Read in : English
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும்போது பயன்படுத்தப்படும் சொற்கள் அவதூறாகவோ, இழிவாகவோ, பேரவைக்கு ஒவ்வாததாகவோ, கண்ணியக் குறைவாகவோ இருந்தால் அதை நீக்கும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளது. அதுபோன்ற வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தும்போது, அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிடுவார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து, “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள்’ என்ற பெயரில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் பேரவையில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று தனியே எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் (Unparliamentary words) குறித்த கையேட்டை நாடாளுமன்ற செயலகம் தற்போது வெளியிட்டுள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழை காலக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டிருக்கும் இந்தக் கையேட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
சட்டப் பேரவை கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது பயன்படுத்தப்படும் சொற்கள் அவதூறாகவோ, இழிவாகவோ, பேரவைக்கு ஒவ்வாததாகவோ, கண்ணியக் குறைவாகவோ இருந்தால் அதை நீக்கும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளது
நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ உறுப்பினர்கள் பேசுவதை வைத்து அவர்கள் மீது யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, உறுப்பினர்கள் வரம்பற்ற சுதந்திரத்துடன் உரையாற்றும் உரிமை உடையவர்கள்.
அரசியலமைப்புச் சட்டம், சட்டமன்ற விதிகள் கூறும் கட்டுப்பாடுகளைத் தவிர வேறு கட்டுப்பாடு எதுவுமின்றி உறுப்பினர்கள் உரையாற்றலாம். அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு: கோட்டையிலிருந்து கலைவாணர் அரங்கம் வரை
மறுபடியும் ஒலிக்கும் மாநில சுயாட்சிக் குரல்!
அதேசமயம், ”விவாதத்தில் பயன்படுத்தப்பெற்ற சொற்கள் அவதூறாகவோ, இழிவாகவோ பேரவைக்கு ஒவ்வாததாகவோ, கண்ணியக் குறைவாகவோ, குற்றத்திற்கு உட்படுத்துவதாகவோ அல்லது விதிகளுக்குப் புறம்பாக முன் அனுமதி பெறாமல் பிற உறுப்பினர் மீது குற்றம் சுமத்துவதாகவோ அமைகின்றன என பேரவைத் தலைவர் கருதுவாரேயானால், அச்சொற்களை அல்லது நடவடிக்கைப் பகுதிகளைப் பேரவை நடவடிக்கைகள் பணித்துறை வெளியீட்டிலிருந்து நீக்குமாறு ஆணையிடலாம். அதன் காரணமாக அவசியமாகிற மாற்றங்களையும் அதில் செய்யுமாறு பணிக்கலாம்” என்று சட்டபேரவை விதிமுறைகள் (அத்தியாயம் 23) கூறுகின்றன.
“பேரவையில் அமைச்சரிடம் உறுப்பினர் கேள்வி எழுப்பும் போது, வாதங்கள், யூகங்கள், மைறுகமான குற்றச்சாட்டுகள், கேலிச் சொற்கள், அவதூறுக் கூற்றுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடாது.” (அத்தியாயம் 7).
‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள்’ புத்தகத்தின் 14வது அத்தியாயத்தில் ‘பொது நடைமுறை விதிகள்’ என்ற தலைப்பில், பேரவை உறுப்பினர்கள் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
· ஓர் உறுப்பினர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒழுங்கற்ற சொற்களாலோ அல்லது கூச்சல் அல்லது முறையற்ற வேறு வகைகளிலோ அவரை இடைமறித்தல் கூடாது.
·பேரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கவோ அல்லது வேறு வகையான ஒலிகளாலோ அல்லது வேறு வகையிலோ இடைமறிக்கக்கூடாது. மேலும் பேரவையில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போது நேர்முக வர்ணனைகள் செய்யக்கூடாது.
·உறுப்பினர்கள் அவையில் படிக்ககும்அறிக்கையில் இருக்க வேண்டிய பொருளுக்குத் தொடர்பு இல்லாத பொருளோ, அவதூறான வார்த்தைகளோ அல்லது தனிப்பட்ட குற்றசாட்டுகளோ அதில் இருக்கக்குடாது. தன்னடக்க முள்ள வரம்பு ஒழுங்குகளுக்கு உட்பட்ட மொழியில் அறிக்கை அமைந்திருக்க வேண்டும்.
·நாடாளுமன்றம் மற்ற மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவைகளின் செயல் அல்லது நடவடிக்கைகளைப் பற்றி புண்படுத்தும் சொற்கூறுகளைப் பயன்படுத்தக் கூடாது.
·பேரவைத் தலைவரின் அலுவலகத்தைப் பற்றியோ அல்லது பேரவைச் செயலகத்தைக் குறித்தோ எந்த வகையிலும் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது.
