Read in : English
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன.
பழைய பாட்டி கால பாத்திரங்கள், உடைந்த ஈஸிசேர். இரண்டு கால் உள்ள முக்காலி. கிழிந்த கல்யாண ஜமக்காளம், வீட்டில் யாரோ என்றோ காலை உடைத்துக் கொண்டபோது வாங்கிய வாக்கர், ஒட்டடை படிந்த ஊறுகாய் ஜாடிகள், வீடியோகேம் காலத்தால் தூக்கி எறியப்பட்ட பல்லாங்குழி. இப்படியாகக் காலம் கழித்த பொருள்களின் கிடங்குதான் பரண்.
இந்த பரண் ஓரத்தில் ஒரு தாத்தா கால டிரங்க் பெட்டி. உள்ளே பக்கங்கள் பழுத்து காதுகள் மடிந்து உடையும் அந்தக்காலப் புத்தகங்கள். ராமபாணப் பூச்சிகளின் வேட்டைக்காடு. இந்த புத்தகக்கட்டுகளிடையே 1950க்கும் முந்தைய பல சுவாரஸ்யமான புத்தகங்கள். அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பகுதியை அடுத்து ஒரிஜினல் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கொடுக்கிறோம்.
பூலோக ரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம் !!
நீங்கள் “பித்தளைமாத்து” என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மாட்டீர்கள்! அப்படிக் கேள்விப்பட உங்களுக்கு 70 வயதாவது ஆகியிருக்க வேண்டும். 1950-60களில் சென்னை ஜார்ஜ்டௌனின் பிராட்வே பஸ்ஸ்டாண்ட், சென்ட்ரல் ரயில் நிலையம் இவையெல்லாம் மேற்சொன்ன பித்தளைமாத்தின் மூலஸ்தானம். பித்தளைமாத்து என்பது ஒரு “டகிள்பாஜி” வேலை. இது கொஞ்சம் பழைய பிரயோகம்.
பித்தளைமாத்து என்பது ஒரு “டகிள்பாஜி” வேலை. இன்றைய பாஷையில் சொன்னால், அது “வுட்டாலங்கடி” வேலை.
இன்றைய பாஷையில் சொன்னால், அது “வுட்டாலங்கடி” வேலை. புரியவில்லையா? ஏமாற்று வேலை என்பதன் மாற்றுவார்த்தைகள் இவை. அதுவும் பித்தளைமாத்து அந்தநாள் சென்னை நகர கில்லாடிகளின் பல்வேறு மோசடிகளில் ஒன்று. பித்தளைமாத்து மோசடியில் அந்தக்காலத்தில் முக்கியமாக மாட்டுபவர்கள் ஆந்திராக்காரர்கள்தான். உள்ளூர் ஆட்கள் அல்ல.
சந்தனம் பூசிய மொட்டைத்தலை, கணுக்காலுக்கு மேல் ஏறிய ஆந்திரக்கட்டு வேஷ்டி, அழுக்குச்சட்டை, துண்டுகளுடன் வரும் ஆந்திரப் பிரயாணிகள்தான் பித்தளைமாத்து கும்பலின் குறி. அன்று ஆந்திரப் பயணிகளில் பெரும்பாலோர், கிராமங்களில் இருந்து வருபவர்கள். அவர்கள் வருவது திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனத்திற்குத்தான் என்றாலும், சென்னைக்கு இன்னொரு தரிசனத்திற்காகவும் வருவார்கள். அது, அன்றைய தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்.டிராமாராவின் வீடு.
மேலும் படிக்க: டெட் எண்ட்: இறந்தவர்கள் சொல்லும் கதை
சரியாகச் சொன்னால் அவர்களுக்கு என்.டி.ஆர் சூப்பர்ஸ்டார் அல்ல, சூப்பர்காட்(super god). அன்று ஆந்திர தியேட்டர்களின் திரையில் என்.டி.ஆர் தோன்றும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு கற்பூரம் காட்டி சாமி ஆடுவர். வரலாற்றின் மாறாத, தீராத அசட்டுத்தனங்களில் நமது வெகுஜனங்களின் ரசிகர்மன்றங்கள் முதல் இடத்தைப் பிடிப்பவை.
இப்படியான ஆந்திர நாட்டுப்புற அப்பாவி, அசட்டு ஜனங்களின் வருகைக்காகவே காத்திருந்தது சென்னை பித்தளைமாத்து கும்பல்கள். பித்தளைமாத்துகளின் “மோடஸ்ஓபெராண்டி” ரொம்ப எளிமையானது; ஆனால் வசீகரமானது. சாதாரண மனிதனின் ஆசையைத் தூண்டி அவனை வீழ்த்துவது.
இந்த கில்லாடி கும்பலில் மூன்று அல்லது நான்கு பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். தெலுங்கை ஒரிஜினல் தெலுங்கர்கள் போல் பேசுவது இவர்களது விசேஷ திறமை. “நிலாவெளிச்சத்தில ஏமிராபயம்” என்கிற கலப்பட மெட்ராஸ் தெலுங்கல்ல அது; ஒரிஜினல் விஜயவாடா தெலுங்கு. மொட்டை தலையைப் பார்த்தார்களோ இல்லையோ, உடனே ஒருவர் அவர்களுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே நடந்து வருவார். மற்றொருவர் இந்த கூட்டத்துக்கு 15, 20 அடி முன்பாக நடந்து போவார்; யாரும் பார்க்காதபோது தங்கம் போல் பாலிஷ் செய்த ஒரு பித்தளை சங்கிலி உள்ள காகித பொட்டலத்தைத் தரையில் நழுவவிடுவார்.
