Read in : English
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன.
பழைய பாட்டி கால பாத்திரங்கள், உடைந்த ஈஸிசேர். இரண்டு கால் உள்ள முக்காலி. கிழிந்த கல்யாண ஜமக்காளம், வீட்டில் யாரோ என்றோ காலை உடைத்துக் கொண்டபோது வாங்கிய வாக்கர், ஒட்டடை படிந்த ஊறுகாய் ஜாடிகள், வீடியோகேம் காலத்தால் தூக்கி எறியப்பட்ட பல்லாங்குழி. இப்படியாகக் காலம் கழித்த பொருள்களின் கிடங்குதான் பரண்.
இந்த பரண் ஓரத்தில் ஒரு தாத்தா கால டிரங்க் பெட்டி. உள்ளே பக்கங்கள் பழுத்து காதுகள் மடிந்து உடையும் அந்தக்காலப் புத்தகங்கள். ராமபாணப் பூச்சிகளின் வேட்டைக்காடு. இந்த புத்தகக்கட்டுகளிடையே 1950க்கும் முந்தைய பல சுவாரஸ்யமான புத்தகங்கள். அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பகுதியை அடுத்து ஒரிஜினல் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கொடுக்கிறோம்.
குறிப்பு: இப்பகுதியில் வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை பதிப்பில் இல்லாதவை. ஆயினும் இவற்றில் சில நூல்களுக்குத் தற்போது மறுபதிப்பு வந்துவிட்டது தெரிந்தது. கூடுமானவரை தற்போது மறுபதிப்பு வராத நூல்களையே இந்தத் தொடரில் போட விழைகிறேன். ஒன்றிரண்டு நூல்கள் புதுப்பதிப்பாக வந்திருந்தாலும் அதில் குற்றம் காணாது, மன்னித்து, அதைப் படிக்கும்படி கோருகிறேன்.
“சில்வர்டங்”கின் தங்கத்தமிழ்!
ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்த்திரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் ஒன்று அவரது ஆங்கில மொழி அறிவைப் பற்றியது. அவர் ஒரு வெள்ளைக்கார அறிஞரின் ஆங்கிலத்திலேயே தப்பு கண்டுபிடித்து அதைத் திருத்தியவர் என்ற தகவலே அது. இச்சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றி பின்னர் நான் எழுதுகிறேன். இப்போதைக்கு ’சில்வர்டங்’ ஸ்ரீமான் சாஸ்த்திரிகள் பற்றி அதிகம் அறியப்படாத மற்றோர் அரிய தகவல். அவரது ஆங்கில ஞானத்துக்கும் எழுத்து நடைக்கும் கொஞ்சமும் சளைக்காத அளவுக்கு அழகுத்தமிழில் எழுதியவர் அவர் என்பதுதான் அத்தகவல்.
அவரது தமிழ்நடை விறுவிறுப்பும் ஜனரஞ்சகமும் நகைச்சுவையுமாக ஜொலிக்கிற நடை. படிப்பவனைக் கட்டிப்போடும் நடை. நேரில் பேசுவது போன்ற மொழி.
அவர் எழுதிய தமிழைப் பார்த்துவிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதியதை யாரோ உயிர்ப்புடன் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று பலர் நினைத்தனர். நானும்தான். பின்னர் அவரது கட்டுரைகளைப் பதிப்பித்த கலைமகள் பிரசுராலயத்தாரும் ஆசிரியர் கி.வா.ஜவும் அது சாஸ்த்திரியின் சொந்த மொழிநடை என உறுதி செய்தனர்.
புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பகுதியை அடுத்து ஒரிஜினல் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கொடுக்கிறோம்
1944 ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘மீண்டும் வாழ்ந்தால்’ நூலை கலைமகள் பிரசுராலயம் வெளியிட்டது. பதிப்பகத்தார் எழுதிய பதிப்புரையில் இருந்து இது குறித்த சில வரிகள்:
“மஹாகனம் சாஸ்த்திரியார் முதன்முதலில் தமிழில் எழுதியபோது தமிழ்நாட்டார் வியப்பில் மூழ்கினர். சிலருக்குச் சந்தேகம்கூட ஏற்பட்டது. ‘சாஸ்த்திரிகள் ஆங்கிலத்தில் எழுதியதை யாரோ தமிழ்ப்படுத்தியது’ என்று எண்ணினார்கள். நல்லவேளையாக, சாஸ்த்திரியார் தமிழில் பல கட்டுரைகள் எழுதினார்கள். சுயசரிதக் குறிப்புகளையே எழுதினார்கள். பல நூலறிவும் உலக அனுபவமும் தமிழன்பும் உடைய அவர்களுடைய எழுத்தில் அழகு ததும்பி நிற்பது ஆச்சரியமா என்ன!”
மேலும் படிக்க: பித்தளைமாத்து ரகசியம் உடைக்கும் ’பரண்’
ஆங்கில சாஸ்த்திரிகள் அமர்க்களத் தமிழில் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில சுவைக்கட்டிகளை இங்கு தருகிறேன்.
Read in : English