Read in : English
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன.
பழைய பாட்டி கால பாத்திரங்கள், உடைந்த ஈஸிசேர். இரண்டு கால் உள்ள முக்காலி. கிழிந்த கல்யாண ஜமக்காளம், வீட்டில் யாரோ என்றோ காலை உடைத்துக் கொண்டபோது வாங்கிய வாக்கர், ஒட்டடை படிந்த ஊறுகாய் ஜாடிகள், வீடியோகேம் காலத்தால் தூக்கி எறியப்பட்ட பல்லாங்குழி. இப்படியாகக் காலம் கழித்த பொருள்களின் கிடங்குதான் பரண்.
இந்த பரண் ஓரத்தில் ஒரு தாத்தா கால டிரங்க் பெட்டி. உள்ளே பக்கங்கள் பழுத்து காதுகள் மடிந்து உடையும் அந்தக்காலப் புத்தகங்கள். ராமபாணப் பூச்சிகளின் வேட்டைக்காடு. இந்த புத்தகக்கட்டுகளிடையே 1950க்கும் முந்தைய பல சுவாரஸ்யமான புத்தகங்கள். அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பகுதியை அடுத்து ஒரிஜினல் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கொடுக்கிறோம்.
கோவை அய்யாமுத்து காந்தியின் நட்புக்குப் பாத்திரமானவர்; பெரியார் ஈ.வெ.ரா மற்றும் மூதறிஞர் ராஜாஜி இருவருக்குமே மிக நெருங்கிய நண்பர்; இவ்விருவரையும் பல சந்தர்ப்பங்களில் கடுமையாகக் கண்டித்தவரும் மிக முரட்டுத்தனமாகத் தாக்கியவரும் அவரே
குறிப்பு: இப்பகுதியில் வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை பதிப்பில் இல்லாதவை. ஆயினும் இவற்றில் சில நூல்களுக்குத் தற்போது மறுபதிப்பு வந்துவிட்டது தெரிந்தது. கூடுமானவரை தற்போது மறுபதிப்பு வராத நூல்களையே இந்தத் தொடரில் போட விழைகிறேன். ஒன்றிரண்டு நூல்கள் புதுப்பதிப்பாக வந்திருந்தாலும் அதில் குற்றம் காணாது, மன்னித்து, அதைப் படிக்கும்படி கோருகிறேன்.
நாம் பார்க்காத பெரியார்!
இந்த தலைமுறைக்கு கோவை அய்யாமுத்துவை மறந்தே போயிருக்கும். அய்யாமுத்து அந்த நாள் காங்கிரஸ்காரர். கதர் பக்தர். அதனாலேயே காந்தியின் நட்புக்குப் பாத்திரமானவர். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இரு துருவங்களாக விளங்கிய பெரியார் ஈ.வெ.ரா மற்றும் மூதறிஞர் ராஜாஜி இருவருக்குமே மிக நெருங்கிய நண்பர். ஈ.வெ.ராவை நாயக்கர் பெருமான் என்றும் ராஜாஜியை என் தந்தை என்றும் குறிப்பிடும் அளவுக்கு நட்பு.
அதேசமயம் இவ்விருவரையும் பல சந்தர்ப்பங்களில் கடுமையாகக் கண்டித்தவரும் மிக முரட்டுத்தனமாகத் தாக்கியவரும் அவரே. தாக்குதல் என்றால் சாதாரணத் தாக்குதல் அல்ல. பிய்த்துப் பிரிகட்டி விடுவார். இன்னொரு சமயம் நெஞ்சோடு அணைத்து ஆனந்தமும் படுவார். இருவர் மீதும் அவருக்குத் தீராத காதலும் தீராத கோபமும் இருந்தது.
மேலும் படிக்க: அருகருகே தமிழ், சமஸ்கிருதம்: ஆச்சர்யமூட்டும் பத்திரிகை!
பொதுவாகவே அய்யாமுத்து சண்டைக்காரர். பேச்செல்லாம் நறுக் நறுக் என்று இருக்கும். புதுமைப்பித்தன் சொன்ன மாதிரி அவருக்கு வாக்கில் சனி. வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசுபவர். அந்த நாளில் கதர் இயக்க விவகாரத்தில் காந்தியுடன் சண்டை போட்டவர். ஆயினும் கடைசி வரை காந்தி பக்தர்.
இந்த முறை ‘பரணில்’ அவர் எழுதிய ‘நான் கண்ட பெரியார்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள் தரப்படுகின்றன. 1957இல் சென்னை பிராட்வேயில் இருந்த ‘தமிழகம்’ பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது இந்நூல். 52 பக்கமே உள்ள இச்சிறுநூலில் அவர் ஈ.வெ.ராவுக்கும் தனக்கும் இடையே நடந்த பல்வேறு சம்பவங்களைச் சொல்லி இருக்கிறார். ஒளிவுமறைவற்ற அவரது வார்த்தைகளில் நாம் ஈ.வெ.ராவின் புதிய வடிவத்தைக் காண்கிறோம்.
Read in : English