·நீதி விசாரணையில் இருக்கும் எப்பொருளின் மீதும் தம் கருத்தைச் சொல்லவோ, அப்பொருள் பற்றி குறிப்பிடவோ கூடாது.
·உறுப்பினர் எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது.
·நாடாளுமன்றம் மற்ற மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவைகளின் செயல் லல்து நடவடிக்கைகளைப் பற்றி புண்படுத்தும் சொற்கூறுகளைப் பயன்படுத்துதல் கூடாது.
· குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைப் பற்றியோ அல்லது நீதிமன்றம் ஒன்றின் நடத்தைக்குக் களங்கம் கற்பிக்கும் கவையில் பேசக்கூடாது.
·நாட்டுக்குக் கேடு விளைவிப்பதான, நாட்டுக்குத் துரோகம் விளைவிப்பதான அவதூறான அல்லது பேரவைக்கு ஒவ்வாத பயன்படுத்தக்கூடாத சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.
சட்டப்பேரவையில் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகள் என்று அவைத் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்ட சில சொற்களை தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் மா. சண்முக சுப்பிரமணியம் சட்டமன்ற நெறிமுறைகள் என்ற புத்தகத்தில் (1985) குறிப்பிட்டுள்ளார்
சட்டப்பேரவையில் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகள் என்று அவைத் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்ட சில சொற்களை தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் மா. சண்முக சுப்பிரமணியம் “சட்டமன்ற நெறிமுறைகள்’ என்ற புத்தகத்தில் (1985) குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம்:
- அடி ஆட்கள் என்று பிற கட்சியினரைக் குறிப்பிட்டுக் கூறுவது
- அடிமைப்புத்தி உள்ளவர்கள் என்று மாற்றுக் கட்சியினரைக் குறிப்பது
- அற்பத்தனமான, அவிசாரித்தனமான என்ற சொற்கள்
- பஜனைக் கூட்டம் என்று சட்டப்பேரவையை வர்ணிப்பது.
- பொம்மை ஆட்சி என்று அரசாங்கத்தை வர்ணிப்பது.
- Brute majority என்று பெரும்பான்மைக் கட்சியைக் கூறுவத
- பச்சோந்தி என்று உறுப்பினரைக் குறிப்பது.
- மட்டரகமான என்று பிற கட்சியைக் குறிப்பது.
- Disgraceful என்று அவையின் நடவடிக்கையை வர்ணிப்பது.
- அயோக்கியத்தனம் என்று மற்ற கட்சியின் செயலைக் குறிப்பது.
- என்ன யோக்கியதை இருக்கிறது என்று எதிர்க்கட்சியைக் கேட்பது
- Falsehood என்று பிற உறுப்பினர் உரையை வர்ணிப்பது
- பித்தலாட்டம் என்று பிறர் செயலைக் கூறுவது.
- காலித்தனம், காலைவாரிவிடுதல், கம்மனாட்டி: இச்சொற்களைப் பயன்படுத்தி பிற கட்சியினரைத் தாக்கிப் பேசுவதல்.
- கதை சொல்லுகிறார் என்றும் கதா காலாட்சேபம் என்றும் பிற உறுப்பினர் உரையை வர்ணிப்பது.
- கேவலமான என்று பிற கட்சியைக் குறிப்பது.
- காவடி தூக்குதல் என்று பிற கட்சியின் செயலை வர்ணிப்பது.
- கருங்காலி என்றும் கருநாகம் என்று பிறரைக் குறிப்பது.
- கில்லாடி என்று பிறரை வர்ணிப்பது.
- குழியில் விழுந்துவிட்டார் என்று பிற உறுப்பினரைக் கூறுவது.
- லாயக்கற்றவர்கள், பொய்யர்கள் என்று பிறரை வர்ணிப்பது.
- மக்குகள், மட்டரகமானவர்கள் என்று பிற கட்சியினரைக் கூறுவது.
- மார்வாரித்தனம் என்று அதிக வட்டி வாங்குவதைக் குறிப்பது.
- மிருகபலம் என்று பிறகட்சியின் பெரும்பான்மை பலத்தைக் கூறுதல்.
- முந்திரிக்கொட்டை என்று பிற உறுப்பினரைக் குறிப்பது.
- நாடகமாடுகிறார்கள் என்றும் நாடகம் நடத்துகிறார்கள் என்றும் பிறகட்சியின் செயலைக் குறிப்பது.
- நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்கள் என்று பிறர் உரையைக் குறிப்பது.
- Nonsense என்று பிறர் செயலைக் குறிப்பது.
- ஒப்பாரி வைக்கிறார்கள், நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்று பிறர் உரையைக் குறிப்பது.
- பாவிகள் என்றும் பேடிகள் என்றும் பிறரைக் குறிப்பது.
- ரௌடித்தனம் என்று பிற கட்சியின் செயலைக் குறிப்பது.
Read in : English