Read in : English
சமீபத்தில் இளம்பெண்கள் சிலர் ‘கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற சினிமா போஸ்டரை பார்த்து “அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் தலைப்பு வச்சிருக்காங்க பாரு. வேடிக்கையா இல்ல?” என்று சிரிப்பது போல ஒரு ‘மீம்’ பார்த்தேன். ஆனால் இந்தப்படம் 65 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்றது என்பது காலத்தின் நகைமுரண்.
காலங்கள் மாறிவிட்டன; மக்களின் ரசனையும் கருத்துகளும் மாறிவிட்டன. ஆனால் தமிழ்சினிமா ஒரு காலத்திரிபில் மாட்டிக் கொண்டது போலத் தெரிகிறது. இந்த வாரம் உலக மகளிர் தினம் சிறப்பான கொண்டாட்டத்தோடு முடிவடைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பெண்களை அடக்கிவைப்பதும் இரண்டாம்தரக் குடிமக்களாக வைத்திருப்பதும் எப்படி ஒரு மாறாத கதைக்கருவாக தமிழ்சினிமாவில் காலந்தோறும் கையாளப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
கதாநாயகர்களுக்கு இணையாகப் புகழ்பெற்ற கதாநாயகிகள் நம்மிடம் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். ஆனால் எந்தக் கதாநாயகியும் கதாநாயகனைத் தாண்டி தொடர்ந்து மிஞ்சும் அளவுக்குப் பெயருடனும் புகழுடனும் வாழ்ந்ததில்லை. பெண்களுக்கு வெள்ளித்திரையில் சீக்கிரமே வயதாகிவிடுகிறது; ஆனால் ஆண்களுக்கு வயதானவர் தோற்றம் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை.
உதாரணமாக, சிவாஜிகணேசனோடு 1952-இல் பராசக்தி படத்தில் ஜோடிசேர்ந்த பழம்பெரும் நடிகை பண்டரிபாய் பதினைந்து ஆண்டுகள் கழித்து அவருக்கு அம்மாவாக தெய்வமகனில் நடித்தார். 1951-இல் சர்வாதிகாரி திரைப்படத்தில் அஞ்சலிதேவி எம்ஜியாருக்கு ஜோடி; ஆறு ஆண்டுகள் கழித்து சக்ரவர்த்தித் திருமகளில் அவர் எம்ஜியாருக்கு மூத்த மச்சினிச்சி. இருபத்திமூன்று ஆண்டுகள் கழித்து அவர் உரிமைக்குரல் படத்தில் எம்ஜியாருக்குத் தாய் ஸ்தானத்தில் விளங்கும் அண்ணியாக நடித்தார். மோசமாக நடத்தப்பட்ட ரஜினிகாந்தின் மனைவியாக சுஜாதா ’அவர்கள்’ படத்தில் (1977) நடித்தார்; பின் சுஜாதா, மாவீரன் (1985), பாபா (2002) ஆகிய படங்களில் சூப்பர் ஸ்டாரின் அம்மாவாக நடித்தார். ரஜினிகாந்துக்கு மகளாக நடித்த மீனா (எங்கேயோ கேட்டகுரல்-1982) பிற்காலத்தில் அவருக்கு மனைவியாக நடித்தார் (எஜமான்-1993). இப்போது மீனா திரையில் அவருக்கு சீனியர்.
கதாநாயகர்களுக்கு இணையாகப் புகழ்பெற்ற கதாநாயகிகள் நம்மிடம் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். ஆனால் எந்தக் கதாநாயகியும் கதாநாயகனைத் தாண்டி தொடர்ந்து மிஞ்சும் அளவுக்குப் பெயருடனும் புகழுடனும் வாழ்ந்ததில்லை.
