Read in : English
நல்ல மழைக்கும், பயிர் விளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது போல், நன்னீர் ஏரிகளில நீர் இருப்புக்கும் மீன் வளத்துக்கும் தொடர்பு உள்ளது. அறுவடை காலத்தை மகிழ்ச்சியின் திருநாளாக வரவேற்கின்றனர் தமிழர்கள். இதற்காக பல விழாக்களை கொண்டாடுகின்றனர். பிரிகட்டும் விழா, எருது கட்டு விழா, புரவியெடுப்புத் திருவிழா, வைக்கோல் பிரி திருவிழா, மாம்பழ திருவிழா, புட்டுத்திருவிழா, வெற்றிலை பிரி திருவிழா, கலப்பை கட்டு விழா, பணியாரம் சுடும் விழா என, வண்ணமயமாக கொண்டாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தமிழகத்தில் மழை வளத்துடன் அதிக தொடர்புள்ள மற்றொன்று மீன்பிடி திருவிழா. பருவமழை தீவிரமடைந்தால், அந்த ஆண்டு கோடையில், மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு பெய்த பருவமழை, இந்த கோடையை கோலாகலமாக வரவேற்கிறது.
மழையால் கடந்த ஆண்டு பெரும்பாலான ஏரி, குளம், அணைகள் நிரம்பின. அந்த நீர் பாசனத்தில், விளைச்சல் பெருகியுள்ளது. பயிர் விளைச்சல் பெருகியுள்ளது போல், ஏரிகளில் மீன் வேட்டையும், கிராமப்புற மக்களை குதுாகலப்படுத்த துவங்கியுள்ளது.
கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கு பின், மதுரை, திருச்சி மாவட்ட கிராமங்களில் மீன்பிடி திருவிழா மார்ச் மாதம் முதலே கோலாகலமாக நடந்து வருகிறது.
தமிழக மாவட்டங்களில் ஏரி, குளம், கண்மாய்களில் மீன்பிடிக்கும் திருவிழாகள் தற்போது களைகட்டி வருகின்றன. கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கு பின், மதுரை, திருச்சி மாவட்ட கிராமங்களில் மீன்பிடி திருவிழா மார்ச் மாதம் முதலே கோலாகலமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உற்பத்தியாகி, திருச்சி, தஞ்சை மாவட்டம் வழியாக ஓடி கொள்ளிடம் பத்துகண் பாலத்தில் காவிரியில் கலக்கிறது ஆய்யாறு. நவம்பரில் பெய்த பருவமழைால் இதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வரும் தண்ணீர், முறையான பாசன தொடர் பாய்ச்சல் அமைப்பு மூலம், சிறு அணைக்கட்டு, ஏரி, குளங்களில் தேக்கப்படுகிறது.

மீன்வேட்டைக்கு கருவியுடன் உற்சாகமாக செல்லும் வாலிபர்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில், 18, முசிறி வட்டத்தில், 15 ஏரிகளை இந்த ஆற்று வெள்ளம் நிரப்புகிறது. இது தவிர, 21 சிறு பாசன அணைக்கட்டுகளும் இந்த ஆற்றுப்படுகையில் உள்ளன.
நீண்ட நாட்களுக்கு பின் மழை காரணமாக இந்த அணைகள், ஏரிகள் எல்லாம் முழுவதுமாக நிரம்பின. இதனால் இந்தப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீண்டும் அங்கு குடியேறினர். தேங்கியிருந்த நீரை பயன்படுத்தி, 4899 எக்டேர் நிலத்தில் விவசாயம் நடந்தது. விளைச்சல் அமோகமாக இருந்தது.
ஆற்றின் இருமருங்கிலும், அணைக்கட்டுகளும், ஏரிகளும் வரிசையாக உள்ளதால், அந்த பகுதி முழுதும் பல்லுயிர் வளம் பெருகியுள்ளது. வண்ணப்பறவைகள் நிலத்திலும் ஏரியிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. அந்த பகுதியில் சூழல் வளம் பெருகியுள்ளது.

திண்ணக்கோணம் கிராம ஏரியில், துண்டை வீசி மீன்பிடித்திருவிழாவை துவக்கி வைக்கும் கிராம தலைவர்.
ஏரிகளிலும், குளத்திலும் மீன் வளம் பல்கிப் பெருகியுள்ளது. இந்த வளத்தை பொதுவாக்கிப் பயன்படுத்தும் பண்பாடு, இந்த பகுதி கிராமங்களில் தொன்று தொட்டு நடைமுறையாக உள்ளது. அதாவது, கோடையில் குறிப்பிட்ட ஒரு நாளை குறிப்பிட்டு, கிராமவாசிகள் இணைந்து நீர்நிலையில் மீன்பிடி திருவிழா நடத்துகின்றனர். அன்று, ஊரே குளத்தில் குவிந்து மகிழ்ச்சி கரை புரளும்.
இதுபோன்ற கிராம மின்பிடி விழா, மதுரை, திருச்சி மாவட்டங்களில் தற்போது துவங்கியுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திண்ணக்கோணம் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா கடந்த வாரம் நடந்தது. கிராமத்தில் பாரம்பரியமாக பொறுப்பு வகிக்கும் கிராமத்தலைவர், மேல் துண்டை வீசி, மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தார். ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடு இன்றி மீன்பிடி திருவிழாவை கொண்டாடினர்.
இந்த விழா மிகவும் சுவாரசியமானது. குறிப்பிட்ட நேரத்தில், மீன் வேட்டைக்கு தேவையான கருவிகளுடன், நீர்நிலையில் இறங்குகின்றனர் கிராம மக்கள். ஊர் தலைவர், தலைக்கு மேல் துண்டை விசி, கொண்டாட்ட துவக்கத்தை அறிவிப்பார். சற்றும் தாமதிக்காமல், நீர்நிலையை கலக்கி, மீன் வேட்டையை துவக்குவர் மக்கள். அன்று முழுதும் அந்த நீர்நிலையில் வேட்டை நடக்கும். இதில் பங்கேற்க யாருக்கும் தடையில்லை. கிடைக்கும் மீன்களை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்கின்றனர். வேட்டையில் அதிக அளவு மீன்கள் கிடைத்தால், கருவாடாக்கி, கால்நடை தீவனத்துடன் கலந்து விடுகின்றனர்.
தின்னக்கோணம் கிராமப் பகுதியில், கிட்டத்தட்ட, 33 ஆண்டுகளுக்கு பின், மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்ததாக, அய்யாறு பாதுகாப்பு இயக்க தலைவர் மற்றும் நாட்டு விதைகளின் பாதுகாவலர் யோகநாதன் தெரிவித்தார்.
இந்த ஏரி, 15 ஆண்டுக்கு பின் முழுமையாக நிரம்பியது. இடம் பெயர்ந்த மக்கள் திரும்பி வந்து விவசாயம் செய்ததால், உற்பத்தி பெருகியுள்ளது. இந்த நிலையில் நீர் ஆதாரங்களின் கரைகளை பலப்படுத்த அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பனை போன்ற மரங்களை நட வேண்டும். அப்போது வளம் பெருகும் என தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் யோகநாதன்.
Read in : English