ஆந்திரர்களுடன் பேசிக்கொண்டே வருபவர் சட்டென்று வேகமாக முன்னால் ஓடி கீழே கிடக்கும் பொட்டலத்தை எடுப்பார். மொத்த ஆந்திரர்களும் அவர் தரையிலிருந்து என்ன எடுத்தார் என்பதைப் பார்க்க ஆவலுடன் வருவார்கள். உடனே நம்ப ஆள், எல்லோரும் நன்றாகப் பார்க்கும்படி பொட்டலத்தை அவிழ்ப்பார். உள்ளே ரோஸ் கலர் “டிஷ்யூ” பேப்பரில் இன்னொரு பொட்டலம் இருக்கும். எல்லோர் கண்களும் ஆவலுடன் கவனிக்கும். உள்ளே ஒரு தங்கச்சங்கிலி உச்சிவெயிலில் பளபளவென்று மின்னும். பக்தி சென்டிமென்டைத் தூண்ட பித்தளையாலான அந்த சங்கிலியுடன் ஒரு ஏழுமலையான் டாலர்.
பித்தளைமாத்துகளின் “மோடஸ் ஓபெராண்டி” ரொம்ப எளிமையானது; ஆனால் வசீகரமானது. சாதாரண மனிதனின் ஆசையைத் தூண்டி அவனை வீழ்த்துவது
அதோடு ஒரு பில்இருக்கும். அதில் பத்து பவுன் தங்கச்சங்கிலி என்றும், விலை ரூபாய் 5,000 என்றும் (தோராயமாக… அன்றைய விலை தெரியவில்லை) இருக்கும். பில்லை அந்த ஆந்திரர்களிடம் காட்டி அவர்களையே படிக்கச் சொல்லுவார். உடனே “டிராமா” ஆரம்பிக்கும். “ஆஹா! எவ்வளவு? பத்து பவுனா? யாரோ போட்டுட்டுப் போயிட்டாங்க” என்று உச்சுக் கொட்டுவார், வருத்தப்படுவார், அதிசயப்படுவார், ஆச்சர்யப்படுவார். நடிப்பிலும் என்.டி.ஆர் தோற்றார்.
“பாருங்க ஐயா, இந்த தங்கச்சங்கிலி எனக்கு கிடைச்சது அதிர்ஷ்டம்தான். எனக்கு பணம் இப்போ தேவையா இருக்கு, ஆனா பாருங்க…. இந்த சங்கிலியை எங்கும் விற்க முடியாது. என் மாதிரி சாதாரண ஆளு வித்தா சந்தேகப்படுவாங்க இல்ல? நீங்கதான் பார்த்தீங்களே! நான் தெருவில் இருந்துதானே எடுத்தேன்? நான் எங்கிருந்தோ திருடிட்டு வரேன்னு நினைப்பாங்க. அடுத்தது, போலீசுக்கு போவாங்க, எதுக்கு வம்பு? நீங்க யாராவது பாதி விலைக்கு வாங்கிக்கோங்க” என்று மனித மனங்களின் ஆசையைக் கிளறுவார்.
மேலும் படிக்க: சல்மான் ருஷ்டி: மாயமும் யதார்த்தமும்
உடனே, அவர்களில் நாலைந்து பேர் கூடிக்கூடிப் பேசுவார்கள், குறிப்பாக பெண்கள். கடைசியில் பணம் இருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து பாதிப்பணத்தை கொடுத்து வாங்குவார்கள். ‘பத்திரம், பத்திரம்’ என்று எச்சரித்துக்கொண்டு நம்மாள் பணத்தோடு நழுவிவிடுவார்! இப்படி தங்கள் விசேஷபாணியில் ஏற்கனவே மொட்டையாக இருந்தவர்களை மொட்டை அடித்தார்கள்.
அன்று ’மோசடி கண்ணி வெடிகள் விதைத்த நிலம்’ போல் இருந்தது சென்னை மாநகரின் மூர் மார்கெட். உள்ளூர் ஆட்களே ஏமாந்தால், ’அரோகரா..’ ஆகிவிடுவார்கள். தள்ளுவண்டிகளில் லோக்கல் குளிர்பானங்கள் தாகத்தோடு வருபவர்களின் ஆசையைத் தூண்டும். விலை கேட்டால், ஒன்று-25 பைசா என்பார்கள். குடித்து முடித்ததும் ஒரு ரூபாய் 25 பைசா என்பார்கள். இந்த மாதிரி வுட்டாலங்கடி வேலைகளின் வேட்டைக்காடு மூர் மார்கெட். இது போல அன்றைய சென்னை நகரில் பல்வேறு துறைகளில் பல்வேறு மோசடிகள்!
இதிலெல்லாம் அடிபட்ட அனுபவஸ்தர் ஒருவர் எழுதிய புத்தகம்தான் “பூலோக ரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம்”.
அன்று என்னென்ன இடத்தில் எப்படியெல்லாம் மோசடி செய்தார்கள் என்ற தகவல்களைத் தொகுத்து 2 பாகமாக எழுதிய எச்சரிக்கை ‘மானுவல்’ இது.
உதாரணத்திற்கு அட்டவணையையும் ஒரு மோசடி சாம்பிள் பகுதியையும் தந்துள்ளேன். அட்டவணையைப் பார்த்தாலே, வடிவேல் சொன்னதைப்போல் “இப்பவே கண்ணைக் கட்டுதே” என்றிருக்கும்!
Read in : English