சினிமாவில் ஆண்களுக்கு வயதாவதில்லை அல்லது அவர்கள் காலாவதியாவதில்லை. பெண்கள், ஆண்களின் காமப்பார்வைக்கு விருந்தாகவே படைக்கப்படுகிறார்கள். எல்லா வழமையான தமிழ் மசாலாப் படங்களிலும் தளதளவென்றிருக்கும் கதாநாயகியை வில்லன்களிடமிருந்து அல்லது கூலிப்படையிடமிருந்து கதாநாயகன் காப்பாற்றுவார். அதுமுடிந்தவுடன் அடுத்த காட்சியில் ஒரு டூயட். ஒளிவெள்ளத்தில் உயர்தர ஆடைகளில் வரும் காதல்ஜோடி அதிரடியான இசையோடும், காமம் தூண்டும் பாடலோடும் (”கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ?”) ஆடிப்பாடி ஆனந்தமாய் உலவுவார்கள். நடன அசைவுகள் பெரும்பாலும் காமத்தைத் தூண்டாவிட்டாலும் ஆபாசமாகவே இருக்கும். பெரும்பாலான காட்சிகளில் பெண் என்பவள் ஒரு பாலியல் சரக்குதான்; ஆண்களுக்கான நுகர்பண்டம்.
தாயாக, சகோதரியாக வரும் பெண்களின் வேலை கதாநாயகன்மீது அன்பைப் பொழிவது மட்டுமே. அவர்கள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைக் காப்பாற்ற கதாநாயகன் எப்போதுமே தயாராக இருப்பார். இந்தக் கதைவடிவம் அன்பான கதாநாயகப்பிம்பத்தைப் பெண்களை ஆராதிக்க வைப்பதற்காகக் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் உத்திதான். மானின் விழியும், வளப்பமான கட்டழகும் கொண்ட கதாநாயகி கதாநாயகனின் காதலியாய் ஆடிப்பாடி, இருட்டு அரங்கத்தில் கொஞ்ச நேரத்திற்கேனும் ஒரு மாயமந்திர அந்தர உலகத்தில் சஞ்சரிக்கும் ரசிகனின் ரகசிய ஆசைநெருப்புக்கு நெய்வார்க்கிறார்.
சங்க இலக்கியத்தில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற காதல் கவிதைகள் ஆணின் அன்புக்கு ஏங்கும் பேதையாகப் பெண்ணைப் பிரதானமாகக் காட்டுகின்றன. ”பாதம் முதல் கூந்தல்வரை பால்வடியும் கிளிகளாக” பெண்கள் உலாவருகிறார்கள்.
பெண் என்பவள் பாதாதிகேசம் அழகுப்பதுமை என்ற கவிச்சித்திரம் ஆழமாகப் பதியப்பட்ட காலகட்டத்தில் திருவள்ளுவர் களவியல், கற்பியல் என்ற இரண்டுபிரிவுகளில் மொத்தம் 25 அதிகாரங்களைக் காமத்திற்கென்று ஒதுக்கிவைத்திருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெண் அங்கங்களைப் பித்துப்பிடித்து பேசிப்பாடிய சங்கக்கவிஞர்கள் விட்ட இடத்திலிருந்து திரைப்படக் கவிஞர்கள் தொடர்ந்தார்கள். “வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு” என்ற திருக்குறளைத்தான் பின்னர் ”கட்டிக்கொள், ஒட்டிக்கொள், காற்று நம்மிடை நுழைவதில்லை” என்றும், “தென்றலுக்குப் பாதையின்றிமெல்லத் தழுவு” என்றும் காதலனை இறுக அணைத்து கவிதையாகச் சொன்னாள் திரைப்படக் கதாநாயகி. ரகசியப்பார்வை வீசி ஆனந்தமாய் ஆண் ரசிகனுக்கு இவையெல்லாம் மன்மத விருந்து.
தியாகராஜ பாகவதர் குதிரைமீது ஏறி “வாழ்விலோர் திருநாள்” என்ற பேரழகு வீரனாகப் பாடிவந்தபோது வீட்டுப்பெண்கள் சாளரங்கள்வழி எட்டிப்பார்த்து பார்வையின்பம் அனுபவிக்கிறார்கள். அப்போது முத்தொள்ளாயிரமும், கம்பராமாயணமும் ஞாபகத்திற்கு வந்தன. “தோள்கண்டார் தோளே கண்டார்” என்ற வரிகள் தமிழ் சமூகத்தில் ஆழமாய்ப் பதிந்த வரிகள் அல்லவா?
