Read in : English
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒருநாள் சென்றிருந்தோம்; கோவிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். கோவிலுக்கு இடப்புறம் முள்புதரில், இரண்டு சிலைகள் கிடந்தன. அந்த இடம், புத்தர் தோட்டம் என அழைக்கப்பட்டது. அங்கிருந்த சிலை ஒன்றின் தலை உடைக்கப்பட்டிருந்தது. அவை, புத்தர் சிலைகள். அமர்ந்த நிலையில் இருந்தன.
ஒன்று மிகவும் கம்பீரமாக, ஐந்தரை அடி உயரத்தில் இருந்தது. ஒரே கல்லில் இருபுறம் முகம் செதுக்கப்பட்டிருந்தது. மிகவும் அபூர்வ சிலை. சோழர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பல நாடுகளிலிருந்தும் பௌத்த அறிஞர்களும், ஆர்வலர்களும் அந்தச் சிலையைக் காண அடிக்கடி வருவதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
கோவிலின் முன்புறம், ஒரு சமண வழிபாட்டிடம் உள்ளது. அதில் மிகவும் பிரம்மாண்டமான மகாவீரர் சிலை ஒன்று உள்ளது. அதை ஒட்டி பௌத்த சமண ஆய்வு மையம் என்ற அமைப்பும் இருந்தது. பௌத்தம், சமணம் தொடர்பான புத்தகங்கள் சேகரித்துவைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் பௌத்த, சமண எச்சங்கள் குறித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
கேட்பாரற்றுக் கிடந்த அந்தச் சிலைகள் குறித்துச் சில தரவுகளையும் அவர் சொன்னார். ஒரு வாரம் கடந்த பின்னே, 2003 நவம்பர் 26 அன்று காலை ஒரு தகவல் கிடைத்தது. சிறப்பு வாய்ந்த ஆர்ப்பாக்கம் கிராம புத்தர் சிலையைக் காணவில்லை என்று கிராம மக்கள் தகவல் தெரிவித்திருந்தனர். பெரும் கவலையை வெளிப்படுத்தினர்.
கோவிலுக்கு இடப்புறம் முள்புதரில், இரண்டு சிலைகள் கிடந்தன. அந்த இடம், புத்தர் தோட்டம் என அழைக்கப்பட்டது. அங்கிருந்த சிலை ஒன்றின் தலை உடைக்கப்பட்டிருந்தது. அவை, புத்தர் சிலைகள். அமர்ந்த நிலையில் இருந்தன
சிலை இல்லாத வெறுமை மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. புதரில் கேட்பாரற்றுக் கிடந்தபோது, அதற்கு மதிப்பு ஏதும் இருந்திருக்கவில்லை. காணாமல்போனதும் அந்தச் சிலை மீதான ஈர்ப்பு அதிகரித்திருந்தது.
அந்த ஊரில் பௌத்த சமயத்தைப் பின்பற்றுவோர் யாரும் இல்லை. சமணத்தைப் பின்பற்றும் சிலர் இருந்தனர். புத்தர் சிலை மீது ஊர் மக்களுக்கு இருந்த ஆர்வம் விவரிக்க இயலாதது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
ஆர்ப்பாக்கம் ஊராட்சியின் அப்போதைய தலைவர், வருவாய்த்துறை அதிகாரி, போலீசார் எனப் பல தரப்பிலும் தகவல் சேகரித்தேன். ஆர்ப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்தப் பகுதியில் பணியாற்றும் என்.ஜி.ஒ., அமைப்பு ஒன்றுக்குச் சிலை கடத்தலில் தொடர்பு இருக்கலாம் எனக் கிராம மக்கள் ஐயமெழுப்பினர். கடத்தல் தொடர்பான விசாரணையில் உள்ளூர் போலீசார் அக்கறை காட்டவில்லை. அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் புத்த, சமண ஸ்தலங்கள்
சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்
சில நாள்களுக்குப் பின், வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிய ஆர்ப்பாக்கம் கிராமத்துக்கு மீண்டும் சென்றிருந்தேன். ஏற்கெனவே தகவல் தந்தவர்களைச் சந்தித்து, வழக்கின் முன்னேற்றம் குறித்துக் கேட்டேன். அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. அந்த ஊரைச் சேர்ந்த பௌத்த, சமண ஆய்வாளரையும் சந்திக்கச் சென்றேன்.
வீட்டுக் கதவைத் தட்டியபோது, ஒருவர் திறந்தார். விவரத்தைக் கூறி, சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். கதவை மூடியபடி உள்ளே சென்றவர் நீண்ட நேரம் தகவல் எதையும் தரவில்லை. தெருவில் நின்றுகொண்டிருந்தேன்.
நீண்ட காத்திருப்புக்குப் பின் ஆய்வாளர் வெளியே வந்தார். முன் அறிமுகம் இல்லாதவர் போல் நடந்துகொண்டார். எனவே, மீண்டும் என்னை அறிமுகப்படுத்தியபடி, விவரங்கள் கேட்டேன்.
