Read in : English
மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு செலவழிக்கும் தொகை சரிதானா? சமஸ்கிருதம் ஓர் இறந்த மொழி – செயல்படாத மொழி. அதை யார் பேசுகிறார்கள்? எதற்காக அதற்கு இவ்வளவு முக்கியத்துவம்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? என்ற பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆங்கிலம் இப்பொழுது உலக அளவில் பயன்படுத்தும் மொழியாக உள்ளது. ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் இலத்தீன் மொழிச் சொற்களைக் கவனித்திருக்கீர்களா? சட்டம், மருத்துவம் மற்றும் அலுவல் சார்ந்த சொற்கள் பல இலத்தீனிலிருந்து வரும். ஆட்கொணர்வு மனுவின் ஆங்கில சொல்லாக நாம் உபயோகிப்பது ‘ஹேபியஸ் கார்பஸ்’ எனும் இலத்தீன் சொல். தாவரவியல் பெயர்கள் எதற்காக இலத்தீனில் உள்ளன? உலகம் முழுதும் பேசப்படும் ஆங்கிலத்தில், பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ் மொழிகளில் அல்லவா இருக்க வேண்டும்?
கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்களுக்கு இலத்தீனுக்கு திருச்சபையில் கொடுக்கப்படும் மதிப்பு தெரியும். கோயில்களில் சமஸ்கிருதம் போன்று தேவாலயங்கள் இலத்தீனை 1960கள் வரை பயன்படுத்தி வந்திருக்கின்றன. செம்மொழி என்று போற்றப்பட்ட இலத்தீன் இப்போது ஒரு இறந்த மொழி. அதை யாரும் பேசுவார் இல்லை.
உண்மையில், இலத்தீனும் சமஸ்கிருதமும் பேச்சு மொழிகளா அல்லது இலக்கிய மொழிகளா? ஐரோப்பாவில் தொடங்கி வட ஆப்பிரிக்கா வரை பரந்து விரிந்திருந்த ரோம சாம்ராஜ்யத்தின் அலுவல் மொழி இலத்தீன். ஆனால், அதன் குடிகளும் அடிமைகளும் பேசிய மொழிகள் பல.
அலுவல் மொழி இலத்தீனை பேச்சு மொழியாக உபயோகித்தவர்கள் சிலரே.அரசு உத்தரவுகளும் இலக்கியங்களும் இலத்தீனில் வடிக்கப்பட்டன. ரோம சாம்ராஜ்யம் அழிந்தபோது இந்த அலுவல் மொழியும் மறைய ஆரம்பித்தது. பேச்சுவழக்கில் இருந்த கொச்சை இலத்தீனில் இருந்து தோன்றிய மொழிகள்தான் இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ரோமானியன் மொழிகள்.
“சமஸ்கிருதத்தை இலத்தீன் இடத்தில் இந்திய துணைக்கண்டத்தில் பொருத்தி பாருங்கள். சமஸ்கிருதம் பற்றிய பார்வை விரியும். சமஸ்கிருதத்தை ஆராய்ச்சி செய்த ஐரோப்பிய அறிஞர்கள், இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை கண்டு வியந்திருக்கிறார்கள். சமஸ்கிருதம் என்பது பிராகிருதம் என்ற பண்டைய பேச்சு மொழிகளில் இருந்து தோன்றிய செம்மைப்படுத்தப்பட்ட மொழி. சமஸ்கிருதம் ஒரு செம்மைப்படுத்தப்பட்ட அலுவல் மொழி” என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ். ராமசந்திரன்.
“சமஸ்கிருதம் என்ற சொல்லில் உள்ள ‘சமஸ்’ என்ற சொல்லின் வேர்ச்சொல் தமிழ் மொழியில் உள்ள ‘செம்மை’ என்ற பதத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார். சந்திப்பது அல்லது கலப்பது என்றும் ‘சம்ஸ்’ பொருள்படுகிறது. எனவே பல்வேறு மொழிகளின் சந்திப்பாகவும் சமஸ்கிருதத்தை கூறலாம்” என்கிறார்.
