Read in : English
இந்திய சாதிய படிநிலையில் அடித்தளத்தில் உள்ளோர், பட்டியல் இனத்தவர் என பொதுவாக அடையாளப்படுத்தப் படுகின்றனர். அரசியல் அமைப்பு இந்த சொல்லை அங்கீகரிக்கிறது. ஒடுக்கப்பட்டவர், நசுக்கப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதவர், பஞ்சமர், அரிஜன் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இவை, பல பொருள்கள் தரும் வேறு வேறு சொற்கள்.
ஒடுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக, பொருளாதாரத்தில் பின் தள்ளப்பட்ட, அரசியல் அதிகார வலு அற்றவர்களையும் இது போன்ற பெயரில் அழைக்கின்றனர். அப்படிப்பட்ட இனமக்களை, இந்தியாவின் வட மாநில பகுதிகளில், பொதுவாக, ‘தலித்’ என குறிப்பிடுகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) மற்றும் அட்டவணை இனம் (Schedule Castes) என்றும் குறிப்பிடப்படுவோரை மராத்திய மொழியில், தலித் என குறிப்பிட்டனர். இந்த சொல்லை இதே பொருள்பட, மகாத்மா ஜோதி ராவ் பூலே பயன்படுத்தியுள்ளார்.
காஷ்மீரில், 1920 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுவாமி ஸ்ரத்தானந்தா அகில இந்திய அளவில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்தும் கோரிக்கைகளை முன் வைத்தார். பிரச்னையை அரசின் கவனத்திற்கு காங்கிரஸ் கொண்டு சென்று தீர்வு காண வலியுத்தினார்.
சுவாமி ஸ்ரத்தானந்தா நடத்திக் கொண்டிருந்த அமைப்பின் பெயர், தலித் சகோதரர்கள் என்பதாகும். இவர்தான், அரசியல் அரங்கில் தலித் என்ற சொல்லை தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒருங்கிணைந்த சொல்லாக உருவாக்க முயன்றார். அது, மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளையும் சுட்டியது. பின்னர் மகாராஷ்டிராவில் உருவான தலித் பேந்தர் இயக்கம், தலித் என்ற சொல்லுக்கு, வீழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளை வழங்கியது. சொல்லின் பொருள்கள் முரண்பட்டாலும் உலக அளவில் அறிந்த சொல்லாக மாறியது. மேற்கந்திய நாடுகள் அச்சொல்லை ஏற்றுக் கொண்டுள்ளன.
‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி ஊடகங்களுக்கு சமீபத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
தற்போது இந்திய அரசுக்கு இந்த சொல் மீது சிறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பட்டியலின மக்களை அடையாளப்படுத்த, இந்த சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. இதை ஏற்க பல ஆங்கில ஏடுகள் மறுத்துவிட்டன.
தமிழ் நாட்டில் பட்டியலினத்தவரை அரசு ஆணைப்படி ஆதிதிராவிடர் என்றும், அதை நிர்வகிக்கும் துறை, ஆதி திராவிடர் நலத்துறை என்றும் வழங்கப்படுகிறது. ஜாதி சான்றிதழ்களில் பட்டியலினம் என்றே குறிப்பிடப்படுகிறது. ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி ஊடகங்களுக்கு சமீபத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சில பெளத்தர்கள் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, தலித் என்ற சொல், தார்மீக ரீதியாக வேதனை, அவமானம் ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அதை தவிர்த்து, ‘அட்டவணை இனம்’ என அரசியல் சட்டம் வழங்கிய சொல்லையே பயன்படுத்த, மத்திய அரசு கேட்டுள்ளது.
இது போன்ற சொற்போர், தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே, பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள இனங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்களிடம் இருந்தது. காந்தி பயன்படுத்திய, ‘ஹரிஜன்’ என்ற சொல்லை பயன்படுத்த தீவிர எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் இன்றும் ஒரு பிரிவினர் அந்த சொல்லால், பட்டியல் இன மக்களை குறிப்பிட்டே வருகின்றனர்,
சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை, அடையாளப்படுத்த, தலித் என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்த விவாதங்களும், ஏற்கனவே தமிழகத்தில் எழுந்து அடங்கியது.
ஒரு இனத்தை அடையாளப்படுத்தும் சொல் முக்கியமானது. ஆனால், அது குறித்து மட்டுமே விவாத உரையாடலை நகர்த்துவது, மக்கள் பிரச்சினையின் தீவிரத்தை நீர்த்து போக வைக்கும் என்று நம்புகின்றனர்.
