Read in : English
ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி தவிக்கையிலே உனக்கு தேரோட்டம் தேவையடா தியாகேசா என்று 1940களில் மேடைகளில் முழங்கிய கருணாநிதி தமிழக முதல்வரான பிறகு, 1948ஆம் ஆண்டிலிருந்து ஓடாமல் கிடந்த ஆசியாவின் மிகப் பெரிய தேரான திருவாரூர் ஆழித் தேரை மீண்டும் ஓட வைப்பதற்கு 1970இல் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதைப் பார்க்கும்போது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
1926இல் 10 மரச்சக்கரங்களைக் கொண்ட பிரமாண்டமான திருவாரூர் தேர் தீ விபத்தில் எரிந்து சாம்பலான நிலையில், 1930களில் அது மீண்டும் உருவாக்கப்பட்டபோது, 8 சக்கரங்களாகக் குறைக்கப்பட்டது. 1970களில் சிதிலமடைந்து கிடந்த தேர்ச்சக்கரங்களைப் புதுப்பித்து மீண்டும் தேரோட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் பரம்பரை அறங்காவலர் வடபாதிமங்கலம் வி.எஸ். தியாகராஜ முதலியார் கேட்டுக் கொண்டதை அடுத்து, பாதுகாப்பான தேரோட்டத்தை உறுதி செய்ய திருவாரூர் தேரை நவீனத் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்க நடவடிக்கை எடுத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
96 அடி உயரமும், அலங்காரத்துடன், 360 டன் எடையும் கொண்ட ஆழித்தேரை திருவாரூர் வீதிகளில் ஓட்டுவது என்பது சாதாரணமான காரியமல்ல. திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (பிஎச்இஎல்) நிறுவனம் மூலமாக இருபத்தி நாலரை அடி நீளமும் ஒன்றரை அடி உயரமும் கொண்ட இரும்பு அச்சுகளையும் 9 அடி விட்டமும் ஒன்றரை அடி அகலமும் உடைய 4 இரும்புச் சக்கரங்களைச் செய்ய வைத்தார். அத்துடன் தேரை நிறுத்துவதற்கு உதவும் வகையில் ஹைராலிக் பிரேக் தயாரிக்கப்பட்டு சக்கரங்களில் பொருத்தப்பட்டது. அத்துடன், அகலமான, உறுதியான தார் சாலை போடப்பட்டு தேர் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டது. அத்துடன் தேர் எளிதாக நகர்ந்து செல்வதற்கு உதவும் வகையில் தேரின் பின்புறம் இருந்து இரு சக்கரங்களையும் தள்ளும் வகையில் இரண்டு புல்டோசர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் தேரை இழுப்பவர்களின் சுமையைக் கணிசமாகக் குறைக்க முடிந்தது. தேர் வரும் வீதிகளில் குறுக்காக மின்சார வயர்கள் செல்லாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் ஏழு நாட்கள் நடந்த திருவாரூர் ஆழித் தேரோட்டம், ஒரே நாளில் காலையில் 7 மணிக்குத் தேரை இழுக்கத் தொடங்கினால், இரவு 7மணிக்குள் தேர் நிலைக்கு வந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டிலிருந்து ஓடாமல் கிடந்த ஆசியாவின் மிகப் பெரிய தேரான திருவாரூர் ஆழித் தேரை மீண்டும் ஓட வைப்பதற்கு 1970இல் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதைப் பார்க்கும்போது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
“ஹைடிராலிக் பிரேக் இருந்தாலும்கூட, அதைமட்டும் வைத்துக் கொண்டு, பிரமாண்டமான வடத்தை வைத்து சில ஆயிரம் பேர் இழுக்கும் தேரை சட்டென்று நிறுத்திவிட முடியாது. அதற்கு முட்டுக்கட்டைப்போடுவதும் அவசியம். சில ஊர்களில் உள்ள சிறிய தேர்களுக்கு பத்து இருபது முட்டுக்கட்டைகளைத் தயாராக வைத்திருந்தால் போதும். ஆனால், திருவாரூர் தேரோட்டத்தின்போது 500 முட்டுக்கட்டைகளாவது தயாராக எடுத்து வைத்துக் கொள்வோம். தேருக்கு முட்டுக்கட்டை போடுவது என்பது எளிதாக காரியம் அல்ல. எப்போதும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அனுபவத்தின் மூலம்தான் இது பழக்கத்துக்கு வரும். மூட்டுக் கட்டை போடுவதற்கு பழகுபவர் முதலில் சிறிய தேர்களில் செய்து பழக வேண்டும். நான் கூட திருச்செந்தூர் தேரில் முட்டுக்கட்டைப் போட்டு பழகிய பிறகுதான் திருவாரூர் தேருக்கு முட்டுக்கட்டைப் போட வந்தேன்” என்கிறார் திருவாரூர் தேரில் முட்டுக்கட்டைப் போடும் பணியைச் செய்து வரும் கனகசபாபதி (வயது 52). விவசாயம் செய்து வரும் அவர், தான் விரும்பி தன்னார்வப் பணியாக திருவாரூர் தேருக்கு முட்டுக்கட்டை போடும் செய்து வருவதாகக் கூறுகிறார்.