தற்போது 80 அல்லது 90 வயதைக் கடந்தவர்கள் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள், “மன்மதலீலையை வென்றார் உண்டோ?” என்று பாகவதர் ஆண்கள் புடைசூழ பாட அவர் மீது மலர்க்கணைகள் வீசியபடியே அக்காலத்துக் கனவுக்கன்னி டி. ஆர். ராஜகுமாரி நடனமாடிவரும் காட்சியை. இப்போது 60 வயதைக் கடந்தபலர் கமல்ஹாசனோடு காந்தக்கண் அழகி ’சில்க்’ ஸ்மிதா ‘நேத்து ராத்திரி அம்மா,” என்று பாடி அதகளம் பண்ணிய அதிரிபுதிரிக் காட்சியை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.
ஆகப்பெரும் திரைக்கலைஞர்கள் தாய்க்குலத்தின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களைப் பெண்களின் பாதுகாவலனாகத் திரையில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள்.
பெண்ணை காமநுகர்வுப் பண்டமாக காட்டிய தமிழ்த்திரைப்படம் பழங்கால இலக்கியத்தின் இருபதாம்நூற்றாண்டு நீட்சிதான். மக்கள் செல்வாக்குப் பெற்ற ஆகப்பெரும் திரைக்கலைஞர்கள் தாய்க்குலத்தின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களைப் பெண்களின் பாதுகாவலனாகத் திரையில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களும்கூட பெண்களை மட்டம்தட்டி கேலிசெய்து அடக்கிவைக்கிறார்கள். கதாநாயகி தன்படிப்பால், பணத்தால் திமிரோடு திரிந்தால் அவளைக் கையறுநிலைக்குக் கொண்டு சென்று இறுதியில் ஆணின் உதவியைக் கண்ணீரோடு அவளை நாட வைக்கிறான் கதாநாயகன். அப்போது பெண்கள் உட்பட அனைத்து பார்வையாளர்களும் கைதட்டி ரசிக்கிறார்கள்.
’பட்டிக்காடா பட்டணமா’ (1972) படத்தில் லண்டனில் படித்த பெண்ணியவாதியாக வரும் கதாநாயகியை (ஜெயலலிதா) கிராமத்து கதாநாயகன் (சிவாஜி கணேசன்) அடித்துவிரட்ட அவள் தன் அம்மாவோடு வாழத் தொடங்குகிறாள். அவளை இறுதிக்காட்சியில் போலியான தனது இரண்டாம் கல்யாணத்தின் மூலம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவைக்கும் ஆணாதிக்க நாயகனின் குரூரத்தை எல்லோருமே ரசித்தார்கள். படம் வசூலை அள்ளிக் குவித்தது, நடிகர்திலகமே ஆச்சரியப்படும் அளவுக்கு. இதே முறையைக் கையாண்டுதான் திமிர்பிடித்த கதாநாயகியைப் பணியவைத்தார்கள் விஜயகாந்தும் (என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் 1989), கே. பாக்யராஜும் (மெளன கீதங்கள் 1981). தாய்க்குலத்தின் ஆதரவைப் பெரிதும் பெற்ற ஆகப்பெரும் நடிகர் எம்ஜியார் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரது திரைப்படங்களில்கூட பெண்ணுக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உண்டு. இதில் நகைமுரண் என்னவென்றால் அவற்றைப் பெண்களும் ரசித்தார்கள் என்பதுதான்.
”ஆட்சிப் பீடத்திற்கு ஆண்சிறந்தவனா, இல்லை பெண் சிறந்தவளா?” என்று குலேபகாவலி (1955) திரைப்படத்தில் அல்லிசாம்ராஜ்ய மஹாராணி (ஜி.வரலக்ஷ்மி) கேட்கும்போது, அரசவையில் சற்றே கீழ்நிலையில் நின்றுகொண்டிருக்கும் எம்ஜியார் சொல்வார்: “ஆட்சிப்பீடத்திற்கு ஆண் பெண் வேறுபாடு கிடையாது,” என்று. கேள்வி கேட்ட பெண் அறிவுசார்ந்தவளாகக் காட்சியளித்தார்; எம்ஜியாரின் பதில் பெண் ரசிகர்களின் இதயத்தை வருடியது. ஆனால் அடுத்த காட்சியில் அந்த அறிவுமங்கை “மயக்கும் மாலை பொழுதே நீ போ போ; இனிக்கும் இன்ப இரவே நீ வா வா,” என்று பாடி கதாநாயகன்மீது தான்கொண்ட காதலை இலக்கியமரபுப் பாணியில் சொன்னபோது, அதை வெற்றிப்பார்வைகளோடு கதாநாயகன் ரசித்தபோது, “இவ்வளவுதான் பெண் என்பவள்” என்றொரு தகவல் பெண்ணுக்கெதிராக மிகவும் சூட்சுமமாக, நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டது.
