Read in : English
தமிழ்த் திரையுலகில் நடிகர்களுக்குப் பட்டப்பெயர், சிறப்புப் பெயர்- வைத்து அழைப்பது புதிதன்று. மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல் எனப் பலருக்கும் பெயருக்கு முன்னால் முன்னொட்டு உண்டு. அதைப் போலவே ஒரு சிறப்புப் பெயர் அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் அஜித்துக்கும் வந்து சேர்ந்தது.
2001ஆம் ஆண்டில் அஜித்தின் முப்பதாம் வயதில் வெளியான தீனா படத்தில் அவரது பாத்திரம் அவரது ஆட்களால் தல எனச் சொல்லப்பட்டது. அந்தப் படத்திலிருந்து, அஜித் தல என தன் ரசிகர்களால் பிரியத்துடன் அழைக்கப்பட்டார். தல போல வருமா, தல தீபாவளி போன்ற பாடல் வரிகள் இந்தச் சிறப்புப் பெயரை அழுத்தம் திருத்தமாக ரசிகர்களை உச்சரிக்கச் செய்தன. ஊடகங்களும் அஜித் பற்றி எழுதியபோது தல எனக் குறிப்பிட்டுப் புளகாங்கிதம் அடைந்தன.
2001ஆம் ஆண்டில் அஜித்தின் முப்பதாம் வயதில் வெளியான தீனா படத்தில் அவரது பாத்திரம் அவரது ஆட்களால் தல எனச் சொல்லப்பட்டது. அந்தப் படத்திலிருந்து, அஜித் தல என தன் ரசிகர்களால் பிரியத்துடன் அழைக்கப்பட்டார்
அஜித்தின் போட்டியாளராக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர் நடிகர் விஜய். அவரது சிறப்புப் பெயர் தளபதி. நடிகர்களுக்குள் மோதல் இல்லை என்றபோதும், தல, தளபதி என்னும் பெயர்களை வைத்து இருவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சொற்போர் நடத்திவந்தார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் டிசம்பர் 1ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் இனி தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜித் என்றோ அஜித்குமார் என்றோ ஏகே என்றோ அழைத்தால் போதும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கடந்த இருபது ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்த ஒரு பெயரை இனிப் பயன்படுத்த வேண்டாம் என்ற அஜித் குமாரின் இந்த அறிவிப்பு திரையுலகிலும் ஊடகங்களிலும் பெரிதாக விவாதிக்கப்பட்டுவருகிறது. பொதுவாகவே, நடிகர் அஜித் குமார் பிற நடிகர்களைப் போல் அல்லாமல் வேறுபட்ட பாதையில் பயணம் செல்லக்கூடியவர்.
தன்னை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்தால் மட்டும் போதும் என்று செயல்படுபவர். எந்தத் தொலைக்காட்சியிலும் தனது படத்தை விளம்பரப்படுத்தக்கூடத் தோன்றாதவர். சினிமா தவிர்த்த பிற ஊடகங்களிலிருந்து பெரும்பாலும் விலகியே இருக்கிறார். பொதுமேடைகளிலும் அதிகமாக அஜித்தைப் பார்க்க முடியாது.
2010இல் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி கலந்துகொண்ட விழாவில் பேசிய அஜித் குமார், இதைப் போன்ற விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று மேடையிலேயே பேசினார். அது சர்ச்சையானது.
அப்படித் தனக்குத் தோன்றக்கூடிய கருத்துகளை, தனது தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற பதற்றமின்றித் துணிச்சலாகப் பேசக் கூடியவர் என்ற பெயர் பெற்றவர் அஜித்.
1971ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த அஜித்குமார் தனது நாற்பதாவது வயதில் அதாவது, 2011ஆம் ஆண்டில் தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்துவிட்டார். இந்த ஆண்டில் தான் இவரது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்திய மங்காத்தா வெளியானது. ரசிகர் மன்றம் என்ற பெயரில் செயல்படுபவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் இந்த அதிரடி முடிவை எடுத்துத் திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியவர் அஜித்குமார்.