சமஸ்கிருதம் ஒரு செம்மைப்படுத்தப்பட்ட அலுவல் மொழி. சமஸ்கிருதம் என்ற சொல்லில் உள்ள ‘சமஸ்’ என்ற சொல்லின் வேர்ச்சொல் தமிழ் மொழியில் உள்ள ‘செம்மை’ என்ற பதத்தில் இருந்து தோன்றியிருக்கலாம்
அவர் மேலும் கூறியதாவது:“திருவள்ளுவரும் கம்பரும் சமஸ்கிருதம் படித்திருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். அவர்கள் வடித்த பெருங்காவியங்களில் அதன் தடங்கள் தெளிவாக தெரிகின்றன என்று கூறும் ராமசந்திரன் சமஸ்கிருதத்தின் மூல மொழிகளான பிராகிருத மொழிகளில் தமிழின் செல்வாக்கும் இருக்கிறது என்கிறார். வட இந்தியாவில் உள்ள மேய்ப்பர் சமூகத்தை குறிக்க ‘ஆஹிர்’ என்ற வார்த்தை பயன்படுகிறது. இந்த வார்த்தை அபப்ரஹ்மச என்னும் பிராகிருத மொழி சொல். ஆனால், ‘ஆ’ என்று பசுவை குறிப்பது தமிழில் மட்டும்தான். சமஸ்கிருதத்திலோ அல்லது வட இந்திய பிராந்திய மொழிகளில் ‘காவ்’ என்றுதான் வரும்.
சொல்லப்போனால், தமிழின் ஆதிக்கம் ஹிந்தியில் வலுவாக காணப்படுகிறது. தமிழில் வரும் ‘உறை’ என்ற மூலச்சொல்லில் இருந்துதான் ‘ரஹோ’ எனும் ஹிந்தி சொல் தோன்றுகிறது. ‘போலோ’ என்பதின் மூலம் ‘புகல்’ எனப்படும் தூய தமிழ் சொல். வடவர்கள் ‘தண்டா பானி’ என குளிர்ந்த நீரை சொல்வது ‘தண்ணீர்’ எனும் வார்த்தையில் இருந்து வருகிறது.
‘தண்’ என்பது குளிர்ச்சியை குறிக்கும் தமிழ் சொல். தமிழறிஞர்கள் ஹிந்தி எந்த அளவு தமிழை சார்ந்திருக்கிறது என்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
சொல்லப்போனால், தமிழின் ஆதிக்கம் ஹிந்தியில் வலுவாக காணப்படுகிறது.தமிழறிஞர்கள் ஹிந்தி எந்த அளவு தமிழை சார்ந்திருக்கிறது என்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
அதைவிடுத்து தமிழ் பெரிதா அல்லது சமஸ்கிருதம் பெரிதா என்று தடம் மாறி விட்டது. தமிழும் சமஸ்கிருதமும் வேறுவேறான மொழிகள். அவற்றில் எது சிறந்தது என்பது அர்த்தமில்லாத ஒரு சர்ச்சை. இரு மொழி அறிஞர்களும் இந்த மொழிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று செறிவூட்டியுள்ளன என்பதைப் பார்க்க மறுக்கிறார்கள். சமஸ்கிருதம் ஒரு இலக்கிய மொழி என்பதை கருத்தில் கொள்வதில்லை.
மேலும் சமஸ்கிருதத்தை ஒரு சமூகத்தோடு மட்டும் பொருத்தி பார்ப்பது தவறு. எல்லா இனத்தவர்களும் சமஸ்கிருதத்தில் இலக்கியங்களை எழுதி இருக்கிறார்கள். அது ஒரு இனத்தவருக்கான மொழி என்று சமஸ்கிருதத்தைச் சுருக்கி விட முடியாது.
மேலும் சமஸ்கிருதத்தை ஒரு சமூகத்தோடு மட்டும் பொருத்தி பார்ப்பது தவறு. எல்லா இனத்தவர்களும் சமஸ்கிருதத்தில் இலக்கியங்களை எழுதி இருக்கிறார்கள்
அது இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பொது மொழி. அதனால்தான் பெரும்பாலான நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. பல மொழிகள் பேசும் ஒரு நாட்டில் ஒரு பொதுமொழிக்காக ஏற்படுத்தப்பட்ட மொழி சமஸ்கிருதம்.
அதை இறந்த மொழியாக கருதினாலும் சமஸ்கிருதத்தில்தான் இந்தியா முழுவதுக்குமான இலக்கிய செல்வம் பொதிந்து கிடக்கிறது.
அப்படிப்பட்ட செல்வத்தைக் காப்பற்ற கணிசமான நிதி ஒதுக்குவதில் எந்த தவறும் இல்லை” என்று கூறும் ராமசந்திரன் உலகம் முழுதும் பல அரசாங்கங்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற கணிசமான நிதியை ஒதுக்குவதையும் சுட்டிக்காட்டுகிறார்.
Read in : English