தலைவனுக்கு ஏங்கும் சங்க இலக்கிய பெண்ணைப் போல, பெண்கள் எம்ஜியாரைக் கண்டு மயங்கினார்கள், ஆனால் பெண்ணுக்காக ஏங்கித் தவித்த கதாநாயகன் அவரது படங்களில் இல்லை. விக்ரம் படத்தில் (1986) கமல்ஹாசன், “பெண்கள் ஆணுக்கு இணையானவர்கள்,” என்பது போன்று வசனம் பேசும் கணினித்தொழில்நுட்பம் கற்ற கதாநாயகியைப் பார்த்து, “கோடைக்காலத்தில் வெயில் அடித்தால் நான் சட்டையைக் கழற்றிக் கொள்வேன். நீ எப்படி?” என்று சொல்வார்.
பெண் என்பவள் எப்படியிருக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ காலத்து இலக்கணக் கொள்கைகளை எம்ஜியார், சிவாஜி, கமல், ரஜினி, மற்றும் எல்லா கதாநாயகர்களும் தூக்கிப்பிடித்துதான் பேசியிருக்கிறார்கள்; பாடியிருக்கிறார்கள். ”இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை” “பொம்பள சிரிச்சாப் போச்சு” என்றெல்லாம் பாடியிருக்கிறார் எம்ஜியார். பின்னிய கருநாகம் போன்ற ஆறடிக்கூந்தல், அழகான சேலை, நெற்றி நிறைய குங்குமப்பொட்டின் மங்களம், குனிந்த தலை என்றெல்லாம் பாடம் எடுத்தார்கள் அவர்கள். மன்னன், படையப்பா போன்ற படங்களில் இப்படி வகுப்பெடுத்து தமிழ் கலாச்சாரக் காவலராகத் தன்னை முன்னிறுத்தியவர் ரஜினி.
இந்தப் போக்கை ஓரளவேனும் மாற்ற முயன்றவர்கள் இயக்குநர்கள் ஸ்ரீதர், கே. பாலசந்தர், கே. மகேந்திரன், ஆர். சி. சக்தி போன்றவர்கள். கல்யாணப்பரிசு, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, உதிரிப்பூக்கள் போன்று அவ்வப்போது எட்டிப்பார்க்கும் புதுமைப் படங்கள் ஒட்டுமொத்த அளவில் சிறுபான்மைதான்
இந்தப் போக்கை ஓரளவேனும் மாற்ற முயன்றவர்கள் இயக்குநர்கள் ஸ்ரீதர், கே. பாலசந்தர், கே. மகேந்திரன், ஆர். சி. சக்தி போன்றவர்கள். கல்யாணப்பரிசு, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, உதிரிப்பூக்கள் போன்று அவ்வப்போது எட்டிப்பார்க்கும் புதுமைப் படங்கள் ஒட்டுமொத்த அளவில் சிறுபான்மைதான். ஆயினும் பாலசந்தர் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் ஆணாதிக்கத்தைத் தூக்கித்தான் பிடித்திருக்கிறார். சுமித்ரா என்னும் ஆங்கார நாயகியை கமல் என்னும் ஆணாதிக்க நாயகன் இறுதிக்காட்சியில் அடக்கி வெற்றி கண்டார் என்பது பெண்ணுக்கெதிரான திரைமரபின் நீட்சியே. ‘ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே; ஓர் ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?” என்று கண்ணதாசன்வேறு தன்கவித்துவத்தால் அந்தக் கருத்தாக்கத்திற்கு பலம்சேர்த்திருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் ‘அறம்’ (2017), ‘ஆடை” (2019) என்று முழுக்க பெண்சார்ந்த திரைப்படங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா 17 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறக்கிறார் என்பது பெண்ணியவாதிகளுக்கு ஓர் ஆறுதலான விஷயம்தான்.
Read in : English