Read in : English
தனித்துவத்துடன் வாழும் விருப்பம் எல்லாருக்கும் உண்டு. ஏதாவது தனித்துவத்தை வாழ்வில் கொண்டிராதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால், பிறரைக் கவரும் வண்ணம் தனித்துவத்துடன் செயல்படுவோரைக் காண்பது அரிது. பிறரைக் கவரும் மனிதராக உருவாவதற்கு ஆர்வம், விடாமுயற்சியுடனான பயிற்சி இரண்டும் மிக அவசியம். இடைவிடாத பயிற்சி சில ஒழுங்கு முறைகளை உருவாக்கும்.
அதை விடாமல் கடைபிடித்தால் தனித்துவம் உருவாகும். மிகச் சாதாரணமாகக் கருதப்படும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தினால்கூட, வாழ்வில் தனி முத்திரையைப் பதித்துவிட முடியும். அப்படியான முத்திரையைப் பதித்து சாதித்திருப்பவர் சின்னசாமி பரசுராமன். சென்னை, ஆலந்துார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பகுதியில் இவரது சேவையை அறியாதவர் இல்லை. பிற மொழிக் கலப்பின்றித் தனித் தமிழில் இனிமையாக உரையாடுவது இவரது தனித்துவம். இவரது அடையாளமே, தனித்தமிழ் உச்சரிப்புதான்.
வட மாநிலத்தவர் அணியும் கம்பீரமான உடையை அணிவார். எந்தச் சூழ்நிலையிலும் இனிமையான உபசரிப்பை வழங்கத் தவறுவதில்லை. அன்றாடம் கடைபிடிப்பதால் இவை இவரது தனித்துவப் பண்புகளாகிவிட்டன. இதுவே, இவர்பால் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது.
ஒருமுறை அவரைச் சந்தித்தால், அழிக்கவே முடியாத அளவு நினைவில் பதிந்துவிடுவார். உரையாடலில், தனித்தமிழை உரிய முறையில் உச்சரித்துக் கவர்ந்துவிடுவார். உடன் உரையாடுபவரை, தனித்தமிழ் வளையத்துக்குள் கொண்டு வந்துவிடும் ஆற்றலும் இவரிடம் உண்டு.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே விழுதாவூர் கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இடைநிலைக் கல்வி அதாவது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கற்றவர். கற்றலில் காட்டிய ஈடுபாட்டால், ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தாய்மொழியைப் பிழையின்றிப் பேசத் தூண்டிய தமிழாசிரியர்களை, நினைவுகூரும்போது, நன்றிப் பெருக்கால் இவரது கண்களில் நீர் கசியும்.
ஒருமுறை சின்னசாமி பரசுராமனைச் சந்தித்தால், அழிக்கவே முடியாத அளவு நினைவில் பதிந்துவிடுவார். உரையாடலில், தனித்தமிழை உரிய முறையில் உச்சரித்துக் கவர்ந்துவிடுவார்.
தந்தை மறைவால் குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் கல்வியைத் தொடர முடியவில்லை. இந்நிலையில், கிடைத்த பணிகளைச் செய்துவந்தார் பரசுராமன். அப்போது, நூல்களையும் இதழ்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். திராவிட இயக்கம் மீதிருந்த ஈடுபாட்டால், அந்தக் கருத்துகளைத் தாங்கிவந்த இதழ்களைத் தவறாமல் வாசிப்பார். தி.மு.க., தலைவராக இருந்த அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களையும், கட்டுரைகளையும் ஆர்வத்துடன் வாசித்துவந்தார்.
மேலும் படிக்க:
சாசனம்: தொல்லியல் வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களை இணைக்கும் பாலம்!
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு: 50 ஆண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்!
வாசிப்பு, அவரைப் புதிய ஒழுங்குக்குள் கொண்டுவந்தது. புத்தகம், இதழ்களில் வாசித்த சொற்களை, உரையாடல்களில் பயன்படுத்தினார். அதுவே, பிற மொழி கலவாமல், தாய்மொழியில் பேசும் திறனை வளர்த்தது. அது, தனித்துவம் மிக்க வாழ்க்கையாகவும் அமைந்துவிட்டது.
தமிழ்ச் சொற்களைத் தெளிவாக உச்சரித்துப் பேசும் வழக்கத்தை, 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைபிடித்து வருகிறார் பரசுராமன். இதை, மொழி மீதான வெறி என்று மதிப்பிட முடியாது.
இது பற்றிக் கேட்டபோது, ‘எனக்குத் தெரிந்தது தமிழ் மொழி மட்டுமே. அது என் தாய்மொழியும் கூட… அதில் உள்ள சொற்களைச் சரியாக உச்சரிக்கும் போது நெகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகிறேன். எனவே, தமிழ்ச் சொற்களைத் தேடிக் கண்டறிந்து இனிமை பொங்க உரையாடி வருகிறேன்…’என்றார்.
