் பார்த்து, ‘நேர்மையா தான் இருக்கேன், நேர்மை குறையாம உழைக்கிறேன். ஆனா என் குடும்பத்தை இப்படி சோதிக்கிறியே’ அப்படின்னு கேட்டேன். மகாபலிபுரத்துல நடுக்கடல்ல நின்னு, ஒன்பது பூக்களைப் போட்டு கடவுளை வணங்கி, ‘எனக்கு ஏன் இந்த சோதனை’ன்னு கேட்டேன்.

‘அலைகளுக்கு ஊடே ஆழ்கடலுக்கு வரக்கூடிய தெம்பை குடுத்திருக்கேன். சோகத்தை தாங்கும் மனசை கொடுத்திருக்கேன். இத விட உனக்கு என்ன தரணும்’ன்னு கேட்டார் கடவுள். நியாயம்தானே. எதுவும் பேசாம கரையேறி வந்துட்டேன். அதுக்கு அப்புறம் எது நடந்தாலும் சகிச்சுக்க பழகிட்டேன்.

மேலும் படிக்க: சைவ உணவுப் பழக்கம் கொண்ட இஸ்லாமிய வேட்டைக்காரர்

என் மகனிடம், கழனில வேலை செய்து காய்கறி பயிர் வெச்சா நல்ல லாபம் கிடைக்கும்னு சொல்றேன். அதை கேட்காம, ஆந்திராவில் கூலிக்கு கல் உடைக்கிறான். சின்ன ரூம்ல தங்கி கஷ்டப்பட்டு மாசம் பணம் அனுப்புறான். அதை வச்சு மருமகள், பேரன்களை படிக்க வைக்கிறா. இப்படித்தான் வாழ்க்கை போவுது” என்று தன்
அனுபவத்தைப் பகிர்ந்தார் பாலகிருஷ்ணன். அதன்பிறகு, சுறுசுறுப்பாக விறகு வெட்டப் புறப்பட்டுப் போனார்.

வாழ்க்கையின் அடியோட்டத்தைப் புலப்படுத்துவது இது போன்ற எளிய மனிதர்களின் அனுபவங்கள்தாம்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival