Read in : English
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன.
பழைய பாட்டி கால பாத்திரங்கள், உடைந்த ஈஸிசேர். இரண்டு கால் உள்ள முக்காலி. கிழிந்த கல்யாண ஜமக்காளம், வீட்டில் யாரோ என்றோ காலை உடைத்துக் கொண்டபோது வாங்கிய வாக்கர், ஒட்டடை படிந்த ஊறுகாய் ஜாடிகள், வீடியோகேம் காலத்தால் தூக்கி எறியப்பட்ட பல்லாங்குழி. இப்படியாகக் காலம் கழித்த பொருள்களின் கிடங்குதான் பரண்.
இந்த பரண் ஓரத்தில் ஒரு தாத்தா கால டிரங்க் பெட்டி. உள்ளே பக்கங்கள் பழுத்து காதுகள் மடிந்து உடையும் அந்தக்காலப் புத்தகங்கள். ராமபாணப் பூச்சிகளின் வேட்டைக்காடு. இந்த புத்தகக்கட்டுகளிடையே 1950க்கும் முந்தைய பல சுவாரஸ்யமான புத்தகங்கள். அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பகுதியை அடுத்து ஒரிஜினல் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கொடுக்கிறோம்.
எழுத வந்த விஷயமோ முக்கியமானது; ஆனால் அதைச் சொல்லும் உரைநடை வாசகனை மூச்சடைக்க வைக்கிறது
குறிப்பு: இப்பகுதியில் வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை பதிப்பில் இல்லாதவை. ஆயினும் இவற்றில் சில நூல்களுக்குத் தற்போது மறுபதிப்பு வந்துவிட்டது தெரிந்தது. கூடுமானவரை தற்போது மறுபதிப்பு வராத நூல்களையே இந்தத் தொடரில் போட விழைகிறேன். ஒன்றிரண்டு நூல்கள் புதுப்பதிப்பாக வந்திருந்தாலும் அதில் குற்றம் காணாது, மன்னித்து, அதைப் படிக்கும்படி கோருகிறேன்.
இலக்கியமும் இடியாப்பமும்
“உரைநடை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மிகச்சிக்கலாக எழுதுகிறார்கள்” என ஒருமுறை அமரர் சுஜாதா எழுதியது நினைவுக்கு வருகிறது. ஒரு கனமான பத்திரிகையில் (கனம் என்பது விஷய கனம்) வந்த படைப்பாளியின் கட்டுரை வரிகளை அப்போது சுஜாதா எடுத்துக் காட்டியிருந்தார். கருத்துப்பொதி சுமந்த வாக்கியங்கள், இடியாப்பச் சிடுக்காகி, மூச்சு வாங்கி, நகர்ந்து நகர்ந்து, படிக்கிறவனை ‘முழிப்பிதுங்க’ வைத்தது.
எழுத வந்த விஷயமோ முக்கியமானது, ஆழமானது. ஆனால் அதைச் சொல்லும் உரைநடையோ வாசகனை மூச்சடைக்க வைக்கிறது. காலம் சென்ற என் நண்பரும் நவதமிழ் இலக்கியத்தின் மூத்த முக்கியப் பதிப்பாளருமான க்ரியா ராமகிருஷ்ணன் சொன்னது போல ‘படித்தால் நம்மை ஓவென்று அலற வைக்கிற உரைநடை’யாக அது இருக்கிறது. சொற்களை அங்குலம் அங்குலமாகப் பற்றியேறி அர்த்தத்தைத் தொடுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.
மேலும் படிக்க: பெரியார் பற்றி ஒளிவுமறைவற்ற வார்த்தைகள்!
இதற்கு மாறாகச் சின்னச்சின்ன வாக்கியங்களில் நேராகப் பொருளை நோக்கிப் பாயும் உரைநடையை எழுதியவர்களில் என்னை மிகவும் ஈர்த்தவர் ஒருவர். அவர் மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் என்கிற ஸ்டாலின் ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசன் உட்பட இப்படி உரைநடையை எழுதிய எழுத்தாளர்கள் யார் யார் என்ற ஒரு பட்டியல் போட்டால் அதில் நிச்சயம் இடம்பெறும் எழுத்தாளர் தி.ஜ.ர. ஆம். மஞ்சரியின் முன்னாள் ஆசிரியர் அமரர் தி.ஜ.ரங்கநாதன் தான்.
நமது ‘பரணில்’ இருந்து கிடைத்த மற்றொரு பொக்கிஷம் தி.ஜ.ர.வின் ஒரு கட்டுரைப் புத்தகம்தான். இதில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் 40களில் வந்த ‘ஹனுமான்’ பத்திரிகையில் வாரந்தோறும் வந்தவை.
சின்னச்சின்ன வாக்கியங்களில் நேராகப் பொருளை நோக்கிப் பாயும் உரைநடையை எழுதியவர்களில் என்னை மிகவும் ஈர்த்தவர் மணிக்கொடி ஆசிரியர் ஸ்டாலின் ஸ்ரீனிவாசன்
பொழுதுபோக்கு என்ற தலைப்பில் வெளியான இந்தக் கட்டுரை நூலுக்கு கி.வா.ஜகந்நாதன் முன்னுரை (அய்யா.. உங்களுக்கு கி.வா.ஜவை நினைவிருக்கிறதா? கலைமகள் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். கேட்கப் பயமாக இருக்கிறது. ஆனாலும் கேட்கிறேன். கலைமகள் ஞாபகம் இருக்கிறதா? இந்த சோஷியல் மீடியா காலத்தில் சர்வப்பழையதும் மறதிப்பரணில் தூக்கி எறியப்பட்டு விட்டதோ என்ற அச்சம்தான். மன்னிக்கவும்).
தி.ஜ.ரவைப் பற்றி கி.வாஜ:
“இவர் எழுதவில்லை. பேசுகிறார். அதனால்தான் இவற்றைப் படிக்கும்போது புஸ்தகம் ஒன்றைப் படிக்கிறோம் என்ற ஞாபகமே மறந்துபோகிறது. யாரோ ஒரு ரசமான “அரட்டைக்கல்லி” நம்முன் உட்கார்ந்துகொண்டு பேசுவது போலத்தான் தோன்றுகிறது. அவ்வளவும் விஷயம். இடையிடையே ஹாஸ்யம்..
கி.வா.ஜ சொன்னதைக் கேட்டீர்களா? அப்படி என்ன எழுதிவிட்டார் என்று நாமும் பார்க்க வேண்டாமா? வாருங்கள்…
Read in : English