Read in : English
கவிஞராக அறியப்பட்டாலும்கூட, மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் பத்திரிகையாளராகச் செயல்பட்டவர். சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார். இந்தியா பத்திரிகை ஆசிரியராக இருந்தார். சக்கரவர்த்தினி, விஜயா, கர்மயோகி போன்ற வேறு சில பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணிபுரிந்து இருக்கிறார்.
பத்திரிகை நிருபர்கள் எதை செய்திகளாக்க வேண்டும், செய்திகளை எழுதும்போது எந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக் வேண்டும் என்று பாரதியார் இந்தியா பத்திரிகையில் (14.11.1908) ‘நிருபர்களுக்கு முக்கியமான அறிக்கை — -நிருப விஷயங்கள்’ என்ற தலைப்பில் எழுதினார். 1908ஆம் ஆண்டில் எழுதப்பட்டாலும்கூட, அது இன்றைக்கும் பத்திரிகையாளர்களுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
பாரதியார் எழுதிய நிருப விஷயங்கள், அவர் எழுதிய மொழிநடையில்:
- சர்க்காரின்அக்கிரம அதிகார முறைகள்.
- ஜனங்களிடத்தில்பொதுவாயுள்ள தீய வழக்கங்கள்
- க்ரிஷித்தொழில், கைத் தொழில், வர்த்தகம் முதலிய முயற்சிகளின் குறைவுகள், அபிவிர்த்திகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், எவ்வெந்தப் பொருள்களில் மேற்படி முயற்சிகள் நடைபெற்று வருகின்றவென்ற விவரங்கள்.
- ஜனாசாரங்களில்உள்ள குற்றங் குறைகள் அவற்றை சீர்திருத்த வழிகள்
- ராஜ்யநிர்வாகத்திலும், யுத்தத்திலும், சாஸ்திரங்களிலும், கலைகளிலும் அவ்வவ்விடங்களில் முற்காலத்தில் நம் முன்னோர்களால் செய்யப்பட்ட பிரதாபச் செய்கைகள்.
- இடிந்தகோட்டை கொத்தங்களின் சரித்திரங்கள், மங்கிப் போன ராஜகுலங்கள், யுத்தவீரரின் குலங்கள், வித்வாம்சரின் குலங்கள் இவற்றின் முற்கால நிலைமைகள்.
நிருபம் எழுதுவோர் ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழு வேண்டும். அது பொது நன்மைக்கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விர்த்தி செய்யத்தக்கதாயும் இருக்க வேண்டும்.
- ஜனங்களுக்குள்வழங்கி வரும் பழமொழிகளின் தாத்பரியங்கள், கர்ண பரம்பரையாய்ச் சொல்லப்பட்டு வரும் சரித்திரங்கள், கதைகள், பாட்டுகள்.
- அப்போதைக்கப்போது நடந்து வரும் முக்கிய சம்பவங்கள். கொலை, களவு, அதிகாரிகளின் கொடுமைகள், திருவிழாக்கள், சந்தைகள், பெரிய உத்தியோகஸ்தர்களின் சுற்றுப் பயணங்கள், அவர்கள் செய்யும் அமூல்கள், மடாதிபதிகளின் விஜயங்கள், அவர்கள் செய்யும் நல்ல தீய செய்கைகள்.
- பொதுஜன சுகாதாரங்கள், ஜலக்கஷ்டம், அசுத்தமான வழக்கங்கள், கொள்ளை நோய்கள் (வைசூரி, காய்ச்சல், வாந்தி பேதி, பிளேக்,பஞ்சம் இவற்றின் நடமாட்டங்கள்)
- தமிழ்ப்பாஷையல்லாத வேறு பாஷைகளில் எழுதப்பட்ட கிரந்தங்கள், பத்திரங்கள், பத்திரிகைகள், சிலாசானங்கள் ஆகிய இவற்றின் முக்கியாம்சங்களின் ஏட்டுப்பிரதிகளா யுள்ள கிரந்தங்களின் முக்கிய பாகங்களை அப்படியே எழுதியனுப்புதல்.
- நவீனநிலைமைகளுக் கேற்றபடி இயற்றிய நாடகங்கள், கவிகள், (Novels) விநோதக் கதைகள்.
மேற்கண்ட விஷயங்களின் சார்பாக யார் யார் எங்கேயிருந்து நிருபங்களையனுப்புகிறார்களோ அவரவர்களுக்குத்தக்கபடி கைம்மாறு அளிப்போம். எங்கள் பத்திரிகையின் வாயிலாய் வெளிப்படுத்தின விஷயங்களுக்கே பொருள் உதவப்படும்.
குறிப்பு: அனாவசியமாகவும் அகாரணமாகவும் முன் பின் ஜனங்களரிவதற்கில்லாமல் மூலையில் வசிக்கும் மனிதர்களைப் பற்றி நிந்தித்தோ புகழ்ந்தோ ஒன்றும் எழுதக்கூடாது.
