Read in : English
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன.
பழைய பாட்டி கால பாத்திரங்கள், உடைந்த ஈஸிசேர். இரண்டு கால் உள்ள முக்காலி. கிழிந்த கல்யாண ஜமக்காளம், வீட்டில் யாரோ என்றோ காலை உடைத்துக் கொண்டபோது வாங்கிய வாக்கர், ஒட்டடை படிந்த ஊறுகாய் ஜாடிகள், வீடியோகேம் காலத்தால் தூக்கி எறியப்பட்ட பல்லாங்குழி. இப்படியாகக் காலம் கழித்த பொருள்களின் கிடங்குதான் பரண்.
இந்த பரண் ஓரத்தில் ஒரு தாத்தா கால டிரங்க் பெட்டி. உள்ளே பக்கங்கள் பழுத்து காதுகள் மடிந்து உடையும் அந்தக்காலப் புத்தகங்கள். ராமபாணப் பூச்சிகளின் வேட்டைக்காடு. இந்த புத்தகக்கட்டுகளிடையே 1950க்கும் முந்தைய பல சுவாரஸ்யமான புத்தகங்கள். அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பகுதியை அடுத்து ஒரிஜினல் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கொடுக்கிறோம்.
1800களின் பிற்பகுதியில் சிதம்பரத்திலிருந்து வெளியான ’பிரம்மவித்யா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் நடுக்காவேரி சீனிவாச சாஸ்த்திரிகள்;ராமநாதபுரம் அரசர் இதன் புரவலர்
குறிப்பு: இப்பகுதியில் வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை பதிப்பில் இல்லாதவை. ஆயினும் இவற்றில் சில நூல்களுக்குத் தற்போது மறுபதிப்பு வந்துவிட்டது தெரிந்தது. கூடுமானவரை தற்போது மறுபதிப்பு வராத நூல்களையே இந்தத் தொடரில் போட விழைகிறேன். ஒன்றிரண்டு நூல்கள் புதுப்பதிப்பாக வந்திருந்தாலும் அதில் குற்றம் காணாது, மன்னித்து, அதைப் படிக்கும்படி கோருகிறேன்.
ரயில்பெட்டிகளில் தேங்காய் எண்ணெய் விளக்கு!
மேலும் படிக்க: பரண் 2 – ‘சில்வர்டங்’ சீனிவாச சாஸ்த்திரியார்!
“தென்னிந்திய ரயில்வே வண்டிகளில் ஸ்டோன் என்னும் கம்பெனியாரால் இயற்றப்பட்டிருக்கும் மின்னல்காந்தி வெளிச்சத்தை முழுவதிலும் போடுவிக்க அக்கம்பெனிக்கு அந்த ரயில்வே கம்பேனி சீர்மெய் நிர்வாகிகள் அனுமதி கொடுத்து விட்டார்களாம். சீக்கிரம் தேங்காய் எண்ணெய் காண்ட்ராக்டுகாரர் பாடு ததிங்கிணத்தோம்!!”
இது என்ன சங்கதி என்று கேட்கிறீர்களா? 1899ல் வெளியான தமிழ் – சமஸ்கிருத (கிரந்தலிபி) பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது!
இதில் உள்ள சில ஆச்சரியங்கள்.
ஆச்சரியம் 1: 1899ல் தமிழ் பத்திரிகை வந்ததா? அதுவும் ஒரே பக்கத்தில் தமிழ், சமஸ்கிருதம் என்று இரண்டு மொழிகளில்!
ஆச்சரியம் 2: அன்று ரயில்பெட்டிகளில் மின்விளக்குகளுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் விளக்குகளா?
இதென்ன கூத்து!!
எல்லோரும் படிக்கும் வகையில் செய்திகளைத் தரலாம் என்ற நோக்கோடு “News and Notes” என்ற தலைப்பில் உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகளை ‘பிரம்மவித்யா’ அளித்தது
ஆம்! 1800களின் பிற்பகுதியில் சிதம்பரத்திலிருந்து ’பிரம்மவித்யா’ என்ற பத்திரிகை வெளிவந்தது. நடுக்காவேரி சீனிவாச சாஸ்த்திரிகள் (சீனிவாச தீட்சிதர் ??) என்ற வேத, வேதாந்த சமஸ்கிருத விற்பன்னர் இதன் ஆசிரியர். ராமநாதபுரம் அரசர் இந்தப் பத்திரிகையின் புரவலர். கிட்டத்தட்ட பழைய இல்லஸ்ட்ரடேட் வீக்லி பத்திரிகையின் அளவிற்குச் சற்று குறைந்த அளவு வெளிவந்த இப்பத்திரிகையின் ஒவ்வொரு பக்கமும் மேலிருந்து கீழாக கோடிட்டுப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பாதி தமிழிலும் மறுபாதி சமஸ்கிருதத்திலும் (கிரந்தலிபியில்) வந்தது.