1971ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த அஜித்குமார் தனது நாற்பதாவது வயதில் அதாவது, 2011ஆம் ஆண்டில் தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்துவிட்டார்
வளர்ந்து வரும் நிலையில் ரசிகர் மன்றங்களைக் கலைப்பது சரிப்பட்டுவருமா என்று முனங்கினார்கள் பலர். ஆனால், அதெல்லாம் சரிப்பட்டுவரும் என்று காட்டினார் அஜித். ஜெயலலிதாவுடன் தனிப்பட்ட முறையில் அன்பான நட்பைப் பேணியவர்.
அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவுக்குத் தலைமை ஏற்கப் போகிறார் என்றெல்லாம் ஊகச் செய்திகள் ஊடகங்களில் உலவின. ஆனால், அதுகுறித்த எதையும் கண்டுகொள்ளாத அஜித்குமார் தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.
வெற்றிபெற்ற, ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர் என்றபோதும் அதனால் எல்லாம் திருப்தி அடையாமல் மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம்கொண்டு இப்போதும் அதில் ஈடுபடுபவர். புகைப்படம் எடுப்பதிலும் அவருக்கு நல்ல ஆர்வம் உண்டு.
அஜித்தின் வாழ்க்கையில் அவர் அடைந்திருக்கும் உயரம் அவரது உழைப்பால் மட்டுமே கிடைத்தது. பெரிய நட்சத்திரக் குடும்பத்தில் அவர் பிறந்திருக்கவில்லை. சினிமா தொடர்பு இல்லாத சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் அஜித். படிப்பில் அவர் ஜொலிக்கவில்லை. பாதியிலேயே படிப்பை முடித்தவர். மெக்கானிக்காக வாழ்க்கையைத் தொடங்கியவர்.
டெக்ஸ்டைல் துறையில் ஈடுபட்டவர். இப்படியெல்லாம் தொடங்கிய அவரது வாழ்க்கைப் பயணத்தில் மாடலிங் வழியே அவர் திரைத்துறையில் நடிகரானார். நடித்த உடனேயே அவர் உச்சத்தைத் தொட்டுவிடவில்லை. முதலில் ஓரிரு படங்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன. அவற்றில் அவரால் முத்திரை பதிக்க முடியவில்லை. முதலில் பெயர் சொல்லும் கதாநாயகனாக நடித்த அமராவதி படத்தில் அவரால் டப்பிங் பேச முடியவில்லை. அப்போது அவர் ஒரு விபத்தில் சிக்கியிருந்தார். எனவே, அந்தப் படத்தில் அவருக்கு நடிகர் விக்ரம் குரல் கொடுத்துள்ளார்.
அமராவதியில் நாயகனாக அறிமுகம் ஆனபோதும், அவரை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது ஆசை திரைப்படம்தான். வஸந்த் இயக்கிய இந்தப் படம் தான் அஜித்தை ரசிகர்களிடம் மிக நெருக்கமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அந்தப் படம் வெளியான பின்னர் அவர் ஆசை நாயகன் எனச் செல்லமாகக் குறிப்பிடப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அஜித் நடித்த அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை மிகப் பெரிய வெற்றியைப் பெற நடிகர் அஜித் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற நட்சத்திரமானார். இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். என்றபோதும், படத்தில் அஜித் மீது ஆசைப்படும் ஹீராவையும் அஜித்தையும் இணைத்து வதந்திகள் பரவிய காலம் அது. ஆனால், அவர் அமர்க்களம் படத்தில் தன்னுடன் நடித்த ஷாலினியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
ஆசை திரைப்படத்தில் வஸந்திடம் வந்துசேர்ந்த உதவி இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா முதலில் இயக்கிய வாலி திரைப்படத்தில் அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரம் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதாக இருந்தது.
