Read in : English
“நான் வந்துட்டேன்னு சொல்லி எப்படி போனோனோ அதேமாதிரி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று கொரோனா, ஓமைக்ரான் போன்ற பெருந்தொற்றுகள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கும் நேரம். எப்படி வந்தது, எப்படி அதிகமானது, எப்படிக் குறைந்தது என்று யோசிக்கும் வேளையில் மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பு. மற்ற நாட்களில் இரவு பத்து மணிக்கு மேல் ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆனால், இதுமட்டும் போதுமா என்ன? தனிநபர் இடைவெளியும் முகக்கவசமும் முக்கியமானவை. இந்தப் புதிய இயல்பு நிலையை விட்டுவிடுவதற்கான நேரம் இன்னமும் வரவில்லை.
எனினும், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை தடை செய்வதன் மூலம் வெறும் வாயிலேயே மெல்லக்கூடிய எதிர்க்கட்சிகளுக்கு நல்ல தீவனம் போட்டதாகிவிடுமே என்று நினைத்து அரசு, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுகளுக்குத் தடைவிதிக்கவில்லை. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் எல்லாம் முக்கியம் என்று இருந்தாலும்கூட, ஜல்லிக்கட்டுக்கு வரும் கூட்டத்தைப் பார்க்கும் போது, ஜல்லிகட்டில் மாடுகள் குத்த வருவதைப்போல, கண்ணுக்குத் தெரியாமல் கொரோனா பதுங்கி இருப்பது யாருடைய கண்ணுக்கும் தெரியவில்லை. தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டியை, கொரோனாவாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஜல்லிக்கட்டில் கலப்பினக் காளைகளை அனுமதிக்கூடாது என்ற கோரிக்கைகயை தமிழக அரசு ஏற்று அறிவித்துள்ளது. எனினும்கூட, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இனப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் (2019), பாரம்பரிய நாட்டு மாடுகளின் அழிவுக்கு காரணமாக இருக்கப் போகிறது என்றும் இந்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் ஜல்லிகட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், 2017இல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மாநிலம் தழுவி நடந்த போராட்டம்தான் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஐல்லிக்கட்டு என்கிற பாரம்பரிய விளையாட்டுக்காக மாடு வளர்ப்பது என்பது பணச் செலவு பிடிக்கக்கூடியது. அதேபோல, மாடு பிடிப்பதற்கும் கடும் பயிற்சியும் அனுபவமும் தேவை. ஆனால் ஜல்லிக்கட்டுக்காக மாடுகளை வளர்ப்பதும், மாடு பிடிப்பதும் தனிக் கலை. இந்த வீர விளையாட்டைப் பார்த்து ரசிக்க பெரும் பட்டாளமே இருக்கிறது. அதனால்தான் கொரோனாவைப் பற்றி கவலைப்படாமல் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்கக் கூட்டம் திரண்டிருக்கிறது.
“ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட, புய வலு தொழில்நுட்பம், சாமர்த்தியம் எலலாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல. ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும் காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டுத் தெரியாது.” இது 1959இல் வெளியான சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற ஜல்லிகட்டு குறித்த குறுநாவல் புத்தகத்தில் இடம் பெற்ற சிறுகுறிப்பு. அதைவிட முக்கியம் அந்தக் கதையின் முடிவில் அவர் எழுதியிருக்கும் இருவரிகள். அது இன்றைக்கும் பொருத்தமானது.
“மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு.”
Read in : English