Read in : English
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் வன காப்பகத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்காக வனத்துறை முதன் முறையாக வாகன வசதியைச் செய்து தந்துள்ளது.
கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் இருளர் ,மலசர், காடர், மலமலசர், பதி மலசார், ஆதி வேடன் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மலைவாழ் பழங்குடியினர் மலைப்பகுதிகளில் 20 குடும்பங்களிலிருந்து 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
200 மீட்டர் உயரத்திலிருந்து 2500 மீட்டர் உயரம் வரையுள்ள மலைகளில் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் மலைவாழ் பழங்குடியினர் வசித்து வருவதால் அவர்களுடைய குழந்தைகள் பள்ளியில் படிப்பதற்கு ஒவ்வொரு நாளும் 12 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் வன காப்பகத்தின் பகுதிகளில் இருக்கக்கூடிய பழைய சர்க்கார்பதி -2, சர்க்கார்பதி-1 கோழிகமுத்தி, நாகர்ஊத்துபதி, இன்னும் பல மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகள் இருக்கின்றன. தற்போது புதிதாக பழைய சர்க்கார்பதி- 2 பகுதியிலிருந்து மாணவ மாணவிகள் பள்ளி செல்வதற்காக வனத்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. அவர்கள் வசிக்கக்கூடிய மலைப் பகுதிக்குச் சென்று மாணவ மாணவிகளை வண்டிகளில் ஏற்றி அவர்கள் படிக்கின்ற பள்ளியில் கொண்டு சென்று விடுவதும் மீண்டும் மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து அழைத்து வந்து அவர்களுடைய கிராமங்களில் விடுவதும் என்ற புதிய சேவையை வனத்துறை துவக்கியுள்ளது.
மலைப் பகுதியில் மாலை நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் வனத்துறை அளித்துள்ள இந்த வாகன வசதி மாணவ, மாணவிகள் பள்ளி சென்று வர பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது.
மேலும் படிக்க:
மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்களின் பாரம்பரிய பௌர்ணமி இரவு!
தேங்கி கிடக்கும் அக்கிபிக்கிகள்
காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் தயாராக இருக்கக்கடிய மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் ஏறி ஒன்பது மணிக்குள் பள்ளிக்குச் சென்று விட முடிகிறது. மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்ததும் மாணவ மாணவிகள் அவர்களுடைய கிராமத்திற்கு மீண்டும் வந்து சேர முடிகிறது. மலைப் பகுதியில் மாலை நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் வனத்துறை அளித்துள்ள இந்த வாகன வசதி மாணவ, மாணவிகள் பள்ளி சென்று வர பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய சர்க்கார்பதி-2 கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் தற்போது 8, 9,10 ஆகிய வகுப்புகளில் படிக்கக்கூடிய 30 மாணவ மாணவியர் இந்த கிராமத்தில் இருந்து ஊராட்சி மேல்நிலை பள்ளிக்கு சென்று வருகின்றனர் .
“பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் 12 கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். மீண்டும் மாலை நேரங்களில் பள்ளி முடிந்ததும் மாணவ மாணவிகள் 12 கிலோ மீட்டர் நடந்து வந்துதான் தங்களது கிராமத்துக்கு வந்து சேர முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. அப்போது, குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர பெற்றோர்கள் சேர்ந்து செல்வது வழக்கம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்து தரும்படி இப்பகுதி மலை வாழ் மக்களின் கோரி’கையை ஏற்று வனத்துறை அதிகாரி புகழேந்தி, இந்த வாகன வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவரான மூப்பன் தெரிவித்தார். “கிராமத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால் அவர்களைச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதற்கு இந்த வாகன வசதி மிகவும் உதவியாக இருக்கும்” என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“எங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி குடிநீர் வசதி அனைத்தும் இருக்கிறது ஆனால் கழிப்பறை வசதி இல்லை. ஆண்கள் காலைக் கடன்களைக் கழிக்க வனப்பகுதிக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், குழந்தைகளுக்கும் குறிப்பாகப் பெண்களுக்கும் இது பெரிய பிரச்சினைதான். எங்களுக்கு கழிப்பறை வசதியை அரசு செய்து தர வேண்டும்” என்று மூப்பன் கேட்டுக்’ கொண்டார்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருக்கக்கூடிய மலைவாழ் பழங்குடியினர் கிராமத்திற்கு மேலும் இதேபோன்று 4, 5 வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறோம்.
“தமிழகத்தில் நாங்கள் எடுத்துள்ள இந்த முயற்சி முதல் முயற்சி. தமிழகத்தில் இருக்கக்கூடிய 30 மாவட்டங்களில் உள்ள மலைவாழ் பழங்குடியினருக்கு இதுவரை இதுபோன்ற வாகன வசதி யாரும் ஏற்படுத்தித் தரவில்லை ஆனால் கோவை மாவட்டத்தில் பழைய சர்க்கார்பதி என்கின்ற இந்த மலைவாழ் கிராமத்திற்கு எங்களால் முடிந்த வாகன வசதியை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம்” என்கிறார் ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் கணேசன்.
”மலைவாழ் மக்களுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும், படிப்பதற்காக குழந்தைகள் 10 கிலோ மீட்டர் 12 கிலோ மீட்டர் என நடந்தே சென்று படித்து வருவது மிகவும் மனதை பாதிக்கக்கூடிய செயலாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கோவையில் இருக்கின்ற பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இந்த வாகன வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம்.
இந்தத் திட்டம் வெற்றி அடைந்துள்ளதால் கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருக்கக்கூடிய மற்ற கிராமங்களுக்கும் இதேபோன்று 4, 5 வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறோம். அத்துடன், மலைவாழ் பழங்குடியின மக்களுக்காக கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சியை அளித்து வருகிறோம். இது அவர்கள் வருவாய் ஈட்டுவதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார் கணேசன்.
Read in : English