தமிழ் மொழித்திறனை வளர்த்துக்கொண்ட அனுபவத்தை, இன்மதி.காம் இணைய இதழுக்காகப் பகிர்ந்துகொண்டார். அவருடன் நடத்திய உரையாடல்.
கேள்வி: உங்கள் தொடக்கக் கல்வியை எங்கே எப்படிக் கற்றீர்கள்?
பரசுராமன்: சொந்த ஊரில், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். தமிழாசிரியர்கள் தூண்டுதலால், மொழிக் கல்வியில் ஆர்வம் காட்டினேன். இதைப் பாராட்டும் விதமாகத் தமிழாசிரியர் அம்பலவாணன், தினமும் வீட்டிலிருந்து எனக்கும் சேர்த்து மதிய உணவு எடுத்து வருவார். மொழிக் கல்வியுடன், உணவும் தந்து வளர்த்தார். தந்தை மறைவால், கல்வியைத் தொடர முடியவில்லை.
கேள்வி: தனித்தமிழில் உரையாடும் வழக்கத்தை எப்போதிலிருந்து கடைபிடிக்கிறீர்கள்…
பரசுராமன்: இடைநிலைக் கல்வி கற்ற காலத்தில் இந்தப் பழக்கம் தொடங்கியது. தொடர்ந்து திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால், அந்தக் கருத்தைத் தாங்கி வரும் வெளியீடு, இதழ்களில் அண்ணாவின் கட்டுரைகளை வாசிப்பேன். அவற்றில் கிடைத்த சொற்களைக் கொண்டு பிறமொழி சொல் கலக்காமல் பேசிப் பழகினேன். அதை அன்றாடம் கடைபிடிக்க உறுதி செய்து கொள்வேன்.
பொருள் புரியாத சொற்களுக்கு, அகராதியில் விளக்கத்தைக் கண்டடைவேன். அவற்றை உரையாடல்களில் பயன்படுத்துவேன். இன்றும் நூல் வாசிப்பதை அன்றாடச் செயலாகத் தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.
தமிழ்ச் சொற்களைத் தெளிவாக உச்சரித்துப் பேசும் வழக்கத்தை, 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைபிடித்து வருகிறார் பரசுராமன். இதை, மொழி மீதான வெறி என்று மதிப்பிட முடியாது.
கேள்வி: தமிழ் பல வட்டார உச்சரிப்புகளை உள்ளடக்கியதாயிற்றே.
பரசுராமன்: உண்மைதான். நெல்லை, குமரி, மதுரை, கொங்கு, தர்மபுரி, வேலூர், கடலூர் என, வட்டாரரீதியாகத் தமிழ் மொழி பேச்சில் புதிய அழகியல்களை கொண்டது. அந்தந்த வட்டாரத்தில் பேசும் சொற்களைக் கேட்கும்போது பெரும் மகிழ்ச்சி கொள்வேன்.
அந்தச் சொற்களை அறிவதற்காகவே, கோயம்பேடு பேருந்து நிறுத்தம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் என, பல ஊர்ப் பயணிகள் வரும் பகுதிகளுக்கு அடிக்கடி செல்கிறேன். அங்கு நடக்கும் உரையாடலைக் கவனிக்கிறேன். நெகிழ்வான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறேன்.
கேள்வி: உங்களுக்கு ஏன் மொழி மீது இவ்வளவு ஈடுபாடு?
பரசுராமன்: என் தந்தை கல்வி அறிவு பெறாதவர். நான் இடைநிலை வரை மட்டும் கற்றவன். என் பிள்ளைகள் உயர்கல்வி கற்றவர்கள். தகவல் தொடர்புக்கு, தாய்மொழியான தமிழை மட்டுமே எனக்குப் பயன்படுத்தத் தெரியும். அதை, மாசு, பிசிறு இல்லாமல் பயன்படுத்துகிறேன். இதை இந்த மொழிக்குச் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்.
மொழியைச் சரியாக உச்சரித்துப் பேசும்போது, விவரிக்க இயலாத உணர்வு எழுச்சி கொள்கிறேன். என்னுடன் உரையாடுவோர், இதைத் தனித்துவமாகப் பார்க்கின்றனர். என்னைப் புகழ்கின்றனர். பெருமைப்படுத்தும் விதமாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். தினமும், 15 பேருடனாவது, இது போன்ற அனுபவத்தைப் பெறுகிறேன். அவர்களின் புகழுரை எனக்குரியது அல்ல; இனிய தமிழ் மொழிக்கானது.
தமிழ் மொழியைத் தெளிவாக உச்சரித்துப் பேசும் பரசுராமன், விருந்தோம்பலிலும் தனித்துவம் கொண்டவர். பொது இடங்களில் இவரது உபசரிப்பைக் காண்போர், அவர்கள் வீட்டில் நடக்கும், விருந்து நிகழ்ச்சிகளில், விருந்தினர்களை உபசரிக்க இவரை அழைத்துச் சிறப்பிக்கின்றனர்.
Read in : English