Read in : English
தமிழ் ஸ்டாண்டப் காமெடியில் முன்னோடியான, கார்த்திக் குமார். மேடையில் தனியாக நின்று சமூக வழமைகளையும், அடையாளங்களையும், புனிதமெனக் கருதப்பட்ட கருத்துகளையும் பகடி செய்த ஆரம்ப காலத்தவர்களில் அவரும் ஒருவர். கிரிஸ் ராக்கின் கலைச் சுதந்திரத்தைக் கார்த்திக் குமார் ஆதரித்துப் பேசுகிறார். இன்மதி இணையதளத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், தமிழ் காமெடி வயதுக்கு வந்துவிட்டது என்றும், காமெடியன்களும் பார்வையாளர்களும் தங்கள் மதங்கள், சாதிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் காமெடி செய்யப்படுவதை ரசிக்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
ஒருவரின் வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதை வன்முறை மூலம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி: ஒரு ஸ்டாண்டப் காமெடியனாக, வில் ஸ்மித்-கிரிஸ் ராக் சர்ச்சையைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
கார்த்திக்: கலவையான உணர்வுகள். முதலில், ஒரு கலைஞனாக, இதை நான் விதிமீறலாகப் பார்க்கிறேன்; ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனை அடிப்பது. இந்த அத்துமீறலும், வன்முறைச் செயலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன; வழமையாக்கப்பட்டிருக்கின்றன என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். வில் ஸ்மித்தின் தொழிலே மக்களின் தோற்றங்களை நையாண்டி செய்யும் காமெடியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான மரியாதைக் குறைவை மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். வில் ஸ்மித், ராப் இசைக்கலைஞனும் கூட. ராப் இசையே மரியாதைக் குறைவுத் தன்மையைக் கொண்டதுதான். ஒருவரின் வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதை வன்முறை மூலம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அடுத்த நாளே, கிரிஸ் ராக்கின் விற்பனை மதிப்பு அதிகரித்தது; சமூக வலைத்தளம் இருக்கிறது என்பதை இதன்மூலம் நாம் புரிந்துகொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்விலும் அரசியல் இருக்கிறது. தவறான மனிதர்கள் என்று சிலரால் கருதப்படுபவர்களைச் சிலர் விலக்கி வைக்கிறார்கள். மற்றவர்கள் அவர்கள் பின்னே நிற்கிறார்கள்.
வன்முறையைப் பொதுவெளியில் காட்டிய மனிதர் அதை இன்னொருவர் சார்பாகச் செய்திருக்கிறார். அந்த இன்னொருவர் (ஜடா பிங்கெட் ஸ்மித்) தன் கண்களை உருட்டி தனது வெறுப்பைக் காட்டியுள்ளார்.
அது கிரிஸ் ராக்கிற்கான நிகழ்வுவெளி. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அங்கிருந்து நீங்கள் வெளியேறலாம். அவரது அணுகுமுறை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது கலையை நீங்கள் அனுபவித்தாக வேண்டும். அதை அவரது செயல் என்று மட்டுமே நினைத்து அனுபவியுங்கள். வெளியேறும் உரிமை உங்களுக்கு உண்டு. ஒரு கலைஞனின் நிகழ்வுவெளியில் அத்துமீறுவது உங்களுக்குப் பிடிக்காத ஒருவரைக் கொல்வதற்குச் சமம். ஒரு கலைஞனாக, வில் ஸ்மித் குறுக்காகக் கடந்த அந்தக் கோட்டில் பயணிக்க நான் தயாராக இல்லை.
கேள்வி: கிரிஸ் ராக் செய்தது சரியென்று சொல்கிறீர்களா? காமெடிக்கு எல்லைகள் இல்லையா?
கார்த்திக்: தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் பற்றி, அரசியல்வாதிகள் பற்றி, செல்வாக்கு படைத்தவர்கள் பற்றி நாம் விவாதிப்பதில்லை. பின் ஏன் காமெடியன்கள் பற்றி மட்டுமே இந்த விவாதம்? ஏன் இப்படி? நாங்கள் முட்டாள்கள் என்பதலா?
சக்ரவர்த்தியின் சபைக்குள் கோமாளி எளிதாக நுழைந்து சக்ரவர்த்தியையே மட்டந்தட்டிப் பேசுவான். அது அவனது இயல்பு. அவன்தான் கோமாளி. சக்ரவர்த்தியை நக்கல் செய்வதுதான் அவனது வேலை.
ரிக்கி ஜெர்வைஸ் கோல்டன் க்ளோப் விழாவில் கடுமையாக விமர்சித்து ஜோக்குள் அடித்தார். அதன் விளைவாக, அந்த நிகழ்வு மேலும் பிரபலமானது. ஒரு ஜோக் உங்களை நிலைகுலையச் செய்யலாம். உங்கள் மனதை எது ஆட்டிப்படைக்கிறது என்பதுதான் முக்கியமே ஒழிய, ஜோக் அல்ல. இதுதான் உங்களைக் கலவரப்படுத்தி வன்முறையில் இறங்க வைக்கிறதா?
என் உடல் எடையை உலகம் கேலி செய்யலாம். அதை நான் சரிபண்ணிவிட்டால் யாராலும் என்னை அசைக்க முடியாது. மக்களைப் பகடி செய்யும் வேலையைக் கொண்ட ஒருவரை நீங்கள் அடிக்கக்கூடாது. அதை மன்னிக்க முடியாது.
தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் அதிமுக்கியமானது இந்த நக்கலும் நையாண்டியும். இன்று நாங்கள் அதை மீட்டெடுத்து மீண்டும் கொண்டுவருகிறோம். அது நம் கலாச்சாரத்தின் ஒருபகுதி
கேள்வி: தமிழ் காமெடியில் கிரிஸ் ராக் இருக்கிறார்களா?