அந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்தார். நாயகனே இரட்டை வேடம் ஏற்கும்போது, ஒரு வேடம் ஹீரோ என்றால் இன்னொரு வேடம் வில்லன் என்பது தமிழின் எழுதப்படாத விதி. இதற்கேற்ப அஜித்தும் வில்லன் வேடம் ஏற்றார். ஆனால், வில்லன் வேடத்தில் அவர் மாறுபட்ட அஜித்தாகக் காட்சியளித்தார். அது அவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
பெரிய இயக்குநர் என்பதால் மட்டும் அவர் படத்தை ஒத்துக்கொள்வதில்லை. சூர்யா நடித்து வெளியான நந்தா படத்தின் கதையை முதலில் அஜித்திடம்தான் பாலா கூறியிருக்கிறார். ஆனால், அந்தக் கதை அஜித்தை ஈர்க்கவில்லை அல்லது ஈர்க்கும்படி பாலா சொல்லியிருக்கவில்லை. ஆகவே, அதில் அஜித் நடிக்கவில்லை.
அதிகப் படங்களில் நடிப்பதில் அவர் எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. ஓராண்டில் அவர் நடித்து வெளியான படங்கள் அதிகபட்சம் ஆறு படங்கள்தாம். இது நடந்தது 1999இல். மற்றபடி ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். காதல் மன்னன், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜி, என்னை அறிந்தால் போன்ற வேறுபட்ட கதையமைப்பு கொண்ட படங்களில் அவ்வப்போது நடித்தாலும் அவர் ஒரு ஆக் ஷன் நாயகனாகவே பல படங்களில் காட்சி தந்துள்ளார்.
தொடக்கம் முதல் இப்போதுவரை, உல்லாசம், அட்டகாசம், பில்லா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் எனப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
2019இல் அஜித் நடித்து வெளியான நேர் கொண்ட பார்வை அவரது திரைவாழ்வில் புதிய ஒளியைப் பாய்ச்சியது.
நடிப்பென்பதை நல்ல தொழிலாகப் பயன்படுத்திக்கொண்ட அஜித்துக்கு நடிப்பு, அதன் பின்னர் அரசியல் என்ற பெரிய திட்டங்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தான் அஜித்தால் நாற்பது வயதில் ரசிகர் மன்றங்களைக் கலைக்க முடிகிறது; கலைத்ததன் காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, நாற்பது வயது தந்த பக்குவம் என்றார்.
நடிப்பென்பதை நல்ல தொழிலாகப் பயன்படுத்திக்கொண்ட அஜித்துக்கு நடிப்பு, அதன் பின்னர் அரசியல் என்ற பெரிய திட்டங்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தான் அஜித்தால் நாற்பது வயதில் ரசிகர் மன்றங்களைக் கலைக்க முடிகிறது
ஆகவே, ஐம்பது வயதின் நிதானத்தில் சிறப்புப் பெயரைத் துறக்க முடிகிறது. இதனால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடுமா என்று கேட்டால் அப்படிச் சொல்வதற்கில்லை. ரசிகர் மன்றங்களைக் கலைத்தார் என்பதால் அதைத் தொடர்ந்து வேறு ஒருவரும் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையே.
அஜித் ஒரு முன்மாதிரி என்று வேண்டுமானால் சொல்ல முடியும். இதனால் வேறு எந்த நடிகரும் முன் வந்து தனது சிறப்புப் பெயரைத் துறந்துவிடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மேலும் அது அவசியமுமல்ல. வாழ்க்கை பற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான புரிதல் உள்ளது.
இது அஜித்தின் வாழ்க்கை அவர் வாழ்கிறார். அவ்வளவுதான். அஜித்தின் சினிமாக்களை ரசிப்பதுபோல் அவரது வாழ்வின் சம்பவங்களையும் கண்டு ரசிக்கலாம். ரசிகருக்குரிய வாய்ப்பு அது மட்டுமே.
Read in : English