இந்தப் பத்திரிகை பெரும்பாலும் அன்றைய பல்வேறு தத்துவப் பிரிவுகளின் கட்டுரைகளையும் தத்துவ விவாதப் போர்களையும் தாங்கி வந்தது. அத்வைதிகள், விசிஷ்டாத்வைதிகள், சைவ சித்தாந்திகள் உள்ளிட்ட பல்வேறு தத்துவ அறிஞர்கள் இந்தப் பத்திரிகையில் எழுதினர். இவர்களது வாத, பிரதிவாத மோதல்கள் படிப்பதற்குப் பிரமிப்பூட்டுபவை. சில சமயங்களில் அவை எல்லைமீறிப் போய்விடுவதும் உண்டு.
அன்று, சைவ சித்தாந்த சரபம் சூளை சோமசுந்தர நாயக்கருக்கும், ‘ஓர் இந்து’ என்ற புனைபெயரில் எழுதிய நிகரற்ற அறிஞரும் வேதாந்த மஹாவித்வானுமாகிய சாதுரத்தினம் செட்டியாருக்கும் நடந்த கருத்துப்போர் இந்தப் பத்திரிகையில்தான் நடந்தது. (சோமசுந்தர நாயக்கரின் மாணவர்தான் சுவாமி வேதாச்சலம் என்ற மறைமலைஅடிகள். சாதுரத்தினம் செட்டியாரின் மாணவர்தான் அத்வைத ஞானசூரியனும் பெரும் தமிழறிஞருமான கோ.வடிவேல் செட்டியார்).
மேலும் படிக்க: பித்தளைமாத்து ரகசியம் உடைக்கும் ’பரண்’
சோமசுந்தர நாயக்கர் மஹாவித்வான் மட்டும் அல்ல. மகா கோபக்காரரும் கூட. ஒரு வைஷ்ணவ வித்வானை ஒரு பத்திரிகையில் ஒரு விவாதத்தில் அவிசாரி மகன் என்று எழுதிவிட்டார். சும்மா விடுவார்களா? விஷயம் கோர்ட் வரை போனது. அவிசாரி மகன் என்பது கெட்ட வார்த்தையே இல்லை. அவிசாரி என்றால் விசாரம் இல்லாதவர் என்றுதான் பொருள் என வார்த்தை ஜாலம் செய்தார் நாயக்கர். நீதிபதி ஏமாறவில்லை. அவருக்கு 100 ரூபாய் அபராதத்தோடு மன்னிப்புக் கடிதம் எழுதித் தரவும் உத்தரவிட்டார். இந்த கேஸ் விஷயத்தை பின்னர் ஒரு சமயம் விலாவாரியாகத் தருகிறேன்.
பிரம்ம வித்யாவில் தத்துவார்த்த விஷயங்கள் மட்டுமே எழுதப்பட்டது. பிற்காலத்தில் அதில் எல்லோரும் படிக்கும் வகையில் செய்திகளைத் தரலாம் என்ற நோக்கோடு “News and Notes” என்ற தலைப்பில் உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகளை ‘பிரம்மவித்யா’ அளித்தது.
அந்தப் பகுதியும் மிக சுவாரசியமானது. அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்துறை செய்திகள் சில வரிகளில் இப்பகுதியில் வெளிவந்தன. அன்றைய க்ரைம் நியூஸ்கள், வம்பு வழக்குகள் இடையிடையே லோக்கல் கிசுகிசுக்கள் எல்லாம் கலந்து பேல்பூரி மாதிரி வந்தன. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.
ஒரு பணிவான குறிப்பு: இதில் நீங்கள் படிப்பது 19ஆம் நூற்றாண்டுத் தமிழ். கொஞ்சம் சிடுக்கானதுதான். வாசக நண்பர்கள் பக்கத்தை ஜூம் செய்து சற்றுப் பொறுமையுடன் படிக்கக் கோருகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
Read in : English