பொது ஜன நன்மையே முழு நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் நமது பத்திரிகைக்கு அனுப்பப்படும் நிருபங்கள் இதரவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்புகிற மாதிரிமாய் இருக்கக்கூடாது. நிருபம் எழுதுவோர் ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழுத வேண்டும். அது பொது நன்மைக்கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விர்த்தி செய்யத் தக்கதாயும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் பாரதியார் எழுதியுள்ளார்.
அதற்கு முன்னதாக, இந்தியா பத்திரிகையில் (18.4.1908), ‘தமிழில் வர்த்தமானம் எழுதியனுப்புவோர்க்கு பணம் தருகின்றோம் நீங்கள் எழுதி ஏன் பணம் சம்பாதிக்கக்கூடாது?’ என்ற விளம்பரத்தையும் பாரதியார் வெளியிட்டுள்ளார்:
நமது பத்திரிகையின் வர்த்தமான பத்திகளுக்கு நேயர்களுக்கு அதிக இனிப்பையும் ஆசையையும் உண்டாக்கும்படியான விசேஷ வர்த்தமானங்கள் வேண்டும். முக்கியமாய் உங்கள் ஜில்லாக்களிலுள்ள ஜனங்களுக்கு மிக்க பயன்படும்படியான வர்த்தமானம் வேண்டும். அதற்காக பின்வரும் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.
எழுதியனுப்பும் வர்த்தமானங்கள் உண்மையென்பதற்கு உத்தரவாதமாயிருக்க வேண்டும். அவை வேறு பத்திரிகைகளிலிருந்து எடுத்ததாயிருக்கக் கூடாது. மொழிபெயர்ப்பும் கூடாது. எழுதுவதைத் தெளிவாயும் சுருக்கமாகவும் எழுதுங்கள்
ஜனங்களுக்கு வியப்பையுண்டு பண்ணத்தக்க எந்தெந்த வர்த்தமானம் உங்களுக்குக் கிடைக்கிறதோ அவைகளை யெழுதியனுப்புங்கள். அவை ஒரு பட்டணத்தில் நடந்தாலும் சரி: எழுதுவதைத் தெளிவாயும் சுருக்கமாகவும் எழுதுங்கள். நீங்களனுப்பும் வர்த்தமானங்களில் தகுதியுடையவைகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, அவைகளில் சிலவற்றை சுருக்கிச் சொல்ல தகுதியெனில் சுருக்கி வெளியிட்டு, அதன்படி கைம்மாறு அனுப்பப்படும். அவ்வார்த்தமானங்களை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முற்பகலுக்குள் வந்து சேரும்படி அனுப்பக் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு எவ்வளவு வர்த்தமானம் அனுப்பக்கூடுமோ அனுப்புங்கள். ஒன்றானாலும் சரி, நூறானாலும் சரி, பிரசுரிக்கப்பட்டுக் கைம்மாறளிக்கப்படும். கீழ்வரும நிபந்தனைகளைக் கவனிக்க வேண்டும்.
- எழுதியனுப்பும்வர்த்தமானங்கள் உண்மையென்பதற்கு உத்தரவாதமாயிருக்க வேண்டும்.
- அவைவேறு பத்திரிகைகளிலிருந்து எடுத்ததாயிருக்கக் கூடாது. மொழிபெயர்ப்பும் கூடாது.
- பொறுக்கிஎடுத்துக்கொள்ளப்பட்ட வர்த்தமானங்களைப் பத்திரிகையாசிரியர் சுருக்க வேண்டியவிடத்துச் சுருக்கியும் மாற்றியும் வெளியிடக் கூடும்.
- அப்படிவெளியிடப்பட்ட வர்ததமானங்களில் 4 வரிக்கு 1 அணா வீதம் கைம்மாறு உதவப்படும். ஜனங்களுடைய குறையைப் பற்றிய வர்த்தமானங்களுக்கு 4 வரிக்கு 2 அணா வீதம் கொடுக்கப்படும்.
- அத்தகையவர்த்தமான துண்டுகள் ஒவ்வொன்றும் 8 வரிக்கு மேல் ஓடக்கூடாது. அந்த அளவுக்கு மேலேயுள்ளவைகளைக் குறிப்புகளாகக் கொண்டு ஒரு பத்திக்கு 6 அணா வீதம் கணக்கிடப்படும்.
- சந்தாதாராயினும்சரி, இல்லாவிட்டாலும்சரி, எவரும் எழுதியனுப்பலாம்.
- எழுதும்போதுஒரு பக்கத்திலேயே எழுதுங்கள்.
- குறைந்தவர்த்தமானங்களே யகப்படும் பட்சத்தில் அதை மறுவாரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டாம். ஒரு கார்டில்எழுதியனுப்பிவிடலாம். அது மறு வாரத்திற்கு உபயோகமற்றதாகிவிடும். நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு எழுதுவதற்கு பணம் கொடுப்பது ஓர் வியப்பாக மாட்டாது.
- உங்களுக்குஉண்மையென்று தீர்மானமாகாததை எழுதியனுப்பாதீர்கள். பிரசுரிக்கப்படாத வர்த்தமானங்கள் திருப்பியனுப்பப்படமாட்டா.
இங்ஙனம்
பத்திராதிபர்.
Read in : English