“முட்டுக்கட்டை போடுபவர்கள் தேரின் முன்புறம் உள்ள இரண்டு சக்கரங்களுக்கும் அருகே உட்பக்கத்தில் இருந்து கொண்டு முட்டுக் கட்டையைப் போட வேண்டும். தேர் சக்கரத்தின் இடது புறம் வடிவேலு கொத்தனாரின் மகன் சதீஷ் இருப்பார். நான் வலது புறம் இருப்பேன். தேர் ஓடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் குனிந்து கொண்டே கட்டையைப் போடுவோம். ஒருவர் வெளிப்புறம் இருந்து முட்டுக்கட்டைகளை எங்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருப்பார். எங்களது கைவிட்டு போன அந்த முட்டுக்கட்டைகளை மற்றொருவர் எடுத்துக் கொண்டே வருவார். தேர் சக்கரத்துக்கு நேர் எதிரே அருகில் யாரும் வந்துவிடக்கூடாது. 4ஆயிரம் பேர் இழுக்கும் தேரை, பின்னால் இருந்து இரண்டு புல்டோசர்கள் தள்ளிக் கொண்டும் வரும். எனவே, முட்டுக்கட்டை போடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். முட்டுக்கட்டை போட்டுத்தான் தேரை சரியாக நகர்த்த முடியும். வீதியில் தேர் திரும்பும் போதுதான் முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கும். இடது புறம், வலது புறம், அப்புறம் நடுவில் மூன்று பிரேக்குகள் இருக்கும். ஒவ்வொரு பிரேக்குக்கும் இரண்டு பேர் இருப்பார்கள். தேரை நிறுத்த வேண்டும் என்றால் பிரேக்கைப் போட்டால் மட்டும் நின்றுவிடாது. பிரேக் போட்டாலும்கூட, அதே நேரத்தில் எதிர்கட்டை போட வேண்டும். அப்போதுதான் தேரை நிறுத்த முடியும்” என்கிறார் அவர்.
“திருவாரூர் ஆழித்தேர் விதிகளில் திரும்புவதற்கு பல மணி நேரங்கள் ஆகும். 1982ஆம் ஆண்டில்தான் தேரை தெரு முனைகளில் திருப்புவதற்கு இரும்பு பிளேட்டுகளைப் பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தெருமுனைகளில் திரும்பும் இடத்தில் தரைச்சக்கரத்திற்கு முன்னால் எந்தப் பக்கம் திருப்ப வேண்டுமோ அந்தப் பக்கம் 11 பிளேட்டுகள் போடப்படும். இந்த பிளேட்டுகளில் கிரீசும் விளக்கெண்ணையும் பயன்படுத்தப்படும். இதனால், முட்டுக்கட்டை போட்டு நகர்த்தும்போது இந்த பிளேட்டுகளில் தேர் சக்கரம் சறுக்கிக் கொண்டே எளிதாகத் திரும்பிவிடும். இதனால் தெருமுனைகளில் திரும்புவதற்கு பல மணி நேரம் ஆவது தவிர்க்கப்பட்டுள்ளது” என்கிறார் கனகசபாபதி.
தேங்காய் நாரினால் செய்யப்பட்ட வடம் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது, 1999 முதல் நைலான் கயிறு பயன்படுத்தப்படுகிறது. தற்போது திருவாரூர் தேரோடும் வீதிகளில் சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது. அத்துடன் விதிகளின் திருப்பங்களில் இருந்த மின்சார வயர்கள் அகற்றப்பட்டு தரையில் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்தப் பகுதியில் முழுமையாக அண்டர்கிரவுண்ட் கேபிள் பதிக்க தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சமீபத்தில் செய்தி வந்துள்ளது. எனினும், திருவாரூர் பெரிய தேரைத் தொடர்ந்து வரும் நான்கு சிறிய தேர்களுக்கு ஹைராலிக் பிரேக் இதுவரை போடப்படவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பெரிய கோயில் போன்ற சில கோயில்களில் உள்ள தேர்களுக்கு இரும்புச் சக்கரங்களுடன் ஹைடிராலிக் பிரேக்குள் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பல கோயில்களின் தேர்களுக்கு பிஎச்இஎல் மூலம் இரும்புச் சக்கரங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பெரிய கோயில் போன்ற சில கோயில்களில் உள்ள தேர்களுக்கு இரும்புச் சக்கரங்களுடன் ஹைடிராலிக் பிரேக்குள் போடப்பட்டுள்ளன.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி அமராவது கோவியில் கார்த்திகை பிரமோத்சவத்தையொட்டி தேர்த் திருவிழா நடத்தப்படும் தேரை நிறுத்துவதற்கு 2012இல் பிஎச்இஎல் நிறுவனத்தின் மூலம் ஹைடிராலிக் பிரேக் அமைப்பு முறையைக் கொண்டு வந்துள்ளது. பிரேக்கை நிறுத்துவர் தேரின் முன்புறம் நகர்ந்து வருவார். அவரது கையில் உள்ள சுவிட்ஜ் போர்டை பயன்படுத்தி தேரை நிறுத்துவார். இந்த முறை, இங்கு நடைமுறையில் சாத்தியமா என்பதையும் ஆராய வேண்டும்.
இதுபோன்று அனைத்துத் தேர்களுக்கும் இரும்புச் சக்கரங்களும் ஹைடிராலிக் பிரேக்குகளும் போடுவதுடன், தேரோடும் சாலைகளை அகலப்படுத்தி உறுதியான சாலைகளுக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். அத்துடன் உயரத்தில் மின்சார கம்பிகள் செல்வதைத் தவிர்க்க அன்டர்கிரவுண்ட் கேபிள்கள் போடுவது குறித்தும், தேரோடும் நேரங்களில் மின்சார இணைப்புகளைத் துண்டிப்பது குறித்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேரோட்டம் நடைபெறுகிறது என்றால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிலையான செயல்பாட்டு முறைகளையும் தமிழக அரசு உருவாக்கி அது முறையாகக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் தேரோட்ட விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
Read in : English