Read in : English
நாட்டுப்புறக் கலைகளால் நிறைந்தது தமிழகம். வறுமை, வாய்ப்பின்மை, ஆதரவின்மை, நகர்மயமாதல் போன்ற காரணங்களால் பல கலைகள் நலிந்துவிட்டன. பல அழிவின் விளிம்பில் உள்ளன. சுவடுகளே இன்றி மறைந்துவிட்ட கலைகளும் உண்டு. சடங்குகள் சார்ந்து மரபுடன் சில தொடர்கின்றன. சில கால வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டுவருகின்றன. சாதாரண மக்கள் அன்றாடம் உழைத்து பெறும் கூலியில் பகிர்ந்தளிக்கும் தானியத்தில், கிராமியக் கலை ஒன்று பாரம்பரியமாக புத்துணர்வுடன் வாழ்ந்து வருகிறது. அதன் பெயர் கூலிப் பிச்சையில் குதிரை எடுப்பு என்பதாகும்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி – முத்துப்பேட்டை சாலையில் உள்ளது, பெருக வாழ்ந்தான் என்ற சிற்றுார். இதை சோழர்கால கல்வெட்டு ஒன்று, பெருவாழ்வு தந்தான் சதுர்வேதிமங்கலம் என்று குறிப்பிடுகிறது. இதன் அருகே இருக்கிறது கோவிலுார் கிராமம். கள்ளர், குயவர், ஆதிதிராவிடர் இன மக்கள் வாழ்கின்றனர். கள்ளர் இனமக்கள், சேனாதிபதியார் என்ற பட்டப்பெயரை தாங்கியுள்ளனர்.
இங்கு அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அதில், மிக உயர்ந்த குதிரை சிலையும், அதை யொட்டி, ஐந்து அடி உயரமுள்ள, 13 குதிரை சிலைகளும் நேர்த்தியாக நிறுத்தப்பட்டுள்ளன. இவை மண்ணால் ஆனவை. மன்னர் காலக் குதிரைப்படை நேர்த்தியாக அணிவகுத்து நிற்பது போல் தோற்றம் தருகிறது. ஆண்டு தோறும், மண் குதிரை சிலைகள் புதிதாக சேர்ந்து வருகின்றன.
சாதாரண மக்கள் அன்றாடம் உழைத்து பெறும் கூலியில் பகிர்ந்தளிக்கும் தானியத்தில், கிராமியக் கலை ஒன்று பாரம்பரியமாக புத்துணர்வுடன் வாழ்ந்து வருகிறது. அதன் பெயர் கூலிப் பிச்சையில் குதிரை எடுப்பு என்பதாகும்.
இந்த சிலைகள், அந்த ஊரை சேர்ந்த மண்பாண்ட கலைஞர்களால் உருவாக்கப்படுகின்றன. இதை உருவாக்குவதை தங்கள் உரிமையாக கருதுகின்றனர். கோவிலின் பெரிய சிலை, 15 அடி உயரமுள்ளது. அதை உருவாக்கும் உரிமை, கோவிலில் பாரம்பரியமாக பூஜை செய்து வரும் குடும்பத்திடம் உள்ளது. அதி உயர குதிரை சிலையை மண்ணால் செய்து, சுட்டு உருவாக்குவதற்கு, அந்த குடும்ப வீட்டருகே, பழைய தொழில்நுட்பத்தில் சூளை ஒன்று உள்ளது. அதுபோல், சிறிய சிலைகளை உருவாக்கும் உரிமை பல மண்பாண்ட கலைஞர்களின் குடும்பங்களிடம் உள்ளது. அவற்றை உருவாக்குவதற்கும் தனித்தனி சூளைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த ஊர் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. விவசாய கிராமமான இங்கு, தை மாதத்தில் அறுவடை துவங்கும். அறுவடைப் பணியில் அந்த ஊர் கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுவர். அன்றாடம் அறுவடைப் பணி முடிந்ததும், அதற்கான கூலியாக குறிப்பிட்ட அளவில் நெல் தானியம் வழங்கப்படும்.
கூலியை பெற்ற தொழிலாளிகள், அதில் இருகைகளை குவித்து அள்ளும் நெல் மணியை, ஓரிடத்தில் குவிப்பர். இப்படி அன்றாடம் தானியத்தை குவிப்பது நடக்கும். குவிந்த நெல்லை, அய்யனார் கோவில் குதிரை எடுப்பு நிகழ்வுக்கு வழங்குகின்றனர். இதை, ‘கூலி பிச்சை’ என அழைக்கின்றனர்.
கூலித் தொழிலாளர்கள் வழங்கும் நெல் தானியத்தை பெற்றுக் கொள்கின்றனர், குதிரை சிலை செய்யும் உரிமை பெற்ற குடும்பத்தினர். இந்த தானியத்தில் ஒரு பகுதி, கிராமத்தில், பறை கொட்டி அறிவிப்புகள் செய்யும் பறையர் இனத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்படுகிறது. இப்படி, கூலித் தொழிலாளர்களிடம் பெறும் நெல் தானியத்தில் தான், குதிரை எடுப்பு என்ற கலைவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
குதிரை எடுப்பு நிகழ்ச்சி, ஆண்டு தோறும் மாசி மாதம் அதாவது, பிப்ரவரியில் நடக்கிறது. ஒரு நன்னாளில், குளத்தில் மண் எடுத்து, எழில் மிகு குதிரை சிலைகளை மிகவும் சிரத்தையுடன் வனைகின்றனர் குயவர்கள். இதை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஆகும்.
