Read in : English
பாரம்பரிய சுவையை தொழிலாக்கி முன்னேறும் இளைஞர் புதிய தொழில் துவங்க முதலீடாக பணம் மட்டும் போதாது. வழிகாட்டும் கரங்களே, தொழில் பயணத்தை சுலபமாகவும், சுவை மிகுந்ததாகவும் மாற்றும்.
தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்கள் அதிகம். தொழில் செய்ய முன்வருவோர் குறைவு. முறையான பயிற்சி, தொழில் சார்ந்த அறிவு இன்மை போன்ற காரணங்களால் புதிய தொழில் துவங்க முன்வருவதில்லை.
தொழில் சார்ந்த அறிவும், பயிற்சியும், அயராத முயற்சியும், பற்றிக்கொள்ள கரங்களும் கிடைத்தால் வெற்றி சுலபமாகும். இந்த அடிப்படையை மனதில் ஏந்தி, தமிழகத்தின் பாரம்பரிய சுவையான கருப்பட்டியில் உணவுகள் தயாரிக்கும் தொழிலை குடும்பத்துடன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் இளைஞர் ஸ்டாலின்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபபட்டி கிராமத்தை சேர்ந்தவர். பொறியியல் கல்வியை முடித்து, பிரபல நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றினார். கைநிறைய சம்பளம் பெற்றார். அது, வாழ்வில் திருப்தியையோ, முழுமையையோ தரவில்லை. தேடலுக்குள்ளானது மனம்.
கருப்பட்டி என்பது தமிழகத்தின் மரபுச்சுவை. அதற்கு தனித்த அடையாளமும், மதிப்பும் உண்டு. அது, கடந்த தலைமுறையின் முழுமையான உணவாக இருந்தது.
அந்த பயணத்தின் ஒருபகுதியாக, திருவண்ணாமலை அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் குக்கூ காட்டுப்பள்ளியில் சில நாட்கள் தங்கியிருந்தார். அங்கு, பாரம்பரியத்தை போற்றும் புதுமை சிந்தனைப் போக்குள்ள இளைஞர்களை சந்தித்தார். கேள்வி எழுப்பும் புத்தகங்களை வாசித்தார். பிரபல காந்திய பொருளாதார நிபுணர் குமரப்பா எழுதிய நூல்களும் அதில் அடக்கம். அவை, புதிய ஒளியை பாய்ச்சி, தேடலின் திசையை காட்டின.
அந்த நேரத்தில் மனதில், ஒரு விதையை போட்டார், சிவராஜ். குக்கூ காட்டுப்பள்ளியை உருவாக்கியதில் முதன்மையாளர் இவர். மனதில் விழுந்த விதை, ‘தாய்வழி கருப்பட்டி கடலை மிட்டாய்’ என்ற தொழில் நிறுவனமாக வளர்ந்து மரபுச்சுவையை கொடுத்துவருகிறது. அந்த விதை விழுந்து, முளைத்து, மரமாகி, கிளை பரப்பியுள்ள கதையை, ‘இன்மதி’ இணைய இதழுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.
அவருடன் நடத்திய உரையாடல்:
கேள்வி: கருப்பட்டி சுவையை பின்புலமாக கொண்டு தொழில் செய்யும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது…
பதில்: தமிழகத்தில் பாரம்பரிய சுவையான கருப்பட்டியில் உணவு தயாரிப்பது பற்றி எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எதுவுமே தெரியாது. பொறியியல் படித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, மனம் அதில் லயிக்கவில்லை. எதையோ தேடிக் கொண்டே இருந்தது. குக்கூ காட்டுப்பள்ளியில், சிவராஜ் அண்ணா மூலம் அதற்கு ஓர் விடை கிடைத்தது.
கேள்வி: தொழில் செய்வதற்கு என்ன வகையான முன் தயாரிப்பில் ஈடுபட்டீர்கள்…
பதில்: குக்கூ காட்டுப் பள்ளி அந்த விதையை என் மனதில் போட்டதும், அது தொடர்பான தேடலில் ஈடுபட்டேன். கருப்பட்டியை முன்னிறுத்தி நடந்த தொழில்களை அறியும் ஆர்வம் ஏற்பபட்டது; தேடினேன். தொழிற்கூடங்களை நேரடியாக பார்த்தேன். அது, இயந்திரமயமாகவும் இருந்தது; மனித வளத்தை நம்பியும் இருந்தது. மனித வளத்தை முன்னிறுத்தி தொழிலை துவங்கும் எண்ணத்துடன், அது போன்ற நிறுவனங்களை தேடி அலைந்தேன். நண்பர் ஒருவரிடம் பயிற்சி பெற்றேன்.