கார்த்திக்: தமிழ் காமெடியில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்று நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இணைய உலகில் ’டாங்னெஸ்’ என்ற கருத்தாக்கத்திற்கு இளைஞர்கள் பழகிக் கொண்டுவிட்டார்கள். ’டாங்னெஸ்’ என்றால் உச்சநிலை பகடி; கடுமையான நையாண்டி; அவர்கள் நையாண்டி செய்கிறார்கள் என்றே உங்களுக்குத் தெரியாது. அதற்குத் தயாராகவே இருக்கிறார்கள் இளைஞர்கள்; அதை அனுபவித்துப் பார்க்கிறார்கள்.
தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் அதிமுக்கியமானது இந்த நக்கலும் நையாண்டியும் இன்று நாங்கள் அதை மீட்டெடுத்து மீண்டும் கொண்டுவருகிறோம். வெகுமக்கள் ஊடகங்களில் அது இல்லை. ஆனால் நிச்சயமாக இலக்கியத்திலும் நாடகத்திலும் இருக்கிறது. அது நம் கலாச்சாரத்தின் ஒருபகுதி.
கேள்வி: 2015ஆம் -ஆண்டு நீங்கள் நடத்திய ‘செகண்ட் டிகாஷன்’ என்ற உங்கள் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவைக் கேலிசெய்த மேடைப்பொருட்கள் இருந்தன. அவர் அப்போது உயிரோடு இருந்தார். அப்போது அந்த மாதிரியான விஷயங்கள் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதவை. நீங்கள் எல்லைகளை விரிவாக்கம் செய்துகொண்டிருந்தீர்கள். இன்றைய காமெடியன்கள் புனிதங்கள் என்று கருதப்படுபவற்றை நையாண்டி செய்யத் தயாராக இருக்கிறார்களா?
கார்த்திக்: புனிதங்கள் என்று நிறையவே இருக்கின்றன. ஒரு ராஜா என்பவர் புகழ்பெற்ற மனிதர். அதனால் நாம் பேரரசரைக் கிண்டல் செய்ய வேண்டாம் என்ற மனப்பான்மை இருக்கிறது.
ஆராதிக்கப்படும் புகழ் பெற்ற ஆண்களையோ அல்லது வணக்கத்துக்குரிய கலாச்சாரக் குறியீடுகளையோ பிரச்சினையை உருவாக்காமல் நையாண்டி செய்ய முடியாது. ஆனால் மறைமுகமான நிலத்தடி கலாச்சாரம் ஒன்று இருக்கிறது. அது பிரதானமான மைய ஓடையாக மாற நீண்டநாள் ஆகாது.
மீம் படைப்பாளிகள் அநாமதேயமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். கட்புலனாகாத தீவிரவாதிகள் போலவே. அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது. ஆனால் ஸ்டாண்டப் காமெடியன் யாரென்று உங்களால் அடையாளம் காணமுடியும். அதுதான் வித்தியாசம்.
ஆனால், தீண்டப்பட முடியாதவர்கள் என்ற ஒளிவட்டமெல்லாம் போய்விட்டது என்று நம்மால் சொல்ல முடியும். இந்தச் சமூக வலைத்தள யுகத்தில் எப்படி தங்களை வெளிப்படுத்திக் கொள்வது என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தீண்டப்பட முடியாதத்தன்மை சமூக ஊடகத்தால் குறைந்துகொண்டே வருகிறது.
கேள்வி: இனிவரவிருக்கும் ‘மான்ஸ்பிளெயினிங்’ என்ற உங்கள் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லுங்களேன்.
கார்த்திக்: ஓர் ஆணாக எனக்கிருக்கும் சிறப்புரிமைகள் பற்றிய நிகழ்ச்சி அது. நமது பாலினத்தை நாம் ஒத்துக்கொள்வதற்கு முன்பே உலகம் அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது இன்றைய விதி. ஆனால் ஆண் என்பவன் யார் என்ற வறையறை சமூகத்திலிருந்து அல்ல, அவனிடமிருந்தே வரவேண்டும். ஓர் ஆண் என்னவாக இருக்க வேண்டும்; ஒரு பெண் என்னவாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவரவர் சம்பந்தப்பட்ட விஷயம். நாம் நமது ஆண்மைத்தன்மையை வரையறுத்துக் கொள்வோம். நாம் நம்முடைய சொந்த வரையறைகளை வைத்துக்கொள்வோம்.
ஆடியன்ஸில் இருக்கும் பெண்ணிடம் சொல்கிறேன், இந்த விளையாட்டு உனக்கெதிராக திரிக்கப்பட்டிருக்கிறது என்று. நான் சிறப்புரிமை கொண்டவன். அதை நான் விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் அதைப்பற்றிப் பேசுவேன்.
நான் அதிகாரத்தை விட்டுவிடுவது அவசியம். அப்படிச் செய்வதன் மூலம் நான் செயலூக்கியாக இருக்கிறேன்.
நாங்கள் பரிசோதனைகள் நடத்துகிறோம். விருப்பப்பட்ட ஆடியன்ஸ்க்கு நிகழ்த்துகிறோம். ஒரு திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் காண்பிப்பது போலத்தான் இதுவும். திரைப்படப்பணி போய்க்கொண்டிருக்கிறது. எடிட்டிங் வடிவத்தை நான் நிர்ணயிக்க வேண்டும்: ஆடியன்ஸ் எதை நிறைய விரும்புகிறார்கள், எதைக் குறைவாக விரும்புகிறார்கள் என்பதற்கேற்ப எடிட்டிங் செய்ய வேண்டும். சென்னையில் வரும் ஜூனில் பிரிமீயர் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
Read in : English