பட்டியலினம் மற்றும் விளிம்பு நிலை சமூக மக்களின் முன்னேற்றத்தில் தீவிர அக்கரையுடன் செயல்படும் சில அமைப்புகள், இது போன்று பெயர் பிரச்னையை பின் தள்ளியே வந்துள்ளன. ஒரு இனத்தை அடையாளப்படுத்தும் சொல் முக்கியமானதுதான். ஆனால், அது குறித்து மட்டுமே விவாத உரையாடலை நகர்த்துவது, மக்கள் பிரச்னையின் தீவிரத்தை நீர்த்து போக வைக்கும் என்று நம்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பட்டியல் இனத்தவரை குறிப்பதற்கான சொல் பற்றி, தமிழகத்தில் 1994 இல் ஓர் ஆய்வு நடந்தது. சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு நடத்திய குடிசைகுரல் என்ற இதழ் சார்பில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த, 30 பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.
பட்டியலின மக்கள் முன்னேற்றத்துக்கு உகந்த சூழ்நிலையை ஏவை எல்லாம் ஏற்படுத்தும் என்பதில், அந்த மக்களை அடையாளப்படுத்த உகந்த பெயரையும் உறுதி செய்யும் வகையில் அந்த ஆய்வில் சில கேள்விகள் அமைந்திருந்தன.
ஆய்வை திட்டமிட்டு நடத்தியவர், சென்னை குடிசைப்பகுதி மக்கள் அமைப்பின் ஆலோசகராக இருந்த போதி தேவவரம்.
அந்த ஆய்வு பற்றி, ‘இன்மதி.காம்’ இணைய இதழுக்கு போதி தேவவரம் அளித்த பேட்டியில், ‘ஒடுக்கப்பட்ட மக்களை ஒரே குடையின் கீழ் திரட்டி வலிமையை காட்டும் வகையில், 1994ஆம் ஆண்டு ஒரு முன்னோட்ட ஆய்வை மேற்கொண்டோம். இதில், அரசியல் கட்சி தலைவர்கள், அரசில் உயர்நிலையில் பதவி வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சமுதாய தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் என, 30க்கும் மேற்பட்டோரிடம், 64 கேள்விகள் அடங்கிய பட்டிலை அளித்து, பதில் கேட்டிருந்தோம்.
பெறப்பட்டப் பதில்களை தொகுத்து, சென்னை, மெமோரியல் ஹாலில் அதே ஆண்டு ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டினோம். ஆய்வில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்திருந்த பிரமுகர்களையும் கூட்டத்துக்கு அழைத்திருந்தோம். பட்டியல் இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்களை முன்னேற்றும் வகையில் ஒரே தலைமை, ஒரே சொல் என்ற ஒருங்கிணைப்பு நோக்கிலான முயற்சிதான் அது. அந்த முயற்சி வெற்றி பெற வில்லை.’ என்று விளக்கினார்.
அதன் பின்னணியில் இருந்த காரணிகளையும் விளக்கினார். தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோர் பட்டியில், வன்னியர் இன மக்களும் உள்ளனர்; நரிக்குறவர் இன மக்களும் உள்ளனர். இந்த இரண்டு இனங்களின், சமூக, பொருளாதார, கல்வி படிநிலையும் ஒரே நேர் கோட்டில் இல்லை. ஒன்று மிகவும் பாதாளத்தில் உள்ளது.
மிகவும் பின்தங்கி விளிம்பு நிலையில் வாழும் நரிக்குறவர் இன மக்களை, மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. இந்த அட்டவணைப் பட்டியலுக்குள் அவர்கள் முன்னேற்றத்தை எண்ணி பார்க்கவே இயலாது. அந்த மக்கள், பட்டியல் பழங்குடியினத்தவரை விடவும் பின்தங்கிய வாழ்நிலையில் உள்ளனர். எனவே, மக்களின் படிநிலை குறித்து சொற்கள் காட்டும் சித்திரம் ஒரு போதும், மக்களின் வாழ்வுநிலையை பொது தளத்தில் பிரதிபதிப்பதாக கொள்ள இயலாது. அது போல், தலித் என்ற சொல், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட இனத்தையும் குறிக்கும் ஒரு சொல்லாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. என்று விளக்கினார்.
Read in : English