Read in : English
பேருந்து நிலையங்களிலும், சாலையின் சிக்னல்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் கையேந்துபவர்களைப் பார்க்காமல் நாம் கடந்து செல்ல முடியாது. தன்னிடம் ஒன்றும் இல்லை, எனக்கு பசிக்கிறது காசோ அல்லது சாப்பாடோ தாருங்கள் என யாரோ ஒருவரிடம் கையேந்தி நிற்பவர்கள் பிச்சைக்கார்களாக வர்ணிக்கப்படுகின்றனர்.
இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்sளவையில் கடந்த 10 ஆண்டுகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம், 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 4,13,670 பேர் பிச்சை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 61,311 ஆகும். நாடு முழுவதும் கையேந்துபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 14 சதவீதம் குழந்தைகள் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசின் புள்ளி விவரப்படி அதிகமானோர் பிச்சை எடுக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. அங்கு மட்டும் 81,244 பேர் பிச்சை எடுப்பவர்களாக உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே குறைந்த பட்சமாக லட்சத்தீவில் 2 பேர் மட்டுமே பிச்சை எடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 6,814 பேர் பிச்சை எடுப்பதாகவும், அதில் 782 பேர் 19 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் 5,993 பேர் 19 வயதை கடந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2019ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சரோஜா, தெருவோரம் இருப்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும், கையேந்துபவர்கள் தான் பிச்சைக்காரர்கள் என்றும் கூறினார். மேலும், போலீசாரால் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையின் அடிப்படையில் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்படுபவர்களே பிச்சைக்காரர்கள் என்றதுடன், அப்படி யாரும் மறுவாழ்வு மையத்திற்கு வராததால் தமிழகத்தில் பிச்சைக்காரர்களே இல்லை என்றார்.
இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், இந்திய அளவில் 9வது இடத்தில் தமிழகம் இருப்பதாகவும் மத்திய அமைச்சரின் அறிக்கை கூறுகிறது.
தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், இந்திய அளவில் 9வது இடத்தில் தமிழகம் இருப்பதாகவும் மத்திய அமைச்சரின் அறிக்கை கூறுகிறது
பிச்சை எடுப்பதை தடுப்பதற்காக அரசினர் மறுவாழ்வு மையம் 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், பின்பு சிறைத்துறை, சமூக பாதுகாப்புத் துறை, மீண்டும் சிறைத்துறை என்று மாற்றப்பட்ட அரசினர் மறுவாழ்வு மையம் தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மாற்றப்பட்டது. தற்போது, சாலையில் சுற்றித் திரிவோரை அழைத்து வந்து மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைக்க முடியாது.
அதாவது, 1944ஆம் ஆண்டு முதன் முதலாக பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் சென்னையில் பிச்சை எடுப்பதை தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி பிச்சை எடுப்பது குற்றமாகும். இந்தச் சட்டத்தின் மூலம் பிச்சை எடுப்பவர்களை போலீசார் பிடித்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும், ஏனென்றால் பிரிட்டிஷார் கொண்டு வந்த சட்டத்தின்படி பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால், பிச்சை எடுப்பதை தடுக்கும் சட்டம் மூலம் கைது செய்யப்படுவோருக்கு நீதிமன்றம் ஆறு மாதமோ அல்லது இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கும்.
எடுத்துக்காட்டாக 3 ஆண்டுகள் தண்டனை கிடைத்தால் அவரை அரசு மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைத்து சுயதொழில் செய்ய பயிற்சிகள் அளிக்கப்படும். தண்டனை காலத்தில் சுய தொழில் கற்றுக் கொள்ளும் அந்த நபர் நீதிமன்ற அனுமதியுடன் விடுதலை செய்யப்படுவார். விடுதலையாகி வெளியே செல்லும் அந்த நபர் சுய தொழில் தெரிந்த நபராக இருக்க வேண்டும் என்பதே இந்த மறுவாழ்வு மையத்தின் நோக்கமாகும்.
1954ஆம் ஆண்டிற்கு பிறகு காமராஜ் முதலமைச்சராக இருக்கும்போது, சென்னை பூந்தமல்லியில் இருந்து ஆவடி செல்லும் வழியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அரசினர் மறுவாழ்வு இல்லம் அமைக்கப்பட்து.
இந்த அரசினர் மறுவாழ்வு இல்லத்தில் நீதிமன்ற விசாரணை மூலம் கொண்டுவரப்பட்டு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்ட கடைசி நபரும் 2016ஆம் ஆண்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஒருவர் கூட மறுவாழ்வு இல்லத்திற்கு வரவில்லை. அதற்கு காரணம், காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு நாள், இரண்டு நாள் என குறிப்பிட்ட நாட்கள் மட்டும் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், பெரும்பாலும் போலீசாரும் பிச்சை எடுப்போரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறைந்தது. மறுவாழ்வு மையத்திற்கும் யாரும் வருவதில்லை.
1972ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின் போது செங்கல்பட்டின் பரனூர், சேலம், மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில், நோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுப்போரை பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கு மருத்துவ வசதி அளித்து தொழில் கற்று தரவும் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தற்பொழுது 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த இல்லத்திற்கு ஒருவர் கூட வரவில்லை என்பதே உண்மை. சென்னையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசினர் மறுவாழ்வு இல்லத்தின் கட்டடம் 50 ஆண்டுகள் பழையது என்பதால் கட்டடம் பாழடைந்து காணப்படுகிறது. இந்தக் கட்டடத்தில் ஒருவரைக்கூட தங்க வைக்க முடியாது என்ற சூழலால் அதைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அரசினர் மறுவாழ்வு வாழ்வு இல்லத்தை மேம்படுத்தவும், முறையாக செயல்படுத்தவும் தற்போதைய தமிழக அரசு திட்டம் தீட்டி வருவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், சாலையோரம், பேருந்து நிலையங்களில் பிச்சை எடுப்போரின் நிலை என்ன என்ற கேள்விக்கு, அதற்கு தான் சென்னை மாநகராட்சியின் கீழ் சுமார் 15 இரவு தங்குமிடங்கள் செயல்படுவதாகவும், ஆதரவற்றோர் அங்கு தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் இந்த மையத்திற்கு வர விரும்புவதில்லை. சுதந்திரமாக சாலைகளில் சுற்றித்திரியும் எங்களை ஒரு கட்டடத்தில் அடைத்து வைத்தால் எப்படி இருப்போம் என்று கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது. 1972ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின் போது செங்கல்பட்டின் பரனூர், சேலம், மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில், நோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுப்போரை பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கு மருத்துவ வசதி அளித்து தொழில் கற்று தரவும் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாளடைவில் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அந்த மையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
எனினும், அரசு தரப்பின்படி தமிழகம் முழுவதிலும் பார்க்கபோனால் ஒரே ஒரு அரசு பராமரிப்பு முகாம் மட்டுமே உள்ளது. அதுவும் சென்னையில் உள்ள அரசினர் மறுவாழ்வு இல்லமாகும். இந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வர வேண்டும். அத்துடன், பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களையும் கண்ணியத்துடன் சுயமரியாதையுடன் வாழச் செய்ய வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கும் இந்த சமூகத்துக்கும் இருக்கிறது. மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை உண்டோ?
Read in : English