வனைந்த மண் குதிரையை, சூளையில் சுட்டு, அழகிய வண்ணம் பூசி, நிகழ்வுக்காக தயார் செய்கின்றனர். இந்த குதிரை சிலைகளுக்கு, முற்காலத்தில், ஐந்து வகையான இயற்கை வண்ணம் பூசப்பட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் தெரிவித்தார்.
பல இனமக்கள் வாழும் ஒரு கிராமத்தில், தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவரின் மரியாதை மிக்க உத்தரவுடன், விழாவின் முக்கிய நிகழ்ச்சி நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இன சமத்துவத்தின் அடையாளமாக விளங்குகிறது, குதிரை எடுப்பு நிகழ்ச்சி.
அய்யனார் கோவில் குதிரை எடுப்பு நிகழ்ச்சி கோலாகலமானது. நீண்ட மூங்கில் கழிகளை இணைத்துக் கட்டி, குதிரை சிலையை அதில் லாவகமாக நிறுத்துகின்றனர். மிகக் கவனமுடன் இது செய்யப்படுகிறது. பின், ஊர் கூடி குதிரை சிலைகளை தோளில் சுமந்து வருகின்றனர். அவை வீதியில் வலம் வரும்.
குறிப்பிட்ட, மூன்று வீடுகளின் முன் மட்டுமே நின்று செல்லும். மற்ற வீடுகளில் நிறுத்த நேரிட்டால், அந்தந்த குடும்பத்தில் அசம்பாவிதம் நிகழும் என, கிராமமக்கள் நம்புகின்றனர். எனவே, நிறுத்துவதை விரும்புவதில்லை. வீதிவலம் முடிந்த பின், அய்யனார் கோவில் திடலில் நேர்த்தியாக சிலைகள் நிறுத்தப்படுகின்றன. சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது.
நிகழ்வின் போது, பறையடித்து இசை எழுப்புவர் உடலில், இறைவன் எழுந்தருள்வதாக நம்புகின்றனர். அவரை வணங்கி, சந்தனம் பூசி, மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். அந்த அருள் பெற்றதாக நம்புபவர் தான், குதிரை சிலைகளுக்கு கண் திறக்கும் சடங்குக்கு வழிகாட்டுகிறார். அவரது உத்தரவுப்படியே கண் திறப்பு நிகழ்வு நடக்கிறது.
பல இனமக்கள் வாழும் ஒரு கிராமத்தில், தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவரின் மரியாதை மிக்க உத்தரவுடன், விழாவின் முக்கிய நிகழ்ச்சி நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இன சமத்துவத்தின் அடையாளமாக விளங்குகிறது, குதிரை எடுப்பு நிகழ்ச்சி.
அந்த நேரத்தில், கிராமத்தில் உள்ள குடும்பத்தில் நிலவும் குறைபாடு, நோய் தீர அய்யனாரை வேண்டுகின்றனர். குறை தீர்ந்தால் பரிகாரம் செய்கின்றனர். அதற்காக மனித உடல் பாகங்கள், ஆடு, மாடு, கோழி உருவங்களை போன்ற சுடுமண் சிற்பங்களாக செய்து, காணிக்கையாக செலுத்துகின்றனர். இவை, அந்த ஊர் மண் பாண்ட தொழிலாளர்களால் மட்டுமே செய்யப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளாக இந்த கலை நிகழ்வு நடந்து வருகிறது. ஒரு அற்புதமான நாட்டுப்புறக் கலை மக்கள் வாழ்வியலுடன் வண்ணமயமாக வாழ்கிறது. இந்த நிகழ்வுக்கான வரலாற்று பின்னணி ஒன்றும் உள்ளது.
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன், பொதுஆண்டு, 750 முடிசூடினார். இவரது உறவினருடன், பாண்டிய மன்னன் அரிகேசரி பாராங்குச மாறவர்மன் மற்றும் சிற்றரசர்கள் இணைந்து, நந்திவர்மனை சிறைபிடித்தனர்.அப்போது பல்லவ மன்னன் உதயசந்திரன், பெரும் குதிரைப் படையுடன் வந்து, போரிட்டு நந்திவர்மனை மீட்டான். போர் நடந்த இடம், பெருகவாழ்ந்தான் கிராமத்தை ஒட்டியுள்ளது என, பழங்கால வரலாற்று செப்பேடு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போரின் தொடர்ச்சியாக, குதிரை எடுப்பு நிகழ்வு பாரம்பரியமாக நடந்து வருவதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். போற்றத் தகுந்தது நல்லிணக்கத்தைப் பேணும் நாட்டுப்புறக் கலை.
Read in : English