2003 நவம்பர் 26 அன்று காலை ஒரு தகவல் கிடைத்தது. சிறப்பு வாய்ந்த ஆர்ப்பாக்கம் கிராம புத்தர் சிலையைக் காணவில்லை என்று கிராம மக்கள் தகவல் தெரிவித்திருந்தனர். பெரும் கவலையை வெளிப்படுத்தினர்
புத்தர் சிலை கடத்தல் விவகாரம் குறித்து உரையாடலை நகர்த்தினேன். மிகுந்த கோபத்துடன், ‘புத்தர் சிலை தொடர்பாக என்னைவிட அவனுக்கு (ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்) அதிகம் தெரியுமா… செய்தியில் முதலில் அவன் பெயரைப் போட்டிருந்தாய்… நீயும் அவனும் ஒரே சாதியா…’ என்று தொடங்கி, சாதி இழிவு மொழியையும், வசவுகளையும் கொட்டினார்.
சிரித்துக்கொண்டே, ‘பத்திரிகையில் செய்தி எழுதும் தொழில் செய்றேன் ஐயா… தகவலுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறேன்… சாதி பாத்து கருத்துக் கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை…’ என்றேன்.
கடும் ஆவேசம் அடைந்தவராக, ‘நக்கல் பண்றியா…’ எனத் தொடங்கி மீண்டும் வசவுகளைத் தொடர்ந்தார். அவரது ஆவேசம் அடங்கட்டும் என்று காத்திருந்தேன். வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்துக் கேட்டு அறிந்த பின் விடைபெற்றேன்.
விசாரணையில் தொய்வு இருந்ததால், தமிழகச் சிலை கடத்தல் பிரிவு உயர் அதிகாரிகளிடம், ஆர்ப்பாக்கம் புத்தர் சிலை தொடர்பாகத் தெரிவித்தேன். புத்தவேடு தியான புத்தர் திருமேனி திருத்தலம் அறக்கட்டளைத் தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான போதி தேவவரம், அந்தச் சிலையின் பாரம்பரியம், பண்பாட்டு முக்கியத்துவத்தைக் கூறி, தேடிக் கண்டுபிடித்து, ஆர்ப்பாக்கம் கிராமத்துக்குக் கொண்டு வர, வேண்டுகோள் விடுத்தார்.
சில நாள்களுக்குப் பின், துப்பு துலக்க முடியாததால் வழக்கை மூடிவிட்டதாக ஆர்ப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளிடம், அந்தப் புத்தர் சிலையின் பண்பாட்டுத் தொன்மை குறித்து விவரித்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டினேன். சமூக ஆர்வலரும் புத்தவேடு தியான புத்தர் திருமேனி திருத்தலம் அறக்கட்டளை தலைவருமான போதி தேவவரம், காஞ்சிபுரம் ஆட்சியரை நேரில் சந்தித்து, சிலையை மீட்கக் கோரிக்கை மனு கொடுத்தார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அப்போதைய ஐ.ஜி.யிடமும் நடவடிக்கை கோரி மனு கொடுத்திருந்தார்.
சுமார் இருபது ஆண்டுகளாகிவிட்டது. தமிழக அறிவுப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த அந்தப் புத்தர் சிலை, அமெரிக்காவில், பழங்காலப் பொருள்களை விற்கும் கிடங்கில் இருப்பதாக, 2017இல் கண்டறியப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த கபூர் அந்தச் சிற்பக் கூடத்தை நடத்தி வந்தார். அவர் வசம் இருந்த சிலையை அமெரிக்க ஹோம்லாண்ட் செக்யூரிட்டி படை கண்டுபிடித்தது.
அந்தப் புத்தர் சிலை அமெரிக்காவில், பழங்காலப் பொருள்களை விற்கும் கிடங்கில் இருப்பதாக, 2017இல் கண்டறியப்பட்டது. அந்தச் சிலையை மீட்டு ஆர்ப்பாக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும் என புத்தவேடு தியான புத்தர் திருமேனி திருத்தலம் அறக்கட்டளை தலைவர் போதி தேவவரம் வலியுறுத்தியுள்ளார்
அந்தச் சிலையை மீட்க, தமிழகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது அந்தச் சிலை, அமெரிக்க விசாரணை அமைப்பிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சிலையை மீட்டு ஆர்ப்பாக்கத்துக்குக் கொண்டு வர முயல வேண்டும் என புத்தவேடு தியான புத்தர் திருமேனி திருத்தலம் அறக்கட்டளை தலைவர் போதி தேவவரம் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறும் போது, ‘அமெரிக்காவில் உள்ள புத்தர் சிலை, ஆர்ப்பாக்கம் கிராமத்தில் இருந்ததுதான் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அதை நமது பாரம்பரிய பெருமையாகக் கருதி மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
அமெரிக்காவில் கிடக்கும் சிலை காஞ்சிபுரத்துக்குக் கொண்டுவரப்பட்டால் ஆர்ப்பாக்கம் கிராம மக்கள் மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Read in : English