கேள்வி: மூலப்பொருட்கள் கிடைப்பதில் பிரச்சினை இருந்ததா…
பதில்: கடலை மிட்டாய் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருட்கள், வேர்க்கடலையும், கருப்பட்டியும்தான். கருப்பட்டி என்பது தமிழகத்தின் மரபுச்சுவை. அதற்கு தனித்த அடையாளமும், மதிப்பும் உண்டு. தமிழர்கள் அதை நெகிழ்வுடன் பயன்படுத்தியதை அறிந்து வியந்து போனேன். அது, கடந்த தலைமுறையின் முழுமையான உணவாக இருந்தது. பின், தொடர்ச்சி விட்டு போயிருந்தது. அதை, நம்பகமான தொடர்ச்சியாக மாற்ற வேண்டிய நிலை இருந்தது. கருப்பட்டி தயாரிப்பில் கட்டுப்பாடுகளும், தரத்தில் சமச்சீரற்ற சூழலும் நிலவியதை உணர்ந்தேன். அதன் தரம் பேண தீவிரமாக யோசித்தேன். கருப்பட்டி போன்ற சுவை மூலப்பொருட்களை தரமாக தயாரித்து வழங்கும் அமைப்புகள் எதுவும் தமிழகத்தில் இல்லை. முன்பு, அரசின் துறையே அதுபோன்ற ஒருங்கிணைப்பு பணியை செய்தது. இப்போது, அந்த நடைமுறை முழுமை பெற்றதாக இல்லை. அதனால், தரம் நிறைந்த கருப்பட்டியை கண்டறிவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. விடா முயற்சியால் அந்த சிரமத்தை போக்கினேன்.
கேள்வி: தொழில் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. எண்ணிய திசையை அடைந்து விட்டீர்களா…
பதில்: ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. முதல் நான்கு ஆண்டுகள், தரத்துடன் பாரம்பரிய சுவையை உறுதி செய்வதில் அதிகம் கவனம் செலுத்தியதால், புதிய திட்டங்கள் குறித்து யோசிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளில் என் பயணம் இசைவாக நடப்பதாக நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர், புதிய மூலப்பொருட்களைக் கொண்டு, புதிய சுவைகளை உருவாக்க முயன்று வருகிறேன். எல்லாமே, கருப்பட்டியை முன்னிறுத்தியே நடக்கிறது.
கேள்வி: புதிய மூலப் பொருட்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்…
பதில்: ஆளி விதை மற்றும் சியா விதைகளை, கருப்பட்டி பாகில் சேர்த்து, புதிய இனிப்புகளை உருவாக்கியிருக்கிறோம். அவற்றுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களின் கவனத்துக்கு இந்த சுவை பற்றிய தகவல் எட்டியுள்ளது. அவர்களும் வாடிக்கயைாளராவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
கேள்வி: தொழில் வளர்ச்சி பற்றி…
பதில்: தற்போது, இரண்டு யூனிட்களில் உற்பத்தி நடக்கிறது. சந்தையின் தேவைக்கு ஏற்ப, நான் பயிற்சி பெற்ற நிறுவனத்துடன் இணைந்தும், பகிர்ந்தும் பணியாற்றுகிறோம். இதனால், சுணக்கம் இன்றி உணவுப்பண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. தரத்திலும் சமரசமற்ற நிலையை நிறுத்துகிறோம். தற்போது, எங்கள் தொழில் கூடத்தில், 13 பேர் பணி செய்கின்றனர். நான் உட்பட, குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் உழைப்பை பகிர்ந்து கொள்கிறோம்.
கேள்வி: உற்பத்தியில் திருப்தி ஏற்படுகிறதா…
பதில்: கண்டிப்பாக… நாங்கள் தயாரிப்பது பாரம்பரிய சுவை தரும் இனிப்புகள். தரத்தில் அதை மீட்டுருவாக்கம் செய்துள்ளோம். அதன் சுவை மாறாமல் வாடிக்கயைாளர் நாவில் படர வேண்டும் என விரும்பியே பிரார்த்தனையுடன் பணியை மேற்கொள்கிறோம். ஒரு குழந்தை… ஒரு தாய்… எங்கள் தயாரிப்பின் மரபுச்சுவையை வியப்புடன் குறிப்பிடும் போது, மனம் மகிழ்கிறது. சரியான பாதையில் பயணிப்பதாக நிறைவு ஏற்படுகிறது.
ஆளி விதை மற்றும் சியா விதைகளை, கருப்பட்டி பாகில் சேர்த்து, புதிய இனிப்புகளை உருவாக்கியிருக்கிறோம். அவற்றுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
கேள்வி: உங்கள் எதிர்பார்ப்பு என்ன…
பதில்: குமரப்பா எழுதிய, தற்சாற்பு பொருளாதாரம் சார்ந்த புத்தகம்தான், என் பயணத்தைத் துாண்டி, வளர்ச்சிக்கு துணை வருவதாக கருதுகிறேன். மூலப் பொருட்கள் உற்பத்தியாகும் கிராமங்களிலே, அது சார்ந்த உணவுப் பொருள் உற்பத்தியும் சிறு தொழிலாக நடக்க வேண்டும். அந்த பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. தன்னிறைவை தரும் வகையில் உள்ளது. அரசின் உதவிகள் இது போன்ற தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய சுவையை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு, குறைவாக உள்ளது. அது மேம்பட வேண்டும். ஆர்வப்படும் இளைஞர்களுக்கு நுட்பங்கள் எளிதில் கைகூடும் வகையில் திட்டங்கள் வேண்டும். அப்போதுதான், கிராமங்கள் சார்ந்து புதிய தொழில்கள் மிளிர்ந்து வளரும். இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார் ஸ்டாலின்.
சிறு தொழிலை நவீனமாக, தொழில்நுட்பம் சார்ந்து வளர்க்க முடியும் என்று நிருபித்துள்ளார். இவரது தயாரிப்புகளை விற்பனை செய்ய, www.motherway.in இணைய வழி விற்பனையகத்தையும் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.
Read in : English